Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 12

ஆருஷி மிகவும் உற்சாகமாக இருந்தாள். அவளே சென்று துர்காவிடம் எதாவது வேலை இருக்கிறதா என்று கேட்க…. மற்ற சம்பந்தி வீட்டினருக்கும் பிரியாணி, பழங்கள், இனிப்புகள் எல்லாம் கொடுத்து அனுப்ப வேண்டும் என்றார். ஆருஷி அவளே எல்லாம் தனித்தனியாக எடுத்து வைத்து அவர்கள் கிளம்பும் போது… அவளே பொறுப்பாக எல்லாம் எடுத்துக் கொடுத்தாள்.

அன்று விடுமுறை நாள் என்பதால்…. பிரமிளாவும், மஞ்சுளாவும் இரவு உணவு உண்டு தங்கள் கணவர்களுடன் செல்லலாம் என இருந்தனர்.

மகனின் பிறந்த நாளுக்கு வந்திருந்த பரிசு பொருட்களில், அவர்களுக்குப் பிடித்தவைகளை எடுத்துக்கொள்ளும் படி ஆருஷி தனது நாத்தனார்கள் பிள்ளைகளிடம் சொல்லி விட்டாள்.

பிரமிளாவின் மகன்கள் ரிமோட் காரும், அதே போல மஞ்சுளாவின் பிள்ளைகள் சில சாமான்களும் எடுத்துகொள்ள…. ஆருஷி தர்ஷனுக்கும் சில விளையாட்டுப் பொருட்கள் எடுத்து வைத்ததாள்.

யஸ்வந்தும் தர்ஷனும் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தால்… இருவரும் பரிசு பொருட்கள் சுற்றி இருந்த கலர் பேப்பர் மற்றும் பரிசு பொருட்கள் இருந்த அட்டை டப்பாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அட்டை டப்பாவுல கலர் பேப்பர் சுத்தி கொடுத்திருந்தா போதும் போல… வெறும் பத்து ரூபாய்ல முடிஞ்சிருக்கும்.” என ஆதவன் இருவரையும் பார்த்து கேலி செய்ய… மற்றவர்களும் அப்படித்தான் நினைத்தனர்.

குழந்தைகளின் மகிழ்ச்சி விலை உயர்ந்த விளையாட்டு பொருளிலோ அல்லது பணத்திலோ அல்ல… சின்னச் சின்ன விஷயத்தில் கூட அவர்களின் மகிழ்ச்சி இருக்கும்.

நமக்குக் குழந்தைகளோடு நேரம் செலவு செய்ய முடியாமல்… நாம் விளையாட்டுச் சாமான்களை வாங்கி வீட்டை அடைப்பதோடு, பிள்ளைகளையும் ஓடி ஆட விடாமல் வீட்டில் அடைத்து விடுகிறோம். அதுதான் இப்போது பிறந்த குட்டி வாண்டுகள் கூடத் தங்களுக்கென்று கைபேசி வைத்துகொள்ளும் நிலையில் வந்து விட்டிருக்கிறது.

பிரமிளா, வினோத், மஞ்சுளா மற்றும் ஸ்ரீதர் நான்கு பேரும் கீழே இருந்த அறையில் பேசிக் கொண்டு இருந்தனர்.

இத்தனை நாள் செய்யாதவங்க. இப்போ திடிர்ன்னு நகையை வந்து கொடுக்க காரணம் என்ன? இப்போ மட்டும் எப்படிப் பணம் வந்திருக்கும். ஒருவேளை ஆதவனே மாமனார் வீட்டுக்கு நகை செய்யச் சொல்லி பணம் கொடுத்திருப்பானா?” என மஞ்சுளா சந்தேகமாக கேட்க…

இப்போ தான் எல்லாப் பிரச்சனையும் முடிஞ்சிருக்கு. நீ புதுசா ஒன்னு ஆரம்பிக்காத. அப்படியே அவன் கொடுத்திருந்தாலும், அது நமக்குத் தேவை இல்லாதது.” என்றாள் பிரமிளா.

அது எப்படி அப்படி விட முடியும். அப்போ நாம ஏமாந்தவங்களா?” என மஞ்சுளா பார்க்க…

மஞ்சு நீ ஒன்னு புரிஞ்சிக்கோ… உனக்குப் பணம் முக்கியமா இல்ல ஆதவனோட நிம்மதி முக்கியமா? அவன் குடிக்கிறான் உனக்கு அது தெரியுமா? அவன் வேலை பார்க்கிறது கப்பல்ல… அங்க அவன் குடிச்சிட்டு கடல்ல விழுந்தா என்ன பண்ணுவ?”

உனக்கு ஆதவன் நிம்மதி முக்கியமுன்னு நினைச்சா… நீ இதைப் பத்தி வாயே திறக்க கூடாது. அம்மாவுக்கு அவன் குடிக்கிறது தெரிஞ்சா… அவங்க என்ன ஆவாங்க. ஆதவன் இனிமே குடிக்க மாட்டேன்னு சொல்லி இருக்கான். நீ திரும்ப ஒரு பிரச்சனையை ஆரம்பிச்சா…. அவன் மனசு சரி இல்லைன்னு திரும்பக் குடிக்க ஆரம்பிச்சிடுவான்.”

“ஆம்பிளைங்க வெளிய பார்க்கத்தான் பலமானவங்க, ஆனா மனசுல இல்லை. பொம்பளைங்க எவ்வளவு கஷ்ட்டம் வந்தாலும் சமாளிப்பாங்க. ஆனா ஆம்பிளைங்க அப்படி இல்லை.”

பணம் தானே போனா போய்த் தொலையட்டும். ஆதவன் நிம்மதியா இருந்தா போதும்.”

தம்பி குடிக்கிறான் என்றதும் மஞ்சுளாவும் பயந்துதான் போனாள்.

சரிக்கா நான் இனிமே இதைப் பத்தி பேசலை.” என்றாள்.

பேசவும் தேவை இல்லை. நம்ம பிறந்த வீடுனாலும் எல்லா விஷயத்திலேயும் தலையிடனும்னு அவசியம் இல்லை. எல்லா விஷயத்திலேயும் நாம ஆராய்ச்சி பண்ணிட்டே இருந்தா… நாம ஏன் வரோம்னு இங்க இருக்கிறவர்களுக்குத் தோன ஆரம்பிச்சிடும்.”

வந்தா நம்ம மரியாதையைக் காப்பாத்திட்டு போயிடணும். நாம பிறந்த வீட்டுக்கு வர்றதை ஆசையா எதிர்ப்பார்க்கணும், இவங்க ஏன் வர்றாங்கன்னு நினைக்க வைக்கக் கூடாது.”

நம்ம வீட்டு விஷயத்துல யாராவது தலையிட்டா நமக்குப் பிடிக்குமா… அப்படித்தானே ஆருஷிக்கும் வர்ஷாவுக்கும் இருக்கும்.”

பிரமிளா தங்கைக்கு எடுத்து சொல்ல…

இப்போ உன் தம்பியே பணம் போட்டு நகை வாங்கி இருந்தாலும், அந்த நகை உன் தம்பிகிட்ட தான் வந்திருக்கு. அதுவும் ஒரு முதலீடு தான். அப்படி நினைச்சுக்கோ.” என்றான் ஸ்ரீதர்.

கணவன் சொன்னதும் யோசித்துப் பார்த்த மஞ்சுளா, “நீங்க சொல்றது சரிதான். இதனால அவனுக்கு ஒன்னும் இழப்பு இல்லை.” என்றாள்.

பிரமிளா சொல்றது போல… எல்லா விஷயத்தையும் ஆராய்ச்சி பண்ணி கேள்வி கேட்டுட்டே இருக்கணும்னு இல்லை.” என்றான் ஸ்ரீதர்.

நீங்களே யோசிச்சு பாருங்க, ஆதவனை ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்தா அவன் யார் பக்கம் போவான்? போன தடவை பிரச்சனை வந்த போது, அவனுக்கு அம்மாவுக்குப் பேசுறதா… பொண்டாட்டிக்கு பேசுறதா… இல்லை உங்களுக்குப் பேசுறதான்னு திணறித்தான் போனான்.”

ஆம்பிளைங்க நாங்க எல்லோருக்கும் நல்லவங்களா இருக்கணும்னு தான் நினைக்கிறோம். ஆனா நீங்க ஆளுக்கு ஒரு பக்கம் போனா… எந்தப் பக்கம் போகிறது. அந்த அழுத்தம் தாங்காம தான் குடிச்சிருப்பான்.”

வினோத்தும் எடுத்து சொல்ல… இனி இதைப்பற்றித் தாங்கள் யாரும் பேச வேண்டாம் என்ற முடிவுக்கு நால்வரும் வந்தனர்.

இரவு ஆருஷியே பிரயாணி சூடு செய்ய… வர்ஷா எல்லோருக்கும் பரிமாறினாள்.

வினோத்துக்கும் ஸ்ரீதருக்கும் பிரியாணியோடு, மட்டன் குருமா இருக்க… தோசையும் சுட்டுக் கொண்டு வந்து வைத்தனர். வீட்டு மாப்பிள்ளைகளுக்கு மதியம் மீந்ததை மட்டும் போட முடியுமா?

ஆருஷியும் வர்ஷாவும், நான் இதைச் செய்கிறேன், நீ இதைச் செய் என இருவரும் பேசி வைத்துக் கொண்டு வேலை செய்தனர்.

“ஹப்பாடா என்னை விட்டாளுங்க. இல்லைனா என்ன வேலை செய்யட்டும்னு என் மூஞ்சியே பார்த்திட்டு இருப்பாளுங்க.” என துர்கா உணவு உண்டபடி சொல்ல… அதைக் கேட்டு மகன்கள் இருவரும் சிரித்தனர்.

இத்தனை நாள் ஆருஷியின் பிரச்சனை என்ன என்று எல்லோருக்கும் இப்போது புரிந்தது.

இந்த வீட்டிற்குள் வரும் போதே… அவள் குடும்பத்தினரை பற்றி ஒரு தவறான அபிப்ராயம் தான் எல்லோருக்கும். அப்போது அவள் நல்லவிதமாக நடந்து கொண்டிருந்தாலுமே… எப்படி இவ ஒண்ணுமே நடக்காதது போல இருக்கா என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆருஷி அதுதான் ஒடுங்கி இருக்கக் காரணமோ என்னவோ… இப்போது அவள் பெற்றோருக்கு ஏமாற்றும் எண்ணம் இல்லை என எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்பதால்… அவள் உரிமையோடு வளம் வந்தாள்.

இரவு உணவு உண்டு இரு நாத்தனார்கள் குடும்பமும் கிளம்ப… அடுத்த வாரமும் அவர்களை வர சொல்லி ஆருஷியும் வர்ஷாவும் சொல்ல…

நாங்க வந்துட்டே இருந்தா… அப்புறம் ஏன் வர்றாங்கன்னு ஆகிடும். நீங்க வேணா வாங்க. நான் ஒரு வாரம் விட்டு வரோம்.” எனச் சொல்லிவிட்டு இருவரும் சென்றனர்.

எல்லோருக்கும் எல்லாம் சரியானதே போதும் என்றிருந்தது. ஆனால் ஆதவன் அப்படி விடுவானா என்ன? இரவு அறைக்கு வந்தவன் மனைவியிடம், “நீ என்ன நகை வந்தா போதும்னு வாங்கி வச்சுகிட்ட…” என அவன் கேட்க….

வேற என்ன பண்ணனும்னு சொல்றீங்க? அது எங்க வீட்ல எனக்குப் போடுறேன்னு சொன்ன நகை தான…”

இருக்கட்டும், ஆனா உங்க அப்பாவுக்கு அதை வாங்க பணம் எங்க இருந்து வந்துச்சு?”

அது எப்படியும் வந்திட்டு போகுது உங்களுக்கு என்ன? இடம் தான் விக்கிறேன்னு சொன்னாரு இல்ல… அதுல இருந்து வந்திருக்கும்.”

எப்படி டி இப்படி இருக்க நீ. பணம் எப்படி வந்ததுன்னு கூட உனக்குத் தெரிய வேண்டாமா?” ஆதவன் மனைவியை முறைத்து பார்க்க…

நாம ரெண்டு பேரும் காதலிச்சுக் கல்யாணம் பண்ணி இருந்தா கூடப் பரவாயில்லை. எங்க வீட்ல முறையா பேசி நடந்த கல்யாணம். அப்போ எல்லாம் முறையா நடக்கணும் தான…”

நான் எங்க அப்பாகிட்ட எனக்குப் பெரிய இடத்தில மாப்பிள்ளை பாருங்கன்னு சொல்லலை… அவராத்தான் இழுத்து வச்சார். ஏமாத்தி இந்த வீட்டுக்குள்ள நுழைந்த மாதிரி, நான் எத்தனை நாள் கூனி குறுகி இருந்திருக்கேன்னு எனக்குத்தான் தெரியும்.”

போடுறேன்னு சொன்ன நகையாவது போட்டுட்டார். இதுக்கு மேல நான் எதுவும் யோசிக்கிறதா இல்லை. என்னை நிம்மதியா இருக்க விடுங்க.” என்றாள்.

ஆருஷி அவள் பிறந்த வீட்டை பற்றி அக்கறை இல்லாதது போலப் பேசினாலும், இடத்தை விற்றுப் பணம் வந்திருக்கும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தாள். அதனால் அவள் வீட்டினரிடமும் கேட்கவில்லை. ஆதவனால் அப்படி விட முடியவில்லை.

மறுநாள் கல்லூரியில் இருக்கும் நேரம் இலக்கியாவுக்கு அழைத்தான்.

Advertisement