Advertisement

ஆருஷி கர்ப்பமாக இருந்தாள். அவளுக்கே அது தெரியவில்லை அதுதான் அங்கே ஆச்சர்யம். ஆனால் அவள் உண்பதை வைத்துத் துர்கா தான் கண்டுபிடித்தார்.

பசிக்கிறது என்று அதிகம் உண்டாள். ஊர்காய் பாட்டிலையே காலி பண்ண… அதைப் பார்த்த துர்கா மருமகளிடம், “நீ எதுவும் மாசமா இருக்கியா?” என்று கேட்டு விட..

இல்லையே…” என்று தான் முதலில் சொன்னாள்.

நீ எப்போ தலைக்குக் குளிச்ச?” துர்கா கேட்க….

பிறகே யோசித்துப் பார்த்துவிட்டு, “ரெண்டு மாசத்துக்கு மேலையே இருக்கும். ஆனா எனக்குச் சில நேரம் லேட்டாவும் வரும்.” என்றாள்.

துர்கா மருமகளை அவர்களுக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர் பார்த்துக் கர்ப்பம் தான் என்று உறுதி செய்து மருந்து மாத்திரைகளைக் கொடுத்து அனுப்பினார்.

ஆதவன் கப்பலில் பயணம் சென்றிருந்தான். அவனாக அழைத்தால் தான் உண்டு.

இரண்டு நாட்கள் சென்றே அழைத்தான். முதலில் அம்மாவுக்குத்தான் அழைத்தான். அவன் அவரை நலம் விசாரிக்க…

எல்லாம் நல்லா இருக்கோம். உன் பொண்டாட்டிக்கு கர்ப்பமா இருக்கிறது கூடத் தெரியலை. டாக்டர்கிட்ட போயிட்டு வந்தோம். விட்டா பிள்ளை பிறக்கும் வரை தெரியாமலே இருந்திருப்பா போல….” என்றவர், ஆருஷியிடம் கைபேசியைக் கொடுத்து விட்டு செல்ல… ஆருஷி வாங்கிப் பேசினாள்.

ஹே… வாழ்த்துக்கள் இன்னொரு குட்டி வரப் போகுதா? எனக்கு ரொம்பச் சந்தோஷம்.” என்றவன், “இன்னொன்னும் பையனா இருந்தா என்ன டி பண்ணுவ?” என்றதும்,

ஹையோ… எனக்குப் பையன் மட்டும் வேணாம். ரெண்டு பேர் போடுற சண்டையை யார் பிரிச்சு விட்டுட்டே இருக்கிறது. எனக்குத் தீபிகா போலப் பொண்ணு தான் வேணும்.” என்றாள்.

பார்க்கலாம் நமக்கு என்னவோ அது தானே கிடைக்கும். எனக்கு எதுனாலும் ஒகே.”

எனக்குத் தெரியவே இல்லை தெரியுமா… அத்தை தான் கண்டுபிடிச்சு சொன்னாங்க என்னால நம்பவே முடியலை…”

ஏன் டி லீவுக்கு வந்தவனை ஒருநாள் கூட விடாம வேலை வாங்கிட்டு, எதிர்பார்க்கலைன்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்கு.” என ஆதவன் சிரிப்புடன் கேட்க….

கணவனோடு பேசியபடி வெளி வாயிலுக்குச் சென்றிருந்தவள், “இதெல்லாமா சொல்லிக் காட்டுவாங்க.” என வெட்கப்பட….

உன்கிட்ட தான டி சொன்னேன். உன்கிட்ட சொல்லாம… அதுவும் நீ பண்ணத தான சொன்னேன்.” என்றான்.

சரி பத்திரமா இரு என்ன.”

உடம்புக்கு எதுவும் முடியலைனா அம்மாகிட்ட சொல்லு… இல்லைனா அக்காங்ககிட்டையாவது சொல்லு. சொல்லாம மட்டும் இருக்காத. நான் உன் பக்கத்தில இல்ல… எல்லாத்தையும் உன் முகத்தைப் பார்த்து கண்டுபிடிக்க….”

நீங்க எப்போ வருவீங்க?”

நான் வர ரெண்டு மாசம் ஆகும். அப்போ வந்திட்டு போனா.., அடுத்து உன் பிரசவத்துக்கு உன்னோட இருக்கிற மாதிரி பார்த்துக்கிறேன். ஓகே வா…”

ம்ம்…”

வெகுநேரம் மனைவியோடு பேசிவிட்டு தான் ஆதவன் வைத்தான்.

மருமகள் மாசமாக இருக்கிறாள் என்று துர்கா பேரனை ரொம்பவும் அவளிடம் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தார். வீட்டில் இருக்கும் காருக்கும் தெரிந்த ஓட்டுனரை வர சொல்லி… அவர் தான் ஆருஷியை கல்லூரியில் விட்டு அழைத்து வந்தார். ஆதவன் தான் ஓட்டுனர் போட்டு விடும்படி சொல்லி இருந்தான்.

வார இறுதியில் நாத்தனார்கள் இருவரும் பூ, பழங்கள், இனிப்புகள் என நிறைய வாங்கிக் கொண்டு தம்பி மனைவியைப் பார்க்க வந்திருந்தனர்.

அஞ்சாம் மாசம் உங்க வீட்ல இருந்து சோறு ஆக்கி கொண்டு வந்து, ஆருஷிக்கு வளையல் போட்டு போங்க.” என துர்கா மகள்களிடம் சொல்ல…

எங்களுக்குத் தெரியாது பாருங்க. அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.” என்றனர் இருவரும்.

ஆதவன் வரட்டும், அவன் வந்ததும் செய்றோம். அவனும் இருந்தா தான் நல்லா இருக்கும்.” என… ஆருஷியும் கணவன் வந்து விடட்டும் என்றாள்.

அப்போது வர்ஷா ஆருஷிக்குக் கைப்பேசியில் அழைத்தாள். எல்லோருக்கும் ஆச்சர்யம் தான். ஆருஷி எழுந்து வெளியே சென்று பேசினாள்.

அக்கா மாசமா இருக்கீங்களா… இவர் தான் சொன்னார். எப்படி இருக்கீங்க? வாந்தி தலை சுத்தல் எதுவும் இருக்கா?” என வர்ஷா அக்கறையாக விசாரிக்க…

ஆமா வர்ஷா… ஆனா இப்போதைக்கு வாந்தி இல்லை… ஆனா எப்போ வருமோ தெரியாது.” என ஆருஷி சிரிக்க…

சரி பார்த்து இருங்க.” என்றாள்.

நீ என்னைப் பார்க்க வரலையா?” என அருஷி கேட்க…

வரணும்னு தான் இருக்கு. ஆனா இவர் என்ன சொல்வாரோ?””

நீ ஏன் கேட்டுட்டு இருக்க… நீ என்னைப் பார்க்கிற மாதிரி வா… அப்புறம் உனக்கு இங்க இருக்க இஷ்ட்டம் இருந்தா இரு… அத்தையெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.” என,

சரி நான் இப்போவே கிளம்பி வரேன்.” என்றாள் வர்ஷா.

நாத்தனார்கள் இருப்பதை ஆருஷி சொல்லவில்லை. சங்கடப்பட்டுக் கொண்டு வர்ஷா வராமல் இருந்து விட்டாள்.

கார் ஓட்டுனருக்கு அழைத்துச் சொல்லிவிட்டு வர்ஷா தர்ஷனை கிளப்ப… அவள் அம்மா எங்கே கிளம்புகிறாள் என்பது போலப் பார்க்க… “இவரு அண்ணி மாசமா இருக்காங்க. என்னை வீட்டுக்கு கூப்பிட்டாங்க. நான் போய்ப் பார்த்திட்டு வரேன்.” எனக் கிளம்பி சென்றாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் வர்ஷா வந்துவிட்டாள். வருவாளா வரமாட்டாளா என உறுதியாகத் தெரியாததால் ஆருஷி இங்கே வீட்டினரிடம் ஒன்றும் சொல்லவில்லை.

வர்ஷா வீட்டிற்கு வந்து இறங்க…. ஆருஷி அவளை வாயிலுக்கே சென்று வரவேற்றவள், தர்ஷனை வாங்க முற்ப்பட….

நீங்க வெயிட் எல்லாம் தூக்க கூடாதுக்கா… வாங்க உள்ள வந்து தரேன்.” என்றாள் வர்ஷா.

ஆமாம் நான் மறந்திடுறேன்.” என ஆருஷி சிரிக்க… இருவரும் பேசியபடி உள்ளே வந்தனர்.

அக்காகாரங்க தங்கச்சியை வர வச்சுடாங்க போல….” என மஞ்சுளா பிரமிளாவிடம் சொல்லி சிரிக்க… பதிலுக்கு அவளும் ஆமாம் என்றாள்.

மகள்களைக் கவனித்த துர்கா, “பிரமிளா, மஞ்சு உங்களால ஒரு பிரச்சனை வந்ததுன்னு இருக்கக் கூடாது.”என, அதற்குள் ஆருஷியும் வர்ஷாவும் உள்ளே வந்திருந்தனர்.

வா வர்ஷா?” என்ற துர்கா… “டேய் குட்டி பயலே உனக்கு இப்போ தான் வழி தெரிஞ்சுதா…” என வர்ஷாவின் கையில் இருந்த பேரனை வாங்கிக் கொண்டார்.

வா வர்ஷா…” என நாத்தனார்கள் இருவருமே கேட்க…. “எப்படி இருக்கீங்க அண்ணி.” என வர்ஷாவும் அவர்களை நலம் விசாரித்தாள்.

கோபமாக இருவரும் முகத்தைத் திருப்புவார்களோ எனப் பயந்து போய்த் தான் இருந்தாள். ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. நன்றாகத்தான் பேசினார்கள்.

ஹாலில் பெண்கள் எல்லாம் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க… அப்போதுதான் மதிய உணவுக்காக ஈஸ்வர் வந்தவர், பெண்கள் எல்லோரும் சேர்ந்து இருப்பதைப் பார்த்து மகிழ்ந்து போனார். வர்ஷா அவரையும் நலம் விசாரித்தாள்.

மதிய உணவு உண்ணும் நேரம், “நான் வரேன்னு தெரியாதே… சாப்பாடு பத்துமா?” என வர்ஷா சந்தேகம் கேட்க….

ஆமாம் நீ ஒரு குண்டான் சோறு சாப்பிடுவியா?” என்ற மஞ்சு, “எங்க இருந்து உனக்கு இப்படி எல்லாம் சந்தேகம் வருது.” என ஆச்சர்யப்பட… எல்லோரும் சிரித்தனர்.

துர்கா பேரன்கள் இருவருக்கும் ஊட்ட… “நீதான் முதல்ல சாப்பிடனும். உனக்குப் பசிக்கும்.” என ஆருஷியை பிள்ளைகளோடு உட்கார வைத்து உணவு பரிமாற… வர்ஷா அவளே சமையல் அறைக்குச் சென்று எல்லாம் எடுத்து வந்து வைத்து அவளும் பரிமாறினாள்.

எல்லோரும் பேசிக் கொண்டே உண்டு முடித்தவர்கள்… அப்படியே ஹாலிலியே படுத்து பேசி கொண்டிருக்க… யஸ்வந்தும் தர்ஷனும் சேர்ந்து விளையாட… அவர்கள் மீதும் ஒரு கண் வைத்திருந்தனர்.

இவளுக்குத் தீபிகா மாதிரி பொண்ணு வேணுமாம். இந்தச் சோம்பேறியை வச்சுகிட்டு நான் என்ன பாடு படுறேன்னு எனக்குத்தான் தெரியும். ஊட்டி விட்டா ரெண்டு தோசை சாப்பிடுவா… அதே அவளே சாப்பிட்டா ஒன்னு தான். தின்ன கூடச் சோம்பேறி… மூஞ்சு மட்டும் வெள்ளையா இருந்து என்ன பண்ண?” என மஞ்சுளா சொல்ல… தீபிகா அம்மாவை முறைக்க…

ஐயோ ஏன் அண்ணி அப்படிச் சொல்றீங்க? தீபிகா ரொம்பச் சமத்து.” என அருஷி சொல்ல… தீபிகா அவள் அம்மாவுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு, அவள் அத்தையிடம் சென்று உட்கார்ந்து கொண்டாள்.

மாலை நாத்தனார்கள் கிளம்பி சென்ற பிறகு… வர்ஷாவும் கிளம்புவதாகச் சொல்ல…

இங்கயே இரேன் வர்ஷா.” என ஆருஷி சொல்ல… வர்ஷா யோசிக்க…

உனக்கு எவ்வளவு நாள் இருக்கணும்னு தோணுதோ அதுவரை இருந்திட்டு போ…” என துர்காவும் சொல்ல… வர்ஷா சரி என்று அங்கேயே இருந்து கொண்டாள்.

தன் அம்மாவுக்கு அழைத்தவள், “என்னோட சாமான்களைக் கார்ல அனுப்பி விடுங்க.” என்று சொல்ல…

அங்கயே இருக்கப் போறியா?” என்ற சகுந்தலா…

சரிதான் நீ அங்க இருந்தா தான். உன் மாமனார் மாமியாருக்கும் இன்னொரு மகன் இருக்கிறது நியாபகம் இருக்கும். இல்லைனா எல்லாத்தையும் மூத்தவருக்கே கொடுத்திடப் போறாங்க.” என்று சொல்ல..

உங்க வீட்டு விஷயத்துல என்னைத் தலையிடாதீங்க சொன்னீங்க இல்ல… இனி எங்க வீட்டு விஷயத்தைப் பத்தி நீங்க பேசாதீங்க. அது எங்க வீட்டு விஷயம்.”

அம்மா வீட்ல இருந்தா ப்ரீயா இருக்கலாம்னே நினைச்சிட்டு இருந்தேன். ப்ரீயா வேணா இருக்கலாம், ஆனா உரிமையா இருக்க முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டேன்.”

என்னை என் வீட்ல நிம்மதியா இருக்க விடுங்க.” என்றவள் வைத்து விட்டாள்.

சகுந்தலா மகளின் சாமான்களைக் காரில் அனுப்பி வைக்க… அப்போதுதான் வருனுக்கும் பிரியாவுக்கும் அவள் மாமியார் வீடு சென்றதே தெரியும்.

எங்ககிட்ட கூடச் சொல்லிட்டு போகலை… அவ போறேன்னு சொல்லி இருந்தா… நானே கூடக் கொண்டு போய் விட்டு வந்திருப்பேன்.” என வருண் சொல்ல…

இப்படிச் சொல்றவங்க சண்டை போடாம இருந்திருக்கணும். மாப்பிள்ளை நம்மளை நம்பி தானே விட்டுட்டுப் போனார். அவர் வேற என்ன நினைப்பாரோ…” என்றார் சகுந்தலா.

நீ அவளுக்குப் போன் போடு…” என்ற வர்ஷாவின் அப்பா, வர்ஷா எடுத்தவுடன், “நீ அங்க நாலு நாள் இருந்திட்டு நம்ம வீட்டுக்கே வந்திடு டா… உனக்கு அங்க இருக்க முடியாது.” என,

இல்லை என்னால இருக்க முடியும். நான் இங்கயே இருந்துக்கிறேன். என் சாமானை மட்டும் அனுப்பி விடுங்க.” என வர்ஷா வைத்து விட்டாள்.

சில பெற்றோர்கள் தான் பிள்ளைகளைக் கெடுப்பதே….

Advertisement