Advertisement

ஆதவனுக்குத் தெரியும், பேரனை பார்த்து விட்டால் அம்மாவால் விலகி இருக்க முடியாது என்று. அவன் காரில் இருந்த சாமான்களை எடுத்துக் கொண்டு வர… ஈஸ்வரும் அவனுக்கு உதவினார்.

ஆதவன் மாடியில் இருந்த அவர்கள் அறையில் சென்று சாமான்களை வைக்க…

இப்பவாவது வந்தீங்களே… டிரஸ் இல்லாம எப்படிக் குளிக்கிறது?” என்று ஆருஷி கேட்க…

நீ உன் மாமியார்கிட்ட இருந்து தப்பிக்க ஒன்னையும் எடுக்காம வந்திட்டு என்னைச் சொல்றியா? இரு எங்க அம்மாவை இன்னும் ஏத்தி விடுறேன்.” என்றான்.

சாமி உங்களைக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன். என்னை எதுலையும் இழுத்து விடாதீங்க.” என்றாள்.

சரி அபோ நான் சொல்றது எல்லாச் செய், என் பெட்டியில இருந்து பிரஷ் அப்புறம் டிரஸ் எல்லாம் எடுத்துக் கொடு… நான் கீழே போய்க் குளிச்சுக்கிறேன்.” என்றவன் கட்டிலில் காலை ஆட்டிக் கொண்டு படுத்து விட்டான்.

எப்படி மிரட்டி வேலை வாங்குறான் என நினைத்தவள், அவன் கேட்டதை எடுத்துக் கொடுத்து விட்டுக் குளிக்கச் சென்றாள்.

ஆதவன் கீழே சென்ற போது, துர்கா பேரனுக்குப் பல் துலக்கி விட்டு, பாலைக் குடிக்க வைத்துக் கொண்டிருந்தார். மகனைப் பார்த்ததும், “உன் பொண்டாட்டி பிள்ளைக்குச் சோறு கீறு ஆக்கி போடுவாளா இல்லையா… இப்படிக் குச்சி போலப் பிள்ளையை வச்சிருக்கா?” எனக் கேட்க….

அம்மா எதாவது கேட்கிறதுன்னா உங்க மருமகளைக் கேளுங்க மா… என்னை உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இழுக்காதீங்க.” என்றான்.

எதவும் சொல்லாமலே உன் பொண்டாட்டி இங்க இருந்து போனா… இதுல நான் உன் பொண்டாட்டியை சொல்லிட்டாலும்.” என்றவர், பேரனை பின்கட்டிற்கு அழைத்துச் சென்று குளிக்க வைத்தவர், ஏற்கனவே பேரனுக்கு எடுத்து வைத்திருந்த உடையை அணிவித்து அழைத்து வந்தார்.

ஆருஷி குளித்துப் புடவை அணிந்து வர… ஆதவனும் பின்கட்டில் குளித்துத் தயாராகி வர…

நேரம் ஆகிடுச்சு… நேரா டிபன் சாப்பிட்டு அப்புறம் டீ குடிங்க.” எனத் துர்கா சொல்ல….

யஸ்வந்துக்கு முதல்ல கொடுக்கிறேன்.” என ஆருஷி சொல்ல… ஆதவன் அவளை எச்சரிப்பது போலப் பார்க்க… அதற்குள் துர்காவின் முகம் மாறத் தான் செய்தது.

அவனை அம்மா பார்த்துப்பாங்க. எனக்குப் பசிக்குது, நீ எனக்கு எடுத்து வை.” என்றான் ஆதவன் கவனியாதது போல….

துர்கா இடியாப்பம், புட்டு இரண்டுமே செய்திருந்தார். அதோடு ஆட்டுக்கால் பாயாவும், தேங்காய் பாலும் என எல்லாமே இருந்தது. ஆருஷி கணவனுக்கும் மாமனாருக்கும் பரிமாற… துர்கா முதலில் பேரனுக்கு இரண்டு இடியாப்பத்தைப் பால் வைத்து ஊட்ட… பசியில் இருந்திருப்பான் போல… யஸ்வந்தும் வேகமாக உண்ண… அடுத்து அவனுக்காகக் காரம் போடாத ஆட்டக்காலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தார்.

ஈஸ்வர் உண்டு முடித்ததும், ஆதவன் மனைவியையும் தன்னோடு உட்கார்ந்து உண்ண சொல்ல… ஆருஷியும் தனக்குக் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு உண்ண… ஆதவன் அவனுக்கு எடுக்கும் போது, மனைவிக்கும் நிறைய எடுத்து வைத்தான்.

துர்கா அங்கிருந்து நகர்ந்ததும், “எங்க அம்மா சாப்பாடு எப்படி இருக்கு பார்த்தியா? நல்லா சாப்பிட்டு உடம்பை தேற்று.” என்றவன்,

நீ சமைக்கிறேன்னு சமையல் கட்டுப் பக்கம் மட்டும் போயிடாதே….” என மனைவியை வம்பிழுக்க…டேபிளுக்கு அடியில் கணவனின் காலை ஆருஷி நறுக்கென்று மிதிக்க….

அம்மா, மதியத்துக்கு ஆருஷி சமைக்கிறாளாம் மா…” என ஆதவன் குரல் கொடுக்க…

ஐயோ சும்மா இருங்க… அவங்க செய்யுன்னு சொல்லிடப் போறாங்க.” என அருஷி பயப்பட…

உனக்கே உன் சமையலைப் பத்தி தெரியுது.”

உங்க அம்மாவும் கல்யாணமான புதுசுலேயே எல்லாம் செஞ்சிருக்க மாட்டாங்க.”

ஓகே….எங்க அம்மாவையே கேட்போமா?” என, ஆருஷி கணவனை முறைத்தாள். அவன் உண்டு முடித்திருந்தாலும், மனைவி உண்டு முடிக்கும் வரை அங்கேயே உட்கார்ந்திருந்தான்.

துர்கா பேரனை விளையாட விட்டு விட்டு அவர் உணவருந்த… ஆதவன் அவரோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தான்.

ஏன் டா வந்ததும் பொண்டாட்டியை தான பார்க்க போன… இதை முன்னாடியே செஞ்சிருக்க வேண்டியது தான…”

நான் கோபமா இருந்தேன். இப்போ அதைப் பேசாதீங்க விடுங்க.”

கடைசி வரை அவ இறங்கி வரலை…. உன்னைத் தானே இறங்கி வர வச்சா….” என்றார்.

ஆதவனும் முன்பு அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தான். நாம் கோபமாக இருந்தாலாவது… அவள் தங்கள் வீட்டுக்கு செல்ல மாட்டாளா என்று தான் பேசாமல் கூட இருந்து பார்த்தான்.

உங்களுக்குப் புரியலை மா…. எனக்குமே இத்தனை நாள் புரியாமத்தான் இருந்தது.”

அவங்க அப்பா போடுறேன்னு சொன்ன நகையையோ… செய்யுறேன்னு சொன்ன சீர் வரிசையையோ அவர் செய்யலை… அதோட ரெண்டு வீட்டுக்கும் பிரச்சனை வேற… ஏற்கனவே அவளுக்கு நம்ம வீடு, வசதி எல்லாம் பார்த்துக் கொஞ்சம் பயம் தான். நானும் இங்க இல்ல… அவளுக்கு இங்க உரிமையா இருக்க முடியலை… அதுல சில பேர் நடந்துகிட்ட விதம் பார்த்து அவளுக்கு நம்மைக் குறைவா நினைக்கிறாங்கன்னு வருத்தம். அவளுக்கும் சுயகவுரவம் இருக்கும் இல்ல மா…”

உன் அக்காள்களைச் சொல்றியா?”

அக்காங்க ரெண்டு பேருமே மனசுல எதையும் வச்சுக்காம நேரா பேசிடுவாங்க. அவங்க ஆருஷிகிட்ட நல்லத்தான் இருந்தாங்க. நான் யாருன்னு சொன்னா வீணா பிரச்சனை வரும். நீங்களே கவனிச்சு பாருங்கம்மா உங்களுக்குப் புரியும்.”

மகன் சொன்னதைத் துர்கா நம்பவில்லை. எதோ கணவனைச் சமாளிக்க ஆருஷி சொல்லி இருக்கிறாள் என நினைத்துக் கொண்டார்.

காலையிலேயே நல்லா சாப்பிட்டாச்சு… மதியம் கொஞ்சமா பண்ணுங்க. உங்க மருமகளைக் கூடமாட ஒத்தாசைக்கு வச்சுக்கோங்க. ஆனா அவளைச் சமைக்க மட்டும் விட்டுடாதீங்க. அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்லை.” என்றான் சிரிப்புடன்.

மதியத்துக்கு மீன் குழம்பு தான். வேற ஒன்னும் வேலை இல்லை.”

எங்க உங்க பேரன்.”

அவன் விளையாடிட்டு இருக்கான். உள்ள கூப்பிட்டா வர மாட்டேங்கிறான்.”

அவன் வீட்டுக்குள்ளயே வளர்ந்தவன், அதனால அவனுக்கு இங்க ரொம்பப் பிடிச்சிருக்கு. அவனைப் பார்த்துக்கோங்க. தோப்புப் பக்கம் போயிடப் போறான். நான் கொஞ்ச நேரம் படுக்கிறேன்.” என ஆதவன் கீழே இருந்த அறையில் சென்று படுத்து விட்டான்.

ஆருஷி மகனைப் பார்த்துக் கொண்டு வெளியில் தான் உட்கார்ந்து இருந்தாள். வீட்டின் முன்பு சிமெண்ட் போட்ட பாதை இருக்க… இரண்டு பக்கமும் மண் தரை தான். இந்தப் பக்கம் இருந்து மண்ணை எடுத்து அந்தப் பக்கம் சென்று போடும் யஸ்வந்த், அங்கே இருந்து கொஞ்சம் மண்ணை அள்ளி வந்து இந்தப் பக்கம் போடுவது என விளையாடிக் கொண்டிருந்தான்.

சின்னக் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கப் பெரிதாக எதுவும் தேவை இல்லை. சின்னச் சின்ன விஷயங்களே போதும்.

டேய் என்ன டா பண்ற?” என ஆருஷி மகனை கேட்க… யஸ்வந்த் கொஞ்சம் மண்ணை எடுத்து வந்து அவளின் மீதே போட…

அடப்பாவி என அருஷி எழுந்துகொள்ள… யஸ்வந்த் அவன் மீதும் கொஞ்சம் மண்ணைப் போட்டுக் கொண்டு விளையாட…

போதும் நீ விளையாடினது. வா…” என ஆருஷி மகனின் கை கால்களைக் கழுவ வைத்து அழைத்து வந்தாள்.

ஒரு சின்ன விஷேஷத்தை ஹாலிலேயே நடத்தி விடலாம், அவ்வளவு பெரிய ஹால். யஸ்வந்த அவனின் விளையாட்டுச் சாமான்கள் இருந்த பையை எடுத்து வர…. ஹாலின் ஓரமாக ஆருஷி பாயை எடுத்து விரித்துப் போட… அதில் உட்கார்ந்து யஸ்வந்த் விளையாடினான்.

வேலை செய்யும் பெண் பாத்திரங்களைக் கழுவி கொண்டே ஆருஷியை நலம் விசாரிக்க…. ஆருஷியும் பதிலுக்கு அவளிடம் நலம் விசாரித்தாள்.

காலையே ஒருவர் வந்து வீடு வாசல் கூட்டி துடைத்துக் கோலம் போட்டுவிட்டு சென்று விடுவார். பாத்திரம் கழுவும் பெண் அவர்கள் உருவுக்கரப் பெண் தான். அவளே தேவையான காய்கறிகளும் நறுக்கி கொடுத்து விடுவாள்.

மீன் குழம்பு தான்… எதுவும் நறுக்கிற வேலை இல்லை.” என துர்கா சொல்லவே செய்தார். ஆனால் ஆருஷி அதற்கும் வெங்காயம் தக்காளி எல்லாம் நறுக்க வேண்டும் தானே… அவள் அதையெல்லாம் நறுக்கி வைக்க… துர்கா வெளியே சென்று விட்டார்.

அந்த வேலை செய்யும் பெண்ணிடம் கேட்டு கேட்டு ஆருஷி தேவையானது நறுக்கி, தேங்காயையும் துருவி வைத்தவள், வெளியே சென்று பார்க்க… யஸ்வந்த் அவன் விளையாடிக் கொண்டிருந்த பாயில் படுத்தே உறங்கி இருந்தான். அருஷியும் சென்று அவன் அருகில் படுத்து உறங்கிப் போனாள்.

துர்கா வெளியில் இருந்து வந்தவர் பார்த்தது மருமகள் ஹாலில் உறங்குவதைத் தான். இவ ஏன் ரூம்ல படுக்காம இங்க படுத்திருக்கா என்று நினைத்தவர், சமையலை கவனிக்கச் சென்று விட்டார்.

ஆதவன் உறக்கம் களைந்து எழுந்து வர… துர்கா உணவு மேஜையில் உட்கார்ந்து இருந்தார். ஈஸ்வர் வெளியே சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை.

மகனைப் பார்த்ததும் “சாப்பிடுங்க நேரம் ஆச்சே.” என்றதும், ஆதவன் சென்று ஆருஷியை எழுப்பினான்.

அவன் குரல் கொடுக்க அவள் எழும்பவில்லை என்றதும், அவன் அவளைத் தொட்டு எழுப்ப…. கண்ணைத் திறந்தவள் தன் மீது இருந்த கணவனின் கையைத் தட்டி பட்டென்று விட்டாள். ஆதவனும் உடனே விலகி சென்று விட்டான்.

மீன் வறுக்கணும் என துர்கா எழுந்து கொள்ள… நான் பண்றேன் என ஆருஷி செல்ல… துர்கா மீண்டும் உட்கார்ந்து விட்டார்.

ஈஸ்வர் வந்ததும் இவர்கள் எல்லாம் பேசும் சத்தத்தில் யஸ்வந்தும் எழுந்துகொள்ள… துர்கா கணவனுக்கும் மகனுக்கும் பரிமாறி விட்டு பேரனுக்கு அவரே ஊட்டினார்.

யஸ்வந்த் மீ மீ என்றபடி உணவை வாங்கிக்கொள்ள…

உனக்கு மீன் பிடிக்குமா?” என ஈஸ்வர் அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

மீனை வறுத்துவிட்டு வந்த ஆருஷி கணவனுக்குப் பரிமாறச் செல்ல… “வேண்டாம், தேவைனா நானே எடுத்துக்கிறேன். நீ சாப்பிடு.” என்று விட்டான்.

காலை போல மனைவி உண்டு முடிக்கும் வரை உட்கார்ந்து இருக்காமல்… உண்டதும் எழுந்து சென்று விட்டான்.

கணவனின் ஆதரவு மட்டும் தான் ஆருஷிக்கு இங்கே… அவனையும் தேவையில்லாமல் சீண்டி விட்டுவிட்டோம் என்று தோன்றியது. அதன் பிறகும் ஆதவன் அவளைக் கண்டுகொள்ளவில்லை. 

Advertisement