Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 15

வர்ஷா கணவனுடன் கைபேசியில் பேசி விட்டு வர… அவள் அம்மா என்னவாம் என்று கேட்க…

அவங்க அண்ணனும் கிளம்பிட்டாரு போல…. அவங்க அண்ணி இங்க தான் இருக்காங்களாம். அதுதான் சொல்லிட்டு இருந்தாரு.” என்றவள்,

பார்ப்போம் அவங்க அண்ணி எவ்வளவு நாள் இங்க தாக்கு பிடிக்கிறாங்கன்னு. இதுல அவங்க அண்ணி நான் கிளம்பும் போது, என்னை வேற மாசம் ஒரு தடவையாவது வந்து தர்ஷனை காட்டிட்டு போன்னு சொன்னாங்க. எனக்கு வேற வேலை இல்லையா?” என்றாள் திமிராக.

வர்ஷா மாமியார் வீட்டில் இருந்து வந்ததுமே அங்கே நடந்ததைக் கதை கதையாகச் சொல்லி இருந்த போதே…. இனி இவள் மாமியார் வீட்டுக்கு செல்ல மாட்டாள் என ப்ரியா உஷாராகி விட்டாள்.

ப்ரியா கணவனைக் குறிப்பாகப் பார்க்க…. “ஏன் நீ போனா என்ன? பக்கத்தில தானே இருக்கு. இங்கயும் அங்கேயுமா இருக்க வேண்டியது தானே.” என்றான் வருண். அந்த நேரமாவது மனைவி ப்ரீயாக இருப்பாள் என்று நினைத்து தான் சொன்னான்.

நான் ஏன் போகணும்? இனி அவர் வந்தாலும் நான் அவரோட அவங்க வீட்டுக்கு போக மாட்டேன்.” என வர்ஷா சொல்ல… ப்ரியா கணவனை முறைத்து விட்டு சென்றாள்.

ஆதவன் சென்ற முதல் இரண்டு நாட்கள் ஆருஷி மிகவுமே சிரமபட்டாள். அவள் சரியாக உண்ணவும் இல்லை. அதைக் கவனித்து துர்கா அவளைத் தனிமையில் இருக்காமல் பார்த்துக் கொண்டார்.

அப்பாவும் இல்லாமல் தர்ஷனும் இல்லாமல் யஸ்வந்திற்குத் தான் மிகவும் போர் அடித்தது. காலையில் அக்கம் பக்கம் இருக்கும் பிள்ளைகளும் பள்ளிக்கு சென்று விடுவார்கள் அல்லவா… அதனால் அவன் ஆருஷியை போட்டு படுத்தி எடுத்தான்.

எவ்வளவு நேரம் தனியாக விளையாடுவது, அவன் அந்த எரிச்சலில் ஆருஷியின் முடியை பிடித்து இழுப்பது, கடிப்பது என எல்லாம் செய்ய… “விடு டா… விடு டா…” என்பாளே தவிர… அவன் கையில் லேசாகத் தட்ட கூட மாட்டாள்.

இங்க நம்ம வீட்டுக்கு பக்கத்து தெருவுல ப்ளே ஸ்கூல் இருக்கு. அங்க வேணா சேர்த்து விடுவோமா… அங்க இருக்கிற பசங்களோட விளையாடிட்டு வருவான். மதியம் வந்து சாப்பிட்டு படுத்தா… சாயங்காலம் வெளிய பசங்களோட விளையாடுவான். அப்படியே பொழுது போயிடும்.” எனத் துர்கா சொல்ல… ஆருஷியும் சரி என்று அந்தப் பள்ளியில் சென்று மகனை சேர்த்து விட்டு வந்தாள்.

காலை ஒன்பதிலிருந்து பன்னிரண்டு மணி வரை தான். ஆருஷியே நடந்து சென்று விட்டுவிட்டு திரும்பி வருவாள். வந்து துர்காவுடன் சமையலை முடித்து விட்டு மகனை அழைக்கச் செல்ல நேரம் சரியாக இருக்கும். வந்ததும் உணவு கொடுத்து மகனை தூங்க வைத்து விடுவாள்.

யஸ்வந்தும் தொல்லை செய்யாமல் இருந்தான். வார இறுதியில் ஒரு வாரம் பிரமிளா வந்தால்… அடுத்த வாரம் மஞ்சுளா வந்தாள். இங்கே வந்திருக்கும் போது தீபிகாவை முழுக்க ஆருஷி தான் பார்த்துக் கொள்வாள்.

இவளை ஏன் கட்டி மேய்க்கிற…. ரொம்ப ஆசையா இருந்தா நீ ஒரு பொண்ணு பெத்துக்கோ…” என்றாள் மஞ்சுளா.

சனிக்கிழமையும் பள்ளி என்பதால்… ஞாயிற்றுக் கிழமை காலை உணவுக்குப் பிறகு வந்தால்… இங்கே இரவு உணவு வரை இருந்து விட்டு கணவனுடன் செல்வார்கள். முன்பு மாதம் ஒருமுறை தான் வருவார்கள். இப்போது ஆருஷி மற்றும் யஸ்வந்துக்காகவே அடிக்கடி வந்தனர்.

முன்னர்த் துர்காவுக்குக் கஷ்ட்டமாக இருக்கும் என அவர்கள் வரும் போது மட்டுமே பிள்ளைகள் வருவார்கள். இப்போது ஆருஷி இருப்பதால்… நாத்தனார் பிள்ளைகள் விடுமுறைக்கும் வந்து தங்க ஆரம்பித்தனர்.

ஆதவனால் அவன் பணியின் காரணமாகத் தினமும் அழைத்துப் பேச முடியாது. ஆனால் முடிந்த போது அழைத்து விடுவான்.

யஷ்வந்தின் பள்ளியில் ஆருஷியின் பொறுமையான அணுகு முறையைப் பார்த்து அவளை அவர்கள் பள்ளியில் வேலைக்கு அழைக்க…. பள்ளியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டால்… பிறகு ஆதவன் வரும் போது அவனுடன் இருக்க முடியாதே என அவளுக்கு அது வேறு யோசனையாக இருக்க…. முதலில் மாமியார் என்ன சொல்வாரோ என அதையே நினைத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் யோசனையான முகத்தைப் பார்த்து துர்கா என்னவென்று கேட்க…. யஸ்வந்தின் பள்ளியில் வேலைக்கு அழைத்ததாகச் சொல்ல….

அது ரொம்பச் சின்ன ஸ்கூல்… நீ வீட்ல யஸ்வந்தையும் பார்த்திட்டு ஸ்கூலுக்குப் போய் அங்கயும் சின்னப் பசங்களைப் பார்த்துகனும்னா கஷ்ட்டமா இருக்கும். நீ ஏற்கனவே பி. எஸ். சி படிச்சிருக்க… மேல வேணா பி. எட் படியேன். பெரிய வகுப்புக்கும் டீச்சரா போகலாம். சம்பளமும் நல்லா வரும்.”

இங்க இருக்கிற நேரத்தில படிச்சு வச்சுக்கோ… வேலைக்குப் போறதை பத்தி அப்புறம் பார்க்கலாம்.”

ஆருஷிக்கும் மாமியார் சொல்வது சரி என்று தோன்றியது. இப்போது வேலைக்குச் செல்வதை விட… இந்த நேரத்தை மேற்கொண்டு படிக்க உபயோகித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

நாத்தனார்கள் இருவருமே நன்றாகப் படித்தவர்கள் தான். அவர்களிடம் கேட்டு, வீட்டிற்கு அருகிலேயே பி. எட் வகுப்பில் சேர்ந்து விட்டாள். வார நாளில் யஸ்வந்தை பள்ளியில் விட்டுவிட்டு சென்று வர ஆரம்பித்தாள். மதியம் யஸ்வந்தை அழைத்து வந்து வீட்டில் விட்டு, அவனுக்கு உணவு கொடுத்து அவளும் உண்டு விட்டுத் திரும்பச் சென்றால்… மாலை அவள் வரும்வரை யஸ்வந்தை துர்கா பார்த்துக் கொள்வார்.

யஸ்வந்துடன் பேசுவதற்காக அன்று மாலையே ஆதவன் வீடியோ காலில் வந்தான்.

யஸ்வந்த அவன் பள்ளிக் கதைகளை மழழையாகச் சொல்ல… கேட்ட எல்லோரின் முகத்திலும் புன்னகை தான்.

எல்லாம் பேசி விட்டு, “அப்பா எப்போ வருவ?”  என யஸ்வந்த் கேட்க… அங்கே ஒரு கனத்த மௌனம்.

உங்க அப்பா தானே… இப்போ வரேன் அப்போ வரேன்னு ஏமாத்துவான்.” என துர்கா சொல்ல…

அம்மா இந்த வருஷம் எப்படியும் வேற வேலை பார்த்துக்கிறேன்மா…”

நீ நல்லா சம்பளம் வாங்கிப் பழகிட்ட டா… உனக்கு அந்தச் சம்பளத்தை விட மனசு இல்லை.” என்றார் துர்கா சரியாக.

ஒரு வருஷம் இல்லைனாலும் நான் ரெண்டு வருஷத்துல வந்திடுவேன் மா…”

பார்த்தியா நான் சொன்னேன் இல்ல… இவன் இப்படித்தான் ஏமாத்துவான். நீ இவன் வருவான்னு நம்பி சும்மா இருந்தா… இருந்திட்டே இருக்க வேண்டியது தான்.” என்றார் துர்கா மருமகளைப் பார்த்து.

ஆதவன் பேச்சை மாற்ற ஈஸ்வரை நலம் விசாரிக்க..

நான் நல்லா இருக்கேன். மருமக தான் ஸ்சூலுக்கும், காலேஜ்க்கும், வீட்டுக்குமா அலையுது. வண்டி வாங்கிக்கோன்னு சொன்னா கேட்க மாட்டேங்குது. நீ சொல்லு ஆதவா.” என்றார். ஆதவன் அங்கே பதறிப் போனான்.

அப்பா… அவகிட்ட வண்டியை எதுவும் கொடுத்துடாதீங்க. நேராவே போக மாட்டா… வண்டியை குறுக்கால விட்டு, அவளும் விழுந்து வண்டியையும் ஒப்பேத்திடுவா… உங்களுக்கு அவ கை காலோட இருக்கிறது பிடிக்கலையா?” என,

ஓ அப்படியா? நான் வண்டி இருந்தா வசதியா இருக்குமேன்னு நினைச்சேன்.” என்ற ஈஸ்வர் மருமகளிடம் கைபேசியைக் கொடுக்க… ஆருஷி மாடி அறைக்குச் சென்று தனியாகக் கணவனிடம் பேசினாள்.

ஆருஷி கட்டிலில் வசதியாக உட்கார்ந்து கொண்டு கணவனின் முகம் பார்க்க… ஆதவன் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டு இருந்தான்.

இப்போ எதுக்குச் சிரிக்கிறீங்க?” ஆருஷி பொய் கோபம் கொள்ள…

ம்ம்… உன் மாமனார் உனக்கு வண்டி வாங்கித் தர சொல்றாரே… அதை நினைச்சேன், சிரிச்சேன்.”

அவர் என்கிட்டயும் தான் கேட்கத்தான் செஞ்சார்.  நான் வேண்டாம்னு சொல்லி இருந்தேன். நீங்களும் அப்படிச் சொல்ல வேண்டியது தான… இவ்வளவு விளக்கமா சொல்லணுமா? என்னைப் பத்தி மாமா என்ன நினைப்பாங்க.”

ஓ… உங்க இமேஜ் டேமேஜ் ஆகிடுச்சுன்னு வருத்தமா?”

நான் மட்டும் சொல்லலைன்னு வை… நீ பணத்துக்காகச் சொல்றேன்னு நினைச்சு. அவர் வாங்கிக் கொடுத்திருப்பார். அப்புறம் அது இன்னும் காமெடியா போயிருக்கும்.”

ஐயோ… உனக்கு வண்டி ஓட்ட சொல்லித் தரேன்னு நான் பட்டேனே பாடு. அதை என்னால மறக்கவே முடியாது.”

Advertisement