Advertisement

நாம மட்டும் பேசிட்டு இருந்தா ஆருஷி எதாவது நினைக்கப் போறா… நான் போய் அவளைக் கூட்டிட்டு வரேன்.” என பிரமிளா சென்றாள்.

இரவு பதினோரு மணி ஆகி இருக்க… பிள்ளைகளைப் படுக்கப் போகச் சொல்லிவிட்டு, பிரமிளா ஆருஷியை அவர்கள் இருந்த அறைக்கு அழைத்து வந்தாள்.

யஸ்வந்த் அறைக்குள் வந்ததும் தந்தையிடம் தாவியவன், அடுத்த ஐந்து நிமிடத்தில் உறங்கிப் போனான். கட்டிலில் நடுவே சந்தோஷை படுக்க வைத்துவிட்டு, ஒரு பக்கம் ஆதவனும் ஆருஷியும் உட்கார்ந்திருக்க… மறுபக்கம் வினோத்தும் பிரமிளாவும் உட்கார்ந்து இருந்தனர்.

ஆருஷி நீ வேலைக்குப் போனியாமே….. உன்னோட நிதானத்துக்கு எப்படிச் சரி வந்தது.” என வினோத் ஆரம்பிக்க…

அதுதான் மச்சான் எனக்கும் தெரியலை… ஒரு தோசை ஊத்தவே ஒரு மணி நேரம் ஆக்குவா… ஆபீஸ்ல போய் என்ன வேலை செஞ்சான்னு தெரியலை. ஒரு பக்கம் டைப் அடிக்கவே ஒருநாள் ஆகுமே.” என கணவன் சொன்னது, ஆருஷிக்கும் சிரிப்பு தான்.

ஒருநாள் எல்லாம் ஆகாது. நான் வேகமா தான் வேலை பார்ப்பேன்.” என்றாள்.

என்ன வேலை பார்த்தாளோ தெரியலை… ஆனா ஆபீஸ்ல இருந்து நின்னுக்கிறேன்னு சொன்னதும், உடனே சரின்னு சொல்லிட்டாங்க. அதுதான் சந்தேகமா இருக்க…” என ஆதவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல.. ஆருஷி கணவனை முதுகில் அடித்தாள்.

அவள் கையை எடுத்துப் பிடித்துக் கொண்டவன், “உண்மையைச் சொல்லு ஆருஷி.” என…

எனக்கு வெளிநாட்டில வேலை கொடுக்க எல்லாம் ஆள் இருக்கு தெரியுமா? நான் நாளைக்கே போனாலும் வேலை கிடைக்கும்.” என்றாள்.

கரகாட்டக்காரன் படம் தான் மாப்பிள்ளை நினைவுக்கு வருது, என்னை அங்க கூப்பிட்டாக, இங்க கூப்பிட்டாக. என் கிரகம் இங்க வந்து மாட்டிகிட்டேன்.” என வினோத் எடுத்துக் கொடுக்க…

அந்த டிரெஸ்ல நீ ரொம்ப நல்லா இருப்ப டி.” என ஆதவன் ஆருஷியை மேலும் சீண்ட… “பக்கத்துல நின்னு ஒத்து வாசிக்கிறது நீயா மாப்பிள்ளை?” என வினோத் ஆதவனையும் சேர்த்து வார… ஆதவன் அங்கிருந்த தலையணை எடுத்து வினோத்தை அடிக்க…

இவரைப் பத்தி தெரியாதா உனக்கு…. ஊர் திருவழானா உன் மச்சான், கரகாட்டக்காரி ஊரை விடு போற வரை அங்கேயே தான் சுத்திட்டு இருப்பாரு.” என பிரமிளா இப்போது கணவனை வார….

அப்படியா மச்சான்?” என ஆதவன் கேட்க,

ஆமாம் உங்க அக்கா அப்படியே விட்டுடுவா… அதெல்லாம் ஒரு காலம் மாப்பிள்ளை.” என வினோத் பெருமூச்சு விட…. கவலையைப் பார்த்தியா எனப் பிரமிளா சொல்ல… ஆதவனும் ஆருஷியும் சிரித்து விட்டனர்.

அன்று நள்ளிரவு வரை பேச்சும் சிரிப்புமாகச் செல்ல… ஆருஷிக்குச் சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கவே ஆரம்பித்து விட்டது. ஆதவன் மனைவி சிரிப்பதை தான் ரசித்துப் பார்த்திருந்தான்.

சரி படுக்கலாம் என அவர்கள் இருந்த அறையை ஆதவனுக்கும் ஆருஷிக்கும் கொடுத்து விட்டு, பிரமிளாவும் அவள் கணவனும் வெளியே சென்று விட்டனர்.

ஆதவன் எழுந்து சென்று கதவை சாற்றி விட்டு வர… ஆருஷி ஓய்வறைக்குச் சென்று விட்டு வந்து, மகனின் அருகே கட்டிலில் படுக்கத் தயாராக… அவளை நிறுத்திய ஆதவன், அவளைப் தன் பக்கம் திருப்பி இறுக்கமாக அனைத்துக் கொண்டான்.

இருவரின் மனதிலும் அதுவரை இருந்த எரிச்சல் காணாமல் போக… மனதிற்குள் சொல்ல முடியாத இதம் பரவுவதை இருவருமே உணர்ந்தனர்.

விலகவே மனம் இல்லாமல் விலகியவர்கள், மகனை நடுவில் விட்டு எப்போதும் போலப் படுத்துக் கொண்டாலும், ஆதவன் மனைவியின் மீது கைபோட்டுக் கொண்டான்.

காலையில் ஆருஷிக்கு சீக்கிரமே விழுப்பு வர… அவள் எழுந்து சென்று வெளியே பார்க்க… பிரமிளா பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பரபரப்பில் இருந்தாள்.

கணவனை எழுப்பிய அருஷி, “நாம நம்ம வீட்டுக்கு போகலாமா…. அண்ணி பசங்களை ஸ்சூலுக்கு அனுப்பணும். நாம இருந்தா நமக்கும் சேர்த்து சமைப்பாங்க.” என்றதும், ஆதவன் உடனே எழுந்து கொண்டவன், சென்று பல் துலக்கி முகம் கழுவிக்கொண்டு வர… உடைமாற்றி விட்டு அப்போதே வீட்டுக்கு கிளம்பி விட்டனர்.

எல்லோரிடமும் விடைபெற்று உறங்கிக் கொண்டிருந்த யஸ்வந்தையும் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டனர். கன்னியாகுமரியில் தான் என்றாலும், எல்லோரின் வீடும் இருபது முப்பது கிலோமீட்டர் தூரத்தில் தான் இருந்தது. 

காலையில சாப்பிட்டுப் பொறுமையா குளிக்கலாம்.” என துர்கா இருவரையும் காலை உணவு உண்ண சொன்னார்.

காலை உணவு உண்டு சிறிது நேரம் அக்காள்கள் வீட்டுக் கதையைப் பேசிவிட்டு, ஆதவன் கீழேயே குளித்து விட்டு, துண்டை கட்டிக் கொண்டு மாடிக்கு செல்ல… ஆருஷியும் அப்போது தான் குளித்து முடித்து வந்திருந்தாள்.

ஆதவனுக்கு மனைவியைப் பார்த்ததும் வேறு எண்ணங்கள் தலை தூக்க…. யஸ்வந்தும் கீழே இருக்க… கதவை சாற்றித் தாழிட்டவன், மனைவியைச் சென்று ஆர்வமாக அணைக்க….

நான் குளிச்சிட்டேன்….” என்றாள்.

ஆதவனுக்குக் காது கேட்குமா என்ன? அடுத்து அவள், நான் கீழ போகணும்…..” என்னும் போது, அவன் தீவிரமாக அவன் தேடுதலை அவளிடம் தொடக்கி இருந்தான். ஆருஷிக்குமே ஒரு கட்டத்தில்… விலகும் எண்ணமும் இல்லை.

சில வருடங்கள் கழித்து அவர்களின் இல்லறம் மீண்டும் துவங்கியது. ஆதவனுக்கு மனைவியை விடவே மனமில்லை. ஆனால் மகன் எந்த நேரம் வந்து விடுவானோ என்ற அச்சமும் இருக்க… வேறு வழியில்லாமல் மனைவியை விட்டான்.

என்ன டி எல்லாம் ஞாபகம் வந்திடுச்சா?” என ஆதவன் மனைவியைக் கிண்டலாகக் கேட்க… ஆருஷி பதில் சொல்லாமல் கணவனின் மார்பில் முகம் புதைத்துக்கொள்ள… இருவரும் இன்பமான நினைவில் சிறிது நேரம் இருந்தனர்.

ஆதவன் அப்படியே உறக்கத்திற்குச் சென்றிருக்க… ஆருஷி குளித்து முடித்து, துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டு கதவை சாற்றிவிட்டு கீழே சென்றாள்.

ஆருஷி பின்கட்டில் துணிகளைத் துவைத்து காயப்போட்டு விட்டு வந்து பார்க்க… ஈஸ்வரும் துர்காவும் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தனர்.

தெரிஞ்சவங்க வீட்ல வளைகாப்புச் சீக்கிரம் வந்திடுறேன். நான் வந்து சமைக்கிறேன்.” என துர்கா சொல்ல…

அங்கேயே சாப்பாடு இருக்கும் தானே அத்தை. நீங்க சாப்பிட்டு வாங்க. எங்களுக்குத் தானே நானே சமைக்கிறேன்.” என்றாள். துர்காவும் அரக்க பரக்க ஓடி வர வேண்டாம் என நிம்மதியாகக் கிளம்பி சென்றார். யஸ்வந்தையும் உடன் அழைத்துச் சென்று விட்டனர்.

ஆதவன் மதிய உணவு நேரத்திற்குத் தான் குளித்து விட்டு வந்தான்.

ஆருஷி சாம்பார் வைத்து, ஒரு பொரியலும் செய்திருந்தவள், மாமியார் சொல்லிவிட்டு சென்ற மீனையும் வறுத்து வைத்திருக்க……

அம்மா எங்க?” என்று கேட்டபடி ஆதவன் உணவு அருந்த உட்கார…. அவங்க கல்யாண வீட்டுக்கு போயிருக்காங்க. யஸ்வந்தையும் கூட்டிட்டு போயிருக்காங்க.” என்றபடி ஆருஷி உணவைப் பரிமாற….

உணவை உண்டவன் உடனே சொல்லி விட்டான். “இது எங்க அம்மா சமையல் போல இல்லையே?” என்று….

அடப்பாவி என ஆருஷி நினைக்க…

ஆனா சாம்பார் நீதான் டி நல்லா வைக்கிற…. எங்க அம்மா மீன் குழம்பு, மட்டன் எல்லாம் நல்லா செய்வாங்க. சாம்பார் கொஞ்சம் சுமாரா தான் இருக்கும். நீ நல்லா வச்சிருக்க.” என்றான்.

உண்மையிலேயே நன்றாக… இருந்தால் கணவன் பாராட்டுகிறான் என்பதில் ஆருஷிக்கு மகிழ்ச்சி தான். திருமண வீட்டில் இருந்து வந்த அம்மாவிடமும், “ஆருஷி உங்களை விட நல்லா சாம்பார் வைக்கிறா… இனி சாம்பார் வைக்கிறதை அவகிட்ட கொடுத்திடுங்க.” என்றான்.

ஆருஷி சற்று பயத்துடன் தான் மாமியாரை பார்த்தாள்.

சாம்பார் வைக்கவே எனக்குப் பிடிக்காது டா… நல்லா தா போச்சு.” என்றார் துர்காவும்.

அன்று வீட்டிலேயே இருந்தனர். மறுநாள் உள்ளுரில் இருக்கும் உறவினர்கள் வீட்டுக்கு எல்லாம் சென்று பார்த்துவிட்டு, அப்படியே மகனின் பிறந்தநாளைக்கு அவர்களை அழைத்து விட்டு வந்தனர்.

ஆதவனும் ஆருஷியும் இனி சேர மாட்டார்கள் என்றெல்லாம் சில உறவினர்கள் நினைத்திருக்க…. ஆதவன் மனைவி குழந்தையுடன் வந்தது அவர்களுக்கு ஆச்சர்யமே…

கணவனுடன் வாழும் மகிழ்ச்சியோ என்னவோ… எப்போதுமே புன்னகை தவழும் முகம் தான் ஆருஷிக்கு, இப்போது உள்ளத்தின் மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள… இன்னும் அழகாகத் தெரிந்தாள்.

அன்று இரவு ஈஸ்வர் மெதுவாகத் துர்காவிடம், “எல்லோரையும் கூப்டிட்டு ஆருஷி அப்பா அம்மாவை மட்டும் கூப்பிடலைனா நல்லா இருக்குமா? அதோட ஆருஷிக்கும் அவங்க அப்பா அம்மா வரலைன்னு வருத்தம் இருக்கும் தானே…”

ஆதவன் நமக்குன்னு பார்ப்பானா இல்லை அவன் பொண்டாட்டிக்குன்னு பார்ப்பானா… இப்போ தான் எல்லாம் சரியாகிட்டு வருதே… அதோட மத்தவங்க பேசவும் நாமே ஏன் இடம் கொடுக்கணும்?” என்றார்.

கணவர் சொன்னதை யோசித்துப் பார்த்த துர்கா, “ஆமாம் இவ பிறந்த வீட்ல இருந்து கொண்டு வந்துதான் நமக்கு நிறையப் போகுதா என்ன? அப்போவே ஏமாந்திட்டோமேன்னு கோபமும் வருத்தவும் தான். ஆனா நாம எதோ வரதட்சனைக்குப் பறந்த மாதிரி ஆகிடுச்சு…. அவளோட அப்பா அம்மாவும் வந்திட்டு போயிட்டா… அதோட முடிஞ்சிடும். இல்லைனா எல்லோரும் அதையே பேசிட்டு இருப்பாங்க.”

இதை வச்சு அவளுக்கும் ஆதவனுக்கும் நடுவுல பிரச்சனை வர்றதும் வேண்டாம். நாளைக்கு நீங்களும் ஆதவனும் போன் பண்ணி அவங்ககிட்ட சொல்லிடுங்க.” என்றார் துர்கா.

மறுநாள் காலை அதை மகனிடம் சொன்னவர்கள், சரத் அலுவலகம் செல்லும் முன் பேசிவிடலாம் என்று அப்போதே ஆருஷியின் பெற்றோருக்கு அழைத்து, ஆதவனும் ஈஸ்வரும் பிறந்தநாள் விழாவுக்கு வரும்படி சொல்லிவிட்டு வைத்தனர்.

உண்மையில் தன் பெற்றோரை அழைத்தது ஆருஷிக்கு மகிழ்ச்சியாக இல்லை. இங்கே வந்து சரத் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், இப்போது செய்கிறேன் அப்போது செய்கிறேன் என எதாவது சொல்லி…. எல்லோருக்கும் திரும்ப ஞாபகப்படுத்துவார். ஏற்கனவே கடுப்பில் இருப்பவர்களுக்கு இன்னும் கடுப்பாகும். அதை நினைத்து ஆருஷிக்குக் கலக்கமாக இருந்தது. 

Advertisement