Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 4

ஆருஷிக்குக் காலையில் சீக்கிரமே விழிப்பு வந்து விட… அவள் எழுந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்க… ஆதவனும் அந்த நேரமே எழுந்து விட்டான். முன்தினம் ஆருஷிக்கு மருந்து வாங்கும் போது பல் துலக்க தனக்கு ப்ரஷும் வாங்கி வந்திருந்தான். அவன் பல் துலக்கி வந்ததும் ஆருஷி அவனுக்குக் காபி கொடுக்க, அதைக் குடித்தபடி சமையல் அறையிலேயே நின்றான்.

எங்க வேலைக்குப் போற?”

இங்க பக்கத்தில ஒரு பைனாஸ் கம்பெனியில அக்கௌன்டன்டா இருக்கேன்.”

நல்ல சம்பளமா?”

இல்ல எதோ சுமரா வரும்.”

அப்புறம் எப்படித் தனியா சமாளிச்ச?”

மளிகை சாமான் எல்லாம் அப்பாவே வாங்கிப் போட்டுடுவார். நான் வாடகை அப்புறம் மத்த செலவு தான் பார்த்துக்கிறேன்.”

எதுக்கு இந்த வீம்பு உனக்கு. எங்க வீட்ல தான் இருக்காம வந்த…. உங்க அப்பா வீட்லயே இருந்திக்கலாம் தான……. வீண் செலவு தான்.”

நான் உன் அக்கௌன்ட்ல பணம் போட்டு தான் வச்சிருந்தேன். அதையும் எடுக்கிறது இல்ல… திமிர் தான உனக்கு.”

ப்ளீஸ் எனக்கு இப்போ சண்டை போட எல்லாம் தெம்பு இல்லை. என்னை விட்டுடுங்க.”

என்னது விட்டுடுங்களா… இப்போ என்ன பண்ணாங்க உன்னை?” எனக் கோபமாக ஆரம்பித்தவன், அவள் முகத்தில் தெரிந்த களைப்பை பார்த்து விட்டு அமைதியானான்.

நான் ஹோட்டலை காலி பண்ணிட்டு என்னோட சாமான்கள் எடுத்திட்டு வரேன். வந்து தான் குளிக்கணும்.” என்றதும்,

திரும்ப வருவீங்க தான….” ஆருஷி யோசிக்காமல் கேட்டு விட…

உனக்காக இல்லைனாலும் என் பையனுக்காக வருவேன் டி.”

அவன் சொன்னதைக் கேட்டு எதற்குக் கேட்டோம் என ஆருஷி நினைக்க…

உனக்காகவும் வர்றதா தான் இருந்தேன். கொஞ்சம் பொறுமையா இருந்தா வந்திருப்பேன். இருந்தியா நீ?”

கல்யாணத்துக்கு முன்னாடியே எத்தனை தடவை கேட்டிருக்கேன். ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன பிரச்சனைன்னு? ஒரு வார்த்தை இப்படின்னு சொன்னியா?”

நான் எங்க வீட்ல பேசி இருப்பேன் தான… அவங்க செய்யும் போது செய்யட்டும்ன்னு நான் சொல்லி இருப்பேன். நம்ம ரெண்டு வீட்டோட முடிஞ்சிருக்கும். வெளிய யாருக்குமே தெரிய வந்திருக்காது. சொந்தக்காரங்க எல்லாம் பேசுற அளவுக்குக் கொண்டு வந்து விட்டுடீங்களேன்னு தான் எங்க வீட்ல கோபம்.”

கல்யாணமா டி பண்ணீங்க. எல்லோரும் பேசுற மாதிரி செஞ்சிட்டு, உங்க அப்பா ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்தா எங்க வீட்ல கோபம் வராதா.” 

நான் ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி என்ன சொல்லிட்டு போனேன். எங்க வீட்ல சொந்தக்காரங்க முன்னாடி பட்ட அவமானத்துனால கோபமா இருக்காங்க. கொஞ்ச நாள் போனா சரி ஆகிடும்னு சொல்லிட்டு தானே போனேன். என் பேச்சை கேட்டியா?”

நீ பாட்டுக்கு உங்க வீட்டுக்கு கிளம்பி வந்துட்ட… அப்போ என் மேல மரியாதையோ நம்பிக்கையோ இல்ல… அதுதான உண்மை. அப்போ உனக்காக நான் ஏன் வரணும் சொல்லு?”

தப்பு என் மேலத்தான். நீங்க எனக்காக வர வேண்டாம். ஆனா உங்க வீட்ல யாரும் தப்பே பண்ணலையா?”

தப்பு பண்ணலைன்னு சொல்லலை… ஆனா உனக்காக நான் பேசுற வாய்ப்பை கூடக் கொடுக்காம நீ கிளம்பிட்ட…”

உன் அப்பா அம்மாவை என் தம்பி கல்யாணத்துக்குக் கூப்பிடலைன்னு நான் எத்தனை நாள் எங்க வீட்ல பேசாம இருந்தேன்னு உனக்குத் தெரியுமா?”

எங்க வீட்ல விஜயனுக்கு இலக்கியாவை செய்யணும்னு தான் நினைச்சாங்க. விஜயனுக்கும் அந்த அசை இருந்தது. ஆனா உங்க அப்பா மேல இருந்த நம்பிக்கையும் மரியாதையும் போனதுனால தான். விஜயனுக்கு வேற இடத்தில பொண்ணு பார்த்தாங்க. அது உனக்குத் தெரியுமா?”

உங்க அப்பா ஒரு பொண்ணு வாழ்க்கையை மட்டும் கெடுக்கலை. இன்னொரு பொண்ணுக்கு வர்ற இருந்த நல்ல வாழ்க்கையும் தான் கெடுத்தாரு.”

எங்க அப்பா பண்ணது தப்பு தான். ஆனா அவர் உங்களை ஏமாத்தனும்னு நினைக்கலை… அவர் தான் பணம் வந்திடும்னு நம்பி ஏமாந்து போனார். என்னைக்கா இருந்தாலும் எங்க அப்பா எனக்குச் செய்ய வேண்டியதை செய்வார். நீங்க வேணா பாருங்க.” என்றாள் ஆருஷி ரோஷமாக. 

இப்போ உங்க அப்பா செய்யணும்னு எல்லாம் யாரும் எதிர்பார்க்கலை… இனி அவர் செய்யவும் வேண்டாம். நான் லட்சம் லட்சமா சம்பாதிக்கிறேன். எனக்கு என் பொண்டாட்டிக்குச் செய்யத் தெரியும். அது இல்ல பிரச்சனை.”

“உனக்கு இன்னும் புரியலை….என் வெளிநாட்டு வேலை பொய்யா இருந்து, எங்க வீட்ல அதையும் இதையும் சொல்லி ஏமாத்தி கல்யாணம் பண்ணி இருந்தா… நீங்க எங்களைச் சும்மா விட்டிருப்பீங்களா? இல்லை தான…”

“உங்க வீட்டு மேல இருந்த நம்பிக்கையும் மரியாதையும் எங்க வீட்டு ஆளுங்களுக்குப் போயிடுச்சு. அதனால அவங்க ஆதங்கத்தைக் காட்டினாங்க இல்லைன்னு சொல்லலை… ஆனா அதுக்காக நீ அங்க இருந்து கிளம்பி வந்து பிரச்சனையை இன்னும் பெரிசாக்கி விட்டுட்ட…”

“ஏற்கனவே என் அப்பா அம்மா கோபமா இருந்தாங்க. நீயே கிளம்பி போனதும். நாம கல்யாணத்துல பெருந்தன்மையா விட்டு தானே கொடுத்தோம். அப்பவும் இந்த பொண்ணு இப்படி போயிடுச்சேன்னு எங்க அம்மா கேட்கிறாங்க. நான் யாருக்கு பார்க்கிறது?” 

மூணு மாசம் லீவே எடுக்காம வேலை செஞ்சு அப்புறம் ஒரு மாசம் லீவ் எடுத்திட்டு உன்னைப் பார்க்க வரணும்னு நான் அங்க மாங்கு மாங்குன்னு வேலை பார்த்தா… நீ என் பேச்சை கேட்காம கிளம்பிட்ட… உன் இஷ்ட்டத்துக்கு நீ பண்ண இல்ல… அப்போ என் இஷ்ட்டத்துக்கு நான் இருந்தேன். எனக்கு இப்போ தான் வரணும்னு தோனுச்சு அதுதான் வந்தேன்.”

என்னைக் கேள்வி கேட்க எல்லாம் உனக்கு ரைட்ஸ் இல்லை.” என்றவன் வெளியே கிளம்பி செல்ல… ஆருஷி அப்படியே உட்கார்ந்து விட்டாள்.

திருமணதிற்கு ஏழு மாத காலங்கள் அவகாசம் இருக்கத்தான் செய்தது. சரத்தும் சொத்து விஷயமாக ஊருக்கு செல்வார். அவர் உடன் பிறந்தவர்கள் இப்போது அப்போது என நாட்களைக் கடத்துவார்கள்.

முதல் நான்கு மாதங்கள் நடையாய் நடந்தும் ஒரு பயனும் இல்லை. திருமணதிற்கு மூன்று மாதங்களே இருந்த போது தான் நிலைமை புரிந்தது.

சொந்த ஊரில் சொத்து இருந்தால்… அதைப் பெரியவர்கள் இருக்கும் போதே பிரித்துகொள்ள வேண்டும். நாம என்ன ஊரிலா இருக்கிறோம் என்று நினைத்தால்… ஊரில் இருப்பவர்கள் சேர்த்து அந்தச் சொத்தையும் அனுபவிப்பார்கள். அவர்களுக்கு விற்கவும் மனம் வராது. அந்த உண்மையைச் சரத் தாமதமாகத்தான் புரிந்து கொண்டார்.

இவர்கள் சொத்தை பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளவும் சரத்தின் உடன் பிறந்தவர்கள் தயாராக இல்லை. அதை விற்க ஏற்பாடு செய்வது போலப் போக்கு காட்டி… பிறகு பத்திரத்தில் எதோ வில்லங்கம் இருக்கிறது, அது இது என்று விற்கவே முடியவில்லை. திருமண நாளும் நெருங்கி இருந்தது. ஆனால் திருமணதிற்குத் தேவையான நகையோ…பணமோ தயாராக இல்லை.

இதனால் தினமும் வீட்டில் சரத்திற்கும் பார்கவிக்கும் சண்டை தான். பணம் இருக்கிற மாதிரி எதுக்குச் சம்பந்தம் பேசினீங்க என பார்கவியும், எங்கே திருமணம் நின்று விடுமோ என்ற அச்சத்தில் ஆருஷியும் சரத்திடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்பா, அவங்க தெரிஞ்சு கல்யாணத்தை நிறுத்துறதுக்கு, நாமே சொல்லி நிறுத்திடலாம்.” என்று கூட ஆருஷி சொல்லி விட்டாள். நிலைமை அந்த அளவுக்குச் சென்றது.

ஆதவனின் பணியன் காரணமாக அவனால் தினமும் ஆருஷியிடம் பேசி விட முடியாது. அப்போதும் சில நேரம் கண்டுபிடித்துக் கேட்பான், எதாவது பிரச்சனையா என்று. அவனிடம் சொல்ல பயந்து அருஷி சொல்லவே இல்லை.

Advertisement