Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 14

பீர் குடித்தபடி சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு அறைக்கு வந்து விட்டனர். ஆண்கள் எல்லாம் ஒரு அறையிலும், பெண்கள் எல்லாம் ஒரு அறையிலும் படுத்து உறங்கினர்.

காலையிலும் மஞ்சுளாவும் வர்ஷாவும் ஆளுக்கு ஒருபுறம் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் இருந்தனர்.

வர்ஷா மகனை வேறு யாரிடமும் கொடுக்கவில்லை. ஆனால் அவளும் வைத்திருக்கவில்லை. கணவனிடம் கொடுத்து விட்டு ஹாயாக வந்தாள்.

தம்பியே வைத்திருக்கிறானே என்று பிரமிளாவோ மஞ்சுளாவோ வாங்கி வைத்துக் கொண்டால்…. அவர்களிடம் இருந்து தர்ஷனை வாங்கிக் கொண்டு சென்று விடுவாள்.

காலை உணவுக்குச் சைவ உணவகம் சென்றனர். தர்ஷன் அங்கிருந்த மண் குதிரையில் உட்கார்ந்து கொள்ள… கணவனை இவர்களுடன் சாப்பிட விடக் கூடாது என்று, விஜயன் கையில் உணவு இருந்த கின்னத்தைக் கொடுத்து விட்டு… அதில் இருந்து வர்ஷா எடுத்து ஊட்ட… பார்த்த மஞ்சுளாவுக்குக் கடுப்பாக இருக்க… இவளுக்கு என்ன என் தம்பி எடுபிடியா என நினைத்தவள், விஜயன் கையில் இருந்த கிண்ணத்தை வாங்கி வர்ஷாவிடம் கொடுத்தவள், “நீ சாப்பிட வா டா…” எனத் தம்பியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

உணவு உண்டதும் பத்பநாப ஸ்வாமி கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, பிறகு ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலுக்கும் சென்றவர்கள், யஸ்வந்த், தர்ஷன் இருவரின் எடைக்கு எடை வாழைப்பழத்தை காணிக்கையாகச் செலுத்தினர்.

கோவிலுக்கு என்பதால் எல்லோரும் புடவை கட்டி இருக்க… வர்ஷா மட்டும் சுடிதார் அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் யாருமே எதுவுமே சொல்லவில்லை.

கோவிலில் இருந்து அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றவர்கள், . அங்கேயே மதிய உணவை முடித்துக் கொண்டு, அறையையும் காலி செய்து கொண்டு சாமான்களை எடுத்துக் கொண்டு கிளம்பினர்.

அங்கிருந்து கிளம்பி மூன்று மணி போலத் திற்பரப்பு நீர் விழுச்சிக்கு வந்து சேர்ந்தனர். பிள்ளைகள் எல்லாம் அருவில் நல்ல ஆட்டம் போட… பெரியவர்களும் மாறி மாறி சென்று குளித்து விட்டு வந்தனர்.

தர்ஷனை தங்களிடம் கொடுத்து விட்டு சென்று குளிக்கும்படி ஆருஷியும், பிரமிளாவும் சொன்னதற்கு, வர்ஷா காதே கேட்காதது போல இருந்தாள்.

விஜயன் வந்ததும் அவனிடம் கொடுத்து விட்டு செல்ல… அவன் ஆருஷியிடம் கொடுத்து விட்டு மீண்டும் குளிக்கச் சென்று விட்டான்.

அதைப் பார்த்து வர்ஷாவுக்குப் பயங்கிற கோபம். அவள் கணவனிடம் சண்டை பிடிக்க…

நீ லூசு மாதிரி பண்ணிட்டு இருக்க. உன்னைப் பத்தி எல்லாம் அப்படித்தான் நினைச்சிட்டு இருப்பாங்க.” என்றான்.

இன்னைக்கோட உங்க வீட்டுக்கே ஒரு கும்பிடு. என்னை அப்படியே கொண்டு போய் எங்க வீட்ல விட்டுடுங்க.” என்றாள்.

நானும் அந்த முடிவுக்குத் தான் வந்திருக்கேன். ஒழுங்கா நடந்துக்கத் தெரியாத நீயெல்லாம் எங்க வீட்ல இருக்க வேண்டாம். உங்க வீட்டுக்கே போய்த் தொலை….”

என்னை அனுப்பிட்டு நீங்க நிம்மதியா இருக்கலாம்னு பார்க்கிறீங்களா… நீங்களும் என்னோட வரணும்.”

என்னை மிரட்டுற வேலை எல்லாம் வேணாம், உனக்குப் போகனுமா போ…”

விஜயனும் வர்ஷாவும் தனியாக நின்று பேசினாலும், இருவரும் சண்டை தான் போடுகிறார்கள் என யாருக்கும் புரியாமல் இல்லை. துர்கா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்.

மஞ்சுளா, “எப்படி நம்மகிட்டயே முகத்தைத் திருப்புறா பார்த்தியா… அப்போ இத்தனை நாள் நம்மகிட்ட எல்லாம் நடிச்சிருக்கா…”

பிரமிளா,“அவ நடிக்கிறான்னு ஆரம்பத்திலேயே எனக்குத் தெரியும். இப்போ அவளே அவளைக் காட்டிக் கொடுத்திட்டா.”

மஞ்சுளா, “இவ இஷ்ட்டத்துக்கு ஆடலாம்னு நினைச்சிட்டு இருக்கா போலிருக்கு. அவனைப் போட்டு என்ன பாடு படுத்திறா. பார்க்கிற நேரம் எல்லாம் சண்டைதான் போடுறா… இவளை சும்மா விடக் கூடாது.”

அக்காவும் தங்கையும் மாறி மாறிப் பேசிக்கொள்ள… “மஞ்சு நான் ஒன்னு சொன்னா நீ கோவிச்சுக்கக் கூடாது. விஜயன் கிளம்புற வரை நம்ம வீட்ல நிம்மதியா இருந்திட்டு போகட்டும். இங்கயே அவனை மதிக்காதவ… அவங்க வீட்ல தான் அவனைக் கவனிச்சிட போறாளா… இருக்கிறவரை அவ என்னவோ செஞ்சிட்டு போகட்டும். உன்னால அதையெல்லாம் பார்த்திட்டு சும்மா இருக்க முடியாது. அதனால நீ அவன் கிளம்புற வரை, நம்ம வீட்டுக்கு வராதே…” என துர்கா மகளிடம் சொல்லியே விட்டார்.

அம்மா ஏன் இப்படிப் பேசுறீங்க?” என ஆதவன் கண்டிக்க….

அப்போ என்னாலதான் பிரச்சனைன்னு சொல்றீங்களா மா…” என்ற மஞ்சுளாவின் கண்கள் கண்ணீரை சிந்தி விட…

மஞ்சு உன் வீட்டுகாரர் பார்க்கப் போறார்… கண்ணைத் துடை.” என்றாள் பிரமிளா.

மஞ்சு கண்ணீரை துடைக்க…. “நான் அப்படிச் சொல்லலை மஞ்சு…. விஜயன் இருக்கிற வரை ஆடுவாளா? ஆடிட்டு போறா…. உன்னால பார்த்திட்டு இருக்க முடியாது அதுதான் சொல்றேன்.”

ஏன் மா அப்படியே விடணும்?”

எனக்கு என் பையன் நிம்மதி முக்கியம். பையனை எத்தனை பெத்தவங்க பொண்டாட்டிக்கு விட்டுக் கொடுத்திட்டுத் தனியா கூட இருக்காங்க. ஏன் இருக்காங்க? பையனாவது நிம்மதியா இருக்கட்டும்னு தான்.”

வர்ஷா புரிஞ்சிக்க மாட்டா…. நீங்களாவது புரிஞ்சிக்கோங்க.” என்ற துர்கா கண்கலங்க…

சரிமா என்னால எதுவும் பிரச்சனை வராது போதுமா….” மஞ்சுளா சொல்ல…

இன்னைக்கு வேணா அவ ஜெயிச்சு இருக்கலாம். ஆனா அவ பண்ணதுக்கு அவ அனுபவிப்பா டி…. நீ பாரு.” எனப் பிரமிளா மனம் நொந்து தான் சொன்னாள். ஆருஷியும் மகனை குளிக்க வைத்து அழைத்து வந்து, அங்கே நின்று தான் துவட்டிக் கொண்டு இருந்தாள். அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

விஜயன் திரும்பி நின்று கொண்டிருந்ததால்… இவர்களைக் கவனிக்கவில்லை. கணவனோடு பேசிக் கொண்டிருந்தாலும் ,வர்ஷா இவர்களைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். மஞ்சு அழுதது எல்லாம் தெரியும். மனைவியின் பார்வையைக் கவனித்து விஜயன் திரும்பி பார்க்க, அவன் குடும்ப மொத்தமும் ஒரே இடத்தில் இருக்க…. அவன் அங்கே சென்றான்.

விஜயனைப் பார்த்ததும் கலங்கிய கண்கள் தெரியாமல் இருக்க….. துர்கா திரும்பி உட்கார்ந்து கொண்டார். அக்காவின் கலங்கிய முகத்தைப் பார்த்தவன், என்ன என்று கேட்க….

ரெண்டு பொம்பளை பிள்ளைகளை வச்சிருக்கப் பொறுப்பா இருன்னு சொன்னேன். உங்க அக்கா கோவிச்சுகிட்டா.” என்றார் துர்கா.

அம்மா சொல்வது பொய் என்று விஜயனுக்குப் புரிந்தது. அவன் மற்றவர்களைப் பார்க்க யாரும் எதுவும் சொல்வது போல இல்லை.

துர்கா மஞ்சுளாவை திட்டி இருக்கிறார் என வர்ஷாவுக்குப் புரிந்தது. நல்லா வாங்கட்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

உங்க மச்சானுங்க எல்லாம் குளிச்சிட்டாங்களா பாருங்க, கிளம்பலாம். இப்போ கிளம்பினா நைட் ஆகிடும் போறதுக்கு.” துர்கா சொல்ல… ஆதவன் அவர்களை அழைக்கச் சென்றான்.

எல்லோரும் களைப்பாக இருந்ததால்…. இரவு உணவையும் வெளியிலேயே முடித்துக் கொண்டனர். யாரும் சரியாக உண்ணவில்லை. பிள்ளைகள் மட்டுமே நன்றாக உண்டனர்.

பிரமிளா மஞ்சுளா குடும்பங்களை அவர்கள் வீட்டில் இறக்கி விட்டு கடைசியாகத்தான் இவர்கள் எல்லாம் வந்தனர்.

வர்ஷா தன்னை இப்போதே கொண்டு வீட்டில் விடும்படி சொல்ல… விஜயன் சென்று துர்காவிடம் கேட்க…

அவ போறா சரி, நீ?” என்று கேட்க… “நான் அவளை விட்டுட்டு வரேன்.” என்றான்.

ஒன்னும் தேவை இல்லை. எங்க அவ அவளைக் கூப்பிடு.” என்ற துர்கா….

இன்னும் பத்து நாள்ல கிளம்பிடுவான். நீ அங்கயும் அவன் இங்கயுமா இருப்பீங்களா… அவன் இருக்கிறவரை இங்க இருந்திட்டு போ…. உனக்குப் பிடிக்காதது இங்க எதுவும் நடக்காது. அப்படி உனக்குப் போகணும்னா உங்க அப்பா அம்மாவை வர சொல்லு… நான் அவங்ககிட்ட சில விஷயம் தெளிவு படுத்திட்டு அனுப்புறேன்.” என்றதும் வர்ஷா வாயே திறக்கவில்லை.

அவள் சென்றதும், “இருக்கிறவரை சண்டை போடாம இரு டா….” என மகனிடமும் சொன்னார்.

இரவு அறையில் ஆதவன் சிந்தனையில் இருக்க… ஆருஷி உடை மாற்றி வந்தவள், “பாவம் மஞ்சு அண்ணி அழுதிட்டாங்க எனக்கே பார்க்க கஷ்ட்டமா இருந்தது.” என,

விஜயன் கடைசிங்கிறதுனால… ரெண்டு அக்காவும் அவனைத் தூக்கி வச்சு சுத்திட்டு இருப்பாங்க. கீழே இறக்கியே விட மாட்டாங்க. அம்மா அவனை வளர்க்கலை… அக்காங்க தான் வளர்த்தாங்க. என்னையுமே பிரமிளா அக்கா தான் பார்த்துக்குவா.”

அவங்க வளர்த்த தம்பியை… பொண்டாட்டி எடுபிடி மாதிரி நடத்தினா…. கோபம் வரத்தானே செய்யும். அந்த ஆதங்கத்தில தான் மஞ்சுளா பேசினது.”

எங்க அப்பாவுக்கும் அக்கா தங்கச்சிங்க இருக்காங்க. வீட்டுக்கு வந்திட்டு போனாலே… எதாவது பிரச்சனை பண்ணிட்டு போயிடுவாங்க. எங்க அப்பா எங்க அம்மாவை குறை சொல்லிட்டே இருப்பாரு. எங்க அம்மா அழுவாங்க. அப்போ எல்லாம் நினைச்சிருக்கேன், நாத்தனார்னாலே இப்படித்தான் இருப்பாங்க போலன்னு… ஆனா பிரமிளா அண்ணி மஞ்சுளா அண்ணி ரெண்டு பேருமே அப்படி இல்லை. அவங்க நாத்தனார்கள் போல இல்லை… எனக்கு அக்காங்க மாதிரி இருக்காங்க.” என்றாள் ஆருஷி.

நாங்க வெளிநாட்டில வேலையில இருந்தாலும், இதை வாங்கிக் கொடு, அதை வாங்கிக் கொடுன்னு அவங்க கேட்டதே இல்லை.”

பிறந்த வீட்டை எதிர்ப்பார்க்கிற இடத்தில நீங்க என்னைக் கட்டிக் கொடுக்கலை… உங்க மாமாங்களே தான் நாங்க கேட்டது வாங்கிக் கொடுக்கிறாங்கலேன்னு தான் சொல்வாங்க. எத்தனை பேர் அப்படி இருக்காங்க. அவங்க எவ்வளவு வசதியா இருந்தாலும், பிறந்த வீட்ல செஞ்சிட்டே இருக்கணும்னு தானே எதிர்பார்க்கிறாங்க.”

மஞ்சு அண்ணி அப்போ இனிமே இங்க வரமாட்டாங்களா?”

அவ மட்டும் இல்லை பிரமிளாவும் வரமாட்டா… நீ வேணா பாரு. மஞ்சு வராம அவளும் வர மாட்டா. எனக்குத் தெரியும்.” என்றான் ஆதவன்.

Advertisement