Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 3

ஆருஷிக்கு எல்லாமே கேட்கிறது. அவள் அம்மா, இலக்கியா, கணவன் என எல்லோரும் அழைப்பது கேட்கிறது. இருந்தாலும் கண்ணைத் திறக்க முடியவில்லை.

இலக்கியா தண்ணீர் கொண்டு வந்து தெளித்த பிறகே கண் விழித்தாள். சோபாவில் இருந்தவள் எழுந்து உட்கார…. நம்மைப் பார்த்தது அவ்வளவு அதிர்ச்சியா என ஆதவனே அரண்டு தான் போனான். அதை உணர்ந்தவள் போல…

காய்ச்சல்னு ஹாஸ்பிடல் போனேன், ஊசி போட்டு விட்டாங்க. அப்பவே ஒருமாதிரி தான் இருந்துச்சு.” என்றாள் ஆருஷி.

மதியம் சாப்பிடாம ஊசி போட்டிருப்ப அதுதான்.” என்ற பார்கவி சென்று சூடாகக் காபி கொண்டு வந்து கொடுக்க…

அவங்களுக்கு?” என அருஷி கணவனைப் பார்க்க…

அவர் எதுவும் குடிக்கலை. கேட்டதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டார்.” என்றதும், கையில் அவளுடைய காபியுடன் எழுந்தவள், சமையல் அறைக்குச் சென்று அவளே காபி கலந்து எடுத்து வந்து கணவனிடம் கொடுக்க…. ஆதவன் மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.

பார்கவிக்கு அப்போது ஒன்று புரிந்தது. மருமகனின் கோபம் தங்கள் மீது தான். தங்களிடமிருந்து விலகி இருந்தாலே போதும், அவன் தங்கள் மகளை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்று தோன்றியது.

ஆதவன் அப்போதே எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க. நான் எங்க வீட்ல பேசி சரி பண்றேன். இப்போ அவங்க கோபமா இருக்காங்க.” எனச் சொல்லித்தான் இருந்தான். சரத் தான் சொல்ல சொல்ல கேட்காமல் சம்பந்தி வீட்டிற்குச் சென்று வீணாக அவமானப்பட்டுத் திரும்ப… அது பொறுக்காமல் ஆருஷி புகுந்த வீட்டை விட்டு வந்திருந்தாள்.

எதுக்கும் ஹாஸ்பிடல் போயிட்டு வந்திடலாமா என ஆதவன் கேட்க… “வேண்டாம் எனக்கு ஒன்னும் இல்லை. வெறும் வயித்துல ஊசி போட்டது தான். இப்போ நல்லா இருக்கு.” என்றாள்.

மகளைச் சமையல் அறைக்குள் அழைத்த பார்கவி, “அவரு என்ன சொல்றாரோ கேளு ஆருஷி. இனியும் நீ உங்க அப்பாவுக்காகப் பார்த்தா அவ்வளவு தான். உங்க அப்பா சொத்தை வித்து எல்லாம் பண்ணிடுற மாதிரி சொல்றார். அப்படியே இடம் வித்தாலும், அவர் செய்யுறதா சொன்னதை எல்லாம் அவரால முழுசா செய்யவே முடியாது. அப்படியே உனக்குச் செஞ்சாலும் இலக்கியாவுக்கு என்ன பண்ணுவார்? அதனால மாப்பிள்ளை சொல்றதைக் கேளு. வீணா சண்டை சச்சரவு வேண்டாம். அவங்க வீட்டுக்கு போனாலும் பார்த்து இரு.”

நானும் இலக்கியாவும் கிளம்புறோம்.”

சரி மா…” என்ற ஆருஷி அவர்களை வழியனுப்ப வாயில் வரை செல்ல….

அக்கா, அத்தானுக்கு உன் மேல இப்போ கோபம் இருந்தாலும் சீக்கிரம் சரி ஆகிடும் சரியா… நீயும் சண்டை போடாதே…” என இலக்கியா அக்காவுக்குச் சொல்ல… சரியென என ஆருஷி அவர்களை வழியனுப்பினாள்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிறது கணவனைப் பார்த்து. இன்று பார்த்து உடம்பு முடியாமல் போய் வியர்த்து வழிந்து, அவளுக்கே அவளைப் பார்க்க ஒருமாதிரி இருக்க…. நேராக உடைகள் எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.

“காய்ச்சல்ன்னு சொன்ன குளிக்கப் போற…” ஆதவன் கேட்க…..

ஊசி போட்டதும் காய்ச்சல் விட்டுடுச்சு… கசகசன்னு இருக்குக் குளிச்சா தான் நல்லா இருக்கும்.” என்றவள், வெந்நீரில் குளித்து விட்டு வந்து பார்க்க… தந்தையும் மகனும் ஹாலில் தரையில் உட்கார்ந்து விளையாடி கொண்டிருந்தனர்.

வீட்டில் அதிகச் சாமான்கள் இல்லை. யாராவது வந்தால் உட்கார இரு நாற்காலிகள் மட்டுமே ஹாலில் கிடந்தது. அறையிலும் கட்டில் இல்லை மெத்தை மட்டுமே.

யஸ்வந்தை சுற்றி புது விளையாட்டுச் சாமான்கள் இருக்க… கேக் டப்பா ஒன்றும் திறந்து கிடந்தது. கணவன் தான் வாங்கி வந்திருக்கிறான் என்று புரிந்தது.

மனைவியைப் பார்த்ததும் நீயும் கேக் சாப்பிடு என்றான்.

சமையல் அறைக்குச் சென்று தட்டை எடுத்துக் கொண்டு வந்தவள், கேக்கை எடுத்து சென்று கீழே தரையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு உண்டாள்.

ஆருஷிக்கு பேஸ்ட்ரி பிடிக்காது. அவளுக்குக் கேக் தான் பிடிக்கும். அதை நினைவு வைத்து கேக்கே வாங்கி வந்திருந்தான்.

ஒரு முழுக் கேக்கையும் உண்டு முடித்தவளுக்கு, அப்போது தான் பசி அடங்கியது. ஆதவன் மகனோடு விளையாட அதைப் பார்த்தபடி உட்கார்ந்து விட்டாள்.

எட்டு மணி ஆனதும் யஸ்வந்த் கண்ணைக் கசக்குவதைப் பார்த்தவள், எழுந்து சென்று பால் சோறு எடுத்து வந்து ஊட்டினாள்.

நைட் சோறு தான் சாப்பிடுவானா?” ஆதவன் கேட்க…

ஆமாம் டிபன் கொடுத்தா சரியா சாப்பிட மாட்டான். அப்புறம் நடு ராத்திரி எழுந்து அழுவான்.” என்றாள்.

மகனுக்கு ஊட்டி விட்டு, கணவனுக்குத் தோசை சுட்டு எடுத்து வர… ஆதவன் எதுவும் சொல்லாமல் உண்டு முடித்தான். ஆருஷி அவளும் சோறு தான் உண்டாள்.

ஆதவனுக்கு அவன் வீட்டில் இருந்து நிறைய அழைப்புகள். அவன் எடுக்காமல் இருந்தான். இப்போது கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றவன், வெளியே நடந்தபடி வீட்டுக்கு அழைத்தான்.

என்ன டா பொண்டாட்டியை பார்த்ததும் எங்களை எல்லாம் மறந்தாச்சா? ஒரு போன் கூடப் பண்ணலை. என்ன சொல்றார் உன் மாமனார். உன்னைப் பார்த்ததும் அளந்து விட்டுப்பாரே….” அவன் அம்மா கேட்க…

நான் அவரைப் பார்க்கலை… ஆருஷி தனியா வீடு எடுத்து தான் இருக்கா… கூட அவ அம்மா மட்டும் தான் இருந்தாங்க. நான் வந்ததும் அவங்களும் போயிட்டாங்க.” என்றான்.

கடமை முடிஞ்சதுன்னு போயிட்டாங்களா?”

ஆமாம் நீங்க எல்லாத்துக்கும் குத்தம் கண்டுபிடிங்க.”

நீ எப்போ இங்க வர… உன் பையனை இங்க எல்லோருக்கும் பார்க்கணுமாம்.”

அவன் பிறந்து நீங்க அவனைப் போய்ப் பார்த்தீங்களா… இப்போ மட்டும் என்ன? நான் மெதுவா தான் வருவேன். ஆருஷிக்கு காய்ச்சல், அதோட அவ இங்க வேலைக்குப் போறா… அவளுக்கு எப்போ வர முடியும்னு தெரியலை. அதனால பார்த்து தான் வருவேன்.”

எதுக்கு எங்க வீட்டை விட்டு போனேன்னு அவளை நல்லா கேளு.” என துர்கா மகனை தூண்டி விட…

அவளுக்கே உடம்பு சரி இல்லை. வந்ததும் சண்டை போட சொல்றீங்களா? விடுங்க நான் பார்த்துக்கிறேன்.” என்றவன் பிறகு பேசுவதாகச் சொல்லி வைத்து விட்டான்.

ஆருஷி உண்டு முடித்தவள், கணவன் எந்த எண்ணத்தில் வந்திருக்கிறான். மீண்டும் தன்னை இங்கேயே விட்டு விட்டு சென்று விடுவானோ… திருமணத்தில் ஆரம்பித்த பிரச்சனை இப்போது வரை அப்படியே தான் இருக்கிறது. இனி தன் நிலை என்ன ஆகும் என்று நினைத்தவள், சற்றுக் கலங்கித்தான் போனாள்.

உள்ளே வந்தவன் அவளைப் பார்த்தது அந்தக் கலங்கிய கோலத்தில் தான். மகன் மனைவியின் மடியில் படுத்து உறங்கி இருந்தான்.

அவனுக்கு அவளை அப்படிப் பார்க்கவே முடியவில்லை.

ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க? டாக்டர் எதுவும் மாத்திரை கொடுத்தாரா அதைப் போட்டியா?” என்றதும்,

அப்போது தான் நினைவு வந்தவள் போல… “கொடுத்தாரு தான் ஆனா அப்போ நின்னு வாங்க முடியலை… அப்புறம் வாங்கிக்கலாம்னு வந்துட்டேன்.” என,

மருந்து சீட்டை கொடு நான் போய் வாங்கிட்டு வரேன்.” என்றான்.

கைபையில் இருந்து அவள் எடுத்து வந்து கொடுக்க… கதவை பூட்டிக்கோ என்று சொல்லிவிட்டு கடைக்குச் சென்றான்.

அவன் வருவதற்குள் படுக்கை அறையை சுத்தமாகப் பெருக்கிவிட்டு மெத்தையை விரித்தவள், மகனை கொண்டு வந்து படுக்கையில் போட்டாள். அதற்குள் ஆதவன் மாத்திரை வாங்கிக் கொண்டு வந்து விட்டான்.

மாத்திரையைப் போட்டவள், சமையல் அறையை ஒதுங்க வைத்து விட்டுப் படுக்கை அறைக்குச் சென்றவள், ஹாலில் இருந்த கணவனைப் பார்த்து படுக்கவில்லையா என்று கேட்க….

எனக்கு இவ்வளவு சீக்கிரம் தூக்கம் வராது. நான் வந்து அப்புறம் படுக்கிறேன். நீ போய்ப் படு.” என்றான்.

மகனுக்கு அடுத்து சுவரை ஒட்டி படுத்தவள், மாத்திரை போட்டிருந்ததால்…. படுத்ததும் உறங்கி விட்டாள்.

சிறிது நேரம் சென்று ஆதவன் அறைக்கு வர… ஆருஷி நல்ல உறக்கத்தில் இருந்தாள். அப்போது தான் மனைவியின் முகத்தை நன்றாகவே பார்த்தான். ஆருஷிக்கு நல்ல அடர்த்தியான கூந்தல்… நல்ல வடிவான முகம். இப்போதும் பெண் பார்த்த அன்று பார்த்தது போலத் தான் இருந்தாள்.

விடிவிளக்கின் ஒளியில் மனைவியின் முகம் பார்த்தபடி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தவன், அவளை முதன் முதலில் பார்த்த நாளை நினைத்துப் பார்த்தான்.

வெகு காலம் சிங்கப்பூரில் இருந்த கப்பல் நிறுவனத்தில் தான் வேலை செய்தான். அப்போது தான் அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்க… அங்கே வேளையில் சேர்வதற்கு முன் இங்கே பெற்றோருடன் சில நாட்கள் தங்கி விட்டுச் செல்லலாம் என இங்கே கன்னியாகுமரிக்கு வந்திருக்க… அவன் விடுமுறை கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில்… தரகர் ஒரு வரன் கொண்டு வந்தார்.

Advertisement