Advertisement

சரத் கடைசி நேரத்தில் கடன் வாங்கித்தான் தான் ஏற்கனவே இருந்த நகையோடு சிறிது நகையும், திருமணச் செலவும் செய்தார். திருமணதிற்கு முன் தினம் தான் அந்த நகையும் பார்கவி சென்று வாங்கி வந்தார். அப்போது எப்படி இருந்திருக்கும்.

மாப்பிள்ளை வீட்டில் செய்வதாகச் சொன்ன சீர் வரிசையில் பாதிக் கூடத் தேற்ற முடியவில்லை.

திருமணத்திற்காக வந்த மாப்பிள்ளை வீட்டினருக்கு மிகுந்த ஏமாற்றம் தான். ஆருஷி பெரிதாக நகைகள் அணிந்திருக்கவில்லை. செய்வதாகச் சொன்ன சீர் வரிசைகளும் இல்லை. உறவினர்கள் எல்லாம் தங்களுக்குள் பேசிக்கொள்ள… சரத் தன் சம்பந்தியை அழைத்து அப்போது தான் தன் நிலையைச் சொன்னார்.

இடம் வித்ததும் கொடுத்து விடுவதாகச் சொல்லத்தான் செய்தார்.

ஈஸ்வர் சென்று தங்கள் குடும்பத்தினரிடம் சொல்ல…. துர்கா தான் விஷயம் தெரிந்ததும் குதி குதி எனக் குதித்தார்.

அம்மா விடுங்க.” என ஆதவன் சொல்ல….

அது எப்படி டா விட முடியும்? நம்ம வசதி தெரிஞ்சு அவங்க தானே செய்யுறதா சொன்னாங்க. அப்போ நம்மை ஏமாத்தி இருக்காங்க அப்படித்தானே… பணக்கார சம்பந்தத்தைப் பிடிக்க இப்படி ஒரு வழியா?”  என்றார் துர்கா காட்டமாக. 

அம்மா ஆருஷியோட குடும்ப நிலவரம் முன்னாடியே தெரிஞ்சிருந்தாலும், நான் அவளைத் தான் கல்யாணம் பண்ணி இருப்பேன்.”

அது சரி டா… ஆனா இது நம்ப வச்சு ஏமாத்துறது இல்லையா?”

அம்மா நம்மகிட்ட இல்லாத பணமா விடுங்க.”

பணம் போனாலும், நம்மை எல்லாம் அந்த ஆளு ஈஸியா ஏமாத்திட்டானே அதுதான் ஆத்திரமா வருது.”

அம்மா அவருக்கு உண்மையிலேயே பணம் கிடைக்காம போயிருக்கலாம்.”

நீ அந்த ஆளுக்குச் சப்போர்ட்டா?”

இப்போ என்ன செய்யச் சொல்றீங்க? கல்யாணத்தை நிறுத்திடலாம்னு சொல்றீங்களா?” என்றதும்,

அந்த ஆளு கொடுத்த வாக்கை காப்பாத்தலைனாலும், நாம கொடுத்த வாக்கை காப்பாத்தனும். பணத்துக்காகக் கல்யாணத்தை நிறுத்துற அளவுக்கு நான் கேவலமானவ இல்லை. ஆனா அந்த ஆளு எதுக்கும் நம்ம வீட்டுக்கு வரக் கூடாது. கல்யாணம் பண்ணி அவளை நீ கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வந்திட்டா… அப்புறம் நீங்க எதுக்கும் அவங்க வீட்டுக்குப் போகக் கூடாது சொல்லிட்டேன்.” என துர்கா சொல்ல…

இப்போது மிகுந்த கோபத்தில் இருக்கிறார். அவரது கோபத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை… காலப்போக்கில் எல்லாம் சரி ஆகிவிடும் என்று நினைத்து ஆதவன் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. அவனுக்கு இந்தத் திருமணம் நடக்க வேண்டும்.

திருமணம் குறித்த நேரத்தில் நல்லபடியாக முடிய… மணமக்கள் அன்று பெண் வீட்டில் தான் தங்குவதாக இருந்தது. ஆனால் ஆதவன் வீட்டினர் பெண் மாப்பிள்ளையைத் தாங்கள் அழைத்துக் கொண்டு செல்வதாகச் சொல்ல… சரத் எதோ சொல்ல வர… பார்கவி அவரைத் தடுத்து விட்டார். ஆருஷி ஆதவனைப் பார்க்க, அவனும் ஒன்றும் சொல்லவில்லை.

சரியாகக் கூடச் சொல்லிக் கொள்ளாமலே ஆதவன் வீட்டினர் விடைபெற… அவர்களுடன் புது மணமக்களும் சென்றனர்.

சாதாரணமாகவே புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்களுக்குக் கலக்கம் இருக்கும். அதுவும் ஆருஷிக்கு கேட்கவே வேண்டாம். ஆனால் அவள் பயந்தது போல இல்லை. ஆதவன் இருந்ததாலோ அல்லது அவள் புகுந்த வீட்டினர், அவர்கள் தனியாக இருக்கும் போது, எதுவும் பேசுவார்களோ என்னவோ… ஆனால் இவள் முன்பு ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை.

ஆதவன் ஆருஷியை நன்றாகத்தான் பார்த்துக் கொண்டான். அவர்கள் வீட்டிற்குச் சென்ற அன்று இரவே, ஆதவன் மனைவியை ஆசையாக நெருங்க… ஆருஷி தயங்க… “நானே இன்னும் இருபது நாள் தான் இருப்பேன். இப்போ போனா எப்போ லீவ் கிடைக்கும்னு கூடத் தெரியாது. அதனால என்னை ரொம்பச் சோதிக்காத….” என அவளிடம் சொல்லிவிட… அவர்களின் தாம்பத்தியமும் நல்லபடியாகத் தொடங்கியது.

மூன்றாம் நாள் கன்னியாகுமரியில் இவர்கள் வீட்டுச் சார்பில் ஒரு வரவேற்பு வைத்திருக்க… உள்ளூர் ஆட்கள் நிறையப் பேர் வந்து கலந்து கொண்டனர். பிரியாணி எல்லாம் போட்டு வரவேற்பை தடபுடல் செய்திருந்தனர்.

ஆருஷியின் பெற்றோரும் ஹோட்டலில் அறை எடுத்து தயராகி வரவேற்புக்கு வந்திருக்க… ஆதவனைத் தவிர மற்ற யாரும் அவர்களிடம் முகம் கொடுத்து பேசவில்லை.

ஆதவன் உடன் நின்று அவர்களை உண்ண வைத்தான். அவர்கள் மதியம் உண்டதும் கிளம்பி விட்டனர். வரவேற்பு அதன் பிறகும் தொடர்ந்தது, மூன்று மணி வரை விருந்தினர் வந்த வண்ணம் இருக்க… அதன் பிறகு தான் மணமக்கள் விருந்து உண்டனர். அன்று இரவே ஆதவன் ஆருஷியை அழைத்துக் கொண்டு கேரளாவுக்கு ஒரு வாரம் தேன்நிலவுக்குச் சென்று விட்டான்.

அவன் வெளிநாடு சென்று விடுவான் என்பதால்… இருக்கும் வரை மனைவியோடு இருக்கட்டும் என்று அவன் பெற்றோரும் ஒன்றும் சொல்லவில்லை.

தேன்நிலவு நாட்கள் புதுமணத் தம்பதிகளுக்கே உரிய வகையில் இனிமையாகச் செல்ல… தேன்நிலவு முடிந்து வந்த மறுவாரம் ஆதவன் வெளிநாடு கிளம்பி விட்டான்.

முதலில் அவன் சென்னையில் இருந்து விமானம் ஏறும் போது மனைவியையும் உடன் அழைத்துச் சென்று அவள் பெற்றோர் வீட்டில் விட்டு விடுவது, பிறகு அவள் இங்கே சில நாட்களும், புகுந்த வீட்டில் சில நாட்களுமாக இருப்பது என நினைத்திருந்தனர்.

இப்போது ஆருஷியை அவர்கள் வீட்டிற்கு அனுப்ப ஆதவனின் வீட்டினர் சம்மதிக்காததால்… ஆதவன் மட்டும் சென்னைக்குக் கிளம்பி சென்றான். அவன் பெற்றோருக்குச் சொல்லாமல் மாமனார் வீட்டுக்கு சென்றவன், சிறிது நாட்கள் பொறுமையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டான். தான் பெற்றோரிடம் பேசி ஆருஷியை இங்கே அனுப்பி வைப்பதாகச் சொல்லிவிட்டு தான் கிளம்பி சென்றான்.

ஆதவனின் வேலையை முன்னிட்டு மனைவியை உடன் அழைத்துச் செல்ல முடியாத நிலை. அவளை அழைத்துச் சென்றாலும், நாள் கணக்கில் அவள் தனியாக இருக்க நேரிடும். அதனால் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஆதவன் விடுமுறைக்கு வந்துவிட்டு செல்வதாகத்தான் முன்பே முடிவு செய்து வைத்திருந்தனர்.

இன்னும் சில ஆண்டுகள் கழித்துக் கப்பல் வேலை இல்லாமல் ஒரே இடத்தில் தங்கி வேலை பார்க்கும்படி பார்த்துக் கொண்டு, மனைவியைத் தன்னுடன் அழைத்துக் கொள்ளலாம் என ஆதவன் நினைத்து இருந்தான். இது எல்லாம் ஆருஷி வீட்டினருக்கு முன்பே தெரியும். கப்பலில் என்பதால் தான் இந்த அளவுக்குச் சம்பளமும் விடுமுறையும். அதனால் மருமகன் சம்பாதிக்கும் வரை சம்பாதித்து விட்டு வரட்டும் என்பது அவர்களின் நினைப்பும் தான்.

ஆருஷி கடந்த காலத்தை நினைத்தபடியே உட்கார்ந்து இருக்க… உறக்கத்தில் இருந்து எழுந்த யஸ்வந்தின் அழுகை குரல் கேட்டு, அதன் பிறகே பதறியடித்து மகன் இருந்த அறைக்குள் சென்றாள்.

அம்மாவை பார்த்ததும் அழுகையை நிறுத்தியவன், தூக்கு என்பது போலக் கைகளைக் காட்ட… மகனை தூக்கியவள் அவன் கன்னத்தில் முத்தமிட… “அப்பா?” எனத் தந்தையை மகன் தேட….

நேத்து பார்த்த அப்பா தான் பெரிசா போயிட்டார்.” என்றவள், “அப்பா வெளிய போயிருக்காங்க வருவாங்க.” என்றாள். ஆனால் யஸ்வந் தந்தையைக் கேட்டு ஒரே அழுகை.

நல்லவேளை ஆதவன் ஒரு மணி நேரத்திற்குள் திரும்பி இருந்தான்.

உங்க பையன் உங்களைக் காணோம்னு ஒரே அழுகை.” என்றதும்,

அப்பாவை தேடினீங்களா குட்டி. உனக்காவது என் மேல பாசம் இருக்கே.” என்றதும், ஆருஷி கணவனை முறைக்க…

உண்மையைச் சொன்னா வலிக்குதா? நான் குளிச்சிட்டு வரேன். டிபன் எதுவும் செய்யுற எண்ணம் இருக்கா… இல்லைனா சொல்லு நானும் என் பையனும் வெளிய போய்ச் சாப்பிட்டுறோம்.”

நீங்க எப்பவும் இப்படித்தான் பேசுவீங்களா?” என்றதும், ‘

வேற எப்படிப் பேசுவாங்க. உனக்கு ரொமான்ஸா வேற பேசணுமா? அது எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்காத.” என்றான்.

ஆமாம் நீங்க அப்படியே ரொமான்ஸ் பண்ணிட்டீங்க. ஒரு இருபது நாள் இருந்தீங்களா… எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. எல்லாம் மறந்து போச்சு.” என ஆருஷி கணவனைச் சீண்ட….

நீ மறக்கிற ஆளு தான். அதை என்னை நம்பச் சொல்ற. சரி மறந்திட்ட இல்ல… அப்படியே இரு… திரும்ப நினைச்சுக் கூடப் பார்க்காத.” என்றவன், குளிக்கச் செல்ல…

என்ன இவன் என்ன பேசினாலும் விரைப்பாவே இருக்கான். எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று தெரியாமல் ஆருஷி திணறினாள்.

Advertisement