Advertisement

பாருங்க என்னை எப்படிச் சொல்றாருன்னு… நான் வந்தவரை லாபம்னு இருந்தேனா… நீங்க போடுறேன்னு சொன்ன நகையைப் போட்டீங்க, எனக்கு எப்படித் தெரியும் வீட்டை விற்பீங்கன்னு.”

இந்தப் பேச்செல்லாம் எனக்குத் தேவையா? கல்யாணம் ஆகிறவரை கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு தெரியாம இருந்தேன். கல்யாணம் ஆன பிறகு நம்மைப் பத்தி என்ன நினைப்பாங்களோன்னு பயத்திலே இருந்தேன். அதனால தான் அங்க இருக்க முடியாம இங்க வந்து இருந்தேன்.”

அதுவும் என் மேல பெரிய குத்தம் ஆச்சு. கல்யாணம் தான் சந்தோஷமா செய்யலை… பிள்ளை பிறக்கும் போதாவது சந்தோஷமா இருந்தேனா… என் பையனை பார்க்க யாருமே வரலை.”

கல்யாணம் ஆனதுல இருந்து நான் எங்க நிம்மதியா இருந்தேன். இப்போதான் கொஞ்ச நாளா இருந்தேன். அதுவும் நீங்க இந்த வேலை செஞ்சு வச்சிருக்கீங்க.”

எனக்கு இப்படி ஒரு கல்யாணம் தேவையா?” என ஆருஷி தன் அப்பாவை பார்த்து கேட்க….

கேட்கிறா இல்ல பதில் சொல்லுங்க.” என்றார் பார்கவி கணவனைப் பார்த்து,

நம்மால செய்ய முடியுறதை தான் சொல்லணும். இவங்க வீடா இருக்கப் போய் விட்டுடாங்க. இதே வேற இடத்தில செஞ்சிருந்தா என்ன ஆகி இருக்கும்?”

இலக்கியாவுக்குத் தயவு செஞ்சு நீங்க மாப்பிள்ளை பார்க்காதீங்க. நான் மாப்பிள்ளை கிட்ட சொல்லி பார்த்துக்கிறேன்.” என்ற மனைவியைப் பார்த்து புன்னகைத்த சரத், “அவர் என்னை விட நல்லா பார்ப்பார். அவரே பார்க்கட்டும்.” எனச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் பேரனை தூக்கிக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

அம்மா இவருக்கு நம்ம கஷ்ட்டம் புரியவே புரியாதா மா… என் நாத்தனார்கள், வர்ஷா எல்லாம் எப்படி இருக்காங்க தெரியுமா… அவங்களுக்குச் சமமா பேசி பழக முடியாம நான் கஷ்ட்டபட்டது எனக்குத்தான் தெரியும்.” எனக் கேட்டு ஆருஷி கண் கலங்க….

அவருக்குப் புரிஞ்சா அவர் ஏன் இப்படி இருக்கார்? ரெண்டு பொம்பளை பிள்ளைகளைப் பெத்து வச்சிருக்கோம்னு தான் நானும் பொருத்து போயிட்டு இருக்கேன். வேற யாரா இருந்தாலும், உங்க அப்பாவோட குப்பை கொட்டி இருக்க மாட்டாங்க.”

ஒண்ணுமே இருக்காது, உங்க அப்பா ஹாஹா ஹோஹோன்னு தான் பேசுவார். இவரு பண்றதை பார்த்து தான் என் வீட்டு ஆளுங்க விலகி நிற்க ஆரம்பிச்சாங்க.”

உன் கல்யாணத்துக்கு உன் மாமாங்க பணம் கொடுக்கலைன்னு உங்க அப்பாவுக்குக் கோபம். இவரு பாட்டுக்கு நூறு பவுனுன்னு சொல்லி வச்சா… அவங்க எங்க போவாங்க? எதோ அஞ்சு பத்துன்னா செய்யலாம். உன் கல்யாணத்துக்கு வந்து தலையைக் காட்டிட்டுப் போனதுதான். அதுக்குப் பிறகு வரவே இல்லை.”

இவரை நம்பவே முடியாதுன்னு தான் என் அம்மா அப்பவே அவங்க பேர்ல இருந்த இடத்தை எனக்குத்தான் கொடுக்கணும்னு உன் மாமாங்ககிட்ட சொல்லி இருக்காங்க. கடைசியில எங்க அம்மா நினைச்ச மாதிரி, நான் அந்த இடத்துல தான் வீடு கட்டிட்டு போற மாதிரி ஆகிடுச்சு பாரு.”

சின்ன இடம் தான். இருந்தாலும் எனக்காக எங்க அம்மா கொடுத்தது.” என பார்கவி தன் மனக்குமுறலை கொட்டியவர்,

ஆருஷி நான் உனக்குச் சொல்றேன். உங்க அப்பா மாதிரி ஆளு உனக்குப் புருஷனா வந்திருந்தா என்ன பண்ணி இருப்ப? அந்த விதத்துல மாப்பிள்ளை ரொம்ப நல்லவர். நீ அவர்கிட்ட வீணா சண்டை போடாத.” என எடுத்து சொல்ல… ஆருஷிக்கும் அது புரிந்ததால் அமைதியாக இருந்தாள்.

கணவன் வரும் அன்று, மகனை வீட்டில் விட்டு ஆருஷி மட்டும் இரவு ஒன்பது மணி போல விமான நிலையம் செல்லக் கிளம்ப…. “நானும் துணைக்கு வரேன்.” என்ற சரத்திடம்,

நான் போயிட்டு அவரோட வரப் போறேன், எனக்குத் துணை தேவை இல்லை.” என அவரை விட்டுவிட்டு ஆருஷி கிளம்பி டாக்ஸியில் விமான நிலையம் சென்று விட்டாள்.

என்னைக் கொஞ்சம் கூட இவ மதிக்கிறதே இல்லை.” என சரத் குறைபட… 

நீங்க மதிக்கிற மாதிரி நடந்துக்கணும்.” என்ற இலக்கியா,

எனக்குத் தயவு செஞ்சு நீங்க கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்காதீங்க. நான் படிச்சு முடிச்சு, ரெண்டு வருஷம் வேலைப் பார்த்து நானே என் கல்யாணத்துக்கு நகை சேர்த்திட்டு பிறகு பண்ணிக்கிறேன். அக்கா போல எனக்குப் பொறுமை எல்லாம் இல்லை. அவளோட நிறுத்திக்கோங்க.” என்றாள் கோபமாக.

நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஆதவன், மனைவியே தன்னை அழைத்துச் செல்ல விமான நிலையம் வருவாள் என எதிர்பார்க்கவே இல்லை.

ஹே நீ மட்டுமா வந்த? எனக்காக வந்தியா?” என்றான் ஆச்சர்யமாக.

பின்ன உங்களுக்காகத்தான் வருவாங்க. யாருக்காக வருவாங்களாம்.” எனக் கேட்டு ஆருஷி புன்னகைக்க…

கோபமா இருந்த… இப்போ போயிடுச்சா.” என்றவன், “இரு இங்கயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு போகலாம்.” என்றவன், ஆட்கள் குறைவாக இருந்த பகுதிக்கு மனைவியை அழைத்துச் சென்று, அங்கிருந்த இருக்கையில் அவளை உட்கார வைத்து விட்டு, அவளிடம் அவன் பெட்டியையும் ஒப்படைத்து விட்டு, இருவருக்கும் சென்று குடிக்கத் தேநீர் வாங்கி வந்தான்.

மனைவியின் அருகே உட்கார்ந்தவன், “இப்போ சொல்லு கோபம் போச்சா?” என்றதும்,

நீங்க முதல்ல சொல்லுங்க அத்தை, மாமாவுக்கு அப்புறம் மத்தவங்களுக்கும் இந்த விஷயம் தெரியுமா?”

அப்பா அம்மாவுக்கு மட்டுதான் தெரியும். எப்படியும் உனக்கு ஒரு சொத்து சென்னையில வாங்கணும். அது இதுவா இருந்திட்டு போகட்டும். உன் மாமனார் மாமியார் அந்த வீட்லயே இருந்துகட்டும், வீட்டுக்கும் பாதுகாப்பா இருக்கும்னு தான் சொன்னாங்க. அதோட இது வேற யாருக்கும் தெரியனும்னு அவசியம் இல்லைன்னு அவங்களே சொல்லிட்டாங்க.”

இன்னொன்னு இங்க பணம் நகையை விட… சொன்ன வாக்கை காப்பாத்தலைன்னு தான் எங்க வீட்ல கோபம். ஆனா உங்க அப்பாவுக்கும் ஏமாத்திற எண்ணம் இல்லைன்னு தெரிஞ்சதும், அவங்களுக்கு அதுவே போதும் புரியுதா?”

இனி உன்னை யாரும் குறைவா பார்ப்பாங்கன்னு எல்லாம் நீயா கற்பனை பண்ணாத.”

நான் முதல்ல உங்க அப்பா வீட்டை வேற யாருக்கும் வித்துடக் கூடாதுன்னு தான் நானே வாங்கிக்றேன்னு சொன்னேன். ஆனா நான் நினைச்ச மாதிரி ஊர்ல இருக்க உங்க சொத்து பெரிய விலைக்குப் போகாது போல… அதனால உங்க அப்பாகிட்ட இருந்து நாமே இந்த வீட்டை வாங்கிக்கலாம். நாம கொடுக்கிற பணத்துல இலக்கியாவுக்குக் கல்யாணம் பண்ணிடலாம்.”

உங்க அப்பா சொத்து வித்ததும், வர்ற பணத்துல அவங்களுக்கு வீட்டை கட்டிட்டு, மிச்ச பணத்தை அவங்க பேர்ல பேங்க்ல போட்டு வச்சிடலாம்.”

வீடு கட்டி முடிச்சு உங்க அப்பா அம்மா அங்க போனதும், பிறகு நாம இந்த வீட்டை இடிச்சிட்டு, வாடகைக்கு விடுற மாதிரி பெரிய வீடா கட்டிக்கலாம்.”

கணவன் சொன்னதை முழுதும் உள்வாங்கியவள், அவனின் தெளிவான திட்டமிடலில் நிம்மதியுற்று, “நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடலாம்.” என்றாள் சந்தோஷமாக.

பெற்றோர் வீடு இல்லாமல் இருக்கப் போவது இல்லை என்பதே அவளைப் பெரிதும் நிம்மதியுற செய்திருந்தது.

வெளியே வந்த இருவருக்கும் அப்போதும் வீட்டுக்கு செல்ல மனமில்லை. அந்த நேரம் திருந்திருந்த உணவகத்திற்குச் சென்று இருவரும் பேசியபடி உணவருந்தி விட்டு, வீட்டுக்கு வரும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி. ஆருஷி ஏற்கனவே போன் செய்து சொல்லி இருந்தாள்.

அதுதான் பேசுவதை எல்லாம் வெளியவே பேசி விட்டு வந்து விட்டார்களே… அதனால் வந்ததும் உடை மாற்றிப் படுத்து உறங்கி விட்டனர்.

மறுநாள் காலை மாப்பிள்ளையிடம் சரத் புலம்பிக் கொண்டு இருந்தார்.

இந்த வீட்ல மூன்னு பொம்பளைங்களுமே என்னை மதிக்கிறது இல்லை மாப்பிள்ளை.” என்றவர், தனக்கு எதாவது வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுக்கும்படி சொல்ல…

ஏன்பா? உங்களுக்குச் சிபாரிசு பண்ணிட்டு, அவர் மத்தவங்களுக்குப் பதில் சொல்லனும்னு தேவையா?” என ஆருஷியும்,

இங்க இருக்க வேலையை முதல்ல ஒழுங்கா பாருங்க.” என இலக்கியாவும் குத்தலாகச் சொல்ல…

ரெண்டு பேரும் நிறுத்துங்க அவர் என்கிட்டே தானே சொன்னார்.” என்றவன், மனைவியைப் பார்த்து, “இவ்வளவு பேசுவியா நீ… எங்க வீட்ல பேச மாட்டியே… கொஞ்சமாவே பேசு.” என்றான். 

நான் பேங்க் வர போயிட்டு வந்திடுறேன் மாமா.” என ஆதவன் வங்கிக்கு செல்லக் கிளம்ப….

ஆருஷி அவனின் அருகே வந்து நின்று முறைத்து பார்க்க…. “அவர் எதோ சொல்லிட்டு போறார் விடு. நான் இருக்கும் போது மரியாதை குறைவா பேசாத.” என,

எனக்கும் ஒன்னும் அவரைப் பேசணும்னு ஆசை இல்லை. அவர் பண்றது அப்படி. உங்களுக்கு தெரியுமா அவர் என்ன எல்லாம் பண்ணி இருக்காருன்னு?” 

சரி நான் இருக்கும் போது பேசாத.” என, 

“அவளும் அவங்க அப்பாவும் எப்பவும் இப்படித்தான் மாப்பிள்ளை. ஆருஷி யார்கிட்டையும் சத்தமா கூட பேச மாட்டா… ஆனா அவங்க அப்பா அவளை அப்படி பேசுற மாதிரி பண்ணி வைக்கிறார். அவளும் என்ன பண்ணுவா?” என்ற பார்கவி, “டீ குடிச்சிட்டு போங்க.” என மருமகனுக்கு டீயை கொடுத்தார். 

ஆதவனிடம் பணமாக இருந்தாலும், வரி சலுகைக்காகப் வீடு வாங்க பாதிப் பணம் லோன் போடுவது என முடிவு செய்திருந்ததால்…. அதற்காக வங்கிக்கு சென்று தேவையான ஆவணங்களைச் சமர்பித்துவிட்டு வந்தான்.

அன்று மாலை ஆதவன் குடும்பம் நெல்லை இரயிலில் ஊருக்கு கிளம்பி செல்ல… இவர்கள் வரவை அங்கே எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். 

Advertisement