Advertisement

ஹாய் இலக்கியா எத்தனை மணிக்கு வீட்டுக்கு போனீங்க?”

காலையில ஆறுமணிக்கு எல்லாம் வந்திட்டோம் மாமா.”

ஓ அப்படியா…” என எதோ அதைக் கேட்கத்தான் அழைத்தது போலப் பேசியவன், “நேத்து ஆருஷிக்கு உங்க அப்பா நகை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தாரே…. இடம் வித்துடாரா என்ன?”

அந்தப் பக்கம் இலக்கியா பதில் சொல்ல தயங்க…. அதுவே ஆதவனுக்குச் சந்தேகத்தைக் கொடுக்க….

நான் தானே சும்மா சொல்லு.” என,

அப்பா வீட்டை வித்துட்டாங்க.” என்றதும் ஆதவனுக்கு மிகவும் அதிர்ச்சி.

என்னது வீட்டை வித்துட்டாரா…. இலக்கியா உங்க அக்காவை கல்யாணம் பண்ணதை தவிர… நான் உங்க வீட்டுக்கு என்ன கெடுதல் பண்ணேன். ஏன் என் தலையில இவ்வளவு பெரிய பாவத்தைத் தூக்கி வைக்கிறீங்க. எங்க வீட்ல சொன்னதைச் செய்யுறதுக்காக உங்க அப்பா வீட்டை விற்பாரா? இல்லை நான் சொன்னேனா அந்த நகையைக் கொடுத்த தான் உன் அக்காவோட வாழ்வேன்னு?”

உங்க அப்பா இருக்கிற வீட்டை வித்துட்டு வீடு இல்லாம இருப்பாரா…. மாப்பிள்ளை வந்து மாமனாரை வீடு இல்லாம நிற்க வச்சுட்டான்னு ஊர்ல எல்லோரும் பேசணும். ஏற்கனவே நாங்க உங்களால வாங்கின பேச்சு போதாதா? ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க?” என்றான் ஆதவன் ஆற்றாமையாக.

இல்ல அத்தான் அம்மா தான் சொன்னாங்க. போடுறேன்னு சொன்ன நகையாவது போடுங்கன்னு.”

தயவு செய்து உங்க அக்காகிட்ட இதைச் சொல்லிடாதீங்க. அவ இப்போதான் எங்க வீட்ல எதோ கொஞ்சம் ஒட்டுதலா இருக்கா… அவ நிம்மதியையும் கெடுக்காதீங்க.”

ஆமாம் உங்க அப்பா யார்கிட்ட வீட்டை வித்தார்.” என ஆதவன் விவரம் கேட்க…

பக்கத்து வீட்டுக்காரங்க தான் வாங்கிக்கிறேன்னு அட்வான்ஸ் கொடுத்தாங்க. அதை வச்சு தான் அக்காவுக்கு நகை வாங்கினார்.”

உங்க அப்பா அட்வான்ஸ் மட்டுமே தானே வாங்கி இருக்கார். நான் நாளைக்கு நேர்ல வந்து பேசிக்கிறேன். வேற எந்தப் பணமும் வாங்க வேண்டாம்னு சொல்லு. ஆருஷிக்கு எதுவும் தெரியக் கூடாது.” என்றவன் இணைப்பை துண்டித்தான்.

மதிய உணவு உண்ணும் நேரம், ஆதவன் தனக்குச் சென்னை தூதரகத்தில் வேலை இருப்பதால் செல்ல வேண்டும் என்றான். விசா சம்பந்தமாகச் செல்வான் என வீட்டினர் நினைக்க… “ஒரு நாள்ல வந்திடுவேன். அதிகபட்சமா ரெண்டு நாள் வேணா ஆகலாம். நீயும் யஸ்வந்தும் இங்கயே இருங்க.” என, ஆருஷியும் சரி என்றாள்.

அன்று மாலையே ஆதவன் கிளம்பி சென்று விட்டான். அப்படியே ஆருஷி வீட்டுக்கு சென்று விட்டு வருவதாகச் சொல்லி தான் சென்றான். அன்று இரவு விஜயனும் வர்ஷாவும் தர்ஷனோடு… வர்ஷாவின் வீட்டுக்கு கிளம்பி சென்றனர். இரண்டு நாட்கள் அங்கே இருந்து விட்டு வருவதாகச் சொல்லி கிளம்ப… நல்லவேளை அப்போது யஸ்வந்த் உறங்கி இருந்தான். இல்லையென்றால் தர்ஷன் செல்வதைப் பார்த்து அழுதிருப்பான்.

துர்கா ஈஸ்வர் ஆருஷி மற்றும் யஸ்வந் தானே இருந்தனர். ஆருஷிக்கு அவ்வளவு பெரிய வீட்டில் கணவன் இல்லாமல் எப்படி இரண்டு நாட்கள் இருக்கப் போகிறோம் என்று இருந்தது.

துர்கா அவளைக் கீழே இருந்த அறையிலேயே படுக்கச் சொல்லிவிட்டார். ஈஸ்வர் ஹாலில் இருந்த திவானில் படுத்துகொள்ள.. வீட்டுக்கு வெளியேவும் காவலுக்கு ஆள் உண்டு. அதோடு வீட்டை சுற்றி கேமராவும் உண்டு. அக்கம் பக்கம் அதிக வீடுகளும் இருப்பதால் பயமும் இல்லை.

ஆருஷியும் யஸ்வந்தும் ஒரு கட்டிலில் படுத்துகொள்ள… அதே அறையில் இருந்த இன்னொரு கட்டிலில் துர்கா படுத்துக் கொண்டார். தாமதமாக உறங்கினாலும் ஆருஷி உறங்கி விட்டாள்.

காலையில் சென்னையில் இறங்கிய ஆதவன், ஆருஷி வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிற்குச் சென்று குளித்துத் தயாரானவன், காலை உணவையும் வெளியவே முடித்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு கிளம்பி சென்றான்.

ஏற்கனவே அவன் வருகிறான் என்று சரத் விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் தான் இருந்தார். ஆனால் அவன் எப்போது வருவான் என்று தெரியாது.

ஆதவன் வந்ததும், “என் இப்படிப் பண்றீங்க? நானோ இல்ல எங்க வீட்லையோ… நீங்க நகை போட்டே ஆகணும்னு சொன்னோமா என்ன? இப்படி வீட்டை விற்கிற அளவுக்குப் போகணுமா?” எனக் கோபப்பட….

எப்படியும் செய்யணும் இல்ல மாப்பிள்ளை. அதோட இலக்கியாவுக்கும் கல்யாணத்துக்குப் பார்க்கணும். வீட்டை வித்தா ரெண்டு பேருக்கும் செஞ்சிடலாம்னு நான்தான் சொன்னேன். அப்புறம் இடம் வித்து வந்தாக் கூட எங்க வீட்ல எனக்குத் தர்றதா சொன்ன இடத்தில, நாங்க வீடு கட்டிட்டு இருக்கலாமே… ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணிட்டா… நாங்களும் சொந்தபந்தத்தோட இருக்கலாம்னு பார்க்கிறோம்.” என்றார் பார்கவி.

வீட்டை வித்துட்டு நீங்க எல்லாம் எங்க போவீங்க. வீடு இல்லாம இருப்பீங்களா? ஊர்ல உங்களைத் தப்பா பேச மாட்டாங்க. எங்களால தான் நீங்க வித்த மாதிரி பேசுவாங்க.” என்றவன்,

பக்கத்து வீட்டுக்காரங்க தானே நான் பேசி பார்க்கிறேன்.” என,

வீடு வித்ததாவே இருக்கட்டும் மாப்பிள்ளை. என்னால பணத்தைத் திருப்பியும் தர முடியாது.” என சரத் சொல்ல… ஆதவன் இதை எப்படிச் சரி செய்வது என யோசித்தான்.

எவ்வளவு அட்வான்ஸ் வாங்கினீங்க? அதை நான் திருப்பிக் கொடுக்கிறேன். அதை நான் கொடுத்த அட்வான்ஸா வச்சுக்கோங்க. வீட்டை நானே வாங்கிக்கிறேன். இலக்கியா கல்யாணம் வரை இங்கயே இருங்க. அதுக்குள்ள உங்க இடம் வித்துப் பணம் வந்தா பார்க்கலாம். இல்லைனா வீட்டை நானே வாங்கிறேன்.” என்றான் ஆதவன் முடிவாக.

மகளுக்கே தங்கள் வீடு செல்வதில்… ஆருஷியின் பெற்றோருக்கு மகிழ்ச்சி தான். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் சம்மதிக்க வேண்டுமே என அவர்கள் கவலைப்பட… நான் போய்ப் பேசி பார்க்கிறேன் என ஆதவன் சென்றான்.

முதலில் பக்கத்து வீட்டுக்காரர் முடியவே முடியாது என்றார். “நான் ரெண்டு வீட்டையும் இடிச்சிட்டு பெரிய அபார்ட்மெண்ட் கட்டப் போறேன்.” என்று சொல்ல… ஆதவன் தங்களுக்குப் போட வேண்டிய நகைக்காக மாமனார் வீட்டை விற்கிறார் என எடுத்து சொல்ல… பிறகும் மனமே இல்லாமல் அவர் சம்மதிக்க…

அவர் கொடுத்த பணத்தை வட்டியோடு திரும்பத் தருவதாக ஆதவன் சொல்ல…. பிறகே முழு மனதாகச் சம்மதித்தார். ஆதவன் உடனே காசோலையில் கையெழுத்து போட்டு, அப்போதே கொடுத்து விட்டு, சரத்தை வர சொல்லி போட்ட அக்ரிமெண்ட்டையும் ரத்துச் செய்து விட்டான். 

மாமனார் மாமியாரின் மன திருப்திக்காக, ஆதவன் அவனே வாங்கிக் கொள்வதாகப் புது ஒப்பந்தம் செய்து கொண்டான். சரத் திரும்ப வேறு யாரிடமும் வீட்டை விற்கிறேன் என்று கிளம்பி விடக் கூடாதே அதற்காகவும் தான்.

அன்று மதிய உணவை மாமியார் வீட்டிலேயே உண்டவன், வாடகை வீட்டின் சாவியைப் பார்கவியிடம் கொடுத்து, இந்த மாதம் முடிந்ததும் வீட்டை காலி செய்து, சாமான்களை இங்கே எடுத்து வந்து போட்டு விடும்படி சொன்னவன்,

இப்போதைக்கு ஆருஷிக்கு எதுவும் தெரிய வேண்டாம், தானே பிறகு சொல்லிக் கொள்வதாகச் சொல்லிவிட்டு, அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டான்.

காலை வேலை குளியல், சமையல் என்று சென்று விட.. மதியம் தாயும் மகனும் சாப்பிட்டு ஒரு தூக்கம் போடு எழுந்தனர். முன்பெல்லாம் துர்கா உண்ணு என்று சொல்ல வேண்டும், பிறகுதான் ஆருஷி உண்பாள். இப்போது அவளாகவே போட்டுக் கொண்டு உண்டாள்.

இந்தப் பெண் மனதிற்குள் என்னவெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்ததோ என துர்காவுக்குக் கவலையாகி விட்டது.

மதியம் உறங்கி எழுந்த ஆருஷி அவளாகவே கீழே இருந்த படுக்கை அறையின் அலமாரியை சுத்தம் செய்து சாமான்களை மீண்டும் அடுக்கி வைத்தாள். அதிலேயே நேரம் சென்று விட்டது.

அந்தத் தெருவில் எல்லாமே பெரிய பெரிய வீடுகள் என்றாலும், மாலை நேரம் பிள்ளைகள் எல்லாம் தெருவில் தான் விளையாடுவார்கள். யஸ்வந்தும் அவன் மூன்று சக்கரச் சைக்கிளை வைத்துக் கொண்டு தெருவை வளம் வர… உடன் ஆருஷியும் இருந்தாள். துர்காவும் வெளியே வந்து அக்கம் பக்கத்தினருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

அன்று நாள் நன்றாகவே சென்று விட… இரவு ஆருஷி நேரத்துடனே உறங்கி இருக்க… காலையில் அவள் கணவன் வந்துவிட்டான். ஆருஷியின் முக மலர்ச்சியைக் கண்டு ஆதவனும் நிம்மதியாக இருந்தான்.

காலை உணவு முடிந்து துர்காவும் ஈஸ்வரும் மீன் மார்க்கட் கிளம்ப… ஆதவனும் அவர்களுடன் கிளம்பினான். நேராக மீன் மார்கட் சென்று தேவையானவைகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப… ஆதவன் வழியில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசனையில் இருந்தான். பெற்றோரிடம் தனியாகப் பேச வேண்டும் என்றுதான் அவனும் கிளம்பி வந்திருந்தான்.

வீடு வாங்குவது எல்லாம் பெரிய விஷயம். இன்று பெற்றோரிடம் சொல்லாமல் விட்டு, நாளை அவர்களுக்கு வேறு யார் மூலமாவது தெரிய வந்தால்…. மிகவும் வருந்துவார்கள் என்று தெரியும். அதனால் அவனே சொல்லி விடலாம் என நினைத்து, அவன் சென்னை சென்ற விவரத்தை சொல்ல…

ஏன் டா உன் மாமனார் இப்படி இருக்காரு. நல்ல வேலை பண்ண… இல்லைனா இவரைத் தெருவுல நிறுத்திட்டோம்னு நமக்குத் தானே கெட்ட பெயர் வரும்.” என்றார் துர்கா

உனக்குச் சென்னையில எப்படியும் வீடு வேணும். அந்த வீடு இதுவா இருந்திட்டு போகட்டும். உனக்கு வாடகை வந்து நிறையப் போறது இல்லை. உன் மாமனார் மாமியாரே அந்த வீட்ல இருந்தா வீடும் பாதுக்காப்பா இருக்கும்.”

ஈஸ்வர் சொல்ல… துர்கா அதை ஆமோதிக்க….. பெற்றோர் புரிந்து கொண்டதில் ஆதவனுக்கும் நிம்மதி.

ஆருஷிக்கு தெரிய வேண்டாம். அவ சும்மாவே போட்டு குழப்பிப்பா…..” என ஆதவன் சொல்ல…

ஆமாம் நீ சொல்றது சரிதான். இப்போதான் டா அவளுக்கு இது நம்ம வீடுன்னே நினைப்பு வந்திருக்கு. நகையைப் போடுறதுக்காக அவங்க அப்பா வீட்டை வித்தாருன்னு தெரிஞ்சா… மனசு ரொம்பக் கஷ்ட்டபடுவா… அப்புறம் சொல்லிக்கலாம்.” என்றார் துர்கா.

அம்மா இப்போதைக்கு இது நமக்குள்ளவே இருக்கட்டும்.”

நான் உன் அக்காங்ககிட்ட கூடச் சொல்லலை போதுமா.” என துர்கா உறுதி கொடுத்த பின்னரே அங்கிருந்து கிளம்பினர்.

அன்று இரவு ஆருஷி கணவனிடம், “இங்க அக்கம் பக்கம் எல்லாம் நல்லா பழகிறாங்க. சென்னையில பக்கத்து வீட்ல பேசுறதுக்குக் கூட யோசிப்பாங்க. யஸ்வந்த் வளர்றதுக்கு உங்க வீடு தான் சரி. அதோட அத்தையும் மாமாவும் எத்தனை நாள் தனியா இருப்பாங்க. நான் இங்கயே இருந்துக்கிறேன்.” என மனைவி சொன்னதைக் கேட்டதும் ஆதவனுக்கு நம்பவே முடியவில்லை. .

நீ உண்மையா தான் சொல்றியா? எனக்காகச் சொல்லாத….” என அவன் உறுதி படுத்திக்கொள்ளக் கேட்க….

நான் இங்க இருந்துக்கிறேன்.” என்றாள் ஆருஷி முழு மனதாக.

நீ இங்க இருந்தேனா, உன்னை அப்படி எல்லாம் அக்காளுங்க தனியா விட்டுட மாட்டங்க. அவங்க அடிக்கடி வருவாங்க. நீயும் அங்க போய்ட்டு வா… அதோட விஜயன் கண்டிப்பா வர்ஷாவையும் வந்து இருக்கச் சொல்வான். தர்ஷன் இருந்தா யஸ்வந்துக்கும் பொழுது போகும். மூணு மாசத்துக்கு ஒரு தடவை நான் வந்து இருபது நாளுக்குக் குறையாம இருப்பேன். அப்போ திரும்பி போகும் போது சென்னையில விட்டுட்டு போறேன். நீ அங்க ஒரு பத்து நாள் இருந்துவிட்டு வா…” என்று கணவன் சொன்னதும் ஆருஷியும் சரி என்றாள்.

வெகு நாட்களுக்குப் பிறகு மனதில் எதுவும் சஞ்சலம் இல்லாமல்… கணவனும் மனைவியும் சந்தோஷமாக இருந்தனர்.

Advertisement