Advertisement

முதலில் பெரியவர்கள் எல்லாம் எழுந்து ஒவ்வொருவராகக் குளித்து விட்டு வர… அடுத்து பிள்ளைகளை எழுப்பிக் கிளம்பச் செய்தனர்.

யஸ்வந்த் எழும்பியதும் ஆருஷி மகனை குளிக்க வைத்து அழைத்து வர… புது உடை உடுத்தி அவனுக்கு ஈஸ்வரும் துர்காவும் தீருநீறு வைத்து ஆசிர்வாதம் செய்தவர்கள், கையில் பத்தாயிரம் பணம் கொடுக்க… அத்தைமார்கள் இருவரும் அவனுக்கு என்று வாங்கி இருந்த செயினைப் போட்டு விட… விஜயன் அண்ணன் மகனுக்குக் கை செயின் வாங்கி இருக்க… அதை வர்ஷா போட்டு விட்டாள்.

என்னடா எல்லாமே அவனுக்கே தர்றீங்க அப்போ எனக்கு என்பது போலத் தர்ஷன் பார்க்க… “தம்பிக்கு வேணுமா?” என ஆருஷி அவனைத் தூக்கி முத்தமிட… அவனுடைய நகைகளைக் கொண்டு வந்து துர்கா கொடுக்க… அதை அவனுக்குப் போட்டு விட்டனர்.

சமையல்காரர்கள் காலை உணவு தயார் செய்து விட்டு மதிய உணவை தயார் செய்ய ஆரம்பித்து இருக்க… முதலில் வர்ஷாவின் பெற்றோர் தான் வந்தனர்.

அவர்களை எல்லோரும் வரவேற்க.. வர்ஷா அவள் பெற்றோருடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். அவள் பெற்றோரும் உரிமையாக நடந்து கொண்டனர்.

தான் தன பெற்றோரிடம் இப்படி இருக்க முடியுமா அல்லது தன் பெற்றோர் தான் இப்படி உரிமையாக இருந்து விட முடியுமா என ஆருஷி யோசிக்க… ஆதவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். மனைவி என்ன யோசிக்கிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

அடுத்து பிரமிளாவின் கணவனும் மாமியாரும் வர… அவர்கள் வந்த சிறிது நேரத்தில் ஸ்ரீதரும் அவன் பெற்றோரும் வந்தனர். கடைசியாகத்தான் ஆருஷியின் பெற்றோர் வந்தனர். இலக்கியாவை மட்டும் தனியாக விட முடியாது என்று அவளையும் அழைத்து வந்திருந்தனர். கன்னியாகுமரியில் இறங்கி ரூம் போட்டுக் குளித்துத் தயராகி வந்திருந்தனர்.

எல்லோரும் அவர்களையும் நன்றாகத்தான் வரவேற்று பேசிக் கொண்டிருந்தனர். விஜயன் அவர்களை நலம் விசாரிக்க… வர்ஷா அவள் கணவனையும் இலக்கியாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க… விஜயன் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டினான். அதிலேயே வர்ஷா குளிர்ந்து விட்டாள்.

யஸ்வந்த் தாத்தாவை பார்த்ததும் அவரிடம் தாவினான். சரத் அவனைக் கொஞ்சி பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர். பேரனுக்குப் பணமும் கொடுத்தார். இதையெல்லாம் ஆருஷி தள்ளி இருந்துதான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

நீங்க இங்கயே வந்து இறங்கி இருக்கலாமே… வாங்க நீங்க வந்ததும் தான் சாப்பிடலாம்னு இருந்தோம். எல்லோரும் வாங்க சாப்பிடலாம்.” என ஈஸ்வர் அழைக்க…

இருங்க சம்பந்தி ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு சாப்பிடலாம்.” என்ற சரத் மனைவிக்கு ஜாடை காட்ட… பார்கவி தனது கைப்பையில் இருந்து, நகைகளை எடுத்து அங்கிருந்த மேஜையில் விரித்து வைத்தார்.

நாங்க போடுறதா சொன்ன நகை… இப்போதான் போட முடிஞ்சது. தப்பா நினைச்சுக்கக் கூடாது.” என சரத் சொல்ல…

கல்யாணத்தோட போடலைன்னு எங்களுக்கு வருத்தம் இருந்தது உண்மை தான். ஆனா இப்போ நாங்க இதையெல்லாம் எதிர்பார்க்கலை… இது எல்லாம் இல்லாமலும் எங்க மருமகளை நாங்க நல்லாத்தான் வச்சிருக்கோம். நீங்க தயவு செஞ்சு எடுத்திட்டு போயிடுங்க. இதனால நாங்க நிறைய மத்தவங்ககிட்ட பேச்சு வாங்கிட்டோம்.” என்றார் துர்கா.

ஐயோ சம்பந்தி, நீங்க எங்களைத் தப்பா நினைக்காதீங்க. எங்க பெண்ணை நீங்க நல்லா தான் பார்த்துக்கிறீங்க, அதுக்காகச் செய்யலை… நான் சொன்ன வார்த்தையைக் காப்பாத்தணும் இல்ல… அதுக்குதான் தப்பா நினைக்காதீங்க.” என்றார் சரத்.

மாமா நாம இதையெல்லாம் கடந்து வந்தாச்சு… இதை நீங்க இலக்கியாவுக்கு வச்சுக்கோங்க.” என்றான் ஆதவன். அவன் மனைவி எதாவது சொல்வாள் என்று ஆருஷியை பார்த்தால்… அவள் எதுவும் சொல்வதாக இல்லை.

பிரமிளாவின் மாமியாரும், மஞ்சுளாவின் மாமியாரும், “கல்யாணத்துக்கு இதெல்லாம் செய்யுறது முறை தானே… அதோட அவங்களுக்கும் அவங்க பெண்ணுக்குச் செய்ய ஆசை இருக்கும். அதோட அவங்க சொன்ன வார்த்தையைக் காப்பாத்தினா தான அவங்களுக்கு மரியாதை. அவங்க சொன்னபடி செஞ்சிட்டாங்க. இதுல உங்களைத் தவறா நினைக்க என்ன இருக்கு. நீங்க நகையை எடுத்து உள்ள வைங்க.” எனத் தங்கள் சம்பந்திக்கு சொல்ல…

துர்காவும் ஈஸ்வரும் ஏதுவும் சொல்லவில்லை. ஆனால் ஆருஷி அதையெல்லாம் எடுத்துக் கொண்டவள், “வாங்க சாப்பிடலாம்.” என எல்லோரையும் பொதுவாக அழைத்தாள்.

சரத் தங்களை ஏமாற்ற நினைக்கவில்லை என்பது ஆதவனின் வீட்டினருக்கு ஆறுதல் தான். ஏமாற்ற பட்டோமே என்ற கோபத்தில் தானே கொதித்துப் போய் இருந்தனர். சரத் மீது மரியாதையும் உண்டானது.

காலை உணவு முடிந்து, எல்லோரும் விழாவுக்காகப் பிரத்யேகமாகத் தயாராக… துர்கா மகள்கள் மருமகள்கள் நான்கு பேருக்கும் ஒரே மாதிரி புதுவை எடுத்திருக்க… அதையே நான்கு பேரும் கட்டிக் கொண்டு வந்தனர். ஆருஷி இப்போது புதிதாக வாங்கி இருந்த நகைகளை அணிந்து கொண்டாள்.

விழாவுக்கு விருந்தினர்கள் வரத் தொடங்க… எல்லோரும் பரபரப்பாகச் சுற்றிக் கொண்டு இருந்தனர்.

ஆதவன் மனைவியைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். ஆருஷியின் முகத்தில் கூடுதல் மகிழ்ச்சி. ரொம்பவும் யோசித்துத் தான் மற்றவர்களிடம் பேசுவாள்…. இன்று எல்லோரோடும் நன்றாகப் பேசிக் கொண்டு இருந்தாள்.

கேக் வெட்டும் சமயம் யஸ்வந்தின் அருகே தர்ஷன் மற்றும் நாத்தனார் பிள்ளைகளை நிறுத்தி வைத்த ஆருஷி, “அத்தை நீங்களே அவன் கைபிடிச்சு கேக் வெட்டுங்க.” என மாமியாரிடம் பொறுப்பைக் கொடுக்க….

நீயும் உன் புருஷனும் சேர்ந்து நில்லுங்க.” எனச் சொல்லிவிட்டு துர்கா நகர்ந்து கொண்டார்.

கேக் வெட்டி முடித்ததும், யஸ்வந்துக்கு கேக்கை எடுத்து ஆதவன் ஊட்டி விட… அதே போல ஆருஷியும் கொடுத்தாள்.

யஸ்வந்திடம் கேக்கை கொடுத்து பதிலுக்குக் கொடுக்கச் சொன்னால்… அவனே உண்டு விட்டான். அவனுக்குக் கேக் ரொம்பப் பிடித்திருந்தது. அதைப் பார்த்து தர்ஷனும் அவனே கேக்கை எடுத்து உண்ண… அண்ணனும் தம்பியும் கேக்கை காலி செய்ய….

ஏய் எங்களுக்கும் வேணும் இல்ல…” என்றாள் தீபிகா. அவள் தனக்குக் கிடைக்காதோ எனப் பயந்து விட்டாள். அதைப் பார்த்து எல்லோருக்கும் ஒரே சிரிப்பு.

பிரமிளாவின் பிள்ளைகள், மஞ்சுளாவின் பிள்ளைகள் எல்லாம் ஆளுக்கொரு பரிசு பொருளை யஸ்வந்திற்குக் கொடுக்க… அடுத்த வந்திருந்த விருந்தினர்களும் தாங்கள் கொண்டு வந்த பரிசு பொருட்களைக் கொடுத்தனர்.

விருந்தினர்களுக்கு மட்டன் பிரியாணி, மட்டன் குழம்பு, சிக்கென் வறுவல் என எல்லாம் பரிமாறப் பட… விருந்தினர்கள் வயிறு நிறைய விருந்து உண்டு கிளம்பி சென்றனர்.

பிரமிளாவின் மாமியாரும், மஞ்சுளாவின் மாமியாரும், ஆருஷியின் பெற்றோர் தங்கள் மகளுக்குச் செய்ய வேண்டியதை செய்து விட்டனர் என்பதைத் தகவலாக உறவினர்கள் காதில் போட்டு விட்டனர்.

மாலையே ரயில் என்பதால்… ஆருஷியின் பெற்றோர் சீக்கிரமே கிளம்ப… அவர்களுக்கு இரவுக்கு உண்ண உணவை கட்டிக் கொடுத்தனர். அதோடு அவர்களுக்குப் பதில் மரியாதையாகப் பழங்கள் இனிப்புகள் என நிறையவே தட்டில் வைத்து பிரமிளாவும் மஞ்சுளாவும் கொண்டு வந்து கொடுத்தனர்.

கிளம்பும் சமயம், “நான் செய்யுறேன்னு சொன்ன மிச்சத்தையும் இன்னும் கொஞ்ச நாள்ல செஞ்சிடுறேன்.” என சரத் ஆதவனிடம் சொல்ல…

இந்த அப்பா வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தாலே போதுமே என்றிருந்தது ஆருஷிக்கு.

மாமா நான் இங்க வந்த பிறகு எனக்குப் பிடிச்ச மாதிரி கார் வாங்கிக்கிறேன். நீங்க உங்க பொண்ணு ஓட்ட வேணா வாங்கிக் கொடுங்க.” என ஆதவன் மனைவியைப் பார்த்துக் கொண்டு சொல்ல…

ஆருஷிக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது. அவள் எங்கே கார் ஓட்டுவது.

உங்க பொண்ணு கார் ஓட்ட பழகின பிறகு நீங்க அவளுக்கு வாங்கிக் கொடுங்க.” எனச் சொல்லிவிட்டு ஆதவன் சென்று விட….

அது இந்த ஜென்மத்தில் நடக்காது. அது தெரிந்து தானே சொல்லிவிட்டுச் செல்கிறான்.

ஆருஷி பெற்றோரை வழியனுப்பி விட்டு உள்ளே சென்றாள்.

Advertisement