Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 5

அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால்… ஆருஷி வீட்டில் தான் இருந்தாள். காலை உணவு உண்டதும் ஆதவன் சென்று அறையில் படுத்து விட்டான். அதன் பிறகுதான் ஆருஷி அவள் அம்மாவை கைபேசியில் அழைத்தாள்.

காலையில என்ன டிபன் பண்ணி கொடுத்த?”

பூரியும் உருளைகிழங்கும்.”

மதியத்துக்கு?”

இனி தான் யோசிக்கணும்.”

எதாவது நல்ல சமையலா பண்ணி போடு.”

ம்ம்…”

மாப்பிள்ளை உன்கிட்ட நல்லா பேசுறாரா?”

நல்லா மட்டுமா பேசுறார்… நிறையப் பேசுறார். இன்னும் கோபமாத்தான் இருக்கார்.”

உன்னை இப்போதானே பார்க்கிறார். கொஞ்ச நாள் போனா சரி ஆகிடும். அவர் நல்லாத்தான் இருந்தார். நாமே இழுத்து வச்சுகிட்டது தான்.”

சரி மா… நான் கடைக்குப் போய்ச் சாமான்கள் வாங்கணும் வச்சிடுறேன்.” என்ற ஆருஷி, யஸ்வந்தும் தந்தையுடன் உறங்க… கதவை பூட்டிக் கொண்டு கடைக்குச் சென்றாள்.

மதியத்துக்கு மட்டன் பிரியாணியும் சிக்கென் வருவலும் செய்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனா நம்ம பிரியாணி நல்லா இருக்குமா என்று யோசித்தவள், வேண்டாம் குழம்ப வைப்போம் என மட்டன் வாங்கிக் கொண்டு, தேவையான மற்ற காய்கறிகளும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தாள்.

அவள் வரும் போது நண்பகல் ஆகி இருக்க…. ஆதவன் ஹாலில் தான் இருந்தான்.

நேத்து தான மயக்கம் போட்டு விழுந்து வச்ச… இப்போ எங்க டி போன… நேத்தாவது வீட்ல விழுந்து வச்ச… இன்னைக்கு எந்த ரோட்ல விழுந்து வச்சியோன்னு நான் பயந்து போய் உட்கார்ந்திருக்கேன்.” கணவன் சொன்னதைக் கேட்டு ஆருஷிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

உங்களுக்குத் தான் நல்லா சமைச்சு போடலாமேன்னு மட்டன் வாங்கப் போனேன்.”

யாரு நீ நல்லா சமைச்சி போட போற? காலையில ஒரு பூரி போட்டியே… கிழிஞ்ச துணி மாதிரி அப்படியா?” என்றதும், ஆருஷிக்கு கடுப்பாக, “உங்க பையனை மாசமானதுல இருந்து நான் எங்க சமைச்சேன். இப்போ வேலைக்கு வேற போறேன். அதனால அம்மாதான் செய்வாங்க.”

அதுதான் பார்த்தாலே தெரியுதே… நீ வீட்டை வச்சிருக்கிற லட்சணம். வேலைக்குப் போறவங்க எல்லாம் வீட்டை நல்லா வச்சுக்கிறது இல்லையா? இப்படியா டி வீட்டை போட்டு வச்சிருப்ப…” என்றவன் வீட்டை வேறு சுற்றிப் பார்க்க… ஆருஷிக்கு ஐயோ என்றானது.

உண்மையில் ஆருஷி வீட்டை அப்படித்தான் வைத்திருந்தாள். யஸ்வந்த் வேறு அவன் பங்குக்குச் சுவர் முழுக்கக் கிறுக்கி வைத்திருந்தான். பார்கவி சமையலையும் பேரனையும் பார்த்துக் கொள்வார். வீட்டை ஒதுங்க வைக்கும் வேலையாவது ஆருஷி செய்ய வேண்டும் அல்லவா… அப்புறம் பண்ணிக்கலாம் என அப்படியே செய்யாமல் விட்டு போய் விடும்.

இப்படிச் சுவர் முழுக்க முதல்ல யாராவது கிறுக்க விடுவாங்களா? வீட்டுக்காரன் வீட்டை காலி பண்ணும் போது பெயிண்ட் அடிக்க எவ்வளவு கேட்கப் போறானோ தெரியலை…. தனியா வர தெரிஞ்ச உனக்கு, வீட்டை எப்படி வச்சுக்கணும் தெரியாதா? சின்னப் பையன் அவனுக்கு என்ன தெரியும்? நீதானே சுவத்துல கிறுக்கக் கூடாதுன்னு சொல்லணும்.”

வேலைக்குப் போயிட்டு வந்து எனக்கு அலுப்பா இருக்காதா… விடுங்க.” என்றாள்.

இனி நீ வேலைக்குப் போக வேண்டாம். நான் நல்லா சம்பாதிக்கிறேன். பையனை பார்த்திட்டு வீட்ல இரு. போர் அடிச்சா வீட்ல இருந்து எதாவது செய்… நாளைக்கு ஆபீஸ்ல போய் வேலையை விடுறேன்னு நோட்டீஸ் கொடுத்திடு.”

அப்போ எங்களையும் உங்களோட கூட்டிட்டு போவீங்களா?”

கூடிட்டு போறதைப் பத்தி இல்லை. வாரக் கணக்குல தனியா பையனை வச்சிட்டு அங்க இருக்கணும். நீ தனியா இருந்துப்பியா? நீ தனியா இருக்கேன்னு எனக்கு வேற டென்ஷன் ஆகும். அதுக்கு வேற இடத்தில வேலை மாதத்தின பிறகு கூட்டிட்டு போறேன்.”

அதோட இன்னொன்னு நீ ஒன்னு எங்க வீட்ல இரு. இல்ல உங்க வீட்ல இரு. இப்படித் தனியா இருக்கிறது எல்லாம் ஒத்து வராது. உங்க அம்மா வீட்டை போட்டுட்டு இங்க வந்து இருக்கிறது எல்லாம் சரி இல்லை. நான் நேத்து போறேன், வீட்ல இலக்கியா மட்டும் தனியா இருக்கா.”

உனக்கு எங்க வீட்ல இருக்கப் பிடிக்கலைனா பரவாயில்லை…. நீ உங்க வீட்ல இருந்துக்கோ. ஆனா இப்படித் தனியா இருக்கிறது வேண்டாம். நான் மூன்னு மாசம் இருப்பேன் அதுவரை இங்க இருப்போம். அப்புறம் காலி பண்ணிக்கலாம்.”

சரி என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது? சரி என்றாள்.

காலை சமையலை வேறு கழுவி ஊற்றி இருக்கிறான். மதியமாவது நன்றாகச் செய்ய வேண்டுமே என்று பார்த்துக் கவனமாகத்தான் செய்தாள். அவர்கள் வீட்டில் எப்போதும் ஞாயிற்றுக்கிழமை மட்டன் குழம்பு தான். அதனால் மட்டன் குழம்பு வைக்கக் தெரியும். அதைச் செய்து விட்டு ரசமும் வைத்தவள், கடைசியாகத் தான் சாதம் வைத்தாள்.

இவள் என்ன சமையல் அறையிலேயே படுத்து தூங்கி விட்டாளா என்ற சந்தேகத்தில் ஆதவன் வேறு வந்து பார்த்து விட்டுச் சென்றான்.

மதிய உணவு உண்ண இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. ஆதவன் உணவு உண்ண வந்தவன் ஆருஷி மகனுக்கு ஊட்டுவதைப் பார்த்து, “நீ அவனுக்கு ஊட்டி முடி, நாம ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்.” என்றவன், டிவி பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விட… ஆருஷிக்கு மகனுக்கு ஊட்டி முடிக்கவே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

அப்போது தான் ஆதவன் ஒன்றை கவனித்தான். மகன் என்ன செய்தாலும் ஆருஷி கண்டிப்பதே இல்லை. அவன் அத்தனை முறை தண்ணீரை தட்டி விட்டிருப்பான். ஏன் டா இப்படிப் பண்ற? என்பாளே தவிர, செய்வது தவறு மீண்டும் செய்யக் கூடாது என்று அழுத்தமாகப் புரிய வைக்கவில்லை.

ஒருவழியாக மகனுக்கு உணவு கொடுத்து முடித்து, அவனை விளையாட விட்டு இவர்கள் இருவரும் சேர்ந்து உண்டனர்.

இவர்கள் உண்ணும் போது யஸ்வந்த் வந்து பரிமாற வர… மகன் ஊற்ற இரண்டு கரண்டி குழம்பு வாங்கிக் கொண்ட ஆதவன், பிறகு மீண்டும் யஸ்வந்த் ஊற்ற வர… “நோ… போய் விளையாடு.” என்று அழுத்தமாகச் சொல்ல… யஸ்வந்த் சென்று விட்டான்.

யஸ்வந்த் என்ன பண்ணாலும் நீ கண்டிக்க மாட்டியா?”

எனக்கு அவன் மட்டும் தானே இருந்தான். எனக்கு அவனை எதுவும் சொல்ல மனசு வாறது.” என்றாள்.

தப்பு ஆருஷி, என்னால அவனோட கூட இருந்து வளர்க்க முடியாது. நீதானே கண்டிச்சு வளர்க்கணும்.”

நீ அவன் இஷ்ட்டதுக்கு விட்டா…. அப்போ என்ன வேணா பண்ணலாம்னு நினைப்பு வந்திடும்.”

எங்க அம்மாவுக்கு நாங்க நாலு பிள்ளைங்க. தப்பு பண்ணா அடுத்த நிமிஷம் பட்டுன்னு அடி விழுந்திடும். அதனாலையே தப்புச் செய்யத் தைரியம் வராது.”

அவன் தண்ணியைத் தட்டி விடுறான், நீ டம்ளரை எடுத்து நகர்த்தி வைக்கிறியே தவிர அவனை எதுவும் சொல்ல மாட்டேங்கிற. இன்னைக்கு நம்ம வீட்ல பண்றது தானே நாளைக்கு இன்னோருத்தர் வீட்ல போயும் செய்ய வரும். அப்போ அவங்க நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்க.”

தப்புனா தப்புன்னு சொல்லி பழகு.”

நான் மட்டும் சொல்லி என்ன பிரோஜனம். எங்க அப்பா தான் இவனுக்கு ஊர்பட்ட செல்லம் கொடுக்கிறார். அப்புறம் என்ன பண்றது?”

தாத்தா பாட்டிக்கு கண்டிக்க மனசு வராது. ஆனா நாம பெத்தவங்க அதுக்காக அப்படியே விட முடியாது.”

அவன்கிட்ட நோன்னு சொல்லி பழகு. அப்படியும் செஞ்சா லேசா ஒரு அடி வை பரவாயில்லை. இப்படி அவன் இஷ்ட்டதுக்கே விடாத.”

ம்ம்… சரி.” என்றாலும், இவன் இப்ப வந்திட்டு நம்மை இவ்வளவு சொல்றதுக்கு முன்னாடியே வந்து பையனை வளர்த்து இருக்க வேண்டியது தானே என்று கடுப்பாகத்தான் இருந்தது.

பிள்ளைகள் சாதித்தால் என் பிள்ளை எனப் பெருமைகொள்ளும் ஆண் வர்க்கம். அதே பிள்ளை தப்பு செய்தால்… நீ என்ன வளர்த்த என்று மனைவியின் பக்கம் தான் திருப்பும்.

நான்கு மணி ஆனதும், மகனை அழைத்துக் கொண்டு வெளியில் கிளம்பிய ஆதவன், “நான் இவனைக் கொஞ்ச நேரம் வெளிய கூட்டிட்டு போயிட்டு வரேன். நீ ரெஸ்ட் எடு.” எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.

ஆருஷி ஓய்வு எல்லாம் எடுக்கவில்லை. வீட்டை ஒதுங்க தான் வைத்தாள். திருமணமாகி எல்லோரையும் போலக் கணவனோடு சேர்ந்தா வாழ்ந்தாள், எப்போதுமே மனதை அரிக்கும் உணர்வு தான். அதில் வீடு எப்படி இருந்தால் என்ன என்ற எண்ணம் தான்.

இப்போது கணவன் வந்துவிட்ட பிறகுதான் அதையெல்லாம் செய்யத் தோன்றியது. அலமாரியில் உடைகளை மடித்து அடுக்கி வைத்தவள், துவைக்க வேண்டிய துணிகளைத் துவைத்து போட்டு, வீட்டையும் பார்க்க பளிச்சென்று சுத்தம் செய்து வைத்தாள்.

ஆதவன் வந்த போது, சுவற்றில் மகன் கிறுக்கி வைத்திருந்ததைச் சோப்புத் தண்ணீரில் துணியை நனைத்து துடைத்துக் கொண்டிருந்தாள்.

இதெல்லாம் ஏன் பண்ற? விடு பெயிண்ட் அடிச்சு கொடுத்திடலாம்.” என்றதும்,

நான் வீட்டுக்கு யார் வரப் போறான்னு அப்படியே விட்டுட்டேன். இப்போ தான் நீங்க இருக்கீங்களே… உங்களைப் பார்க்க யாராவது வருவாங்க தானே…” என அவள் செய்யும் வேலையைத் தொடர….

வெளியே சென்ற இரண்டு மணி நேரத்தில் வீடு பளிச்சென்று மாறிவிட்டது. இதெல்லாம் சரி செய்யக் கூடியது தான். ஆனால் இழந்த மூன்று ஆண்டு வாழ்க்கை இழந்தது தானே… அதை மீட்டெடுக்க முடியுமா? தான் ஏன் வந்ததில் இருந்து அவளை வார்த்தை என்னும் சாட்டையால் சுழற்றி அடிக்கிறோம் என நினைத்தவன், அதன் பிறகே நிதானத்திற்கு வந்தான்.

Advertisement