Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 16

ஆருஷி காலையில் எழுந்தால்… மகனை கிளப்பி அவள் கிளம்பத்தான் நேரம் சரியாக இருக்கும். துர்கா காலை உணவு தயாராக வைத்திருப்பார். அதை மகனுக்கும் கொடுத்து அவளும் உண்டு பள்ளிக்கு சென்று மகனை விட்டுவிட்டு பிறகு அவளது கல்லூரிக்கு செல்வாள்.

மதியம் மகனை அழைத்துக் கொண்டு வந்து உண்ண வைத்து, அவளும் உண்டு மீண்டும் கிளம்பி கல்லூரி சென்றால்… வர நான்கு மணி ஆகி விடும். பிறகு மகனுடன் நேரம் செல்லும். இரவு உணவு ஆருஷி தான் செய்வாள்.

இரவு உணவு உண்டு மகனை உறங்க வைத்த பிறகு கல்லூரி சம்பந்தமான வேலைகள் எதாவது இருந்தால் பார்த்து விட்டு படுப்பாள்.

அன்று ஆருஷி கல்லூரி சென்ற பிறகு கவிதா காய் நறுக்கி கொடுக்க… துர்கா சமைத்துக் கொண்டு இருந்தார்.

என்ன மா மருமகள் வந்தும் நீங்களே வேலை பார்க்கிறீங்க.” என்றவளை பார்த்து புன்னகைத்த துர்கா… “நான் என் வீட்டு வேலைக்கு ஆள் வேணும்னு மருமகளைக் கொண்டு வரலை….”

இப்போ இருக்கிற பொண்ணுங்ககிட்ட நம்ம அதிகாரத்தைக் காட்ட முடியாது. நம்ம கூட இருக்காங்களே அதே போதும். நமக்கு முடியுற வரை நாம் செய்ய வேண்டியது தான். சும்மா இருந்தும் என்ன பண்ண?”

நாம பண்றது பார்த்திட்டு தானே இருக்காங்க. நமக்கு முடியலைன்னு தெரிஞ்சா அவங்களே பண்ணுவாங்க. அப்பவும் பண்ணாத சில பேரும் இருப்பாங்க.” 

எங்க ஆருஷி தான் நைட் சமைக்கிறா. லீவ் நாள்ல அவ தான் முழு நேரமும் சமைக்கிறா… இதோ இப்போ சமையல் முடிச்சிட்டா அப்புறம் எனக்கு ரெஸ்ட் தான்.”

இதுல அவளும் என்னோட சேர்ந்து வீட்ல உட்கார்ந்திட்டு எனன் பண்ணுவா? அவங்க வாழ்க்கை அவங்கவங்களுக்குப் பிடிச்ச மாதிரி வாழட்டும்.”

மாமனார் மாமியாருன்னு நமக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கிறாங்க இல்லையா… அதை நாமும் காப்பாத்திட்டு இருக்கணும். அவ்வளவு தான் என்ன சொல்ற?” துர்கா சிரிக்க…

உங்களை மாதிரி எல்லோரும் நினைக்கிறது இல்லை.” என்றாள் கவிதா.

பண்டிகையை முன்னிட்டு வரிசையாக விடுமுறை வர… ஆருஷி அவள் பிறந்த வீட்டுக்கு கிளம்பினாள். அவளை அழைத்துச் செல்ல சரத்தே வந்திருந்தார்.

ஈஸ்வர் சொல்லி இருக்க… காலை ரயில் நிலையத்தில் இருந்து நேராக இங்கே தான் வந்தார்.

வந்தவரை வரவேற்று அவர் குளித்து விட்டு வந்ததும் உண்ண குடிக்கக் கொடுத்து கவனித்தனர்.

ஆருஷியும் துர்காவும் சேர்ந்து தான் உணவு சமைத்தனர். அதை ஆருஷி எடுத்து வந்து தந்தைக்கும் மாமனாருக்கும் பரிமாறினாள்.

எனக்கு என் பொண்ணு இந்த வீட்ல உங்களோட எல்லாம் சேர்ந்து வாழணும்னு ரொம்ப ஆசை. என்ன இருந்தாலும் உங்களோட இருக்கும் போது தானே… அவங்களுக்குக் குடும்பப் பொறுப்பு பத்தி எல்லாம் தெரியும்.” என்ற சரத்,

நான் உங்களுக்கும் மாப்பிள்ளைக்கும் ரொம்பக் கடமை பட்டிருக்கேன். நீங்க எல்லாம் இல்லைனா… அந்தச் சொத்து இப்பவும் என் கைக்கு வந்திருக்காது.” என அவர் தன் நன்றியை தெரிவிக்க… ஆருஷிக்கு ஒன்றுமே புரியவில்லை.

மருமகளின் முகத்தைப் பார்த்த துர்கா… “ஐயையோ இந்த மனுஷன் எதாவது உளறி வைக்கப் போகிறார்.” என்று நினைத்து, இலக்கியாவை பற்றி விசாரிக்க… பேச்சு மாறி விட்டது.

பிறகு மதிய சமையலில் நேரம் செல்ல… ஊருக்கு செல்ல எடுத்து வைப்பது என்று ஆருஷிக்கு வேறு எதையும் பற்றி யோசிக்க நேரம் இல்லை. சரத் மகளையும் பேரனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார்.

காலை மகளையும் பேரனையும் வீட்டில் விட்ட சரத், அலுவலகம் கிளம்பி செல்ல… ஆருஷி அவள் அம்மாவோடும் தங்கையோடும் பேசிக் கொண்டு இருந்தாள். யஸ்வந்த் ஒருபக்கம் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தான்.

பார்கவி மகளுக்குப் பிடித்தது சமைத்து போட்டு, பேரனையும் அவரே பார்த்துகொள்ள… ஆருஷி அவள் புகுந்த வீட்டை பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

நான் பயந்த மாதிரி எல்லாம் இல்லைமா… அவங்க நல்ல மாதிரி தான். நம்ம வீட்டுக்கு எல்லாம் அத்தைங்க வந்தா, ஏன் வந்தாங்கன்னு தானே இருக்கும். ஆனா என் நாத்தனார்கள் வந்தா ஏன் போறாங்கன்னு இருக்கும்.”

ரெண்டு பேரும் ஜாலியா இருப்பாங்க. அவங்களே ஆளுக்கு ஒரு வேலை பார்த்து கொடுத்திடுவாங்க. அதனால அவங்க வந்தா நமக்கு வேலை பார்க்கவும் கஷ்ட்டமா இருக்காது.”

தீபாவளிக்கு எல்லாம் எங்க வீட்டுக்கு வருவாங்க. அதுக்கு எல்லோருக்கும் டிரஸ் எடுக்கணும். இவர் வந்த பிறகு போக நேரம் இருக்காது. நாம நாளைக்குப் போயிட்டு வந்திடலாம்.” என ஆருஷி சொல்லிக் கொண்டு இருந்தாள்.

மறுநாள் அதே போல டி நகர் கிளம்பி சென்றனர். நாத்தனார்களுக்கு நல்ல புடவை எடுக்க வேண்டும் என்று ஆர். எம். கே. வி சென்ற ஆருஷி, அங்கே சில புடவைகளைத் தேர்ந்தெடுத்து விட்டு, நாத்தனார்களுக்கு வீடியோ காலில் அழைத்து எந்தப் புடவை எடுக்க என்று கேட்க…

நீங்க எடுக்கிற புடவை, எது எடுத்துக் கொடுத்தாலும் எங்களுக்குப் பிடிக்கும். அதனால உனக்குப் பிடிச்சதே எடு. எங்களுக்குப் பிடிச்சது தான் நாங்க எப்பவும் எடுக்கிறோமே… உனக்குப் பிடிச்சது எடுத்திட்டு வா… எப்படி இருக்குன்னு பார்க்கலாம்.” என பிரமிளா சொல்ல…

ஓசியில கிடைக்குது, அதையும் குறை சொல்லிட்டா இருப்பாங்க. நீ வாங்கிறதை வாங்கிட்டு வா…” என மஞ்சுளாவும் சொல்லி விட… பக்கத்தில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த பார்கவிக்கே ஆச்சர்யம் தான்.

எது செய்தாலும் குறை சொல்லும் நாத்தனார்களைத் தான் அவர் இதுவரை பார்த்து இருக்கிறார்.

நாத்தனார்களுக்கு மட்டும் அல்லாது அவளுக்கும் வர்ஷாவுக்கும் சேர்த்து ஒரே போல நான்கு பட்டு சேலைகளை வெவ்வேறு நிறங்களில் ஆருஷி எடுத்து வைத்தாள்.

அதே போல அவள் மாமியாருக்கு அம்மாவுக்கு இலக்கியாவுக்கும் என எல்லோருக்குமே வாங்கினாள். மஞ்சுவின் மகள்களுக்கும் அங்கேயே பட்டுப் பாவாடை சட்டை வாங்கிக் கொண்டாள்.

ஆண்களுக்கு எல்லாம் வேஷ்ட்டி சட்டை வாங்கிக் கொண்டு, வேறு கடையில் சென்று பையன்களுக்கு வாங்கிக் கொண்டு வீடு வர மாலையாகி விட்டது. வந்ததும் எல்லாவற்றையும் அப்போதே எடுத்து வைத்தாள்.

இரவு உணவு உண்டு முடித்து விட்டு ஆருஷி ஹாலில் இருந்த திவானில் படுத்திருக்க… யஸ்வந்த் விளையாடிக் கொண்டிருக்க…. சரத் அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்து உண்டு கொண்டிருந்தார்.

வீட்டில் இருந்த எதோ சாமனை காட்டி யஸ்வந்த் கேட்க… “உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ… வீடே உன்னோடது தான்.” என்றார்.

நீங்க போட்ட நகையே போதும், உங்க வீடு எல்லாம் எங்களுக்கு வேணாம். அதை நீங்களே வச்சுக்கோங்க.” என்றாள் ஆருஷி கடுப்பாக.

நீ வேணாம்னு சொன்னாலும் வீடு உன்னோடது தானே…” என சரத் சொல்ல… கட்டிலில் படுத்திருந்தவள், எழுத்து உட்கார்ந்து, “கொஞ்சம் புரியுற மாதிரி சொல்றீங்களா?’ எனக் கேட்க….

மாப்பிள்ளை தான் நான் பார்த்து சொல்லிக்கிறேன்னு தானே சொன்னாரு. உங்க வாய் சும்மா இருக்காதா.” என்ற பார்கவி, மகள் இனி விட மாட்டாள் என நினைத்து அவரே சொல்ல ஆரம்பித்தார்.

நான் தான் உன் அப்பாவை வீட்டை வித்து, உனக்குப் போட வேண்டிய நகையைப் போட்டுட்டு, இலக்கியவுக்கும் கல்யாணம் பண்ண சொன்னேன். உங்க அப்பாவும் வீட்டை விலை பேசினார். நம்ம பக்கத்து வீட்டுகாரங்களே வாங்கிக்கிறேன்னு சொல்லி இருபது சதவீதம் அட்வான்ஸ் கொடுத்தாங்க. அதுல தான் உனக்கு நகை வாங்கிட்டு வந்தோம்.”

அப்புறம் மாப்பிள்ளை எங்க இருந்து பணம் வந்துச்சுன்னு இலக்கியாவுக்குப் போன் பண்ணி கேட்டிருக்கார். இது மாதிரி வீடு விற்கப் போறோம்னு சொன்னதும், அவரே நேர்ல வந்து பேசினார்.”

வீட்டை விற்காதீங்கன்னு தான் சொன்னாரு. ஆனா நாங்க தான் அட்வான்ஸ் பணத்தை வாங்கிச் செலவு பண்ணிட்டோமே… அதனால அப்புறம் அவரே வாங்கிக்றேன்னு சொல்லி அட்வான்ஸ் பணத்தையும் திருப்பிக் கொடுத்திட்டார்.”

இலக்கியா கல்யாணம் வரை இங்கயே இருங்க. அப்புறம் பார்க்கலாம்னு சொல்லி இருக்கார்.” என பார்கவி விளக்கமாகச் சொல்ல…

வீட்டை வித்துட்டு எங்கப்பா இருப்பீங்க? தெருவுல இருப்பீங்களா? என்னை நிம்மதியாவே இருக்க விடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க இல்ல….”

நான் எனக்குப் பெரிய இடத்தில கல்யாணம் பண்ணி வைங்கன்னு உங்களைக் கேட்டேனா? நீங்க எதாவது பண்ணிட்டு, அது என் தலையில் தான் விழுது.”

நான் இப்போதான் என் மாமியார் வீட்ல நிம்மதியா இருந்தேன். இப்போ வீட்டை அதுவும் இவர்கிட்டையே வித்து வச்சிருக்கீங்களே… நான் அவங்களை எப்படிப் பார்ப்பேன்.” என ஆருஷி கத்தி தள்ளினாள்.

இங்க பாரு எங்க வீடு நாங்க வித்தோம். அதை உன் புருஷன் வாங்கிட்டாரு. இதுல உன் மாமியார் வீட்ல உன்னைக் குறைவா நினைக்க என்ன இருக்கு?”

உங்க அப்பா சொத்தையும், உன் வீட்டுக்காரரும் உன் மாமனாரும் தான் சேர்ந்து போய்ப் பேசி வாங்கிக் கொடுத்தாங்க. அதை வித்துப் பணம் வந்தா… நான் எங்க அம்மா வீட்டுப் பக்கம் சின்ன வீடா கட்டிட்டு போயிடுவேன். இப்போ வீடு வித்து வர பணத்துல உனக்கும் இலக்கியவுக்கும் செய்ய வேண்டியதை செஞ்சு முடிச்சிட்டா… அப்புறம் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.”

பார்கவி எடுத்து சொன்ன போதும் ஆருஷியின் மண்டையில் ஏறினால் அல்லவா…

ஐயோ என் மாமனார் மாமியாருக்கு எல்லாம் தெரியுமா? அவங்க என்ன நினைச்சாங்கன்னு தெரியலையே…. அந்த வர்ஷா சும்மாவே ஆடுவா… இதெல்லாம் தெரிஞ்சா இன்னும் என்னை மதிக்கவே மாட்டா….” அது இது என்று ஆருஷி புலம்பிக் கொண்டே இருக்க…

நீ இப்படி லூசு மாதிரி புலம்புவேன்னு தான் மாமா உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாரு போல… அம்மா நீங்க ஏன் இவகிட்ட சொன்னீங்க.” என்றாள் இலக்கியா.

ஆதவன் அழைக்க ஆருஷி அவனிடமும் கேட்டுச் சண்டை பிடித்தவள், “எல்லாம் உங்க இஷ்டத்துக்குப் பண்ணுங்க. என்கிட்டே எதுவும் சொல்லாதீங்க.” என,

ஏன் டி பணம் எங்க இருந்து வந்துச்சுன்னு உங்க வீட்ல கேளுன்னு சொன்னா… வந்தவரை லாபம்னு இருந்த நீ எல்லாம் என்னைக் கேள்வி கேட்க கூடாது. நாம நேர்ல பேசிக்கலாம்.” என வைத்து விட்டான்.

Advertisement