Advertisement

அந்த ஆளு நம்மை எல்லாம் எப்படிப் பேசி ஏமாத்தினான். நூறு பவுன் நகை, ரெண்டு லட்சம் ரொக்கம், கார் அது இதுன்னு எவ்வளவு கதை விட்டான். அவன் வீட்டு தொடர்பே வேண்டாம்னு சொல்றேன்.” என துர்கா சொல்ல…

அந்த ஆளு எப்படியோ இருக்கட்டும். ஆனா அவர் பொண்ணு என்ன பண்ணா?”

ஏன் அவளும் தானே இங்க இருக்க மாட்டேன்னு போனா… மாசமா இருக்கிற பொண்ணுன்னு பார்த்தா… அவ நம்மை மதிச்சாளா.”

அவங்க அப்பா அம்மாவை கேவலமா நடத்தினா எந்தப் பொண்ணு பொறுத்துப்பா…. நம்ம இளையவன் கல்யாணத்துக்குக் கூட நாம அவங்களுக்குப் பத்திரிகை கொடுக்கலை… அதுவும் நீ உன் இளைய மருமகளைத் தலையில தூக்கி வச்சு ஆடின…. உன் பொண்ணுங்களும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கண்டபடி பேசினாங்க. அதுதான் அந்தப் பொண்ணு போயிடுச்சு.”

பின்ன அவங்க அப்பன் ஒரு பொய்காரன் வேற எப்படி நடத்துவாங்க. அப்போ எல்லாம் நீங்களும் எங்களோட ஒத்து தான போனீங்க. இப்போ மட்டும் என்ன இப்படிப் பேசுறீங்க?”

ஆமாம் எனக்கும் தான் ஆத்திரம். ஆனா ஆதவனோட வாழ்க்கையும் பார்க்கணும் இல்ல… அவனுக்கு அந்தப் பெண்ணோட வாழனும்னா வாழ்ந்திட்டுப் போறான். நாம எதுவும் சொல்ல வேண்டாம்.”

அந்தப் பொண்ணு இங்க இருந்து போனாலும் சண்டை போட்டுட்டு போகலை. சொல்லிட்டுத்தான் போச்சு. அது அமைதியான பொண்ணு தான். நீ இப்போ உன் இளைய மகனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சியே… அந்தப் பொண்ணு இந்த வீட்டுக்கு வந்து ஒருநாளாவது இருந்துச்சா….”

அவ பெரிய இடத்து பொண்ணு… அவளுக்கு இங்க வசதி போதாது. அதோட விஜயன் வரும் போது தான் வர்றாளே அப்புறம் என்ன உங்களுக்கு?”

“ஆளுக்கு ஏத்த மாதிரி பேசாத. அந்தப் பொண்ணு ஒருநாளாவது நம்மை மதிச்சு இங்க இருந்ததா… விஜயன் வரும் போது கூட வரும் பிறகு அவனோடவே போயிடும். எல்லாம் அப்படித்தான். இதுல ஆதவன் பொண்டாட்டிகிட்ட மட்டும் குறை கண்டு பிடிச்சிட்டே இருந்தா எப்படி?”

நீங்க எதோ சொல்றீங்க. ஆனா அந்த ஆளு பெண்ணைச் சாக்கு வச்சு இங்க வந்தா… நான் மனுஷியாவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.” என மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க கத்திவிட்டு தனது கனத்த சரீரத்தை தூக்கிக் கொண்டு துர்கா அங்கிருந்து சென்றார்.

ஆருஷி பார்க்க அமைதியான பெண் தான். முகத்தில் எப்போதுமே ஒரு சிறு புன்னகை இருக்கும். அலுவலகத்தில் கூட எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவாள். அவளைப் பார்த்தால் இத்தனை பிரச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிக்கும் பெண் என்று சொல்லவே முடியாது. கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்க. இவள் பெற்றோரோடு இங்கே இருக்கிறாள் என்றுதான் மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

அவள் இயல்பையும் மீறி கத்தி சண்டையிடுவது எல்லாம் தந்தையிடம் மட்டும் தான். அவர்தான் அவளை அந்த நிலைக்குத் தள்ளி இருந்தார்.

பெற்றோருகள் தங்கள் பிள்ளைகளை வசதியாக வாழ வைக்க நினைக்கலாம் தப்பில்லை. ஆனால் தங்கள் சக்திக்கு மீறிச் செய்ய நினைக்கும் போதுதான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. இங்கேயும் சரத் அந்தத் தவறைத்தான் செய்திருந்தார்.

ஒருவழியாக நாற்பது மணி நேர பிரயாணதிற்குப் பிறகு நள்ளிரவு சென்னை விமானநிலையம் வந்திறங்கிய ஆதவன், விமான நிலையத்திற்கு அருகிலேயே ஹோட்டலில் அறை எடுத்து தங்கி ஓய்வெடுத்தவன், மறுநாள் நண்பகல் வேளையில்  மனதை தயார் படுத்திக் கொண்டு தனது மனைவியின் வீட்டுக்கு கிளம்பி சென்றான்.

புறநகரில் தான் அவர்களின் வீடு. டாக்ஸியில் சென்றவன், வாடகை காரை வெளியில் நிறுத்திவிட்டு வாயில் மணியை அடிக்க… அப்போது வீட்டில் இலக்கியா மட்டும் தான் இருந்தாள். அவர்களது தனி வீடுதான்.

கதவைத் திறந்தவளுக்கு முதலில் ஆதவனை அடையாளமே தெரியவில்லை.

அவள் விழிப்பதை பார்த்து விட்டு “என்ன இலக்கியா அடையாளம் தெரியலையா? உனக்கு மட்டும் தானா… இல்லைனா உங்க அக்காவுக்கும் இப்படித்தானா…” எனவும் சுதரித்தவள், “இல்லை மாமா நீங்க வருவீங்கன்னு தெரியாது இல்ல….” என்றவள், வழிவிட்டு அவனை உள்ளே அழைத்தாள்.

வீட்டை சுற்றி இடம் இருந்தாலும், முன்பகுதியில் மட்டுமே வீடு கட்டி இருந்தனர். அதனால் சின்ன வீடு தான்.

சரத்தை பார்க்க விரும்பாமல் தான் அவர் அலுவலகத்தில் இருக்கும் நேரம் பார்த்து வந்திருந்தான்.

அவனை ஹாலில் உட்கார சொல்லிவிட்டு அவனுக்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வர இலக்கியா உள்ளே சென்றிருந்தாள்.

ஹாலில் பெரிதாக ஆதவன் ஆருஷியின் திருமணப் படம். அதில் புன்னகையுடன் நின்றிருந்த மனைவியை விழி எடுக்காமல் பார்த்தவனின் பார்வை, அடுத்து அதே போலப் பெரிதாக இருந்த மழழையின் புகைப்படத்திற்குச் செல்ல… பார்வை அங்கேயே நிலைத்தது.

அவன் பார்வையைக் கவனித்து விட்டு, “யஸ்வந்த் ஆறு மாதத்தில் இருக்கும் போது எடுத்தது.” என்ற இலக்கியா அவனிடம் தண்ணீரை நீட்ட….

இந்த வீட்டில் பச்சை தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது என நினைத்து தான் வந்திருந்தான். ஆனால் இதுவரை நேரில் பார்க்காத மகனை புகைப்படத்தில் பார்த்ததும், தொண்டை அடைத்து அவனுக்கே கண்கள் கசியும் போல இருந்தது. அதனால் பேசாமல் நீரை வாங்கிப் பருகினான்.

அவன் எதுவும் பேசாமல் இருக்க… “அக்காவுக்கும் அப்பாவுக்கும் தினமும் சண்டை. அக்கா அப்பாவோட இருக்கப் பிடிக்காம தனியா போயிட்டா… அம்மா அவ கூட இருக்காங்க. அப்பா செஞ்சதுல அக்காவுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை மாமா…. ப்ளீஸ் நீங்க அவளை நம்பணும்.” என,

நீ முதல்ல ஒன்னு புரிஞ்சிக்கோ இலக்கியா… எனக்கு உங்க பணமோ நகையோ இல்லை பிரச்சனை. நான் உங்க அக்காவை அவளுக்காகவே கல்யாணம் பண்ணி இருப்பேன். அவ என்கிட்டயாவது உண்மையைச் சொல்லி இருக்கலாம். எனக்கு அந்தக் கோபம் மட்டும் தான். நான் சொல்ல சொல்ல கேட்காம எங்க வீட்ல இருந்து எதுக்குப் போனா? அப்போ அவ என்னை மதிக்கலை தான….”

இலக்கியா எதோ சொல்ல வர…. “பழசெல்லாம் பேசி என்ன ஆகப் போகுது. இப்போ அவ எங்க இருக்கா… அட்ரெஸ் கொடு நான் போய்ப் பார்த்துக்கிறேன்.”

என் பிள்ளையை நான் இனியும் இப்படியே விட்டுட முடியாது இல்ல… அவனுக்காக வரணும் தான… அதனால தான் வந்திருக்கேன்.” என்றான்.

மனைவிக்காக வரவில்லை குழந்தைக்காக வந்திருக்கிறேன் என்பது அக்காவை எவ்வளவு வருத்தும் என நினைக்கும் போதே இலக்கியாவுக்குக் கவலையாக இருந்தது. ஆனால் இப்போதாவது வந்தானே… அக்காவே பேசி சரி செய்து கொள்ளட்டும் என்று நினைத்தாள்.

அக்கா இப்போ ஆபீஸ்ல இருப்பா… அம்மா மட்டும் தான் இருப்பாங்க.” என, “நீ அட்ரஸ் கொடு, நான் அப்புறம் போய்ப் பார்த்துக்கிறேன்” என்றான்.

இலக்கியா அவனின் கைபேசி எண்ணை வாங்கி, அவர்களின் வீட்டு முகவரி, ஆருஷியின் எண் எல்லாம் அனுப்பி வைத்தாள்.

நான் ஒரு ஏழு மணி போலப் போறேன். ஆனா உங்க அப்பாவை அங்க பார்த்தேன் என்ன பன்னுவேன்னே எனக்குத் தெரியாது. அவரை மட்டும் என் கண் முன்னாடி வர வேண்டாம்னு சொல்லிடு.” எனச் சொல்லிவிட்டு தான்  சென்றான்.

இலக்கியா கதவை பூட்டிக் கொண்டு அப்போதே அக்கா வீட்டுக்கு கிளம்பி விட்டாள். அவள் சென்று பார்கவியிடம் ஆதவன் சொல்லியதை சொல்ல… “கோபமா இருந்தாலும் பொண்டாட்டி பிள்ளைக்காக வந்து தானே இருக்கார். நாம நைட்டுக்கு சமைச்சு வச்சிட்டு உங்க அப்பா வந்ததும் அவரைக் கூட்டிட்டுக் கிளம்பலாம். உங்க அக்காகிட்ட இப்பவே சொன்னா டென்ஷன் ஆகிடுவா… வீட்டுக்கு வரட்டும் சொல்லிக்கலாம்.” என்றவர், மருமகனுக்கு இரவு உணவு சமைக்க அப்போதே தயாரானார்.

மாலை வந்த சரத் மருமகன் வருகிறார் என்றதும் அவனைப் பார்க்க ஆர்வமாக… “உங்களைப் பார்க்கவே கூடாதுன்னு சொல்லி இருக்கார். அவர் முதல்ல ஆருஷியோட சேரட்டும். இந்தமுறையும் அவங்களைச் சேர்ந்து வாழ விடாம பண்ணிடாதீங்க.” எனப் பலவற்றைச் சொல்லித்தான் கணவரை பார்கவி அங்கிருந்து கிளப்பினார்.

எப்போதும் ஆருஷி வரும் நேரம் கடந்திருக்க… இன்னும் மகள் வரவில்லையே எனப் பார்த்துக் கொண்டிருக்க… ஒரே ஊரில் இருந்து கொண்டு மகனை பார்க்காமல் இருக்க முடியாமல், ஆதவன் சொன்ன நேரத்துக்கு முன்பே வந்துவிட்டான்.

அவனை வரவேற்ற பார்கவியிடம் கூட அவன் முகம் கொடுத்து பேசவில்லை. அவனைப் பார்த்ததும் அப்பா என்று தாவிய மகனை தூக்கி கொஞ்சியவன், மகனோடு பால்கனியில் சென்று நின்று கொண்டான்.

ஆருஷிக்கு நல்ல ஜுரம். வரும் வழியிலேயே மருத்துவமனை சென்றுவிட்டு தான் வந்திருந்தாள். அந்த மருத்துவர் சொல்ல சொல்ல கேட்காமல் ஊசி வேறு போட்டிருக்க…. மதியமும் சரியாக உண்ணாததால்… ஊசி போட்டதுமே அவளுக்குக் குமட்டிக் கொண்டு தான் வந்தது. வீடு அருகே தான் என்பதால்…. சமாளித்துக் கொள்ளலாம் என வேகமாக நடந்து வீட்டுக்கு வந்திருந்தாள்.

மகனோடு பால்கனியில் நின்றவன், அவனுக்கு வேடிக்கை காட்ட….

அப்பா… அம்மா…” என மகன்தான் முதலில் ஆருஷி வருவதை அவனுக்குச் சொன்னான். ஆதவன் மனைவியின் பக்கம் ஆவலாகத் திரும்பினான்.

ஊசி போட்டதும் காய்ச்சல் குறைந்து வியர்க்க ஆரம்பித்து இருக்க… எதிர்பாராமல் அவள் வீட்டில் கணவனைக் காணவும், இவன் வேறு என்ன சொல்லப்போகிறானோ என்று பயம் தான் ஆருஷிக்கு முதலில். ஊசி போட்டது வேறு கண்ணை இருட்டிக் கொண்டு வர…. வாசலின் அருகிலேயே மயங்கி சரிந்தாள்.

எல்லோரும் அவள் வருவதைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். அவள் வியர்க்க விருவிருக்க வந்து நின்றதை ஆதவனும் கவனித்து இருந்தான். அவள் மயங்கி சரிந்ததும், மகனை கீழே விட்டு,  “ஆருஷி….” எனப் பதறிவன், வேகமாகச் சென்று மனைவியைத் தூக்கி இருந்தான்.

Advertisement