Advertisement

ஏன் டி தர்ஷன் யஸ்வந்தை அடிச்சதுக்கு நீ ஒன்னுமே சொல்லலை… உன் பையனை அடிச்சதும் மட்டும் தூக்கிட்டு வந்திட்ட….”

என்னவோ இவனை நீதான் உங்க வீட்ல பார்த்துக்கிற மாதிரி சொல்ற… உங்க அம்மாகிட்ட விட்டுட்டு நீ ரெஸ்ட் தான் எடுப்ப.”

வந்து அரை நாள் கூட ஆகலை. அதுக்குள்ள எவ்வளவு நாள்ன்னு கேட்கிற? உன் இஷ்ட்டத்துக்கு எல்லாம் ஆட முடியாது. உனக்கு இங்க இருக்க விருப்பம் இல்லைனா… நீ போயிட்டே இரு. நானும் தர்ஷனும் இங்கதான் இருப்போம்.”

நானும் முதல்ல கர்ப்பமா இருந்த… அப்புறம் குழந்தை பெத்திருந்த…. உங்க வீட்ல தான் உனக்கு வசதியா இருக்குமுன்னு ஒன்னும் சொன்னது இல்லை. ஆனா அதுக்காக எப்பவும் விட்டுட்டே இருப்பேன்னு நினைக்காத.”

நீ என்னவோ எங்க அம்மாவை ஏமாத்திட்டு இருக்கோம்னு நினைச்சிட்டு இருக்கு… எங்க அம்மாவுக்கு இதெல்லாம் புரியாதுன்னா நினைக்கிற? அவங்க ஒரு மருமகளோட தான் பிரச்சனை ஆகிடுச்சு, இன்னொருத்தி கூடவும் வேண்டாம்னு உன்னை விட்டு வச்சிருக்காங்க, அவ்வளவு தான். ஒழுங்கா உன் மரியாதையைக் காப்பாத்திக்கோ…. நான் அவ்வளவு தான் சொல்வேன்.”

வர்ஷா கணவனை முறைத்தபடி படுத்திருந்தாள்.

அண்ணா அண்ணா…” என தர்ஷன் கதவைக் காட்ட….

அண்ணனை அடிக்காம விளையாடணும்.” என விஜயன் கதவைத் திறந்து விட… தர்ஷன் வெளியே ஓடிவிட்டான்.

தர்ஷனைப் பார்த்ததும் ய்ஸ்வந்தும், படுத்திருந்தவன் எழுந்து உட்கார…. இருவரும் மீண்டும் உட்கார்ந்து விளையாட ஆரம்பித்து விட்டனர். ஆருஷி உண்டு முடித்துவிட்டு வர…

வந்திட்டியா… நீயே இவங்களைப் பார்த்துக்கோ… நம்மால முடியாது.” என்று ஆதவன் சொல்ல…

நீங்க பார்த்துக்கிற அழகை தான் நானும் பார்த்தேனே… நானே பார்த்துக்கிறேன்.” என்றாள் புன்னகையுடன்.

பிள்ளைகள் விளையாடி களைப்படைந்து கண்களில் தூக்கத்தோடு இருக்க, அதைப் பார்த்த அருஷி இருவருக்கும் மெத்தை எடுத்து வந்து விரித்துப் படுக்க வைத்து கதை சொல்ல.. இருவரும் உறங்கி விட்டனர். ஆருஷியும் அவர்களுடனே படுத்துக் கொண்டாள்.

மாலை இரு நாத்தனார்களும் பிள்ளைகளுடன் வந்திருக்க… வீடே கல்யாண சத்திரம் போலச் சத்தமாக இருந்தது. வர்ஷா நாத்தனார்களுடன் பேச உட்கார்ந்து விட… ஆருஷி தான் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டாள்.

மஞ்சுளாவின் இரண்டு மகள்களும் யஸ்வந்தையும், தர்ஷனையும் ஆளுக்கொருவரை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தனர். பெரியவள் பிரத்யுஷா ஆறாம் வகுப்பும், இளையவள் தீபிகா மூன்றாம் வகுப்பும் படிக்கின்றனர்.

சிறிது நேரத்தில் மூத்தவள் தன் அண்ணன்களுடன் விளையாட சென்று விட… இளையவள் மட்டும் அத்தை அத்தை என்று ஆருஷியுடன் ஒட்டிக் கொண்டாள்.

தன் மகனோடு சேர்த்து தர்ஷனுக்கும் ஆருஷி உணவை எடுத்து வந்து ஊட்ட…

எனக்குக் கூட எங்க அம்மா ஊட்டி தான் விடுவாங்க.” என தீபிகா சொல்ல…

நீயும் சாப்பிடுறியா அத்தை உனக்கும் கொடுக்கட்டுமா?” என்றதும், தீபிகா சரி என்று சொல்ல… அருஷி அவளுக்கும் உணவு எடுத்து வந்து ஊட்டி விட்டாள்.

அதைப் பார்த்த மஞ்சுளா, “அவ சரியான சோம்பேறி ஆருஷி. நாளைக்கு உன்னையே குளிப்பாட்டி விடச் சொல்லுவா பாரு.” என,

பரவாயில்லை அண்ணி சின்னப் பொண்ணுதானே.” என்றாள் ஆருஷி.

விஜயன் அக்காள்களோடு பேச உட்கார்ந்து விட… ஆதவனும் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தாலும், மனைவியோடும் இருப்பது போலப் பார்த்துக் கொள்வான். இன்னும் ஆருஷிக்கு அவர்களோடு ஒட்டி உறவாட முடியவில்லை என்று புரிந்தது.

நாத்தனார்களோடு அவ்வளவு வாயாடும் வர்ஷா.. ஆருஷியிடம் மிகக் குறைவாகவே பேசினாள் என்பதை ஆதவன் கவனித்துத் தான் இருந்தான்.

இரவு எல்லோருக்கும் இட்லி இருக்க… அதோடு தோசையும் ஊற்றினார்கள். முதலில் பிள்ளைகள் உண்ண… இரண்டு கல்லை வைத்துப் பிரமிளா தோசை சுட… ஆருஷி அதை எடுத்து வந்து அவர்களுக்குப் பறிமாறினாள். அடுத்து கணவன், கொழுந்தன், மாமனார் மற்றும் இளைய நாத்தனாருக்கு பரிமாறினாள்.

அடுத்து பிரமிளாவை உண்ண சொல்லிவிட்டு ஆருஷி தோசை சுட… பிரமிளாவும் துர்காவும் உண்டனர். அதுவரையில் கண்ணில் படாத வர்ஷா அப்போது தான் வர… அவளைப் பார்த்ததும் உண்ண சொல்ல… அவளும் நேராகச் சென்று சாப்பிட உட்கார்ந்து விட்டாள்.

ஆருஷி, நீ இன்னும் சாப்பிடலை இல்லை… நீ வந்து சாப்பிடு.” என ஆதவன் மனைவியை அழைத்து விட்டான். வர்ஷாவுக்குத் தோசை சுட ஆதவன் விடவில்லை.

உண்டு கொண்டிருந்த துர்கா சட்டென்று நிமிர்ந்து மகனை பார்த்தவர் என்ன நினைத்தாரோ…. “மஞ்சுளா நீ போய்த் தோசை ஊத்து.” என்றார்.

ஆருஷி அவள் சுட்டிருந்த தோசையோடு வர… “நீ உட்கார்ந்து சாப்பிடு.” என்றார் துர்கா. ஆருஷியும் உட்கார்ந்து உண்ண ஆரம்பித்தாள்.

எல்லோருக்கும் ஆருஷி தோசை ஊற்றும் போது ஆதவன் அமைதியாகத்தானே இருந்தான். இப்போது மட்டும் ஏன் அப்படிச் சொன்னான் என துர்கா யோசிக்க… பிரமிளா அதைத் தம்பியிடம் கேட்டே இருந்தாள்.

அக்கா நம்மைச் சமமா நினைக்கிறவங்களுக்காக என்ன வேணா செய்யலாம். ஆனா வர்ஷா அருஷியை குறைவா பார்க்கிற மாதிரி இருக்கு. உங்ககிட்ட எல்லாம் இவ்வளவு பேசுறா இல்ல… ஆருஷிகிட்ட உட்கார்ந்து ஒரு அஞ்சு நிமிஷம் பேசி நான் பார்க்கலை.”

என் பொண்டாட்டி யாருக்கும் வேலைக்காரி எல்லாம் இல்லை. யாரு என்ன தர்றாங்களோ அதுதான் திருப்பிக் கிடைக்கும்.” என்றான் கோபமாக.

சரி டா விடு, நீ சொல்லிட்ட இல்ல… நாங்க பார்த்துக்கிறோம். அவ எப்பவுமே கொஞ்சம் மண்டையா தான் இருப்பா…”

மஞ்சுளா தோசை ஊற்றிக் கொடுக்க… ஆருஷியும், வர்ஷாவும் உண்டு முடித்தனர்.

துர்கா சமையல் அறையை ஒதுங்க வைத்தவர், மகன்கள் விடுமுறைக்கு என்று வரும் போது தானே மனைவியுடன் இருக்கிறார்கள்… அதனால் மருமகள்களை நேரத்துடன் படுக்கச் சொல்லி அனுப்பினார்.

பிரமிளாவும் பிள்ளைகளைத் தாங்கள் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி விட… ஆருஷியும் வர்ஷாவும் அவர்கள் அறைக்குச் சென்று விட்டனர்.

முன்தினம் தான் விஜயன் வெளிநாட்டில் இருந்து வந்தது, அவன் களைப்பாக இருக்கிறது என்று நேரமே படுக்கச் சென்று விட… ஆதவன் மட்டும் சிறிது நேரம் இருந்து பேசிவிட்டுச் சென்றான்.

துர்கா, பிரமிளா, மஞ்சுளா மட்டும் பேசிக் கொண்டிருக்க… அப்போது பிரமிளா ஆதவன் வர்ஷா பற்றி நினைப்பதை சொல்லி விட்டாள்.

நான் அதுதான் நினைச்சேன், ஆதவன் அப்படி எல்லாம் சொல்ல மாட்டானேன்னு.” என்றாள் மஞ்சுளா… துர்கா கேட்டுக் கொண்டிருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.

அறையில் விஜயன் மனைவியிடம் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தான். “ஆதவன் அப்படிச் சொல்ற ஆளே இல்லை. நீ அண்ணிகிட்ட சரியா பேசுறது கூட இல்லை. உனக்கேன் செய்யணும்னு நினைச்சிருப்பான். எங்க அண்ணி சீர் கொண்டு வந்தாங்களோ… வரலையோ… அது எங்க வீட்டுப் பிரச்சனை… இதனால உங்க அப்பா வீட்டு சொத்து ஒன்னும் குறையப் போறது இல்லை. அதனால் நீ தேவையில்லாம ஆடாத.” என்றான்.

நீங்க உங்க அண்ணிக்கு ஏன் சப்போர்ட் பண்றீங்கன்னு எனக்குத் தெரியாதா?”

ஏன்?” என விஜயன் திருப்பிக் கேட்க…

அவங்க இலக்கியாவோட அக்கா… அதனால தான.”

உன்கிட்ட போய் நான் சொன்னேன் பார்த்தியா… என்னைச் செருப்பால அடிக்கணும். நம்ம பொண்டாட்டியாச்சே…. உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கணும்னு சொன்னேன்.”

நானும் இலக்கியாவும் லவ் பண்ணலை புரியுதா…”

எனக்கு வெளிய இருந்து பெண்ணை எடுக்கிறதை விட… அக்கா தங்கச்சினா நானும் எங்க அண்ணனும் ஒத்துமையா இருப்போம்னு எங்க அம்மா நினைச்சாங்க. எனக்கும் பிடிச்சு தான் இருந்தது இல்லைன்னு சொல்லலை… ஆனா அதுக்குள்ள என்னென்னவோ நடந்திடுச்சு.”

இதை மனசுல வச்சிட்டு, நீ அண்ணிகிட்ட அப்படி நடந்துகிட்டா… உன்னை எல்லாம் என்ன சொல்றது? நீ வீணா உன் மரியாதையைக் குறைச்சுக்கிற வர்ஷா. நான் அவ்வளவு தான் சொல்வேன்.” என்றான் விஜயன்.

ஆதவனும் இங்கே ஆருஷியை தாளித்துக் கொண்டு தான் இருந்தான்.

இங்க பாரு உன்னை எங்க வீட்டுக்கு வேலைக்காரியா எல்லாம் கொண்டு வரலை… நம்மை மத்தவங்க எப்படி நடத்திறந்துன்னு நாம தான் முடிவு பண்ணனும், அவங்க இல்ல… நீ எப்படி இந்த வீட்டுக்கு வந்திருந்தாலும், அது வர்ஷாவுக்குத் தேவையில்லாதது.”

“உன் புருஷன் நான் லட்சம் லட்சமா சம்பாதிக்கிறேன். நான் யாருக்கு டி சம்பாதிக்கிறேன்? உனக்குத்தானே சம்பாதிக்கிறேன். நீ யாருக்கும் குறைஞ்சவ இல்லை புரியுதா… இவளை எல்லாம் தட்டி வைக்கத் தெரியாம… நீ உன் வீட்டுக்கு போய் உட்கார்ந்திட்டா ஆச்சா….” எனக் கத்திக் கொண்டிருந்தான்.

மகன்கள் மருமகள்களோடு சேர்ந்து சந்தோஷமாக இருக்கட்டும் என துர்கா இவர்களைச் சீக்கிரம் உறங்க சொல்லி அனுப்பி வைத்தால்… இருவரும் பொண்டாட்டியோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

Advertisement