Advertisement

கொடு நான் துடைக்கிறேன்.” என அவளிடம் இருந்து துணியை வாங்கித் துடைத்தவன், மகனிடம், “இனி இப்படி எல்லாம் சுவத்தில கிறுக்கக் கூடாது அப்பா உனக்கு ஸ்லேட் வாங்கித் தந்தேன் தானே அதுல தான் எழுதணும்.” என்று சொல்ல… யஸ்வந்த அப்போதே ஸ்லேட்டை எடுத்துக் கொண்டு எழுத உட்கார்ந்து விட்டான்.

நான் சொன்னா கேட்கவே மாட்டான். அவங்க அப்பா சொன்னதும் கேட்கிறதைப் பாரு.” என நினைத்தவள் சென்று மகனுக்குப் பாலும் தங்களுக்கு டீயும் கொண்டு வர…

நைட்டுக்கு வெளியே வாங்கிக்கலாம். நீ எதுவும் செஞ்சிட்டு இருக்காத.” என்றான்.

ஏன் என் சமையல் நல்லா இல்லையா?”

மதியம் நல்லத்தான் இருந்துச்சு. அதுக்குச் சொல்லலை… நீயும் வேலை பார்த்து களைப்பா இருப்பியே. அதுதான் சொன்னேன்.”

இரவு உணவு வெளியே உணவகத்தில் இருந்து வரவழைத்து உண்டனர்.

மறுநாள் ஆதவன் யஸ்வந்தை பார்த்துக்கொள்ள… ஆருஷி வேலைக்குச் சென்று வந்தாள்.

உங்க ஆபீஸ்ல சொன்னியா இன்னும் கொஞ்ச நாள் தான் வேலைக்கு வர முடியும்னு.” என்றதற்கு,

ஹான் சொல்லிட்டேன். இந்த மாசமே வேணாலும் நின்னுக்கச் சொன்னாங்க.” என்றதும்,

என்ன கேட்டதும் விட்டுடாங்க. அங்கேயும் ஒழுங்கா வேலை பார்க்கிறது இல்லையா?” என்றதும், கணவனை முறைத்தவள், “நானும் என் புருஷனோட வெளிநாடு போறேன். அதுக்கு நிறைய வேலை இருக்குன்னு சொன்னேன்.” என ஆருஷி முறைத்துக் கொண்டு சொல்ல… ஆதவனுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

இவர்தான் புத்திசாலி நாங்க எல்லாம் முட்டாள்னு நினைப்பு.” என முனங்கியபடி சென்றாள்.

மகனுக்காக வேண்டா வெறுப்பாக வந்திருக்கிறான் அல்லவா அதுதான். எது பேசினாலும் குற்றம் கண்டு பிடிக்கிறான் போல என நினைத்தவள், பிறகு நீ எப்படி வேணா நினைச்சுக்கோ என்ற எண்ணத்தில் அமைதியாகி விட்டாள்.

மனைவி அமைதியானதும் அதுவும் ஆதவனுக்குப் பிடிக்கவில்லை. இவளுக்கு என்னோட பேச கூடக் கஷ்ட்டமா என அவனும் பேச்சை குறைத்து விட்டான்.

அங்கே கன்னியாகுமரியில் துர்காவின் மகள்கள் இருவரும் வந்திருக்க… உடன் அவர்கள் கணவன்மாரும் வந்திருந்தனர். இரு மகள்களுமே அருகில் தான் இருக்கின்றனர்.

இவன் பாட்டுக்கு நேரா பொண்டாட்டி வீட்டுக்கு போய் இறங்கினானே… அதுக்குப் பிறகாவது இங்க வரணும்னு எண்ணம் இருக்கா… இன்னும் இங்க வர கூட இல்லை.” பிரமிளா சொல்ல…

அவனுக்கு நாம எல்லாம் முக்கியம் இல்லை.” என்றாள் மஞ்சுளா.

உங்க தம்பி பண்றதை பார்த்தா…. எதோ நாம தான் தப்பு பண்ண மாதிரி ஆகிடுச்சு.” வினோத் சொல்ல…

ஆமாம் எதோ நாம அந்தப் பெண்ணை வரதட்சனை கொடுக்காததுனால தள்ளி வச்ச மாதிரி தான் ஏற்கனவே ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.” என்றான் மஞ்சுளாவின் கணவன் ஸ்ரீதர்.

நாம ஏமாந்து போனது நமக்குத்தானே தெரியும். தப்பு எல்லாம் அவங்க மேல… ஆனா பழி நம்ம மேல. இத்தனைக்கும் அவளா தான் கிளம்பிப் போனா. அப்ப அவளே திரும்ப வரட்டும்னு தானே நினைப்போம்.”

தப்பு செஞ்ச அவங்க இறங்கி வரணுமா… இல்ல நாம இறங்கி போகணுமா?” துர்கா கேட்க…

இத்தனைக்கும் அவளை நாங்க ஒண்ணுமே சொல்லலை, அவங்க அப்பா செஞ்சதுக்கு அவ என்ன செய்வான்னு பொறுமையா தான் இருந்தோம். அவளுக்கு வர்ஷா கொண்டு வந்த சீர் வரிசையைப் பார்த்ததுமே ஒரு மாதிரி ஆகிடுச்சு. பரவாயில்லை கல்யாணம் நிச்சயம் ஆன ரெண்டே மாசத்துல வர்ஷாவோட அப்பா தடபுடலா கல்யாணத்தை நடத்திட்டாறேன்னு தான் சொன்னோம். அவளுக்குக் குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுத்திடுச்சு. நாங்க என்ன பண்றது?” என்றாள் மஞ்சுளா.

அதையும் இனிமே பேசாதீங்கன்னு சொல்றோம். எதுக்கு வீணா நீங்க கெட்ட பெயர் வாங்கிறீங்க. இப்போ அவன் போய்ப் பொண்டாட்டி வீட்ல உட்கார்ந்துட்டான். அப்போ தப்பு எல்லாம் நம்ம மேலன்னு தானே அர்த்தம்.” என வினோத் சொல்ல…

அவன் விஷயத்துல இனிமே நாம தலையிடவே வேண்டாம்.” என்றான் மஞ்சுளாவின் கணவன் ஸ்ரீதரும். துர்காவும் மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தவர், “இனிமே பிள்ளைங்க விஷயத்துல நாம எந்த எதிர்ப்பார்ப்பும் வச்சுக்க வேண்டாம்.” எனக் கணவரிடம் சொன்னார்.

ஆருஷி காலையில் எழுந்து கணவனுக்கும் மகனுக்கும் சமைத்து வைப்பவள் பிறகு அலுவலகம் சென்று வந்தாள். மாலை வந்துதான் மற்ற வேலைகளைச் செய்வாள்.

மாலை நேரம் இவள் வரும் போது, ஆதவன் ஆங்கிலத்தில் கைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பான். அவனின் அலுவலக வேலை என இவளே யூகித்துக் கொண்டாள்.

இரண்டு மூன்று நாட்களாகவே ஆதவனுக்கு எதோ உறுத்திக் கொண்டே கொண்டே இருந்தது. என்ன என்று தெரியவில்லை. பிறகே அவன் அம்மா அன்று அழைத்தது தான், பிறகு அழைக்கவே இல்லை என்று நினைவு வந்தது.

தான் அன்று அவரிடம் அப்படிப் பேசி இருக்கக் கூடாது என இப்போது தோன்றியது. ஒழுங்காகப் பேசி விட்டு வைத்திருக்கலாம். இவன் அழைக்கத் துர்கா எடுக்கவே இல்லை. பிறகு தந்தைக்கு அழைக்க, ஈஸ்வர் எடுத்து நலம் விசாரித்தார்.

என்னப்பா அம்மாவுக்குக் கூப்பிட்டா அவங்க எடுக்கவே இல்லை. நல்லாத்தானே இருக்காங்க.”

அதெல்லாம் நல்லத்தான் இருக்கா… அவ செல்லை எங்காவது போட்டு வச்சிருப்பா. அவ பேசணும்னா தான் தேடி எடுப்பா.”

ம்ம்… ஆருஷி இங்க வேலைக்குப் போறா… அதுதான் உடனே கிளம்ப முடியலை. நாங்க சீக்கிரம் அங்க வரோம்.” என்றதும்,

உன் இஷ்ட்டம்.” என ஈஸ்வரும் ஒட்டாமல் பேசி விட்டு வைத்தார்.

ஆருஷி அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். ஆதவனைப் பார்க்கவே பயமாக இருந்தது.

உண்மையில் அவள் செய்யச் செயலின் பாதிப்பு, புகுந்த வீட்டினர் யாருமே அவள் பிள்ளை பெற்ற சமயம் பார்க்க வராத போது தான் அவளுக்குத் தெரிந்தது.

மூன்று மாதத்தில் ஆருஷியையும் குழந்தையையும், அவள் புகுந்த வீட்டில் சென்று பேசி விட்டு விட்டு வரலாம் என பார்கவி சொல்லத்தான் செய்தார். இவள்தான் பயந்து கொண்டு கணவன் வந்ததும் செல்கிறேன் என்று செல்லவில்லை.

ஏன் ஆருஷி அப்படிப் பண்ண? எங்க வீட்ல யாராவது எதாவது சொன்னாங்களா? இல்லை உங்க அப்பா அம்மாவை என் தம்பி கல்யாணத்துக்குக் கூப்பிடலைன்னா… ஆனா விஜயன் வந்து பத்திரிக்கை வைக்கத் தானே செஞ்சான். அதுதான் உனக்குக் கோபமா?” ஆதவன் ஏற்கனவே கேட்டிருந்ததை இப்போது மீண்டும் கேட்க… இல்லை என்றாள்.

அப்போ என்ன தான் டி உனக்குப் பிரச்சனை?”

சொன்னாலும் கழுவி ஊற்றுவானே என நினைத்தவள்  எங்கே இருந்து சொல்வது என யோசிக்க ஆரம்பித்தாள்.

ஆதவன் வெளிநாடு கிளம்பி சென்ற பிறகு ஆருஷியை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டனர். அதுவும் அவள் உடனே கர்ப்பமானதால் அவளைப் பெரிதாக வேலை செய்யவும் விடவில்லை. துர்கா தான் சமையல் செய்வார். ஆருஷி தேவையானது நறுக்கிக் கொடுப்பாள். சரத் மகளைப் பார்க்க இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வந்து விடுவார். அப்போது எல்லாம் அருஷிக்கு தர்ம சங்கடமாக இருக்கும். வராதீர்கள் என்றாலும் கேட்க மாட்டார்.

உங்க அப்பாவுக்கு வேண்டியது பார்த்து செய்… என துர்கா ஒதுங்கிக்கொள்வார். ஈஸ்வரும் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வேலை இருப்பது போலச் சென்று விடுவார்.

ஆதவனுக்கும் விஜயனுக்கும் ஒன்னரை வயது இடைவெளி தான். அவனும் வெளிநாட்டில் தான் வேலைப் பார்க்கிறான். இவர்கள் திருமணதிற்கு அடுத்து விஜயனுக்கு உடனே பெண் பார்த்து திருமணதிற்கு ஏற்பாடு செய்தனர்.

முதலில் ஆருஷிக்கு பெற்றோரை மாமனார் மாமியார் அழைக்காதது வருத்தம் தான். ஆனால் அங்கே திருமணத்திற்காக வர்ஷாவின் ஊருக்குச் சென்ற போது, அவர்கள் செல்வ செழிப்பை எல்லாம் பார்த்த பிறகு… பெற்றோர் வராமல் இருந்ததே நல்லது என்று தோன்றியது.

கல்யாணத்தை அப்படிப் பிரம்மாண்டமாக நடத்தினார்கள். இப்போது தான் அதே வீட்டில் ஒரு திருமணம் நடந்து முடிந்திருந்தது ஒப்பிட்டுப் பார்ப்பது இயல்பு தானே… உறவுகள்ள இரண்டு திருமணத்தையும் அலசி ஆராய்ந்தனர். அதுவும் வர்ஷா அவ்வளவு நகைகள் போட்டு தங்க தாரகை போலத்தான் இருந்தாள்.

ஆருஷிக்குத் திருமணத்தில் கணவன் இல்லையே என்பதைத் தவிர வேறு வருத்தம் இல்லை. அவள் கலகலப்பாகத்தான் இருந்தாள்.

வர்ஷாவை மணமேடைக்கு அழைக்க அவளும் சென்ற போது, “உங்க அப்பா அம்மா வரலையா?” என வர்ஷாவின் அம்மா கேட்க…

அவங்களுக்கு உடம்பு சரி இல்லை.” என ஆருஷி சமாளிக்க… வர்ஷாவும் அவள் அம்மாவும் ஒருவரையொருவர் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டனர். அது கொஞ்சம் ஆருஷிக்கு உறுத்தலாக இருந்தது.

விஜயன் வர்ஷா திருமணம் முடிந்து வரும் போது, அவர்களோடு வந்த சீர்வரிசையைப் பார்த்து வியந்து தான் போனாள். இப்படித்தானே தன் கணவனும் வேறு யாரையும் திருமணம் செய்திருந்தால்… சீரும் சிறப்புமாகத் திருமணத்தைச் செய்திருப்பார்கள். தங்களால் கணவனுக்குத்தான் தர்ம சங்கடம் ஆகிவிட்டது என அதை நினைத்து தான் வருத்திக் கொண்டிருந்தாள்.

வர்ஷாவுக்கும் அவள் பெற்றோருக்கும் ஆதவன் ஆருஷி திருமணக் கதை தெரியும். உறவினர்கள் மூலம் எல்லாம் தெரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் கொஞ்சம் ஆருஷியை குறையாக நடத்த… வர்ஷாவுமே ஆருஷியை மதித்துப் பேச மாட்டாள்.

எதோ தலையில் க்ரீடம் வைத்தது போலத்தான் நடத்து கொள்வாள். நாத்தனார்களும் வர்ஷாவை உயர்த்திப் பேச…. ஏற்கனவே தாழ்வு மனப்பான்மையில் இருந்தவள், தந்தை வேறு இவர்கள் இருக்கும் போது வந்தால்… இன்னும் சங்கடமாகிப் போகுமே என அது வேறு அச்சம் அவளுக்கு.

ஆதவன் உடன் இருதிருந்தால் ஒன்றும் தெரிந்திருக்காது. அவனும் இல்லாதது, அவளுக்கு அங்கே இருக்க முடியும் என்று தோன்றவில்லை. அதனால் பிடிவாதமாக அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

எப்படியோ இந்த முறை கணவனுக்குப் புரியும்படி சொல்லி விட்டவள், அவன் முகம் பார்க்க…

உன்னை என்ன செய்யலாம் என்பது போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன், “வர்ஷாவோட அப்பாவும் அம்மாவும் நமக்கு யாரு டி? அவங்க என்ன நினைச்சா உனக்கு என்ன? எங்க அப்பா அம்மா ஒழுங்கா தானே உன்னை நடத்தினாங்க. சரி இதையாவது முன்னாடியே என்கிட்டே சொன்னியா?”

சீர் வரிசையோட பொண்டாட்டி வரணும்னு நான் கேட்டேனா? உன்னைப் பார்த்ததுமே உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு எங்க வீட்ல சொல்லிட்டேன். அது எல்லாம் உன் மண்டையில ஏறலை….. எதையோ நினைச்சு ஏற்கனவே உங்க அப்பா பண்ண குளறுபடி பத்தாதுன்னு… நீ வேற உன் பங்குக்கு இழுத்து வச்சிருக்க… இப்போ நான் மாட்டிட்டு முழிக்கிறேன்.”

நான் உங்ககிட்ட சொல்லி, நீங்க உங்க வீட்ல சொன்னா…. வீணா உங்களுக்கும் உங்க தம்பிக்குப் பிரச்சனை தான வரும். அதோட நீங்க வந்தா சரி ஆகிடும்னு நினைச்சேன். நீங்க வரவே இல்லை. நான் என்ன பண்றது?” ஆருஷி கேட்க…

தப்பெல்லாம் அப்போ என் மேல தான்…. உன்னைப் பொண்ணு பார்க்க வந்தேன் பாரு. அதுதான் நான் பண்ண பெரிய தப்பு.” என்றவன்,

அங்க உன் மாமியார் பொங்கிப் போய் இருக்காங்க. எனக்குத் தெரியாது உன்பாடு உன் மாமியார் பாடு. நாம நாளைக்கு ஊருக்கு கிளம்புறோம்.” என்றவன், உள்ளே சென்று படுத்து விட்டான்.

மாமனார் மாமியாரை எப்படிப் பார்க்கப் போகிறோம் என ஆருஷிக்கு அப்போதே வயற்றைப் பிசைய ஆரம்பித்து விட்டது.

Advertisement