Advertisement

நான் நினைச்சேன் ஆருஷி, இவ எல்லாம் ஒரு ஆளுன்னு நீ இவளை நினைச்சு வீட்டை விட்டு போனியான்னு…. ஆனா வர்ஷா சரியான விஷம் தான். அவ பண்றதை எல்லாம் பார்த்து எனக்கே எங்க ரெண்டு அப்பு அப்பிடுவோம்னு பயமா தான் இருக்கு.”

அப்படி எல்லாம் எதுவும் பண்ணிடாதீங்க.” என்றவள்,

அவ மட்டும் காரணம் இல்ல… நான்தான் சொன்னேனே… எனக்கு ஏனோ இருக்க முடியலை…”

பரவாயில்லை விடு… முன்னாடி எனக்குப் புரியலை…… இப்போ எனக்குப் புரியுது.” என ஆதவன் மனைவியின் கைப்பிடித்து அழுத்த… ஆருஷி கணவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.

ஒரு சண்டையைப் போட்டு இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் என நினைத்த வர்ஷாவின் திட்டம் பாழாக… அவள் என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து இருக்க… விஜயன் அவளைக் கண்டுகொள்ளாமல் படுத்துக் கொண்டான்.

காலை ஆருஷி வரும் போது துர்கா சமையல் அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அவளையுமே இதைச் செய் அதைச் செய் என்று எதுவும் சொல்லவில்லை. அவளாகச் செய்த போது தடுக்கவும் இல்லை. ஆனால் வர்ஷாவை அவர் சமையல் அறை பக்கம் கூட விடவில்லை. அதற்காக ஆருஷியை அவர் கூடுதல் வேலையும் வாங்கவில்லை, அவரே தான் செய்தார்.

எல்லாம் டேபிள்ள இருக்கு, உன் புருஷனுக்கும் போட்டுட்டு நீயும் சாப்பிடு என்றுவிட்டார். மாமியாரே வேலை வாங்கவில்லை. அதனால் ஆருஷியுமே வர்ஷாவிடம் எதையும் செய்யச் சொல்லி கேட்கவில்லை.

துர்காவுக்குக் கனத்த சரீரம் தான். ஆள் பார்க்க முரட்டுத்தனமாகத் தெரிவார். அதனால் திருமணமான புதிதில் எல்லாம் ஆருஷிக்கு அவரைப் பார்த்தாலே பயமாக இருக்கும். ஆனால் இப்போது மாமியாரை பார்க்கும் போது அவ்வளவு அச்சமாக இல்லை.

ஒருநாள் தர்ஷனை கீழே இறக்காமல் வைத்துக் கொண்டிருந்த வர்ஷாவால்… அதற்கு மேல் வைத்திருக்க் முடியவில்லை. அவள் விட்டுவிட ஆருஷி தான் பார்த்துக் கொண்டாள்.

ஆதவனும் விஜயனும் மூன்று வேலை உணவையும் சேர்ந்தே உண்டனர். துர்கா மகன்களுக்கு விதவிதமாகச் சமைத்து போட்டார். ஆருஷி பிள்ளைகளை வெளியில் விளையாட வைக்கும் போது அக்கம் பக்கத்தினரோடு நன்றாகப் பழகி விட்டாள்.

பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் இடங்களுக்குச் சென்று வந்தனர். துர்காவும் ஈஸ்வரும் வர மாட்டார்கள். இவர்கள் மட்டும் செல்வார்கள். ஆருஷியும் வர்ஷாவும் தேவைக்குப் பேசிக் கொள்வார்கள்.

அம்மாவின் பேச்சுக்கு மதிப்பளித்து விஜயனும் மனைவியை விளையாட்டுக்கு கூட வம்பிழுக்காமல் இருந்தான்.

அந்த வார இறுதியில் கூடப் பிரமிளவோ மஞ்சுளாவோ இங்கே வரவில்லை. விஜயன் இருவரையுமே வர சொல்லி அழைக்க… வேலை இருக்கு டா என்று விட்டனர்.

மறுவாரம் கிளம்புவதற்கு முன் விஜயனை அக்காமார்கள் இருவரின் வீட்டுக்கும் சென்று சொல்லி கொண்டு வரும்படி துர்கா சொல்ல… வர்ஷா வர முடியாது என்றுவிட… ஆதவன் உடன் சென்றான்.

அண்ணனும் தம்பியும் பைக்கில் சென்றனர். முதலில் பிரமிளா வீட்டுக்கு சென்று விட்டு, அங்கிருந்து மஞ்சுளா வீட்டுக்கு சென்றனர்.

ரெண்டும் பொண்ணு பெத்து வச்சிட்டு, உங்க அக்காவும் அக்கா புருஷனும் இஷ்ட்டத்துக்கு ஊர் சுத்துறாங்க. பணத்தோட அருமையே தெரியலை. எப்படித்தான் ரெண்டு பெண்களுக்குக் கல்யாணம் பண்ண போறாங்களோ…” என மஞ்சுளாவின் மாமியார் புலம்ப… என்ன சொல்வது என்று தெரியாமல் ஆதவனும் விஜயனும் அமைதியாக இருந்தனர்.

தனியாக இருக்கும்போது “மச்சானுக்குப் பிஸ்னஸ் நல்லாதானே போகுது.” என ஆதவன் கேட்க….

டேய்… இப்பவே ரெண்டு பொண்ணுங்களுக்குக் கல்யாணம் பண்ணற அளவுக்குச் சேர்த்து தான் வச்சிருக்கோம். எங்க மாமியாருக்கு வேற வேலை இல்லை… நீ வேற… நம்ம வீட்டோட ஊர் சுத்த வந்ததுனால…. இதே அவங்க பொண்ணு வீட்டோட போயிருந்தா… அப்போ மட்டும் அது அவங்களுக்குச் செலவு இல்லை.”

நாங்க தனியா எங்க வெளிய கிளம்பினாலும், ரெண்டு பொண்ணு இருக்கு சிக்கனமா இருங்கன்னு அதையே தான் சொல்வாங்க. இனிமே நாங்க சோறு தான் திங்காம சேர்த்து வைக்கணும்.” என்றாள் மஞ்சுளா கிண்டலாக.

கிளம்பும் போது மாமன்கள் இருவரும் மருமகள்களுக்குக் கை நிறையப் பணம் கொடுக்க…. மஞ்சுளாவின் மாமியார் முகத்தில் திருப்தி.

அக்காளை நிம்மதியாக இருக்க விடட்டும் என்றுதான் கொடுத்தார்கள். மஞ்சுளா தம்பிகளை முறைக்கவே செய்தாள்.

நான் ஊருக்கு போறேன்னு சொல்லியும் நீ வரலை…. நான் தான் வந்தேன்.” என விஜயன் சொல்ல… மஞ்சுளா புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தாள்.

திரும்பி வரும் வழியில் ஆதவன் தான் சொன்னான். “வர்ஷாவுக்கும் அக்காவுக்கும் சண்டை வருதுன்னு, அம்மா தான் நீ கிளம்புற வரை அக்காவை வர வேண்டாம்னு சொன்னாங்க. உன் மன நிம்மதிக்காகத் தான் சொன்னாங்க.” என்றான்.

வீட்டிற்கு வந்ததும் விஜயன், “நீங்க எப்படி அப்படி அக்காவை சொல்வீங்க?” என துர்காவிடம் சண்டை பிடிக்க…

யாரோ ஒருத்தர் விட்டுக் கொடுக்கணும் இல்ல… ஆதவன் விஷயத்திலேயே நாம விட்டுக் கொடுத்திருக்கலாமேன்னு நான் இப்போ நினைக்காத நாள் இல்லை. உன் விஷயத்திலேயும் அந்தத் தப்புச் செய்ய வேண்டாம்னு தான். அதோட இப்போ விட்டுக் கொடுக்கிறதுனால என்ன கெட்டு போச்சு?” என்றார். வர்ஷாவும் கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்.

நீ உன் பொண்டாட்டி பிள்ளையோட சேர்ந்து இருந்த இல்ல… அதே போதும். எனக்கு மஞ்சுவை சமாதானம் செய்யத் தெரியும். எனக்கு உடம்பு முடியலைன்னு சொன்னா… அடுத்த நிமிஷம் ஓடி வருவா.” என்றார். 

வர்ஷா போன்ற ஆட்கள் எல்லாம் அவர்கலாக் திருந்தினால் தான் உண்டு. அது விஜயனுக்கும் புரிய…. அவன் மனைவியிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவே இல்லை. 

துர்காவின் விட்டுக் கொடுத்தலில்… விஜயன் நல்ல மன நிலையிலேயே வெளிநாடு கிளம்பி சென்றான். செல்வதற்கு முன் வர்ஷாவை அவள் பிறந்த வீட்டில் விட்டுவிட்டு தான் சென்றான். வர்ஷா அவள் அறையில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து சென்று விட்டாள். மாமியார் வீட்டுக்கு இனி வரவே கூடாது என்று முடிவு செய்து கொண்டு சென்றாள் போல…. பிறந்த வீடு இருக்கும் தைரியத்தில் தானே ஆடிக் கொண்டு இருக்கிறாள்.

ஆதவன் மூண்டு மாத விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தாலும், அவனை வேலையில் சீக்கிரம் வந்து சேரும்படி அவன் வேலை செய்யும் நிறுவனம் அழுத்தம் கொடுக்க… இன்னும் ஒரு மாதத்தில் அவனும் கிளம்புவதாக இருந்தது. அதற்கு முன் அவனுக்கு முடிக்க வேண்டிய வேலைகள் இருக்க…. தனது மாமனாரை அழைத்துப் பேசினான்.

திருநெல்வேலி தான் சரத்துக்குச் சொந்த ஊர். அவரை அவர்கள் சொந்த ஊருக்கு வர சொல்லிவிட்டு, ஆதவனும் ஈஸ்வரும் இங்கிருந்து சென்றனர்.

சரத்தின் வீட்டிற்குச் சென்றவர்கள், “எங்க மாமா அவர் சொத்தை தான கேட்கிறார். அதைக் கொடுத்தா என்ன? கல்யாணத்தை வச்சிட்டு கையில பணம் இல்லாம எவ்வளவு சிரமபட்டிருப்பார். உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா?” என ஆதவன் நாக்கை பிடுங்கிக் கொள்வது போலத்தான் கேட்டான்.

நீங்க கேட்டதும் கொடுக்கணுமா? அப்படியெல்லாம் உடனே முடியாது. அப்புறம் வாங்க.” எனச் சரத்தின் அண்ணன் மகன் திமிராகப் பேச…

யார்கிட்ட பேசுற… பல்லை தட்டி கையில கொடுத்திடுவேன். அவர் சொத்தை கொடுக்க முடியாதுன்னு சொல்ல நீ யாரு… கேஸ் போட்டேன்னு வை… மொத்த சொத்தையும் யாரும் அனுபவிக்க முடியாது.”

உங்க எல்லாரையும் இங்க இருந்து காலி செஞ்சு காட்டட்டுமா?” என ஆதவன் ஆவேசமாகப் பேசியதில்… மொத்த குடும்பமும் வெலவெலத்து தான் போனது.

சரத் அதிர்ந்து கூடப் பேச மாட்டார். அதனால் அவரை எளிதாக ஏமாற்றி இருந்தனர். ஆனால் அவருக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை என்று இப்போதுதான் தெரிந்தது.

நாங்க நியாயமாதான் கேட்கிறோம். அவருக்குச் சேர வேண்டியதை கொடுங்க. இல்லேன்னா கோர்ட்ல பார்த்துக்கலாம். ஆனா அதுவரை யாருமே சொத்தை அனுபவிக்க முடியாம நாங்க ஸ்டே வாங்கிடுவோம்.” என்றார் ஈஸ்வர்.

பொண்ணுகளுக்குக் கல்யாணம் பண்ண இருக்கிற வீட்டை விற்கிற அளவுக்குக் கொண்டு வந்துடீங்க. உங்களுக்கு எல்லாம் மனசாட்சி இல்லை.”

இப்படி ஒரு மனுஷங்களை நான் இப்போத்தான் பார்க்கிறேன்.” என்றான் ஆதவன் வெறுப்பாக.

சரத்தின் அண்ணனும் தம்பியும் உடனே பணிந்து வந்தனர். சரத்திற்குப் பேச ஆள் இல்லை என்ற தைரியத்தில் தானே ஆடிக் கொண்டு இருந்தனர்.

அடுத்த வாரமே பத்திரம் முடிக்க வேண்டும் என்றான் ஆதவன். எல்லாம் எப்படிச் செய்வது எனப் பேசிவிட்டு சரத்தை அங்கிருந்தே சென்னைக்கு அனுப்பிவிட்டு இவர்கள் ஊருக்கு வந்தனர்.

காலையில் வெளியே செல்லும் போது கேட்க வேண்டாம் என அருஷி அப்போது ஒன்றும் கேட்கவில்லை. கணவன் திரும்பி வந்ததும், எங்க போனீங்க?” என்றதற்கு,

ஒரு இடம் விலைக்கு வந்துச்சு. அதைப் பார்க்க போனோம்.” என்றான் ஆதவன். ஆருஷியும் நம்பி விட்டாள்.

அடுத்த வாரமே சரத்திற்கு வரவேண்டிய சொத்து வந்தது. பத்திர பதிவின் போது ஆதவனும் உடன் இருந்தான்.

விக்க அவசரப்பட வேண்டாம். நல்ல விலைக்குக் கேட்கட்டும். அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்ல…

உங்களைக் கேட்காம இனி எதுவும் பண்ண மாட்டேன் மாப்பிள்ளை.” என்றார் சரத்.

நீங்க ஆள் பார்த்து வைங்க. அடுத்தத் தடவை நான் லீவுக்கு வரும் போது பத்திர பதிவு பண்ணிக்கலாம்.” என, சரத்தும் சரி என்றார்.

ஆதவன் இருந்த நாள் வரை மனைவி மகனுடனே இருந்தான். பிரமிளாவும் மஞ்சுளாவும் வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டு சென்றனர்.

உங்களுக்கு என் மேல எதுவும் வருத்தம் இருக்கா…இப்போ கோபம் ஒன்னும் இல்லையே….” என அருஷி மீண்டும் மீண்டும் கேட்க…

இல்லை டி… அதெல்லாம் எதுவும் இல்லை.” என்றவன்,

உனக்கு இங்க இருக்க இஷ்ட்டம் தானே…” என அவன் அதையே மீண்டும் மீண்டும் கேட்க….

நான் இருந்துப்பேன்பா நீங்க டென்ஷன் ஆகாதீங்க.” என்றாள்.

போன தடவை கிளம்பியது போலச் சென்று விடுவாளோ என்ற பயம் ஆதவனுக்கு இருக்கத்தான் செய்தது. அவன் வெளிநாடு கிளம்பும் நாளும் வர… பிரிய மனமில்லாமல் மனைவி மகனை விட்டு கிளம்பி சென்றான்.

Advertisement