Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 7

மாலை நண்பர்களைப் பார்க்க வெளியே சென்ற ஆதவன் இரவு தான் வீடு திரும்பினான். வெளியவே உண்டு விட்டேன் என்று சொல்லி நேராக அவன் அறைக்குச் சென்று விட்டான்.

ஆருஷி அதன் பிறகு தான் இரவு உணவு உண்டு மகனுடன் மாடிக்கு சென்றாள்.

ஆதவன் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து இருக்க… யஸ்வந்த தந்தையின் அருகே உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

ஆருஷி நைட்டி மாற்றி முகம் கழுவி கொண்டு வர… ஆதவன் அப்போதும் இறுகி போய்த் தான் இருந்தான்.

ஆருஷிக்கு ஒரு மாதிரி இருக்க… சாரி என்றாள் அவளாகவே.

எதுக்குச் சாரி? உன்னை எழுப்ப தானே தொட்டேன். எதோ தெரு பொருக்கி கையைத் தட்டி விடுற மாதிரி… அதுவும் அம்மா இருக்கும் போது தட்டி விடுற? எங்க அம்மா மட்டும் பார்த்திருக்கணும். இன்னைக்கு நடந்திருக்கிறதே வேற….”

நீங்களும் தானே அப்படிப் பேசினீங்க. அதோட இன்னைக்கு உங்க அம்மா என்னைப் பேசும் போதும் பார்த்திட்டு பேசாம இருக்கீங்க.”

எங்க அம்மா அப்படி என்ன டி பேசினாங்க உன்னை?”

நீ பண்ண வேலைக்கு, நான் வந்ததும் உன்னைக் கொஞ்சனுமா? அதுவும் நான் விளையாட்டுக்கு பேசினேன்னு உனக்கும் தெரியும். நான் அப்படிப் பேசினேனே தவிர… உன்னை மரியாதை குறைவா நடத்தினேனா?”

நான் நினைச்சிருந்தா நேரா எங்க வீட்ல வந்து இறங்கிட்டு, நீ வரணும்னா உங்க அப்பா அம்மாவோட வான்னு சொல்லி இருக்க முடியாது. உனக்குச் சங்கடமா இருக்கும்னு தான், நானே வந்து உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்.”

ஆருஷி, உங்க வீட்ல எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனா எங்க வீட்ல எல்லாத்தையும் நாங்க பொறுத்திட்டு போக மாட்டோம். எது செய்யுறதுனாலும் யோசிச்சு பண்ணு.”

நீ எங்க அம்மாவை சாதாரணமா நினைக்கிற… எங்க அம்மா உங்க அப்பாவை பார்த்த அன்னைக்கே சொன்னாங்க. அவர்கிட்ட எதோ சரி இல்லை. எதுக்கும் யோசிச்சிக்கலாம்னு. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதுனால தான் என் விருப்பத்துக்கே விட்டாங்க.”

உங்க வீட்ல நினைச்சீங்க இல்ல… படிச்ச வெளிநாட்டில் வேலையில இருக்கிற மாப்பிள்ளையை விட்டுட கூடாதுன்னு… ஏன் உங்க சக்திக்கு ஏத்த இடத்தில பார்த்திருக்கலாம் தான… பொண்ணு பெரிய வீட்ல வாழணும்னு உங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரி தான… எங்க வீட்லயும் நினைப்பாங்க.”

உங்க எதிர்ப்பார்ப்பு தப்பு இல்லைனா… எங்க எதிர்பார்ப்பும் தப்பு இல்லை.”

எல்லாப் பெத்தவங்களுக்கும் தன் பிள்ளைகளுக்குச் சீரும் சிறப்புமா கல்யாணம் பண்ணும்னு ஆசை இருக்கும். அதைத் தான் எங்க வீட்லையும் எதிர்பார்த்தாங்க. நம்ம பையனுக்கு நாம எதிர்ப்பார்த்த மாதிரி கல்யாணம் நடக்கலைன்னு அவங்களுக்கு ஆதங்கம் இருக்கு தான். ஆனா அதுக்காக உன்னைக் குறைவா நடத்தினாங்களா? நான் அவங்க பெத்த பிள்ளை என்கிட்டே தான புலம்பினாங்க.”

எவ்வளவு கோபம் இருந்த போதும், வந்ததும் உன்னைச் சாப்பிடுன்னு தான எங்க அம்மா சொன்னாங்க. உனக்கு இதுக்கு மேல என்ன பண்ணனும்? உன்னை வச்சு தாங்கணுமா?”

எங்க அம்மா எதிர்பார்த்தது, நீயா தான இந்த வீட்ல இருந்து போன… அப்போ நீயா தான் இங்க வரணும்னு மட்டும் தான் அவங்க எதிர்ப்பார்த்தாங்க. அது தெரிஞ்சும், நானா வந்து தான் உன்னைக் கூட்டிட்டு வந்தேன்.”

நான் இப்போ என்ன பண்ணிட்டு வந்திருக்கேன் தெரியுமா? குடிச்சிட்டு வந்திருக்கேன். எங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா என்னோட பேசவே மாட்டாங்க. எங்க அம்மாவுக்குத் தப்பை பொறுக்கத் தெரியாது.”

அவங்க பையன் குடிச்சிட்டு வந்தான்னு தெரிஞ்சா அவங்க மன்னிக்கவே மாட்டாங்க. ஆனா எனக்கு இருக்க மன உளைச்சல் எனக்குத்தான் தெரியும்.”

நானும் உங்க வீட்டை விட்டுக் கொடுக்காம இருக்கத் தான் பார்க்கிறேன். ஆனா என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு.”

உங்க அப்பா பண்ணது முடிஞ்சு போச்சு. ஆனா நீ எங்க வீட்ல இருந்து போனதுக்கு ஒரு கதை சொன்ன… வர்ஷாவை எல்லாம் காரணமா சொன்ன… சரி அதையும் நான் ஏத்துக்கிறேன். ஆனா இப்போ நீ பண்றது எனக்கே உன் மேல இருக்க நம்பிக்கை போயிடும் போல…”

உனக்கு முதல்ல என்னோட வாழ இஷ்ட்டமா இல்லையா… நீ முடிவு பண்ணி சொல்லு.”

ஆருஷி கணவன் பேச பேச இறுகிப் போய்த் தான் நின்றிருந்தாள்.

நான் எதுக்கு எங்க அப்பா வீட்டை விட்டு வந்தேன்னு நினைக்கிறீங்க. நீங்க அப்பவாவது வர மாட்டீங்களான்னு தான். நான் எங்க அப்பா செஞ்சதை நியாப்படுத்தவே இல்லை. தப்புன்னு தெரிஞ்சதுனால தான் உங்க வீட்ல ஒண்ட முடியலை.”

ஓ… அப்போ இதுக்கு என்ன வழி… என்னையும் எங்க வீட்ல இருந்து வர சொல்றியா?”

நான் அப்படிச் சொல்லலை…”

இதுக்கு வேற என்ன அர்த்தம். உங்க அப்பா பண்ணதுக்கு, நீ எங்க வீட்டு ஆளுங்களையும் சேர்த்துத் தண்டனை அனுபவிக்கச் சொல்றியா?”

உன்னை யாரும் இங்க குறைவா எல்லாம் நடத்திட மாட்டாங்க. அதுக்கு நான் பொறுப்பு.”

அப்படி நடந்தா?” என ஆருஷி திருப்பிக் கேட்க…

நடக்காது அப்படி நடந்தா என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்.” என்றவன், கட்டிலின் ஓரத்திற்குச் சென்று திரும்பிப் படுத்துக் கொண்டான். யஸ்வந்த ஏற்கனவே படுத்து உறங்கி இருந்தான்.

கட்டிலுன் மறுபக்கம் படுத்துக் கொண்டாலும், ஆருஷிக்கு வெகு நேரம் உறக்கம் வரவில்லை.

மறுநாள் காலை ஆருஷி குளித்து விட்டுத்தான் கீழே சென்றாள். ஆதவன் தாமதமாகத்தான் எழுந்து வந்தான்.

நேத்தே அக்காளுங்க வருவாங்கன்னு நினைச்சேன். ஏன் யாருமே வரலை?” என ஆதவன் டீ குடித்தபடி கேட்க…

தம்பி பொண்டாட்டிகிட்ட நல்லாத்தானே இருந்தோம். அப்பவும் போயிட்டாளேன்னு வருத்தம். மாப்பிள்ளைங்க முதல்கொண்டு உன் பொண்டாட்டிகிட்ட பேசித்தான் பார்த்தாங்க. நம்மை மதிக்கலைன்னு கோபம்.” என ஆருஷியை வைத்துக் கொண்டு தான் துர்கா பேசினார்.

நேற்று தான் கணவனிடம் வாயை கொடுத்து வாங்கி இருந்தாள். இப்போது மீண்டும் மாமியார் ஆரம்பிக்கிறாரே என்று இருந்தது.

இங்க ஊருக்குள்ளயும் ஆளுக்கு ஒரு பேச்சு பேசினாங்க. நாத்தனாருங்கன்னு அவளுங்க தலையும் தான் உருண்டுச்சு. உன் மாமாங்க உன் அக்காள்களை இனி நம்ம வீட்டு விஷயத்துல தலையிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.”

எனக்கு முடியலைனா அவளுங்க தான் ஓடி வந்து பார்க்கிறாளுங்க. அவளுங்க இருக்கிற தைரியத்துல தான், ரெண்டு மகனும் வெளிநாட்டில இருந்தாலும்… எங்க காலம் ஓடுது.”

அவங்களுக்குத் தொந்தரவு கொடுக்காம நானும் உங்க அப்பாவும் போய்ச் சேரணும்.”

அப்போ நானும் தம்பியும் உங்களைப் பார்க்கவே மாட்டோம்னே முடிவுக்கு வந்துடீங்களா மா…” என்றான் ஆதவன்.

அப்படிச் சொல்லலை… உங்க வேலையும் அப்படித்தானே… எங்களை எல்லாம் பார்க்க வேண்டாம். உங்க பொண்டாட்டி பிள்ளையோட சண்டை சச்சரவு இல்லாமல் இருங்க. அது போதும்.”

இனி நீங்க பணம் கூட அனுப்ப வேண்டாம். எங்களுக்குத் தேவையானது இருக்கு. அதுக்கு மேல சேர்த்து என்ன பண்ணப் போறோம். சின்னவன் கிட்டயும் சொல்லணும்.” என்ற துர்கா எழுந்து சென்றார். ஈஸ்வரும் அங்கே தான் இருந்தார். அவரும் மனைவி பேசியதற்கு மறுப்பாக எதுவும் சொல்லவில்லை.

அம்மா பெத்த பிள்ளைகளின் மேல் இருந்த நம்பிக்கையை விட்டு விட்டார் என்று புரிந்தது. தான் அவர் நம்பிக்கையைத் திரும்பப் பெறுவோமா என்று கூடத் தெரியவில்லை. ஆதவன் அதன் பிறகு மிகவும் அமைதியாகிப் போனான்.

காலை உணவுக் கூட மிகவும் தாமதமாகத்தான் உண்டான்.

ஈஸ்வர் மனைவியைக் கடிந்து கொண்டார். “துர்கா, திரும்ப திரும்பப் பேசுறதுனால என்ன ஆகப் போகுது? நாம தானே அவனுக்குப் பொண்ணு பார்த்தோம். கல்யாணமும் ஆகி குழந்தையும் வந்தாச்சு. இனியும் பழசை பேசி என்ன ஆகப் போகுது.”

அவங்க வீட்ல பண்ணதுக்கு இவன் என்ன பண்ணுவான்? அவங்க பண்ணதுக்கு நாமும் நம்ம கோபத்தை அப்பவே காட்டிட்டோம். இனி ஆதவனுக்காகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகலாம். அவனைப் பார்த்தாலே நிம்மதி இல்லாம இருக்கிற மாதிரி இருக்கு. நமக்கு அவனை விட வேற எதுவும் முக்கியம் இல்லை.”

Advertisement