Advertisement

அவங்களுக்கு ரெண்டே பொண்ணுங்க தான். சென்னையில இருக்காங்க.” எனத் தரகர் சொல்ல…

நம்ம எதிர்பார்ப்பு எல்லாம் சொல்லிடீங்களா… என் பையன் வெளிநாட்டில் லட்சம் லட்சமா சம்பாதிக்கிறான். அதுக்கு ஏத்தது போலச் செய்யணும்.” என்றதும், அதெல்லாம் பொண்ணோட அப்பா நல்லா செய்யுறதா சொல்லிட்டார் என்றார் தரகர்.

சென்னையில் இருந்துதான் ஆதவனுக்கு விமானம். அவன் செல்வதற்குள் பெண் பார்த்து விடலாம் என அவனுடன் குடும்பமே கன்னியாகுமரியில் இருந்து கிளம்பி வந்தது.

புது நிறுவனம் மட்டும் அல்ல… இனி இருக்கப் போகும் நாடும் வேறு… அந்தப் பதட்டத்தில் ஆதவன் இருந்தான்.

அப்படி என்ன பெண்ணைப் பார்த்திருக்கப் போறாங்க, பிடிக்கலைன்னு சொல்லிடலாம் என்ற எண்ணத்தில் தான் பெண் பார்க்கவே சென்றான்.

இவர்கள் வீட்டு ஆட்கள் சென்றதே வீடு நிறைந்து விட்டது. வீடு சின்னது என துர்கா யோசிக்க… “அவங்களுக்குப் பூர்வீக சொத்து நிறைய இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல இவங்க பங்கு பணமா வந்திடும். அப்புறம் வீட்டை கூடப் பெரிசா கட்டிடுவாங்க.” எனத் தரகர் சொல்ல… சரத்தும் தன் பெண்ணுக்கு அதை இதைச் செய்வதாகப் பெரிய பட்டியலே வாசித்தார்.

இவர்கள் பேசியது எதையும் ஆதவன் காதில் வாங்கவில்லை. அவனுக்கு நள்ளிரவில் விமானம். வெளிநாடு கொண்டு செல்ல… இன்னும் சிலது வாங்க வேண்டியது இருந்தது. சீக்கிரம் பெண்ணைக் கண்ணுல காட்டுங்கப்பா, நான் பார்த்திட்டு கிளம்பிட்டே இருப்பேன் என்ற மனநிலையில் தான் அவன் இருந்தான்.

ஆருஷியை வெளியே அழைத்து வர… மாநிறத்தில் களையான முகம். பார்த்ததுமே ஆதவனுக்கு அவளைப் பிடித்து விட்டது. அவனும் அவளைப் போல நிறம் தான். ஆனால் உயரம் என்றால் அப்படியொரு உயரம். ஆதவன் ஆருஷியை ஆவலாகப் பார்க்க… இவனைப் பார்த்ததும் அவளும் புன்னகை சிந்தினாள்… அவள் சிரிப்பில் மணம் மயங்கியது.

அவளையும் மீறி அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டாலும், சின்னப் பதட்டமும் அவள் முகத்தில் இருந்தது. அது அவளின் தந்தை வாசித்த பட்டியலை கேட்டதால் வந்த அச்சம். என்ன இவர் பாட்டுக்கு இதெல்லாம் சொல்கிறார் எப்படிச் செய்வார் என்ற கவலை அவளுக்கு அப்போதே இருந்தது. ஆனால் ஆதவனுக்கு அது தெரியவில்லை.

பார்த்ததும் சிரிச்சாளே அப்புறம் ஏன் டென்ஷனா இருக்கா… என அதே யோசனையில் இருந்தான். அவனுக்குத் தான் இன்று வெளிநாடு கிளம்புகிறோம் என்பது எல்லாம் மறந்து போனது.

அவனுக்கு எப்படியாவது ஆருஷியிடம் பேசி விட வேண்டும். அவன் அதை அவள் இரண்டாவது அக்காவிடம் சொல்ல.. அவள் அதை எல்லோரின் முன்பும் போட்டு உடைக்க… பின் பக்கம் சென்று இருவரையும் பேச சொன்னார்கள்.

ஆருஷி நல்ல பெயர். ஆருஷி ஆதவன் பேரு கூடப் பொருத்தமா இருக்கு இல்ல…” என்றதும், ஆருஷி அவனைப் பார்த்து புன்னகைக்க…

எனக்கு உன்னைப் பார்த்ததும் பிடிக்கும்னு எல்லாம் நான் நினைக்கவே இல்லை. நம்பிக்கை இல்லாம தான் வந்தேன். போட்டோ பார்க்க சொன்னதுக்குக் கூட நான் நேர்ல பார்த்துக்கிறேன் சொல்லிட்டு வந்தேன்.” என மறைக்காமல் சொன்னவன், “உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்க…

பிடிச்சிருக்கு எனச் சொன்னாலும் ஒரு தயக்கம் அவளிடம் இருக்க…

உன் மண்டையில என்ன ஓடிட்டு இருக்கு. நீ எதோ யோசனையிலேயே இருக்க, என்ன அது?” என ஆதவன் கேட்க….

பார்த்த முதல் நாளே தன்னைப் புரிந்து கொண்டானே என நினைத்தவள், “இல்ல நம்ம கல்யாணம் நடக்கும் தான…” என்று அவள் கேட்க….

அதுல என்ன சந்தேகம் உனக்கு. கண்டிப்பா நடக்கும்.” என்றவன், அதன் பிறகும் வெகு நேரம் அவளுடன் பேசிக் கொண்டிருக்க…

மாப்பிள்ளை, இதுக்கு மேல லேட்டானா…. நீ நடந்து தான் அமெரிக்கா போகணும்.” என பரிமளாவின் கணவன் வினோத் வந்து சொல்ல… கிளம்ப வேண்டுமா என்பது போல ஆதவன் பார்க்க… ஆருஷியே சிரித்து விட்டாள்.

ஒரு வழியாக ஆதவனைக் கிளப்பிக் கொண்டு அங்கிருந்து சென்றனர். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், “எனக்கு இந்தப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும். வேற யாரையும் பண்ணிக்க மாட்டேன்.” எனத் தெளிவாகச் சொல்லிவிட்டே சென்றான்.

அவன் வாங்க நினைத்தது எல்லாம் வாங்க நேரம் இல்லை. ஆனால் அதைப் பற்றிக் கவலையும் இல்லை. மணம் மிக மகிழ்ச்சியாக இருக்க… ஆருஷியின் நினைவுகளுடனே அந்தப் பயணம் கழிந்தது.

ஆருஷிக்கு உறக்கம் களைய… அவள் பார்த்தது உட்கார்ந்திருந்த கணவனைத் தான்.

நீங்க இன்னும் தூங்கலையா?” என்றதும், பழைய நினைவுகளை உதறிவிட்டு உறக்கத்திற்குத் தயாரானான்.

இடைப்பட்ட மூன்று ஆண்டுகள் இல்லாதாது போல… எப்படிக் கணவனிடம் தன்னால் இயல்பாகப் பேச முடிகிறது என ஆருஷி யோசித்தாள்.

மீண்டும் கணவனைப் பார்த்தாலும் தன்னால் அவனுடன் இயல்பாகப் பேச முடியாது என்று நினைத்திருந்தாள்.

முதல் முதலாகச் சந்தித்த போதே… இருவருக்கும் இடையே ஈர்ப்பும், பிறகு பரஸ்பர அன்பும் நிறையவே இருந்தது. நடுவில் ஏற்பட்ட பிரச்சனை கூட மற்றவர்களால் உருவானது தான்.

ஒருவேளை முன்பே இருவரும் சந்திருந்தால் அப்போதே எல்லாம் சரி ஆகி இருக்கலாம். எல்லாவற்றிற்கும் காலம் நேரம் வர வேண்டும் போல என நினைத்தபடி உறங்கிப் போனாள்.

காலையில் எழுந்த சரத், “மாப்பிள்ளைக்குக் கறி எடுத்திட்டு வந்து சமைச்சுக் கொண்டு போய்க் கொடுத்திட்டு, அப்படியே பார்த்திட்டு வருவோமா…” என மனைவியிடம் கேட்க… உன்னை வெட்டவா குத்தவா என்பது போல…. பார்கவி அவரை முறைத்து பார்த்தார்.

நாம வாங்கினா நல்ல கறியா இருக்கும். ஆருஷிக்கு அதெல்லாம் பார்த்து வாங்க தெரியுமா என்ன?” 

உங்களுக்கு உங்க பொண்ணு வாழ்க்கை வீணா போனது பத்தி எல்லாம் அக்கறை இல்லை. இப்போ கறி தான் ரொம்ப முக்கியம்.”

போங்க எடுத்திட்டுப் போய்க் கொடுங்க. அந்த மனுஷன் காரி துப்பட்டும்.”

அவர் பொண்டாட்டி பிள்ளைகளுக்காக எதோ மனம் இறங்கி வந்திருக்கார். உங்களுக்கு அது பொறுக்கலையா? போங்க போய் அதையும் கெடுங்க.”

உனக்கு நான் எது பண்ணாலும் தப்புதான்.” 

நீங்க இதுவரை என்ன நல்லது பண்ணீங்க?”

பொண்ணுக்கு அதைச் செய்யுறேன், இதைச் செய்யுறேன்னு சொன்னீங்களே எதாவது செஞ்சீங்களா?”

செய்யாம எங்கப் போகப் போறாங்க. என்னைக்கா இருந்தாலும் செய்யத்தான் போறேன்.”

என்னைக்கா இருந்தாலும் செய்யுறது வேற… ஆனா பெண்ணுக்கு கல்யாணத்துக்குச் செய்யுறேன்னு நீங்க தான சொன்னீங்க.”

சொன்ன நகையில பாதிக் கூடப் போடலை… அதை வாங்கித் தரேன், இதை வாங்கித் தரேன்னு அளந்து விட்டீங்க.”

நீங்க அளந்து விட்டதை நம்பி வந்தவங்களுக்கு எவ்வளவு ஏமாற்றமா இருக்கும். அப்படியும் அவங்க பையன் சொன்ன ஒரே காரணத்துக்காக அவங்க வாயை திறக்காம தான் கல்யாணம் பண்ணி பெண்ணைக் கூட்டிட்டு போனாங்க.”

அந்தத் தம்பி தான் அவ்வளவு சொன்னாரு இல்ல… எங்க வீட்ல இப்போ கோபமா இருக்காங்க. கொஞ்ச நாள் பொறுமையா இருங்க சொன்னாரு இல்ல… நீங்க கேட்டீங்களா? சும்மா நேர போய் அவங்ககிட்ட இப்ப செய்யுறேன், அப்போ செய்யுறேன்னு சொன்னீங்க.”

நீங்க கல்யாணத்துக்கே செய்யலை… இனி செஞ்சா என்ன செய்யலைனா என்னன்னு அவங்க கேட்டாங்க.”

அவங்க ரெண்டு பொண்ணுகளுக்கு அந்த ஊர் மெச்சுற அளவுக்குக் கல்யாணம் பண்ணி இருக்காங்க. அவங்க பையனுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணனும்னு அவங்களுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும் தானே… அவங்க உங்களைச் செய்யுங்கன்னு கட்டாயப் படுத்தினாங்களா… நீங்களே தான் செய்யுறேன்னு சொன்னீங்க.”

முன்னாடியே உண்மை தெரிஞ்சிருந்தா… அவங்க அவங்களுக்கு ஏத்த இடத்தில பொண்ணு பார்த்திருப்பாங்க. அப்படியும் நம்ம பெண்ணை ஒருவேளை பிடிச்சிருந்தா… எங்க பையன் விரும்பினான், அதனால எதையும் எதிர்ப்பார்க்காம பெண் எடுத்தோம்னு சொல்லி இருப்பாங்க. ஆனா நீங்க அவங்களை நம்ப வச்சு ஏமாத்தினீங்க. யாரா இருந்தாலும் கோபம் வரும். அந்த ஏமாற்றத்தில அவங்களும் பேசினாங்க.”

நான் இடம் வித்துப் பணம் வந்திடும்னு நினைச்சேன். பின்னாடி இது போல நல்ல வரன் வரலைனா….” 

உங்களுக்குப் படிச்சு வெளிநாட்டில வேலை பார்க்கிற மாப்பிள்ளைனதும் விட மனசு இல்லாதது போலத் தானே… அவங்களுக்கும் அவங்க பையனுக்குப் பெரிய இடத்தில சம்பந்தம் செய்யணும்னு இருந்திருக்கும்.”

ம்ம்… நான் என்ன கனவா கண்டேன், என் அண்ணனும் தம்பியும் சொத்தை கொடுக்காம தகராறு பண்ணுவாங்கன்னு.”

சொத்துப் பிரச்சனை எல்லாம் உடனே தீருமா… கையில பணம் இல்லாம எதுக்கு உங்க இஷ்ட்டத்துக்கு வாக்கு கொடுத்தீங்க. அது உங்க தப்பு தான்.”

உங்க அண்ணன் தம்பிங்க சொத்தை கொடுக்கப் போறதும் இல்ல… நமக்குப் பணம் வரப் போறதும் இல்ல… இந்த வீட்டை வித்து ஆருஷிக்கு போட வேண்டிய நகையைப் போட்டுட்டு…. இலக்கியாவுக்கும் கல்யாணம் செய்ய சரியா இருக்கும்.”

உங்க சொத்து வித்து வந்தா… நாம வேற வீடு வாங்கிக்கலாம். ஆருஷிக்கு சொன்ன நகையாவது போடுங்க. நம்ம பெண்ணுக்கு கொஞ்ச மரியாதையாவது மிஞ்சும்.”

சரி நீ சொல்ற மாதிரி வீடு விற்க ஏற்பாடு பண்றேன்.”

அதையும் எவன்கிட்டையாவது கொடுத்திட்டு ஏமாந்து போகாதீங்க. நல்ல ஆளுங்களா பாருங்க.”

இவர் வேறு எதுவும் இழுத்து வைக்காமல் இருக்க வேண்டுமே என பார்கவிக்குக் கவலையாக இருந்தது. 

Advertisement