Advertisement

ஈஸ்வர் சொன்னதும் மகனை கவனித்த துர்காவுக்கும் மனம் சங்கடமாக இருக்க… அவரே மகள்களுக்கு அழைத்தார். எப்போதுமே இருவருக்கும் சேர்த்து பேச வேண்டும் என்றால்… வாட்ஸ் அப்பில் வாய்ஸ் கால் தான் செய்வார். “ஏன் டி உங்க தம்பி வந்திருக்கான். உங்களுக்கு வர கூட முடியாதா?”

ஏன் அவன் எங்களைப் பார்க்க வர வேண்டியது தான…“

எவ்வளவு பிரச்சனைக்கு அப்புறம் வந்திருக்கான். அவன் ஆளே ஒருமாதிரி இருக்கான்.”

அவன் பொண்டாட்டி எப்படி இருக்கா?”

இப்போ வரை நல்லாத்தான் இருக்கா… அவங்க அப்பா பண்ண விஷயத்துனால நம்ம வீட்ல அவளுக்கு இருக்க முடியாம போயிட்டான்னு எதோ சொல்றான்.”

நீங்க ரெண்டு பேரும் அவனுக்காகப் பாருங்க. இனிமே நம்ம பக்கம் எதுவும் பிரச்சனை பேச வேண்டாம்னு உங்க அப்பாவும் சொல்றார்.”

நாங்க ஏன் மா பேசப் போறோம். அப்போ கூட ஏன் பேசினோம்? அவ அப்பா பண்ண வேலையால பேசினோம்… இல்லைனா பேசப் போறோமா.

உங்களுக்கு உங்க தம்பி வேணும்னா விலகி நிற்காதீங்க. அவ்வளவு தான் சொல்லுவேன்.” என்றதும் சகோதரிகள் இருவரும் என்ன நினைத்தார்களோ… அன்று மதியமே இருவரும் வந்தனர்.

அவர்களே அவர்கள் வீட்டில் இருந்து தம்பிக்கு சமைத்துக் கொண்டு வந்திருந்தனர்.

அவர்கள் இருவரும் திடிரென்று வந்து நின்றதும், வீடே பரபரப்பானது. ஆருஷி இரு நாத்தனார்களையும் வரவேற்றாள். அவர்களும் இவளை நலம் விசாரித்தார்கள்.

இப்போ தான் வரணும்னு தோணுச்சா?” என ஆதவன் கேட்க…

உனக்கு அது கூடத் தோணலை… ஏன் நீ உன் பொண்டாட்டி பிள்ளையோட எங்க வீட்டுக்கு வரக் கூடாதா? பசங்களையும் கூட்டிட்டு வரணுன்னா வார கடைசியில தான் வர முடியும். அப்போ வரலாம்னு இருந்தோம். அம்மா போன் பண்ணி பையனை பார்க்க வரலைன்னு கோவிச்சாங்க. அதுதான் இன்னைகே வந்திட்டோம். பசங்க வந்து எங்களை ஏன் கூட்டிட்டு போகலைன்னு சண்டை பிடிப்பாங்க.”

அக்கா தங்கை இருவரும் யஸ்வந்தை தூக்கி வைத்துக் கொண்டு, “நாங்க யாரு தெரியுமா? உன்னோட அத்தை. இவ பெரிய அத்தை, நான் சின்ன அத்தை.” என அவர்களே அறிமுகம் செய்து கொண்டனர்.

அவனுக்கு என்று இருவரும் ஆளுக்கொரு உடை மற்றும் செயின் வாங்கிக் கொண்டு வந்திருந்தனர். உடையை அப்போதே யஸ்வந்திடம் கொடுத்தவர்கள், நகையைத் துர்காவிடம் கொடுத்து, “அம்மா இங்கேயே வைங்க. அடுத்த வாரம் இவன் பிறந்த நாள் வரும், அன்னைக்குக் கொடுக்கலாம்.” என்றதும், தன் மகனின் பிறந்த நாளை நினைவு வைத்திருக்கிறார்களே என ஆதவனுக்கு மகிழ்ச்சி தான்.

ஆதவன் அவன் அக்காள்களுக்கு வாங்கி வந்ததை ஆருஷியை விட்டு எடுத்து வர செய்து கொடுத்தவன், அவன் பெற்றோருக்கு வாங்கியதையும் கொடுத்தான்.

பசங்களுக்கு என்னால அங்க இருந்து வாங்கிட்டு வர முடியலைக்கா… நான் அவங்களுக்கு இங்க வாங்கிக் கொடுத்துக்கிறேன்.” என்றதும்,

அதுங்க கிட்ட என்ன இல்லை. நீ வாங்கிக் கொடுக்க… சும்மா வெட்டியா செலவு பண்ணாத.” என பிரமிளா சொல்ல…

நீ வாங்கிக் கொடு டா. என் மாமியார் எதிர்பார்ப்பங்க.” என்றாள் மஞ்சுளா வெளிப்படையாக.

நீ சொல்லவே வேண்டாமக்கா நான் கண்டிப்பா வாங்கிக் கொடுப்பேன். நீயே சொல்லு என்ன வாங்கிக் கொடுக்கலாம்.” ஆதவன் கேட்க…

அது உன் பிரியம். உனக்கு முடிஞ்சதை வாங்கிக் கொடு.” என்றாள் இளையவள்.

பிரமிளா வீட்ல அவ மாமியார் எதாவது சொல்லிட்டு தான் இருப்பாங்க. ஆனா அவளுக்கு அவங்களைச் சமாளிக்கத் தெரியும். மஞ்சுளா வீட்ல ஏற்கனவே ரெண்டும் பெண் குழந்தைங்கன்னு அவங்க மாமனார் மாமியார் ரெண்டு பேருக்குமே வருத்தம் தான். அதை வெளிப்படையா காட்டுவாங்க. ஆனா மாப்பிள்ளை நல்லா தான் பார்த்துக்கிறார்.”

ரெண்டும் பொண்ணுன்னு என் மாமியார் ஜாடையா பேசிட்டு தான் இருக்காங்க. நான் கோவிச்சுகிட்டு இங்க வந்து உட்கார்ந்திட முடியுமா? முதல்ல நம்ம அம்மா விடுவாங்களா?” என மஞ்சுளா பேச்சு வாக்கில் கேட்டு விட… இவள் நம்மைச் சொல்கிறாளோ என ஆருஷிக்குச் சந்தேகம் தான். ஆதவனும் அதைக் கவனித்தான்.

எல்லோருமே நூறு சதவீதம் சரியா இருப்பாங்கன்னு எதிர்ப்பார்க்க முடியாது மஞ்சு. உன் வீட்டுக்காரர் தான் உன்னை நல்லா பார்த்துக்கிறாரே…. அதை நினைச்சு சந்தோஷப்படு.” என்றார் துர்கா.

ஆதவன் தன் மச்சான்களுக்கு அழைத்து வீட்டிற்குச் சாப்பிட வர சொல்ல…

இப்பத்தான் உனக்கு எங்களை எல்லாம் தெரியுதா மாப்பிள்ளை.” என்றாலும் இருவரும் அவன் பேச்சுக்கு மதிப்பளித்து வந்தனர்.

ஆருஷியை நலம் விசாரித்தவர்கள், அதிகம் எல்லாம் பேச்சு கொடுக்கவில்லை. அவள் புகுந்த வீட்டில் இருந்து கிளம்பும் போது, இருவருமே நீ இப்போது சென்றால் பிரச்சனை பெரிதாகும், சில நாட்கள் பொறுத்திரு என அக்கறையாகச் சொல்லத்தான் செய்தார்கள். ஆருஷி தான் அப்போது புரிந்து கொள்ளவில்லை.

பிரமிளாவும் ஆருஷியும் பரிமாற… மற்றவர்கள் சேர்ந்து உண்டனர். பிரமிளா ஆருஷிக்கும் பரிமாறியவள், அவளை உட்கார்ந்து உண்ண சொன்னாள். ஆருஷி பிறகு உண்கிறேன் என்றாலும் கேட்கவில்லை. பிரமிளா எல்லோருக்கும் கடைசியாகத்தான் உண்டாள்.

பிரமிளா எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் பாங்கு. அவளுக்கும் பிரச்சனை இல்லாமல் இல்லை. ஆனால் அதையே யோசித்துக் கொண்டிருக்க மாட்டாள். பிறந்த வீட்டிற்கு வந்தாலும், அவளுக்கு முடிந்ததைச் செய்து விட்டு, நல்லபடியாக நடத்துக் கொண்டு சென்று விடுவாள்.

மஞ்சுளாவுக்குப் புகுந்த வீட்டில் கொஞ்சம் பிக்கல் பிடுங்கல் அதிகம் தான். அதனால் இங்கே அம்மா வீட்டுக்கு வந்தால்… ஓய்வாக இருக்க வேண்டும் என நினைப்பாள்.

மதியம் உண்டதும் வினோத்தும், ஸ்ரீதரும் தொழிலை பார்க்க சென்று விட்டனர். இவர்கள் எல்லாம் ஹாலில் பாய் விரித்துப் படுத்து பேசிக் கொண்டிருக்க… ஆருஷி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தாள். ஈஸ்வர் பேரனோடு உள்ளே அறையில் படுத்திருந்தார்.

பிரமிளாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மஞ்சுளாவுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். “எங்க மாமியார் என்னை மூணாவது பெத்துக்கச் சொல்லி நச்சரிக்கிறாங்க. ஆனா அதுவும் பெண்ணா பிறந்திட்டா… நான் அவ்வளவு தான்.”

இந்தக் காலத்தில பையனோ பெண்ணோ எல்லாம் ஒன்னு தான். ரெண்டுக்கு மேல இந்தகக் காலத்தில பெத்து வளர்க்கிறதும் சுலபம் இல்லை. அதனால அவங்க சொன்னா சொல்லிட்டு போறாங்க. நீ பேசாம இரு.” என்றார் துர்கா.

அம்மா இவளையும் நம்ப முடியாதுமா… இவளும் இவங்க வீட்ல சொல்றாங்கன்னு மூணாவது பெத்திட்டு, அதுவும் பெண்ணா பிறந்திட்டா… உங்க உயிரை தான் எடுப்பா… பேசாம இவளுக்குக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணி விட்டுடலாம்.” பிரமிளா சொல்ல…

ஆமாம் அதைப் பண்ணா தான் நான் நிம்மதியா இருக்க முடியும்.” என்றாள் மஞ்சுளாவும்.

நீ சீக்கிரம் செய் டி… நான் வந்து இங்க இருந்து உன்னைப் பார்த்துக்கிறேன்.” பிரமிளா தங்கைக்கு உதவுவதாகச் சொல்ல…

அக்கா நான் இன்னும் மூன்னு மாசம் இருப்பேன். நான் கூட இருந்து பார்த்துக்கிறேன்.” என்றான் ஆதவன்.

நான் என் வீட்டுக்காரர்கிட்ட கேட்டுட்டு சொல்றேன்.” என்றாள் மஞ்சுளா.

வர்ஷா எப்படி?” என ஆதவன் தான் கேட்டான்.

அவளா அவ பேசியே எல்லாத்தையும் கவுத்திடுவா… நல்லா பேசுவா டா… மாமியாரை பேசியே எப்படிக் கவுக்கலாம்னு அவகிட்ட கத்துக்கலாம்.”

அவ அம்மா வீடு இங்க தான தக்கலையில இருக்கு. ஆனா அவ புருஷன் வரும் போதுதான் வருவா… ஆனா வந்தா அம்மாவோட தான் முழுக்க இருப்பா… வேலை செய்யுறாளோ இல்லையோ… சக்கரையா பேசுவா… நீ பார்க்கத்தானே போற…“

வர்ஷாவின் வசதியை பார்த்து அக்காள்கள் ஒன்னும் மயங்கி விடவில்லை. யார் எப்படி என்று தெரிந்து தான் வைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது.

மாலை வரை இருந்த சகோதரிகள், “விஜயன் வந்ததும் ரெண்டு நாள் இருக்க மாதிரி வரோம். “ என்றவர்கள், ஆருஷியையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்து விட்டு கிளம்பி சென்றார்கள்.

அவர்கள் சென்றதும் இளைய மகளைப் பற்றித் தன்னுடைய கவலையைத் துர்கா மகனிடம் பகிர்ந்து கொண்டார்.

பெரியவளை பத்தி கவலை இல்லை. சின்னவளுக்குக் கல்யாணம் ஆனதுல இருந்தே பிரச்சனை தான். ஆனா அதையும் சமாளிச்சிட்டு தான் இருக்கா…”

விடுங்க மா… நாம எல்லாம் இருக்கோம் இல்ல பார்த்துக்கலாம்.” என்றான்.

அன்று இரவு யஸ்வந்த் தாத்தா பாட்டியோடு உறங்கிக் கொள்கிறேன் எனக் கீழேயே இருந்து கொண்டான்.

இவர்கள் இருவரும் மட்டும் தான் அறையில் இருந்தனர்.

நீ யாரு என்ன பேசினாலும், ஒவ்வொரு வார்த்தையும் டி கோட் பண்ணி பார்க்கிற இல்லை. அவங்க நம்மைத்தான் சொல்றாங்கன்னு நினைச்சா.. நம்மைச் சொல்ற மாதிரி தான் இருக்கும்.”

கணவன் சொன்னது உண்மை என்பதால் ஆருஷி பதில் சொல்லவில்லை.

பாரு என் அக்கா எல்லாம் எவ்வளவு பிரச்சனைக்கு நடுவில இருக்கா… எனக்கே நிறையத் தெரியாது. நான் ஒரு மாசம் லீவுக்கு வருவேன். வெளிய அங்க இங்க சுத்திரதிலேயே போயிடும். அம்மா போன் பண்ணாலும், நல்லா இருக்கியா, சாப்பிட்டியா அவ்வளவு தான் கேட்பாங்க.”

நான் கூட நினைக்கவே இல்லை. மஞ்சு அண்ணிக்கு இவ்வளவு பிரச்சனை இருக்கும்னு.”

பணம் தான் பிரச்சனைனா… கொடுத்து கூடச் சரி பண்ணிடலாம். ஆனா இதுக்கு என்ன பண்றது?” என்றான் கவலையாக.

எல்லாம் ஆளுக்கொரு பிரச்சனையில் தான் இருக்காங்க. நீதான் அதை நின்னு சமாளிக்காம… இங்க இருந்து போய்ப் பெரிய பிரச்சனை ஆக்கின. உங்க அப்பா மேல இருக்கிற கோபம் கூடச் சீக்கிரம் போயிருக்கும். இப்போ வரை அது குறையாம இருக்கக் காரணம் நீதான்.” என ஆதவன் மனைவியை நேரடியாகக் குற்றம் சாட்டினான்.

என்னோட காரணம் எனக்குத் தெரியும். அது உங்களுக்குப் பெரிசா தெரியலைனா நான் ஒன்னும் பண்ண முடியாது. நீங்க அதையே சொல்லி காட்டிட்டு இருக்க வேண்டாம்.”

நீயும் விட்டுடுன்னு தான் நானும் சொல்றேன். இன்னும் பழசையே நினைச்சிட்டு இருக்காம… எல்லாரோடவும் கலகலப்பா இருன்னு தான் நானும் சொல்றேன்.” என்றான்.

எப்படி உங்க தம்பி பொண்டாட்டி மாதிரி ஆளுக்கு எத்த மாதிரி பேச சொல்றீங்களா?”

நீ ஏன் அந்தப் பெண்ணைப் பேசுற? அவ எப்படி இருந்தா உனக்கு என்ன?”

உன்னை அவளை மாதிரி இருன்னு சொல்லலை… நீ ஒழுங்கா இரு அவ்வளவு தான்.” என்றவன், கட்டிலில் திரும்பிப் படுத்து உறங்கிப் போனான்.

Advertisement