Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 17

கன்னியாகுமரி வந்ததும், மனைவி மகனை ஆதவனே காலையில் பள்ளி, கல்லூரியில் விட்டு மீண்டும் மாலையும் அவனே சென்று அழைத்து வந்தான்.

ஆருஷிக்கு தான் கணவனை விட்டு கல்லூரி செல்லவே மனம் இருக்காது. அவளை அன்றும் கல்லூரியில் இறக்கி விட்டவன், “சின்னப் பசங்க பிடிக்காம ஸ்கூலுக்குப் போவாங்களே… அந்த மாதிரியே முகத்தை வச்சிட்டு இருக்க.” என்றான் சிறு புன்னகையுடன்.

இன்னைக்கு எங்க அம்மாவே கேட்டாங்க. இவ என்ன டா எனக்காகப் படிக்கப் போன மாதிரி இருக்கா… அவளுக்குப் படிக்க இஷ்டமா இல்லையான்னு, அவங்களையே புலம்ப வச்சிருக்க.”

என்ன தான் டி உனக்குப் பிரச்சனை?”

எனக்குப் பிடிக்காமலா காலேஜ் சேர்ந்திருப்பேன். அதுக்கு இல்ல… நீங்க இருக்கும் போது வீட்ல இருக்க முடியலையேன்னு நினைச்சேன்.”

நீங்க என்ன எப்பவுமா என்னோட இருக்கீங்க.” என ஆருஷி ஒரு வழியாகக் காரணத்தைச் சொல்லி விட… கேட்ட ஆதவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.

எனக்கு டைம் கொடு ஆருஷி. நான்தான் சொல்லி இருக்கேன் இல்ல… சீக்கிரம் நாம சேர்ந்து இருக்கிற மாதிரி பார்த்துக்கிறேன்.”

ம்ம்…” என்றவள் அவனிடம் விடைபெற்று கல்லூரிக்கு சென்றாள்.

ஆருஷியின் விருப்பம் புரிந்ததும், மனைவி வீட்டில் இருக்கும் நேரம் ஆதவன் அவளுடனே இருந்தான். அவள் இல்லாத நேரம் வெளியே செல்லும் வேலைகளை முடித்துக்கொள்வான். சில நேரம் மாலை மனைவி மகனுடன் வெளியே சென்று விட்டும் வருவான். 

நாம் வந்தால் நம்மைத் தான் கவனிப்பார்கள் என்று பிரமிளா மஞ்சுளா கூட அம்மா வீட்டுக்கு வரவில்லை. தீபாவளிக்கு வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டார்கள். ஆனால் ஆதவன் மனைவி மகனை அழைத்துக் கொண்டு முதலில் பிரமிளாவின் வீட்டிற்குச் சென்றான்.

என்ன டா ஆருஷி ரொம்ப டல்லா இருக்கா?” என பிரமிளா கேட்க…

அவ நான் கூட இருக்கிறதை நினைச்சு சந்தோஷப்படுறதை விட… நான் கிளம்புற நாளை நினைச்சு இப்போவே சோகமா இருக்கா… அதுதான் வேற ஒன்னும் இல்லை.” என்றான்.

அவ இடத்தில இருந்து பார்க்கும் போது கஷ்ட்டமா தான் டா இருக்கும். எனக்கே உன் அத்தானை விட்டுட்டு இருக்க முடியுமா என்ன? அவர் எங்காவது வெளியூர் கிளம்பினாலே… போகனுமான்னு தான் கேட்பேன்.”

சில நேரம் போக விட்டதும் இல்ல… அதையும் சொல்லு.” என்றான் வினோத். பிரமிளா எதோ வேலை இருப்பது போல நழுவி விட்டாள். மஞ்சுளாவின் வீட்டிற்கும் சென்றவர்கள், அங்கே இரவு உணவு உண்டு விட்டு வீடு வந்தனர்.

இரவுகளிலும் ஆருஷி கணவனிடம் அதிக நெருக்கத்தைக் காட்ட… அது போதாதா ஆதவனுக்கு, அவனும் மனைவி மீதிருந்த காதலை அவளுக்கு விதவிதமாக உணர்த்தினான். காதலும் காமமும் சேர்ந்தது தானே தாம்பத்தியம். பிரிந்திருக்கப் போகும் நாட்களுக்கும் சேர்த்து… ஈடுகட்ட முயன்றனர் போல… இருவருமே இருந்தனர்.

தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்பிருந்தே… பலகாரம் செய்வதில் துர்கா பிஸியாக இருந்தார். ஆருஷி தான் கல்லூரிக்கு சென்று விடுவாளே… அதனால் ஆதவன் அவருக்கு உதவினான். கவிதாவும் வந்து உதவினாள்.

தீபாவாளியன்று அதிகாலையே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, விதவிதமாகச் சமைத்து, சூரியன் வருவதற்கு முன்பே சாமி அறையில் விளகேற்றிவிட்டு…. மூதாதையர்களுக்குப் படையலிட்டு கும்பிட்டனர்.

காலை உணவு முடித்ததும், புது ஆடை அணிந்து சாஸ்த்திரத்துக்கு இரண்டு வெடியை வாசலில் போட்டு விட்டு வந்தனர். ஆருஷி சுடிதார் தான் அணிந்து கொண்டிருந்தாள்.

ஆதவன் யஸ்வந்துக்கு வேடிக்கை காட்ட… மாமியாரும் மருமகளும் சேர்ந்து மட்டன் பிரியாணி போட தேவையானவைகளை நறுக்கிக் கொண்டு இருக்க… பிரமிளாவின் குடும்பம் முதலில் வர… அவள் மாமியாரையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். நல்ல நாளும் அதுவுமாக மாமியாரை தனியாக விட வேண்டாம் என அழைத்து வந்திருந்தாள். ஈஸ்வரும் துர்காவுமே அவரை வர சொல்லி அழைத்திருந்தனர்.

பிரமிளாவின் மாமியாருக்கு பேசிக் கொண்டே இருக்க வேண்டும். அவர் ஆருஷியை பிடித்துக் கொண்டார். ஆருஷி தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொண்டு, அவர் சொல்வதற்கு எல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தாள்.

பின்கட்டில் விறகு அடுப்பில் பெரிய பாத்திரத்தை வைத்து பிரயாணி செய்தனர். பிரமிளா நறுக்கியவைகளைக் கொண்டு வந்து கொடுக்க… துர்கா அளவு பார்த்து போட… ஆதவன் பெரிய கரண்டி வைத்துக் கிளறிக் கொண்டு இருந்தான்.

இவர்கள் பிரியாணியை வெளியவே போட்டு முடிக்க.. ஆருஷி உள்ளே சிக்கென் வறுவல் செய்து கொண்டிருந்தாள்.

இவர்கள் சமையலை முடித்து விட்டு எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்க… மதிய உணவு நேரத்துக்கு மஞ்சுளாவின் குடும்பம் வந்தது. தீபாவளி அன்று வரும் அவளின் நாத்தனார் குடும்பத்திற்குச் சமைத்து வைத்து விட்டு, அவர்கள் வந்ததும் இவர்கள் இங்கே கிளம்பி வந்திருந்தனர். மாலை அவர்களுடன் பட்டாசு போட செல்ல வேண்டும் என்றாள் மஞ்சுளா.

ஆருஷி நாத்தனார்களுக்கு எடுத்திருந்த புடவைகளைக் கொண்டு வந்து கொடுக்க… பிரமிளாவும் மஞ்சுளாவும் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூற… புடவைகளுக்கு உரிய ரவிக்கைகளை துர்கா எடுத்து வந்து கொடுத்தவர், அப்போதே மூவரையும் கட்ட சொன்னார்.

பெண்கள் மூவரும் பட்டு சேலை கட்டி வர… மற்றவர்களும் உடைமாற்றிக் கொள்ள… பிறகு எல்லோரும் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

தீபாவளிக்கு வர்ஷா எப்படியும் வருவாள் என ஆருஷி நினைத்திருந்தாள். ஆனால் அவள் வரவில்லை.

விஜயன் மனைவியைப் போகத்தான் சொல்லி இருந்தான். ஆனால் வர்ஷா கேட்க வேண்டும் அல்லவா… “உங்க அம்மா என்னை வர சொல்லி கூப்பிடலையே…” என்றாள்.

உன் வீட்டுக்கு வர்றதுக்கு உன்னை யார் கூப்பிடணும்? நல்ல நாளைக்கு நம்ம வீட்டுக்கு போகணும்னு உனக்குத்தான் அக்கறை வேணும். உன்னை விருந்தாளி மாதிரி யாரும் கூப்பிட்டு எல்லாம் இருக்க மாட்டாங்க.”

இன்னைக்கு இங்கயே எனக்கு நேரம் போயிடும். நான் இன்னொரு நாள் போறேன்.” என்றாள். அவள் பேருக்கு சொல்கிறாள் என்று விஜயனுக்குப் புரியாமல் இல்லை.

மாலை ஐந்து மணிக்கே… மாலை காபி ஆனதும் நாத்தனார்கள் இருவரும் வீட்டிற்குக் கிளம்ப…

அதுக்குள்ள போறீங்களா?” என அருஷி கேட்க…

நல்ல நாள் அதுவுமா எங்க வீட்லயும் விளக்கேத்தனுமே… இன்னொரு நாள் தங்கிற மாதிரி வரோம்.” எனச் சொல்லி, தீபாவளி பலகாரங்களை வாங்கிக் கொண்டு இருவரும் சென்றனர்.

துர்கா மருமகளை வாசலில் மற்றும் வெளி வராண்டாவில் அகல் விளக்கேற்றி வைக்கச் சொன்னார். ஆருஷியும் ஏற்றி வைத்தவள், பிறகு வேலை எதுவும் இல்லாததால் உட்கார்ந்து கொண்டு இருந்தாள்.

இன்னும் இரண்டு நாளில் கணவன் கிளம்புகிறான், மனம் அதையே நினைக்க… இவளை என்ன செய்வது என்பது போலப் பார்த்த ஆதவன், “வா டி பட்டாசு போடலாம்.” என மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

சிறிது நேரம் பட்டாசு போட்டு விட்டு வந்தனர். யஸ்வந்தை கீழே உறங்க வைத்து விட்டு, அன்று நேரமே இருவரும் தங்கள் அறைக்கு வந்திருந்தனர்.

நான் ஊருக்கு போகும் கிளம்பும் போது, இந்தச் சின்னப் பசங்க எல்லாம் கை காலை உதைச்சு அழுமே அப்படியெல்லாம் அழுதிட மாட்ட தான…” என ஆதவன் மனைவியைச் சீண்ட….

எனக்கே தெரியலை… நான் அப்படித்தான் செய்யப் போறேனோ என்னவோ…” என்றாள் ஆருஷியும்.

அப்படியே ரெண்டு அறை தான் கொடுப்பேன். என்னைப் பத்தி, என் வேலையைப் பத்தி தெரிஞ்சு தான கல்யாணம் பண்ண. நீ இப்படி எல்லாம் பண்ணா… அடுத்தத் தடவை மூன்னு மாசத்துல எல்லாம் வர மாட்டேன். ஆறு மாசமாகும் பரவாயில்லையா…” என்றதும்,

இல்லையில்லை….. நான் ஒழுங்கா இருக்கேன்.” என்றாள் வேகமாக.

ம்ம்… இது அழகு. சும்மா அழுது வடிஞ்சிட்டு இருந்தா நல்லாவே இல்லை. எனக்கு முதல்ல கிளம்ப மனசு இருக்குமா சொல்லு.”

எனக்கு உன்கிட்ட பிடிச்சதே உன்னோட சிரிச்ச முகம் தான். சிரிச்சிட்டே இருக்கணும் சரியா?” என்றதும், சம்மதமாகத் தலையசைத்தாள்.

ஆமாம் அன்னைக்குப் போன்ல என்கிட்ட கத்துன… அப்புறம் நேர்ல சண்டை கூடப் போடலையே ஏன்?”

ஏன் ஏற்கனவே பிரிஞ்சு இருந்த மூணு வருஷம் உங்களுக்கு போதாதா?” என்றவள்,

முன்னாடியும் நீங்க என்னைப் பொறுமையா இரு… நான் பார்த்துக்கிறேன்னு தான் சொன்னீங்க. நான்தான் கேட்காம இழுத்து வச்சுகிட்டேன். அதுதான் இந்த முறை எதுனாலும் நீங்களே பார்த்துக்கட்டும்னு விட்டுட்டேன். உண்மையா சொன்னா என்னால நிஜமா முடியலை.”

எங்க அப்பா அப்படித்தான். எங்க அம்மா மீன் வாங்கிட்டு வர சொன்ன… கறி வாங்கிட்டு வருவார்… கறி வாங்க சொன்னா மீன் வாங்கிட்டு வருவார். எல்லா விஷயத்திலேயும் அப்படித்தான்.”

செய்யுறதையும் செஞ்சிட்டு… அதுக்கு ஒரு நியாயம் பேசுவார் பாருங்க அதுதான் கடுப்பா இருக்கும்.”

எங்க குடும்பத்துக்குள்ள எதுனாலும் பரவாயில்லை… நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். ஆனா நம்ம கல்யாண விஷயத்திலேயும் அப்படித்தான் அவர் இஷ்ட்டத்துக்கு எதோ பண்ணி வச்சார். இதுல உங்க குடும்பமும் இருக்கே… நான் தானே இங்க வந்து இருக்கணும். அது எனக்கு எவ்வளவு தர்ம சங்கடத்தைக் கொடுக்கும். அவருக்கு எதைப் பத்தியும் கவலை இல்லை.”

எனக்கு அவர்கிட்ட பேசி, சண்டை போட்டு எல்லாம் அலுத்து போச்சு… உங்ககிட்ட தான் ஒழுங்கா நடந்துகிறார்… நீங்களே பேசிக்கோங்க. என்னால முடியலை.” என்றாள்.

ஓகே… என்னை நம்புற இல்ல… அது போதும். நான் பார்த்துக்கிறேன்.” என்ற கணவனை ஆருஷி ஆசையாகக் கட்டிக் கொண்டாள். அடுத்த இரண்டு நாட்களும் கணவன் மனைவியிடையே இனிமையாக நேரம் செல்ல… அடுத்த இரண்டாம் நாள் வெளிநாடு செல்ல சென்னைக்குக் கிளம்பி சென்றான். ஆதவனுக்கு லோன் கிடைத்திருக்க… அவன் ஊருக்குச் செல்வதற்கு முன் பத்திரப்பதிவை முடித்துக் கொண்டு தான் சென்றான்.

ஆதவன் ஆருஷியின் நகைக்குச் சரத் கொடுக்க வேண்டிய பணத்திற்குக் கழித்துக் கொண்டு, மீதத்தை கொடுத்தான். ஏற்கனவே கல்யாணத்திற்கு வாங்கிய சில கடன்கள் சரத்திற்கு இருக்க… அதற்கு கொடுக்க வேண்டிய தொகையை மட்டுமே சரத்திடம் கொடுத்தவன், மீதி பணத்தை இலக்கியாவின் வங்கி கணக்கில் போட்டு விட்டான். 

பார்கவி தான் இவரிடம் மட்டும் கொடுக்காதீங்க. எதாவது செஞ்சு வச்சிடுவார் என்றார்.

எல்லா வேலைகளையும் முடித்து, அன்று நள்ளிரவு விமானத்திலேயே சென்று விட்டான். அவன் சென்று சேரும் வரை ஆருஷி ஒரு வித பதட்டத்திலேயே இருந்தவள், அவன் சென்று சேர்ந்ததும் தான் நிம்மதியானாள்.

சரத்தின் பூர்வீக சொத்தை விற்கும் போது. ஈஸ்வர் உடன் நின்று பேசி முடித்தார். பணம் கைக்கு வந்ததும், பார்கவி அவர் பிறந்த வீட்டில் பேசி… அவருக்கு என்று இருந்த இடத்தில் வீடு கட்ட ஆரம்பித்தார்.

வர்ஷாவுக்கு அவள் அண்ணியோடு பெரிய சண்டை. வருனுக்கும் பிரியாவுக்கும் சண்டை அதில் இவள் மூக்கை நுழைத்து அண்ணனுக்கு பரிந்து பேச… “நீங்க ஏன் எங்க விஷயத்துல தலையிடுறீங்க?” என ப்ரியா திருப்பிக் கேட்டு விட…. அதோடு வர்ஷா விட்டிருந்தால் பரவாயில்லை…. அவள் மேற்கொண்டு பேச… பிரச்சனை பெரிதாகி விட்டது.

ஒரு சண்டை என்று வந்துவிட்டால் பிறகு இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து இருக்க முடியாது போய் விடும் என்றுதான், சகுந்தலா இருவரையும் அதிகம் பேச விடவே மாட்டார். ஆனால் இந்தமுறை யார் தடுத்தும் கேளாமல்… இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர்.

மகன் தனிக் குடித்தனம் போய் விடுவானோ என்ற பயத்தில்… வர்ஷாவின் பெற்றோர் மருமகளுக்குப் பரிந்து பேச…. வர்ஷாவுக்கு அது மிகவும் தன்னிரக்கம் ஆகிவிட்டது.

எனக்குச் சப்போர்ட் பண்ணாம அவங்களுக்குப் பண்றீங்க.” என அவள் அம்மாவிடம் வர்ஷா கோபத்தைக் காட்டினாள்.

நீ உன் புருஷன் இங்கயே வந்ததும் எங்களுக்கு டாட்டா காட்டிட்டு போயிடுவ… நீயா கூட இருந்து எங்களைப் பார்ப்ப. ஏற்கனவே உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லை. உங்க அண்ணனும் இல்லாம உங்க அப்பா எப்படி சமாளிப்பார். எங்களைப் பத்தி நீ யோசிக்க மாட்டியா.”

நான் சொல்லிட்டே இருந்தேன், ஒழுங்கா இங்க இருக்கணும்னா வாயை மூடிட்டு இருன்னு… கேட்டியா நீ.” என்றார்.

எனக்கு அப்படி வாய் மூடிட்டு இருக்கணும்னு அவசியம் இல்லை. நான் என் புருஷனை வர சொல்லி இப்பவே இங்க இருந்து போறேன். நான் இனி இங்க இருக்க மாட்டேன்.” எனக் குதித்த வர்ஷா, கணவனுக்கு அழைத்து அவனை உடனே கிளம்பி வர சொன்னாள். 

நீ கூப்பிட்டதும் எல்லாம் இங்க இருக்க வேலையைப் போட்டுட்டு நாய் குட்டி மாதிரி வர முடியாது.” என்றான் விஜயன் கோபமாக.

சரி நீங்க வர்ற வரை நான் உங்க வீட்ல போய் இருக்கேன்.” என வர்ஷா இறங்கி வர…

என்னது எங்க வீட்டுக்கா… எவ்வளவு திமிரா அங்க இருந்து கிளம்பி வந்த…. இப்போ எந்த மூஞ்சியை வச்சிட்டு நீ அங்க போவ…. அது என்ன நினைச்ச நேரம் நீ வந்து போகச் சத்திரமா? அங்க எங்க அப்பா அம்மா இருக்காங்க, அவங்களுக்குன்னு மரியாதை இல்லையா?”

நீ திமிரா அங்க இருந்து வருவ…. அப்புறம் நினைச்ச நேரம் போவியா?”

அண்ணி எத்தனை தடவை உன்னைக் கூப்பிடாங்க. அப்போ போனியா… இல்ல நல்ல நாள் கிழமைன்னு போயிட்டு வந்தியா? இப்போ உனக்கு இருக்க ஒரு இடம் வேணும்னா மட்டும் போவியா?”

எங்களைப் பார்த்தா அவ்வளவு கேனையா இருக்கா…. நான் வர்ற வரை நீ உங்க வீட்லயே இரு.” என்று விட்டான் விஜயன்.

எதோ நாளையே கிளம்புவது போல வர்ஷா அவள் அம்மா வீட்டில் படம் காட்டி இருக்க… அவள் கிளம்பவில்லை என்றதும், ப்ரியா அவளை நக்கலாகப் பார்த்தாள். பிறகு பார்க்கத்தானே செய்வாள்.

பெண்களை என்ன செல்லமாக வளர்த்திருந்தாலும் திருமணதிற்குப் பிறகு பிறந்த வீட்டில் பெண்கள் விருந்தாளிகள் தான் என்பது வர்ஷாவுக்கு அன்றுதான் புரிந்தது.

நாள் கணக்கில் பிறந்த வீட்டில் சீராடலாம். ஆனால் இங்கயே தங்கி அதிகாரம் செய்ய நினைத்தால்… அந்த வீட்டில் மருமகள் இல்லையென்றால் வேறு… மருமகள் இருந்தால்… என் வீட்டில் வந்து நீ என்ன அதிகாரம் செய்வது என்றுதானே நினைப்பாள்.

இப்போது வர்ஷாவின் நிலையும் அதுதான். கணவன் அவர்கள் வீட்டிற்குச் செல்லக் கூடாது என்று சொல்லிவிட்டான். அவளது வீட்டில் அவளால் முன்பு போல உரிமையாக இருக்க முடியவில்லை.

சகுந்தலா வேறு மருமகள் கோபித்துக் கொண்டு சென்று விடுவாளோ என்று, மருமகளைத் தான் தாங்கிக் கொண்டு இருந்தார். அதைப் பார்க்கவே வர்ஷாவுக்குக் கடுப்பாக இருந்தது. அவள் வேறு வழியில்லாமல் பிறந்த வீட்டில் இருந்தாள்.

விஜயன் அவன் அம்மாவிடம் இதைச் சொல்லி இருக்க….

ஏன் டா வரணும்னா வந்திட்டு போறா?” என துர்கா சொல்ல…

எப்பவும் அவ நினைச்தே நடக்கனும்னு நினைக்கிறா… இப்பவும் அப்படியே விட்டா… அவ மாறவே மாட்டா…. இருக்கட்டும் கொஞ்ச நாள் அங்கயே இருக்கட்டும்.” என்று விட்டான். துர்கா அதை வீட்டினரிடம் சொல்ல….

அவ விஷயத்துல நாங்க தலையிடுறதா இல்லை என்பது போலப் பிரமிளாவும் மஞ்சுளாவும் எதுவும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஆருஷி தான் மனம் கேட்காமல் ஆதவனிடம் புலம்பினாள்.

விஜயன் செஞ்சது சரிதான். அவ இஷ்ட்டத்துக்கு எல்லோரும் ஆடணுமா என்ன? இப்படிப் பண்ணாத்தான் இனிமே இங்க வந்தாலும் ஒழுங்கா இருப்பா.” என்றான்.

என்னங்க நீங்களும் இப்படிப் பேசுறீங்க? உங்க தம்பிக்கிட்ட நீங்களாவது எடுத்து சொல்வீங்கன்னு பார்த்தேன்.”

அன்பா இருந்தா நாமும் அன்பா இருக்கலாம். திமிரை காட்டினா பதிலுக்கு நாங்களும் திமிரைத் தான் காட்டுவோம்.” என்றான் ஆதவன்.

இவளிடமே வீராப்பை காட்டியவன் தானே… இவனிடம் போய்ச் சொன்னோமே எனத் தன்னையே ஆருஷி நொந்து கொண்டாள்.

அண்ணனை போலத் தானே தம்பியும் இருப்பான். 

Advertisement