Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 8

துர்கா பேரனின் பிறந்த நாளை சிறப்பாக எல்லோரையும் அழைத்துக் கொண்டாட நினைத்தார். அவர்கள் பக்க உறவினர்கள், அவன் பிறந்து இன்னும் பார்க்கவில்லையே… அதனால் எல்லோரையும் அழைத்து வீட்டிலேயே ஆள் வைத்து பிரயாணி போடலாம் எனப் பேசிக்கொண்டு இருந்தார்.

எல்லோரையும் அழைத்தால் ஆருஷியின் பெற்றோரையும் அழைக்க வேண்டும் தானே… அவர்களை மட்டும் விட்டால் நன்றாக இருக்காது என ஆதவனுக்கு இருக்க…. அதை அம்மாவிடம் எப்படிச் சொல்வது என யோசனையில் இருந்தான்.

கணவனின் முகமே அவன் என்ன நினைக்கிறான் என்று காட்டிக் கொடுக்க…

இங்க பாருங்க, எங்க அப்பா அம்மாவை கூப்பிட சொல்லி எல்லாம் நீங்க சிபாரிசு பண்ண வேண்டாம். அவங்க இங்க வந்து அவமானப்படுறதையும் என்னால பார்க்க முடியாது.” என்றாள் முகத்தை தொக்கி வைத்துக் கொண்டு.

எங்க வீட்ல இருந்து கூப்பிட்டா… அப்போ அவங்களுக்கு எப்படி நடந்துகிறதுன்னும் தெரியும். இல்லைனா கூப்பிடவே மாட்டாங்க. அதனால உனக்கு அந்தக் கவலை வேண்டாம்.” 

உங்க அப்பாகிட்ட யாரும் விருப்பபட்டு அப்படி நடந்துக்கலை… கொஞ்சம் டைம் கொடுங்க சரியாகிடும்னு சொன்னா அவர்தான் கேட்காம பண்ணிட்டு இருந்தார். அப்பவும் வந்தவரை வாங்கன்னு கேட்காம இருந்தாங்களா என்ன?”

சும்மா எதாவது பேசிட்டே இருந்தேன்னு வச்சுக்கோ அவ்வளவு தான். இதை எப்போ சரி செய்யலைனா…. எப்பவுமே சரி செய்ய முடியாது.” என ஆதவனும் திருப்பிக் கொடுத்தான். . 

உங்க வீட்ல சரியா தான் நடந்துக்கிடாங்க. ஆனா எனக்குத் தான் ஒரு மாதிரி இருக்கு. அதனால வேண்டாம் சரியா.”

நான் எங்க வீட்ல கூப்பிடுங்க… கூப்பிடாதீங்க எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா எங்க அப்பா அம்மாவுக்கு என்ன செய்யணும்னு தெரியும். எனக்கு அவங்க மேல நம்பிக்கை இருக்கு.” என்றான்.

மறுநாள் மனைவி மகனை அழைத்துக் கொண்டு மதிய உணவுக்குப் பெரிய அக்காவின் வீட்டுக்கு செல்ல… துர்காவும் ஈஸ்வருமே அவர்களுடன் வந்தார்கள்.

பிரமிளா தடபுடலாக விருந்து தயார் செய்திருந்தாள். துர்காவுமே சம்பந்தியோடு நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார். பிரமிளாவின் மாமியார் மருமகளைத்தான் எதாவது சொல்லிக் கொண்டிருப்பாரே தவிர… அவள் வீட்டு ஆட்களிடம் நன்றாகவே நடந்து கொள்வார்.

பையன், மருமகன், பேரன் எல்லாம் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காங்க போலிருக்கு.” என்ற சம்பந்தியிடம், “ஆமாம் ஆதவனுக்கு இப்போதான் லீவ் கிடைச்சது.” என்றார் துர்கா விட்டுக் கொடுக்காமல்.

பிரமிளா ஆதவனுக்குப் பிடிச்சது சமைத்திருந்தது போல ஆருஷிக்கும் விருப்பானது பார்த்துச் செய்து தான் இருந்தாள். ஆருஷிக்கு நூட்லஸ் பிடிக்கும் என்று அவளுக்கு இரால் போட்டு நூட்லஸ் செய்திருந்தாள்.

மாலையில் பள்ளியில் இருந்து வந்த பிரமிளாவின் பிள்ளைகளைப் பார்த்து விட்டுக் கிளம்பினர். ஆதவன் அக்கா பிள்ளைகள் நான்கு பேருக்கும் ஒரே மாதிரி ஸ்மார்ட் வாட்ச் வாங்கி இருந்தான். அதைத் தன் மகனை விட்டுக் கொடுக்கச் செய்தான். அதோடு இனிப்புகள் பழங்கள் என நிறையவே வாங்கிக் கொண்டு சென்றனர்.

மாமனின் பரிசு மருமகன்களுக்கும் பிடித்திருக்க… தாங்கஸ் மாமா என்றனர்.

ஆறு மணி வரை அங்கிருந்து விட்டு மஞ்சுளா வீட்டுக்கு கிளம்ப… ஆதவனின் பெற்றோர், தாங்கள் வீட்டுக்குச் செல்வதாகச் சொல்லி சென்று விட்டனர்.

ஆதவன் அக்காவை அழைக்க… “அவங்க மாமியார் மூடுக்கு ஏத்த மாதிரி இருப்பாங்க டா… சில நேரம் நல்லா பேசுவாங்க… சில நேரம் பேசவே மாட்டாங்க.” என பிரமிளா தயங்க… “நான்தான் இருக்கேன் இல்ல வா…” என்று ஆதவன் பிரமிளாவையும் அவள் பிள்ளைகளையும் உடன் அழைத்துச் சென்றான்.

மஞ்சுளாவின் மாமியாருக்கு மருமகள் மீது எதாவது குறை என்றாலும் அதை அவளிடம் வெளிப்படையாகக் காட்ட முடியாது… ஏனென்றால் மகன் சண்டைக்கு வருவான். அதனால் அந்தக் கோபத்தை மஞ்சுளாவின் குடும்பத்தினர் மீது தான் காட்டுவார். மஞ்சுளாவுக்காக இவர்களும் பொருத்து போய் விடுவார்கள்.

இப்போதும் பிரமிளாவுடன் முகம் கொடுத்து பேசவில்லை. ஆனால் ஆருஷியை நன்றாக உபசரித்தார்.

ஆதவன் என்னக்கா என நம்பாமல் கேட்க…

இது தான் டா குடும்ப அரசியல். நம்ம வீட்டுக்கும் ஆருஷி வீட்டுக்கும் பிரச்சனைன்னு அவங்களுக்குத் தெரியும். அதனால அவங்க சப்போர்ட்டை அவளுக்கு உபசரிக்கிறதுல காட்டுறாங்க புரியுதா?”

இதே வர்ஷா வந்தா?”

நான்தான் சொன்னேனே அவ பேசியே எல்லோரையும் கவுத்திடுவா… பெரியம்மா பெரியம்மான்னு பாசமா கூப்பிட்டே… அவ இவங்க தலையில மிளகாய் அறைச்சிட்டு போயிடுவா.” ஆதவனுக்கு அதைக் கேட்டுச் சிரிப்பு தான்.

ஆருஷி எல்லோரிடமும் நன்றாகவே நடந்து கொண்டாள். நாத்தனார்கள் வீட்டினரிடம், அவர்கள் பிள்ளைகளிடம் என நன்றாகவே பேசிக் கொண்டு இருக்க… அமைதியான அத்தையைப் பிள்ளைகளுக்கும் பிடித்தது. யஸ்வந்த் எல்லோரோடும் சேர்த்து ஒரே ஆட்டம்.

இவர்கள் வந்தது தெரிந்து மஞ்சுளாவின் கணவனும் வந்து விட… அதன் பிறகு எல்லோரும் உண்டு அங்கிருந்து கிளம்பவே இரவு ஒன்பது மணி ஆகி விட்டது. மீண்டும் பிரமிளாவின் வீட்டிற்கு அவளை விட வர… பிள்ளைகள் அவர்களை விடவே இல்லை.

நைட் இவ்வளவு நேரத்துக்கு அப்புறம் நீ போனாலும் எனக்குப் பயமாவே இருக்கும். இருந்திட்டு காலையில போ… நம்ம வீடு தானே…” என பிரமிளா சொல்ல… வினோத்தும் அப்போது தான் வீட்டில் இருந்தான். அதனால் பெற்றோருக்கு அழைத்துச் சொல்லிவிட்டு இங்கேயே தங்கினர்.

பிரமிளா ஆருஷிக்கு புது நைட்டி கொண்டு வந்து கொடுக்க… ஆதவனும் மச்சானின் வேட்டியை வாங்கிக் கட்டிக் கொண்டான்.

பிரமிளாவின் பிள்ளைகளுடன் யஸ்வந்த ஒரே ஆட்டம். அவர்களோடு ஆருஷி இருந்தாள்.

ஆதவன், வினோத், பிரமிளா இன்னொரு அறையில் பேசிக் கொண்டு இருந்தனர்.

மச்சான் நீ குடிக்கிறியா? உன்னைக் கடையில பார்த்ததா சொன்னாங்க.” என்றதும் பிரமிளாவுக்கு அதிர்ச்சி.

டேய் ஏன் டா இப்படிப் பண்ற?” எனக் கேட்க…

எப்போவோ ஒரு தடவைக்கா மனசு சரி இல்லைனா…” என ஆதவன் சொல்ல…

வேண்டாம் மாப்பிள்ளை அப்படியே பழக்கமாகிடும்.” என வினோத் எச்சரித்தான். 

அம்மாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?” 

அக்கா ப்ளீஸ் சொல்லிடாத… அம்மா என்னோட பேசவே மாட்டாங்க. இனிமே குடிக்க மாட்டேன்.”

நீ அம்மா மேல சத்தியம் பண்ணு அப்போதான் நம்புவேன்.” என்றாள் பிரமிளா.

சரி அம்மா மேல சத்தியமா குடிக்க மாட்டேன்.”

டேய் பிரச்சனை யாருக்கு தான் டா இல்லை. எல்லோரும் போய்க் குடிச்சா பிரச்சனை சரி ஆகிடுமா? இப்போதான் உன் பொண்டாட்டியோட சேர்ந்திட்ட இல்ல… அம்மா கூட உன்னை எதுவும் சொல்லலையே…”

அது வந்த அன்னைக்கு டென்ஷன்ல குடிச்சேன். இப்போ இல்ல… ஆருஷியும் நல்லாத்தான் இருக்கா.” என்றான். அதன் பிறகே பிரமிளாவுக்கும் வினோத்துக்கும் நிம்மதியானது.

அக்கா தயவு செஞ்சு மஞ்சுகிட்ட சொல்லிடாத… அவ கண்டிப்பா அம்மாகிட்ட சொல்லிடுவா.”

எனக்குத் தெரியும் சொல்ல மாட்டேன்.” என்றாள் பிரமிளா.

மஞ்சு அக்காவை நினைச்சா கவலையா இருக்கு.”

ஆமாம் அவங்க மாமியார் ஒரு மாதிரி தான். இவளும் லேசுபட்டவ இல்ல டா.. கோபம் வந்தா அவ மாமியார்கிட்ட பேசாம கூட இருப்பா… அவ வீட்டுக்காரர் அவளுக்குத் தான் சப்போர்ட். நீ அவளை நினைச்சு கவலைப்படாதே… அவ நல்லத்தான் இருக்கா.”

சில நேரம் இவளும் ஆடுவா புரியுதா… அதுதான் அவ மாமியார் கோபத்தை அவகிட்ட காட்ட முடியாம நம்மகிட்ட காட்டுறாங்க.”

எல்லார் வீட்லையும் மாமியார் மருமகள் இப்படித்தான். என் மாமியாரும் கல்யாணமான புதுசுல என்னைப் படுத்தாத பாடு இல்லை. அதுக்காக மாமியாரை வேண்டாம்னு சொல்ல முடியுமா?”

நான் உனக்கும் சொல்றேன். அம்மாவுக்கும் ஆருஷிக்கும் உடனே எல்லாம் சரியாகாது. அதுக்காக நீ குடிக்க ஆரம்பிச்சா.. குடிச்சிட்டே தான் இருக்கணும். அவங்க ரெண்டு பேரும் அடிச்சுகட்டும், பிடிச்சுகட்டும் நீ கண்டுக்காத.” பிரமிளா தம்பிக்கு அக்கறையாகச் சொல்லிக் கொண்டிருக்க…

அப்புறமும் சரியாகிடும்னு நினைக்காத மாப்பிள்ளை. நமக்குப் பழகிடும்.” என வினோத் சொல்ல… பிரமிளா கணவனை முறைக்க… ஆதவன் சிரித்து விட்டான்.

Advertisement