Advertisement

திருமணமான புதிதில் ஆதவன் ஆருஷிக்கு வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்தான். இத்தனைக்கும் அவர்கள் வீட்டில் இலக்கியா நன்றாக வண்டி ஓட்டுவாள்.

ஹனிமூன் தான் ஒருவாரம் சென்றார்களே… அப்போது சும்மா இருக்கும் நேரம், ஊர் சுற்றி பார்க்க செல்ல இருந்த இரண்டு சக்கர வாகனத்தை ஆதவன் மனைவிக்கு ஓட்ட சொல்லிக் கொடுத்தான்.

மனைவியை முன்னால் உட்கார வைத்து, அவன் பின்னால் உட்கார்ந்து கொண்டு பிடித்துகொள்ள… இப்படி வண்டி ஓட்டுவது ஆருஷிக்குமே குதுக்கலாமாகத்தான் இருந்தது.

இரண்டு மூண்டு நாட்கள் இப்படியே செல்ல… அவளைத் தனியாக ஓட்ட சொல்ல… வண்டி நேராகவே செல்லவில்லை. வண்டி கோணலாகச் செல்வதைப் பார்த்து, ஆதவன் வந்து மனைவியை இடையில் கைகொடுத்துத் தூக்கிக்கொள்ள… வண்டி மட்டும் கீழே விழுந்தது.

அடுத்த முறை “நேரா பார்த்து ஓட்டு.” என ஆதவன் விலகி நிற்க…

சரி சரி என நன்றாக மண்டையை ஆட்டிவிட்டு ஆருஷி மீண்டும் சாலை ஓரத்துக்கே செல்ல… ஆதவன் மேற்கொண்டு இரண்டு நாட்கள் முயன்று பார்த்து விட்டு, இவ வண்டி எல்லாம் ஓட்டிக்க மாட்டா என முடிவுக்கு வநதிருந்தான். இப்போது அதை நினைத்துச் சிரித்துக் கொண்டிருக்க… ஆருஷி அவனை முறைக்க..

சரி சரி விடு… அப்புறம் எப்படி இருக்க? இப்போ நீதான் எல்லோரையும் விடப் பிசியா இருக்கப் போலிருக்கு.”

அதை விடுங்க அத்தை எதோ சொன்னாங்களே…. நீங்க இப்படித்தான் ஏமாத்துவீங்கன்னு… என்கிட்டே ஒரு வருஷத்துல வந்திடுவேன்னு தான சொன்னீங்க.”

நான் இங்க வரேன்னு போன் பண்ண போது… அம்மா இதைச் சாக்கா வச்சு… நீ உன் காண்ட்ராக்ட் முடிஞ்சு ரெண்டு வருஷம் கழிச்சு வான்னு என்னைத் தூண்டி விடத்தான் செஞ்சாங்க. அப்போவாவது நான் இந்த வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு முயற்சி பண்ணுவேன்னு தான் சொன்னாங்க.”

நானும் விட்டுடலாம்னு தான் நினைச்சேன். அப்போ என் பிரண்ட், இப்போ நீ வேலையை விட்டா திரும்ப உனக்குக் கிடைக்காது அப்படி இப்படின்னு சொன்னானான். எனக்கும் மனசு மாறிடுச்சு… நான் கூடுதலா லீவ் தான் கேட்டேன்.”

நானே போறேன்னு சொன்னாலும் உடனே கம்பெனியில விட்டுட மாட்டாங்க. கொஞ்சம் பொறுமையா இரு… இவ்வளவு சம்பளம் இல்லைனாலும்… இதுல பாதியாவது வரணும் தானே… அதுக்கு முதல்ல வழி பண்ணனும். நான் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.”

எனக்குப் பணம் வேணாம். இங்க எவ்வளவு சம்பளம் வருதோ வரட்டும். இங்க ஊர்ல அதிகம் செலவு கூட இல்லை.”

வீட்டுக்கு தேவையான காய்கறி எல்லாம் பின்னாடி உங்க தோட்டத்தில இருந்தே வந்திடுது. சொந்த வீடு இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும்? நீங்க வரேன்னு சொன்ன ஒரு வருஷத்துல வரலைனா பார்த்துக்கோங்க.” என ஆருஷி முகத்தைச் சுருக்க….

சரி டி… நான் ஒரு வருஷத்துக்குள்ள வர முயற்சி பண்றேன்.” என்றான்.

எனக்குத் தர்ஷனை பார்க்கணும் போல இருக்கு. நான் யஸ்வந்தோட போய்ப் பார்த்திட்டு வரட்டுமா?”

சரி போயிட்டு வா.”

ஆருஷி துர்காவிடம் கேட்க… அவருக்கு வர்ஷாவும் அவள் வீட்டினரும் எப்படி நடந்து கொள்வார்களோ என்று கவலைதான். ஆனால் இப்போது தான் கூட்டை விட்டு வெளியே வர துவங்கி இருக்கும் மருமகளை அடக்கி வைக்கவும் விருப்பம் இல்லை.

அவரே வர்ஷாவின் அம்மாவிற்கு அழைத்தவர், தர்ஷனைப் பார்க்க என் மூத்த மருமகளும் பேரனும் வர்றாங்க என்றார். அவரே அழைத்துச் சொன்னால் தான் ஆருஷியிடம் வம்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்றுதான் அவரே அழைத்துச் சொன்னார். அப்போதும் அவர் வர்ஷாவுக்கு அழைக்கவில்லை.

ஆருஷி செல்கிறாள் என்றதும் பிரமிளாவின் பிள்ளைகள், மஞ்சுளாவின் பிள்ளைகள் எல்லாம் அவர்களும் உடன் கிளம்ப…

அவ வீட்டுக்கு எதுக்கு?” என பிரமிளாவும் மஞ்சுளாவும் அனுப்ப மறுத்து விட… ஆருஷியும் யஸ்வந்தும் மட்டுமே வாடகை காரில் சென்றனர்.

உணவு நேரம் செல்ல வேண்டாம் என ஆருஷி மூன்று மணி போலச் செல்ல… ஏற்கனவே அண்ணி வருகிறார் என்று விஜயனும் சொல்லி இருக்க… வர்ஷாவுக்கு வரவேற்பதை தவிர வேற வழி இல்லை.

வர்ஷாவும் அவள் அம்மாவும் தான் இருந்தனர். தர்ஷன் உறங்கி இருக்க… யஸ்வந்துமே காரில் உறங்கி விட்டான். உறங்கியவனைத்தான் ஆருஷி தூக்கிக் கொண்டு வந்திருந்தாள்.

கீழே தர்ஷன் படுத்திருந்த அறையில் யஸ்வந்தையும் படுக்க வைத்து விட்டு, ஆருஷி அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தாள்.

வர்ஷாவின் அம்மாவை நலம் விசாரித்து விட்டு, “எப்படி இருக்க வர்ஷா… நீ வந்து ரெண்டு மாசம் ஆகுது. அங்க வரவே இல்லையே அதுதான் பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்.” என்றாள்.

வர்ஷா ஆருஷி கேட்டதுக்குப் பதில் சொல்லவில்லை. “நீங்க சாப்பிடுங்களேன்.” என,

சாப்பிட்டு தான் கிளம்பினேன்.” என்றாள் ஆருஷி.

இவர்கள் பேசிக் கொண்டிருக்க ப்ரியா வந்து ஆருஷியை வாங்க என்று கேட்க… ஆருஷி அவளையும் அவள் மகனையும் நலம் விசாரித்தவள், வாங்கி வந்த பழங்கள், இனிப்புகளை எல்லாம் ப்ரியாவிடம் கொடுத்தாள்.

மண்டை கணத்தோடு திரியும் வர்ஷா போலில்லாமல்… புன்னகை முகமாக இருந்த ஆருஷியை ப்ரியாவுக்குப் பிடித்து விட… அவளும் அவர்களுடன் பேச உட்கார்ந்து விட்டாள்.

சிறிது நேரத்தில் தர்ஷன் எழுந்து கொள்ள… ஆருஷி சென்று அவனை ஆசையாகத் தூக்கி கொஞ்சியவள், “செல்லத்துக்குப் பெரியம்மாவை அடையாளம் தெரியுதா டா… எப்படி இருக்கீங்க? என,

அவன் அதற்குள் யஸ்வந்தை பார்த்து விட்டான். அவனைப் பார்த்ததும் அண்ணா எனச் சத்தம் கொடுக்க…. ஆருஷி அவனை யஸ்வந்தின் அருகே விட… தர்ஷன் அவனை எழுப்பி விட… தம்பியை பார்த்ததும் யஸ்வந்தும் குஷியாக… இருவரும் விளையாட துவங்கி விட்டார்கள்.

அவர்களை விளையாட விட்டு ஆருஷி பாத்துக் கொண்டிருந்தாள்.

மகன் அழுததால் அவனை எடுத்துக் கொண்டு வந்த வருண், மனைவியிடம் கொடுத்து விட்டு ஆருஷியை பார்த்து வாங்க என்றவன், அவளை நலம் விசாரித்து விட்டு செல்ல… ஆருஷி ப்ரியாவிடமிருந்து குழந்தையை வாங்கி வைத்த கொண்டாள். ப்ரியா உண்ண குடிக்கக் கொண்டு வந்து கொடுத்து ஆருஷியை உபசரித்தாள்.

ஆருஷியிடம் ப்ரியா சூடான டீயை நீட்ட…. மடியில் குழந்தை இருந்ததால்… “தெரியாம சிந்திட்டா கூடக் குழந்தைக்குப் புண்ணாகிடும். நீங்க மேசையில வச்சிடுங்க.” என்றவள், குழந்தையைக் கொஞ்சிவிட்டு ப்ரியாவிடம் கொடுத்தவள், பிறகே டியை எடுத்து குடித்தாள்.

வீட்டிலேயே இருக்கும் தன்னைக் கவனிக்க மாட்டாள். ஆனால் இன்று வந்தவளை உபசரிக்கிறாளே… என வர்ஷாவுக்கு அண்ணி மேல் பொங்கிக் கொண்டு தான் வந்தது.

ஆறு மணி போல ஆருஷி கிளம்பி விட்டாள். அவள் போய்ச் சேர ஒரு மணி நேரம் போல ஆகும். தர்ஷன் தான் அவர்கள் கிளம்பும் போது அழுதான்.

நீயும் எங்களோட வாயேன் வர்ஷா… நாளைக்கு வந்திடலாம்.” என ஆருஷி அழைத்துத் தான் பார்த்தாள்.

நான் எல்லாம் அங்க வர மாட்டேன். மஞ்சு அண்ணி போன தடவை என்ன எல்லாம் பண்ணாங்க. எனக்கு அங்க வந்து அவங்களை எல்லாம் பார்க்கனும்னு அவசியமே இல்லை.” என்றாள்.

விஜயனுமே மனைவிக்கு அழைத்தவன், “ஒழுங்கா அண்ணியோட போய் ரெண்டு நாள் இருந்திட்டு வா… இதோட பிரச்சனை முடிஞ்சிடும்.” என்று சொல்லித்தான் பார்த்தான். வர்ஷா கேட்க வேண்டும் அல்லவா…

ஆருஷி புன்னகையுடன் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொள்ள…. “அடிக்கடி வாங்க.” என்றாள் ப்ரியா. “நான் இன்னைக்கு வந்துட்டேன். நீங்க எங்க வீட்டுக்கு வாங்க.” என்று சொல்லிவிட்டு ஆருஷி சென்றாள்.

திரும்பி வந்த மருமகளின் புன்னகை நிறைந்த முகத்தைப் பார்த்ததும் தான் துர்காவுக்கு நிம்மதியாக இருந்தது. அதன் பிறகு நாத்தனர்களும் அவர்களின் பிள்ளைகளும் வீட்டில் இருந்ததால்…. நேரம் இனிமையாகச் சென்றது.

ஆருஷி உன் தைரியத்தை நாங்க பாராட்டுறோம். வர்ஷா வீட்டுக்கே போயிட்டு வந்திருக்கியே…” என நாத்தனார்கள் இருவரும் கிண்டல் செய்ய… இரவு மனைவிக்கு அழைத்த ஆதவனும் அதையே கேட்டான்.

எப்படி டி இப்படி? என்னால நம்பவே முடியலை….” என,

இல்லை நான் நிறையத் தடவை நினைச்சிருக்கேன். எங்க வீட்லயும் உங்க வீட்லயும் சுத்தமா போக்கு வரத்து இல்லாம இருந்ததுனால தான், நமக்குள்ள விட்டுப் போச்சு…. வர்ஷாவையும் அப்படி விட வேண்டாம்னு நினைச்சேன்.” என்றாள்.

ஆதவன் ஒரு நிமிடம் வாயடைத்து போனவன், “அதுக்குக் காரணம் நான்தான் ஆருஷி. எனக்கு நீ ஏன் அப்படிப் பண்ணேன்னு புரியலை… எங்க யாருக்குமே புரியலை…. ஆனா நான் இறங்கி வந்திருந்தா… எங்க வீட்ல எல்லோருமே இறங்கி வந்திருப்பாங்க.”

உங்க வீட்ல அவ்வளவு பண்ணியும், நாம விட்டு தானே கொடுத்தோம். அப்பவும் இவ இப்படிப் பண்ணிட்டு போயிட்டாளேன்னு எனக்குத் தான் கோபம். நீ குத்தம் சொல்றதுன்னா என்னைத் தான் சொல்லணும்.” என்றதும்,

இல்லையில்ல… நான் யாரையும் குத்தம் சொல்லலை…. எங்க அப்பா பண்ண தப்புல தான் ஆரம்பிச்சது. உங்க வீட்ல எல்லோரும் நல்லாத்தான் இருந்தாங்க.”

இதே உங்க வீடா இல்லாம வேற வீடா இருந்தா… விவாகரத்துல போய்த் தான் நின்னிருக்கும், எனக்குப் புரியுது.” என்றாள் ஆருஷி.

சரி விடு… இன்னைக்கு நம்ம பக்கம் இருந்து உன் மூலமா ஒரு முயற்சி எடுத்தாச்சு… வர்ஷா என்ன பண்றான்னு பார்ப்போம்.” என்றவன்,

நான் அடுத்த மாசம் முடிஞ்சதும், மூணு வார லீவுக்கு வரேன். நீ ஒரு வாரம் முன்னாடியே சென்னை வந்திடு. நான் வந்ததும் அன்னைக்கு உங்க வீட்ல இருந்திட்டு, அடுத்த நாள் ஊருக்கு கிளம்பிடலாம்.” என்றான்.

கணவன் வரும் நாளுக்காக ஆருஷி அப்போதே ஆசையாகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.

Advertisement