Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 6

நாளைக்கு ஊருக்குச் செல்கிறோம் என்று சொல்லிவிட்டு ஆதவன் உறங்க சென்று விட்டான். அதைக் கேட்ட பிறகு ஆருஷிக்கு ஏது உறக்கம். பிறகு எப்படி இருந்தாலும் ஒருநாள் புகுந்த வீட்டினரை சந்திக்க வேண்டியது தான் என ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு உறங்கியவள், காலை எழுந்ததுமே அவள் அம்மாவுக்கு அழைத்து அங்கிருந்த அவள் புடவைகளைக் கொண்டு வர சொன்னாள். அதோடு லாக்கரில் இருந்த அவளின் நகைகளையும் கேட்டாள்.

வேலைக்குச் செல்லும் போது சுடிதார் தான் அணிந்து செல்வாள். திருமணத்திற்கு எடுத்த நல்ல புடவைகள் எல்லாம் அவள் அம்மா வீட்டில் தான் இருக்கிறது. இங்கேயும் இருந்த நல்ல உடைகளை எடுத்து வைத்துக் கொண்டாள்.

ஆதவன் வந்து பார்க்கும் போது ஊருக்கு செல்ல எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். ஊருக்கு கிளம்பும் பரபரப்பில் இருந்தவள் கணவனைப் பார்த்ததும், “ஊருக்கு போறோம்னா ரெண்டு நாள் முன்னாடியாவது சொல்ல மாட்டீங்களா. டிரஸ் எல்லாம் நல்லதா பார்த்து எடுத்து வைக்க வேண்டாமா?” என,

ஏன் இவ்வளவு டென்ஷன்? எங்க வீட்டுக்குத் தான போறோம். நிதானமா எடுத்து வை.” என்றான்.

இவன் வீட்டுக்கு போவது தானே பெரிய டென்ஷன். அதைச் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள்.

அவனின் பெரிய பெட்டி ஒன்றை எடுத்து வந்தவன், அதைத் திறந்து மகனுக்காக வாங்கி வந்த உடைகளை எல்லாம் எடுத்து கொடுக்க… வித விதமாக நிறையவே வாங்கி வந்திருந்தான்.

ஹே எல்லாமே நல்லா இருக்கு.” என எடுத்து வைத்துக் கொண்டாள். இன்னும் சின்ன உடைகள் சிலது இருக்க, ஆருஷி கணவனைப் பார்க்க… “அது விஜயனோட பையனுக்கு, அவனுக்கு இப்போ ஒரு வயசு ஆகுதே.” என்றதும்,

நாம வர்ஷா வீட்டுக்கு போறோமா?” என ஆருஷி கேட்க…

அவங்க நம்ம பையனை பார்க்க வந்தாங்களா என்ன? இல்லைதான…. நம்மகிட்ட யாரு எப்படி நடந்துக்கிறாங்களோ நாமும் அப்படியே நடந்துக்கிட்டா போதும். உன்னை நான் எங்க அப்பா அம்மாகிட்ட தான் விட்டுக் கொடுத்து போயிருக்கலாமேன்னு சொன்னேன். போற வர்றவங்ககிட்ட எல்லாம் இல்லை.”

விஜயன் அடுத்த வாரம் ஊருக்கு வரான். அப்போ கொடுக்கலாம்.” என்றதும், ஆருஷிக்கு அப்போது தான் நிம்மதியானது.

உனக்குக் கூட டிரஸ் வாங்கினேன் ஆருஷி. ஆனா நீ இது ஊர்ல போட முடியாது. இங்கேயே வை அப்புறம் நாம மட்டும் வெளிய போகும் போது போட்டுக்கோ…” எனச் சில உடைகளை மனைவியிடம் கொடுக்க… கணவன் தனக்கும் வாங்கி வந்திருக்கிறான் என்பதிலேயே மகிழ்ந்து போனாள்.

வங்கி திறந்ததும் சரத்தும் பார்கவியும் சென்று ஆருஷியின் நகைகளை எடுத்துக் கொண்டு, அப்படியே அவளின் புடவைகளையும் கொண்டு வந்து கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் வந்த போது ஆதவன் வீட்டில் இல்லை. அவன் பெற்றோர்களுக்கு உடைகள் எடுக்கக் கடைக்குச் சென்றிருந்தான்.

சீக்கிரம் உனக்குப் போட வேண்டிய மிச்ச நகைகளைக் கொடுத்திடுவோம்.” என்றார் சரத்.

அப்பா ப்ளீஸ் திரும்ப ஆரம்பிக்காதீங்க. அவர் உங்ககிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கலை…”

அவர் எதிர்பார்க்கலைனாலும் நாம செய்யுறேன்னு சொன்னது செய்யணும் தானே… அப்புறம் நாம ஏமாத்தினது போல ஆகிடாதா?” என்ற கணவரைப் பார்த்த பார்கவி, “இது உங்களுக்கு இப்போ தான் தெரியுதா? இதைத் தான நாங்க ஆரம்பத்துல இருந்து சொன்னோம்.”

நான் சொத்து தான் இருக்கேன்னு நினைச்சேன்.”

ஆமா பெரிய ராஜ பரம்பரை சொத்து. அதுக்கு எவ்வளவுக்குப் போகும்னே தெரியலை….அதுக்குள்ள இவர் பாட்டுக்கு அள்ளி விட்டார்.”

அதெல்லாம் நல்ல விலைக்குத்தான் போகும்.” என்றார் சரத் நம்பிக்கையாக.

அவர்கள் விடைபெற்றுச் சென்றதும் ஆருஷி மதிய சமையலை முடித்து விட்டு இருக்க… கடைக்குச் சென்ற ஆதவனும் வந்துவிட்டான்.

பெற்றோர் மற்றும் சகோதரிகளுக்கு உடைகள் எடுத்து வந்தவன், ஆருஷிக்கும் சில புடவைகள் சுடிதார்கள் வாங்கி வந்திருந்தான். அதோடு அங்கே கொடுப்பதற்கு இனிப்புகள் மற்றும் பழங்கள் என நிறையவே வாங்கி வந்திருந்தான்.

ஆருஷி அவள் பெற்றோர் கொண்டு வந்த உடைகள் மற்றும் நகைகளைக் கொண்டு வந்து கொடுக்க.. ஆதவன் தான் பெட்டியில் அடுக்கினான். பெரிய பெட்டியில் உடைகள் மற்றும் நகைகளை அடுக்கி வைத்தவன், உடுமாற்று உடைகள் மற்றும் உள்ளாடைகளை எல்லாம் இன்னொரு பையில் வைத்தான். அது தவிர அவனுடைய பெட்டி ஒன்று.

யஸ்வந்த் இதுவரை வெளியூர் எங்கேயும் சென்றதே இல்லை. தாத்தா பாட்டி ஊருக்குச் செல்கிறோம் என அவன் அப்பா சொல்லி இருந்தாலும், அவன் வயதுக்குப் புரியுமா என்ன? ஆனால் இவர்கள் எடுத்து வைப்பதை பார்த்து, அவனும் அவனின் விளையாட்டுச் சாமான்களை ஒரு பையில் எடுத்து வைக்க…

இதை வேற தூக்கிட்டு போகணுமா டா?” என ஆருஷி கேட்க….

எவ்வளவு விவரமா அவனுக்குத் தேவையானது எடுத்து வைக்கிறான். இருக்கட்டும், நாம அங்க எத்தனை நாள் இருப்போமோ… அவனுக்கும் விளையாட வேணும் தான.” என்றான் ஆதவன்.

இவர்களுக்கு இரவு உணவு வெளியில் உண்டு கொள்ளலாம் என யஸ்வந்துக்கு மட்டும் வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து ரயில் நிலையத்திற்குக் கிளம்பி சென்றனர்.

ரயில் நிலையத்தில் இருந்த உணவகத்தில் ஆதவன் இவர்கள் இருவருக்கும் இரவு உணவை வாங்கிக் கொண்டு வர… ஏழு மணிக்கு கிளம்பும் கண்ணியாக்குமரி ரயிலில் சென்று ஏறினர்.

யஸ்வந்த் முழு நீல கால் சட்டையும், சிவப்பு நிற பனியனும் அணிந்திருந்தவன், ஆருஷிக்கு அருகில் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். ரயில் கிளம்பியதும் அதன் வேகத்திற்குக் குலுங்க, விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தாயின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டவன், சிறிது நேரம் சென்று விழ மாட்டோம் என நம்பிக்கை வர… மீண்டும் இருக்கைக்குத் தாவினான்.

முதலில் கொண்டு வந்த உணவை மகனுக்குக் கொடுத்து விட்டு பிறகு ஆருஷி உண்ண… அவள் உண்ணும் வரை ஆதவன் மகனை வைத்திருந்தான். பிறகு அவன் உண்டு முடிக்க நேரத்துடன் படுத்து விட்டனர்.

காலை ஏழு மணிக்குக் கன்னியாகுமரியில் சென்று இறங்க… அவர்களுக்காக ஈஸ்வர் காருடன் காத்திருந்தார். முன் தின இரவு அவர்கள் வருவதாக ஆதவன் தகவல் அனுப்பி இருந்தான்.

ஈஸ்வர் காருடன் நின்றவர் இருவரையும் பார்த்து பொதுவாக வாங்க என்று சொல்ல… தந்தையே ரயில் நிலையம் வருவார் என்று ஆதவன் எதிர்பார்க்க வில்லை.

ஆருஷி அவளாகவே, “நல்லா இருக்கீங்களா மாமா…” என்று கேட்க… நன்றாக இருப்பதாக ஈஸ்வர் சொன்னார்.

இன்னும் யஸ்வந்த் உறக்கத்தில் இருக்க, ஆருஷி அவனுடன் பின் இருக்கையில் சென்று உட்கார்ந்து கொள்ள… காரில் சாமான்களை ஏற்றி விட்டு ஆதவன் காரை எடுக்க…. அவன் அருகில் ஈஸ்வர் உட்கார்ந்து வந்தார்.

ஈஸ்வர் திரும்பி மருமகளின் மடியில் இருந்த பேரனைப் பார்த்துக் கொண்டார்.

அங்கிருந்து அவர்கள் ஊருக்கு முப்பது கிலோமீட்டர் செல்ல வேண்டும். காலை நேர காற்றுச் சுகமாக இருக்க… ஆருஷிக்கு தான் மாமியாரை எதிர்கொள்ளப் பயமாக இருந்தது.

ஆதவனின் வீடு மிகப் பெரியது. வீட்டின் முன்புறம் நிறைய இடம் இருக்கும். பின்பக்கம் நிறையத் தென்னை மரங்களோடு தோப்பு போல இருக்கும். அக்கம் பக்கத்திலும் இது போலப் பெரிய வீடுகள் தான்.

கார் சென்று உள்ளே நிற்க…. யஸ்வந்தும் எழுந்திருந்தான். துர்கா நிதானமாகத்தான் நடந்து வந்தார்.

ஆதவன் காரை விட்டு இறங்கியதும் அம்மாவிடம் விரைந்து சென்றவன், அம்மா எனத் துர்காவை கட்டி பிடிக்க…

பொண்டாட்டிக்கு போக மிச்சம் மீதி பாசம் கொண்டு வந்தியோ…” எனத் துர்கா இடக்காகக் கேட்டு வைக்க….

அம்மாவுக்கு உண்டானது அம்மாவுக்குதான்.” எனத் தான் அவருக்குச் சளைத்தவர் இல்லை… என்பதை ஆதவன் நிருபித்தான்.

நல்லா பேசுற டா மகனே…” என்றவர்,

உன் பொண்டாட்டி எப்படி வர ஒத்துகிட்டா?” என்று கேட்க…

அவ ஒரு வார்த்தை கூட நான் உங்க வீட்டுக்கு வர மாட்டேன்னு சொல்லலை.” என்றான். துர்கா நம்பாமல் பார்க்க…

நீங்க நம்பினாலும் நம்பலைனாலும் அதுதான் உண்மை.” என்றவன், அதற்குள் ஆருஷி மகனோடு அருகில் வந்திருக்க…

வா ஆருஷி.” என ஆதவன் அழைக்க…

வா… பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்துச்சா? ரொம்பத் தூரத்துல இருந்து வந்தது களைப்பா இருக்கும்.” என துர்கா சொல்ல…

இவர் கிண்டல் செய்கிறாரா அல்லது நிஜமாகவே சொல்கிறாரா என ஆருஷிக்கு புரியவில்லை.

நீங்க நல்லா இருக்கீங்களா அத்தை.” என ஆருஷி பதிலுக்குக் கேட்க…

எனக்கு என்ன ரெண்டு மருமகள்கள். ரெண்டு பேருமே இந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறது இல்லை. அதனால சண்டை சச்சரவு இல்லாம நல்லா இருக்கேன்.” என்றார்.

ஆருஷி ஆதவனைப் பார்க்க… அவன் எதுவும் உதவுவது போல இல்லை. நீயே சமாளி என்பது போல நிற்க…

வரக் கூடாதுன்னு எல்லாம் இல்லை அத்தை. இவரோட வரலாம்னு நினைச்சேன். இவர்தான் வரவே இல்லை.” என்றாள்.

ஏன் நாங்க எல்லாம் சிங்கம் புலியா? புருஷனை விட்டு தனியா வந்தா கடிச்சு சாப்பிட்டிடுவோமா? இளையவன் பொண்டாட்டியும் இப்படித்தான் இருக்கா… பையனுங்க பெத்தவங்க நிலைமை இனி இதுதான் போல… என்னவோ பண்ணுங்க.” என்றார்.

ஆருஷி கணவனைப் பார்க்க… அவன் அப்போதும் எதுவும் சொல்லவில்லை. 

சரி இப்பவாவது வந்தியே… உள்ள போய்க் குளிச்சிட்டு வா… டிபன் தயாரா இருக்கு.” என துர்கா சொல்ல… ஆருஷி மகனை இறக்கி விட்டு, விட்டால் போதும் என்று உள்ளே சென்று விட்டாள்.

அம்மா நீங்க என்ன சொன்னாலும், என் பையனை பார்க்க வராதது தப்பு தான். அதனால என் பையன் உங்க கிட்ட பேச மாட்டான்.” என்றதும்,

உன் மாமனார் எங்களை அசிங்கப்படுத்துவார். உன் பொண்டாட்டி எங்களை மதிக்காம இங்க இருந்து போவா… நான் அவ வீட்ல காலை எடுத்து வைப்பேன்னு நினைச்சியா… அதெல்லாம் நடக்காது. என் பேரன் என்னைப் பார்க்க வருவான், நான் அப்ப பார்த்துக்கலாம்னு இருந்தேன்.” என்றவர், “வா டா… பையா நாம நம்ம வீட்டுக்கு போகலாம்.” என யஸ்வந்தை தூக்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.

Advertisement