Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 2

மறுநாள் ஆருஷியை பார்க்கும் போது, “உங்களுக்குக் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கும்னு நினைக்கவே இல்லை. உங்க கணவர் என்ன செய்யுறார்? நான் அவரைப் பார்த்ததே இல்லையே…” என மைக்கல் விசாரிக்க…

நானும் அவரும் இப்போ சேர்ந்து இல்லை.” என்று மட்டும் ஆருஷி சொல்ல….

எப்போ இருந்து.” என மைக்கல் மேலும் கேட்க….

கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்லயே அவர் வெளிநாடு போயிட்டார். அப்புறம் அவங்க வீட்ல இருக்கும் போது கொஞ்சம் பிரச்சனை ஆச்சு. நான் எங்க வீட்டுக்கு வந்துட்டேன்.”

ஏன் திரும்பச் சேர முயற்சி செய்யலையா?”

அவர் என்னை அவங்க வீட்லயே இருக்கச் சொன்னாரு. ஆனா நான்தான் இருக்காம வந்துட்டேன்.”

ஏன்?”

எனக்கு அங்க இருக்கப் பிடிக்கலை.”

அதுக்காக உங்க கணவர் உங்களை எப்படியும் போன்னு விட்டுடுவாரா? என்ன மனுஷன் அவரு?” என மைக்கல் ஆத்திரப்பட….

தப்பு அவர் மேல இல்லை. ஆரம்பத்தில இருந்தே தப்பு எங்க மேல தான். முதல் கோணல் முற்றிலும் கோணல் மாதிரி ஆகிடுச்சு.”

சரி இனியும் இப்படியே இருக்க முடியுமா? எதாவது ஒரு முடிவுக்கு வரணும் தான…”

ரெண்டு பேரும் சேர்ந்து வாழ முடியாதுன்னா விவாகரத்து பண்ணிட்டு அவங்கவங்க வழியைப் பார்க்கலாமே…” என மைக்கல் யோசனை சொல்ல… அதைக் கேட்டு ஆருஷி சற்று ஆடித்தான் போனாள். அவள் அந்த மாதிரி ஒன்றை யோசிக்கவே இல்லை என மைக்கலுக்குப் புரிந்தது.

இன்னும் இந்தப் பெண் கணவன் வருவான் என நினைத்துக் கொண்டிருக்கிறாளோ என்று தோன்றியது.

அவனுக்குள் ஆருஷி மீது தோன்றிய விருப்பத்தை அவன் சொல்லவே இல்லை. கணவனை விட்டு பிரிந்து இருந்தாலும், இன்னும் கணவனை நினைத்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் போய் உன்னை விரும்புகிறேன் என்றா சொல்ல முடியும்.

ஆருஷி நான் ஒன்னு சொல்லட்டுமா? நீயே உன் கணவரை கூப்பிட்டு பேசிடு.” என்றதற்கு,

அவங்க ரொம்பக் கோபமா இருக்காங்க. நான்தான் சொன்னேனே தப்பு எங்க மேல தான். அதனால அவங்களுக்கு வரணும்னா வரட்டும்.” என்றவள், மைக்களிடம் விடைபெற்று செல்ல… அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைச் சற்றுத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சரத் மைக்கலின் அருகே வந்தவர் அவனைப் பார்த்து முறைத்து விட்டு சென்றார்.

இவர் ஏன் நம்மை முறைச்சு பார்க்கிறார் என மைக்கலுக்கு ஒன்றும் புரியவில்லை.

எதுக்குக் கண்டவனோட நின்னு பேசுற? பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க?” என சரத் ஆருஷியிடம் கேட்க…

உங்களுக்கு என்னைக் கேள்வி கேட்க எல்லாம் தகுதியே இல்லை… நான் யாரோட பேசணும் பேசக் கூடாதுன்னு எல்லாம் நீங்க சொல்லாதீங்க.”

என்னைப் பத்தி இனி தான் தப்பா நினைக்கணுமா? நீங்க பண்ணி வச்ச வேலைக்கு, நம்ம குடும்பத்தையே என் புருஷன் வீட்ல கேவலமா தான் நடத்தினாங்க.”

ஆரம்பத்திலேயே அம்மாவும் நானும் எவ்வளவு சொன்னோம். உங்க இஷ்ட்டத்துக்கு அடிச்சு விட்டீங்க. இப்போ என் நிலைமை என்னன்னு கூட எனக்குத் தெரியலை. இதுல ஒரு குழந்தையை வேற பெத்து வச்சிருக்கேன்.”

நீதான் கொஞ்சம் பொறுமையா இருன்னு சொன்னா கேட்காம வெளிய வந்துட்ட… நீ அங்கயே தான் இருந்திருக்கணும்.” என்றதும், ஆருஷிக்கு எங்கே இருந்து அப்படி ஒரு வெறி வந்ததோ….

எதாவது பேசினீங்க அப்பான்னு கூடப் பார்க்க மாட்டேன் கொன்னுடுவேன். முதல்ல வெளிய போங்க. அம்மா இனி இவர் இந்த வீட்டுக்கு வந்தா…, நான் எங்காவது போயிடுவேன். இல்லை செத்து கூடப் போவேன்.” என ஆருஷி போட்ட சத்தத்தில் அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூட எட்டிப் பார்த்தனர்.

நீங்க முதல்ல போங்க. பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ அவளைக் குத்தம் சொல்ல வந்தாச்சு. உங்களா தான் என் பொண்ணுக்கு புகுந்த வீட்ல மரியாதை இல்லாம போச்சு… நமக்கு ஏத்த இடத்தில பார்க்கலாம்னு சொன்னா கேட்டீங்களா.. உங்க இஷ்ட்டத்துக்குப் பண்ணி, இப்போ அவ வாழ்க்கை தான் வீணா போச்சு… இதுல அவளைக் குத்தம் சொல்ல வந்தாச்சு… முதல்ல இங்க இருந்து போங்க.” எனப் பார்கவியும் சொல்ல… சரத் வெளியே சென்றார்.

அங்கே நின்று வேடிக்கை பார்த்தவர்களைப் பார்த்து புன்னகைத்தவர், சும்மா, நானும் என் பெண்ணும் இப்படித்தான் எப்பவும் சண்டை போடுவோம்.” என ,மற்றவர்களும் களைந்து சென்றனர்.

இது தான் சரத்திடம் பிடிக்காத குணம். எதையுமே சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார். அவர் செய்வதைச் செய்து கொண்டிருப்பார். திரும்ப இந்த வீட்டுகே வந்து நிற்பார் என ஆருஷிக்கு தெரியும்.

சரத் சென்றதும் அறைக்குள் சென்ற ஆருஷிக்கு அப்படியொரு அழுகை. பார்கவிக்கு அவளைப் பார்த்து வருத்தமாக இருந்தது.

உங்க அப்பாவை பத்தி தான் தெரியும் தான விடு.” என்றார்.

நான் அங்க இருக்கலைன்னு கூசாம சொல்றார். ஏன் இருக்கலைன்னு இவருக்குத் தெரியாதா?” அழுகைக்கு இடையில் அவள் கேட்க…

உங்க அப்பா உனக்குக் கல்யாணமா பண்ணார். எப்போ கல்யாணம் நின்னு போகுமோன்னு நம்மைத் திகில்ல வச்சிருந்தார். கூறு கெட்ட மனுஷனை தான் எனக்குக் கட்டி வச்சாங்க. ஆனா அவர் உன் வாழ்க்கையில இப்படி விளையாடுவாருன்னு நான் நினைக்கவே இல்லை.”

மேஜையில் இருந்த தாய் தந்தையின் திருமணப் படத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த யஸ்வந்த், “அப்பா அப்பா…” எனப் புகைப்படத்தைத் தட்டிக் கொண்டிருக்க… அதைப் பார்த்து ஆருஷிக்கு இன்னும் அழுகை பொங்கியது. அன்று இரவெல்லாம் ஆருஷிக்கு அழுகையில் தான் சென்றது.

மைக்கல் இடம் விற்பதற்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்து கொண்டிருந்தான். அவன் பெற்றோர் வந்ததும் பத்திர பதிவை முடிவை முடித்து விட்டு, இந்தியாவில் சில இடங்களைப் பார்த்து விட்டு ஊர் திரும்புவதாக இருந்தது.

ஆருஷி அவனைப் பார்த்தாலும் புன்னகையுடன் கடந்து விடுவாள். அன்று அவள் தந்தை முறைத்து விட்டுச் சென்றதைத்தான் அவனும் பார்த்திருந்தானே…. அதனால் அவனும் அவளை நிறுத்தி வைத்து பேசுவது இல்லை. ஒரு கலக்கம் அவள் முகத்தில் எப்போதும் இருப்பதைக் கண்டு கொண்டான்.

சரத் இப்போதும் தினமும் தான் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர் அப்படித்தான் எவ்வளவு திட்டினாலும் உரைக்காது. ஆருஷி அவர் முகம் பார்ப்பது கூட இல்லை.

டேனியல் பெற்றோர் வந்ததும் அவர்களுடன் ஆருஷியின் வீட்டுக்கு வந்தவன், அவன் உடல்நிலை முடியாமல் இருந்த போது பார்கவி உதவியதை சொன்னவன், ஆருஷி இல்லையென்றால் இந்த இடம் விஷயம் இவ்வளவு எளிதாக முடிந்து இருக்காது என்றும் கூறினான்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவனது பெற்றோர் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்குக் கிளம்ப, அவர்களுக்கு டாக்ஸி வரவழைத்து அனுப்பி வைத்தான்.

அவர்கள் சென்றதும், “ஆருஷி, என்னை யாருன்னே தெரியாம நிறைய உதவி செஞ்சீங்க. உங்களுக்கு என்னைக்காவது இங்க இருக்க முடியலைன்னு தோணினா… என்னைக் கூப்பிடுங்க. நான் உங்களுக்குப் பாதுகாப்பான இடமும் வேலையும் ஏற்பாடு பண்றேன்.”

என்னை நீங்க நம்பலாம்.” என்றவன், அவளது கைபேசிக்கு அவனின் கனடாவில் இருக்கும் வீட்டு முகவரி, தொலைபேசி எண், அவனின் பெற்றோர் கைபேசி எண்கள் என எல்லாம் அனுப்பி வைத்தான்.

உங்களுக்குத் தேவைப்படாமலும் போகலாம். தேவைப்பட்டா கூப்பிட யோசிக்க வேண்டாம்.” எனப் புன்னகையுடன் சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றான்.

அவனால் இப்போது அவளிடம் வேறு எதுவும் கேட்க முடியாது. ஆனால் இதையாவது சொல்லி விட வேண்டும் என்று தோன்றியது. அவள் கணவன் வரவில்லை என்றால் இந்தப் பெண் என்ன ஆகுமோ எனக் கவலையாக இருந்தது. அந்தக் கவலையுடன் தான் அவன் கனடாவும் சென்றான்.

அங்கே கன்னியாகுமரியில் துர்கா, “ஆதவன் திருவனந்தபுரத்துக்குத் தானே ப்ளைட்ல வருவான். அவனைக் கூப்பிட நீங்களே காரை எடுத்திட்டு போயிட்டு வாங்க.” எனக் கணவரிடம் சொல்லிக் கொண்டிருக்க…

அவன் உன்கிட்ட சொன்னானா திருவனந்தபுரம் வர்றேன்னு. அவன் சென்னைக்குத் தான் வந்து இறங்கிறான்.” என்றார் ஈஸ்வர்.

அங்க இறங்கிறவன் பொண்டாட்டியை பார்க்க மாமியார் வீட்டுக்கு போகாமலா வருவான். அவனை நேரா இங்க வர சொல்லுங்க.” என ஆதவனின் மூத்த சகோதரி பிரமிளா சொல்ல…

ஆமாம் அங்க போனா…. அந்த ஆளே அதையும் இதையும் சொல்லி நம்மை ஏமாத்தின மாதிரி அவனையும் எமத்திடுவார். அவனை நேரா இங்க வர சொல்லுங்க.” என்றாள் இளைய சகோதரி மஞ்சுளா.

நீங்க ஆளாளுக்கு ஏன் பேசுறீங்க? இப்படிப் பேசித்தான் பிரச்சனை பெரிசாகிடுச்சு. அவன் என்ன செய்யணும்னு நினைக்கிறானோ செஞ்சிட்டு போகட்டும். விடுங்க.” என்றார் ஈஸ்வர்.

Advertisement