Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 11

யஸ்வந்தும் தர்ஷனும் குட்டி பூச்சாண்டிகள் போல வெள்ளையாக உட்கார்ந்திருக்க… ஆருஷிக்கும் வர்ஷாவுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

அம்மாவைப் பார்த்ததும் காலையில் வாங்கிய அடி தர்ஷனுக்கு நினைவு வர… அடிப்பதற்கு முன்பே அவன் உஷாராகிக் கத்தி அழ துவங்கி விட்டான். (இப்போ பிறக்கும் குழந்தைகள் எல்லாம் பெற்றோரை சமாளிப்பது எப்படின்னு  வயித்துக்குள்ள இருக்கும் போதே பி எச் டி முடிச்சிட்டு தான் வர்றாங்க.) அந்தச் சத்தத்தில் ஆதவனும் விஜயனும் எழுந்துகொள்ள… மற்றும் உள்ளிருந்து அத்தைகளும் வந்துவிட்டனர்.

என்ன டி பண்ண?” என விஜயன் மனைவியைப் பார்த்துக் கேட்க…

ம்ம்… என்னை ஏன் கேட்கிறீங்க? அங்க பாருங்க.” என்றாள்.

இருவரையும் பார்த்ததுமே எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. அடிக்காமல் எல்லோரும் சிரிக்கத் தொடங்கவும் தர்ஷனும் அழுகையை நிறுத்தி விட்டுச் சிரிக்கத் தொடங்க.

உங்க பையன் பண்ணி வச்சிருக்க வேலையைப் பார்த்தீங்களா?” என ஆருஷி ஆதவனிடம் கேட்க…

இதுக்கு என்ன? குழந்தைங்க எதாவது செஞ்சிட்டு தான் இருக்கும். சும்மா இருக்க அவங்க பெரியவங்க இல்லை. தூங்கிற நேரம் தவிரக் குழந்தைங்க தன்னை ஆக்டிவ்வா தான் வச்சுப்பாங்க.” என்றான்.

இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகக் கூடாது ரசிக்கணும்.” என்ற பிரமிளா… மாடியில் இருந்த பிள்ளைகளுக்குக் குரல் கொடுக்க… அவர்கள் வந்து பார்த்துவிட்டு சிரிக்க… விஜயன் முதலில் அண்ணனையும் தம்பியையும் மட்டும் படம் பிடித்தவன், பிறகு மற்றவர்களோடு சேர்த்து எடுத்தான்.

ஈஸ்வர் உறங்கி இருக்கத் துர்காவையும் அழைத்து வந்து பேரன்களைக் காட்ட… அவரும் சிரித்து விட்டார்.

ரசிச்சீங்க இல்ல… போய் நீங்களே குளிப்பாட்டுங்க.” என ஆருஷியும் வர்ஷாவும் உட்கார்ந்து விட….

மஞ்சுளா துண்டை எடுத்து வந்து இருவருக்கும் உடலில் இருந்த பவுடரை துடைத்து விட… பிரமிளா தூக்கி சென்று இருவரின் தலையை மட்டும் அலசிவிட்டு வர… அத்தைமார்களே தலை துவட்டி உடைமாற்றி விட… இருவரும் மீண்டும் ஜம்மென்று இருந்தனர்.

ரெண்டு பேரும் எதுல ஒத்துமையா இருக்கீங்களோ இல்லையோ… வேலை செய்யாம தப்பிக்கிறதுல இருக்கீங்க.” என்றான் ஆதவன்.

கொஞ்ச நேரம் பார்த்துக்கச் சொல்லி விட்டா… பார்த்துக்க முடியலை. பேச்சை பாரு.” என ஆருஷியும்,

நீங்க லீவ் முடிஞ்சு போனதுக்கு அப்புறம் நாங்க தான பார்த்துக்கிறோம். இப்போ நீங்க பார்த்துக்கோங்க.” என வர்ஷாவும் சொல்ல…

அப்படியா என்ற ஆதவன் மீண்டும் பவுடர் டப்பாவை எடுத்து மகன் கையில் கொடுக்க… யஸ்வந்த் குஷியாக வாங்கிக்கொள்ள…

திரும்பக் குளிச்சா சளி பிடிக்கும்.” என ஆருஷி பவுடர் டப்பாவை பிடுங்கி வைத்தவள், மகனை தூக்கிக் கொண்டு செல்ல… தர்ஷனும் அவள் பின்னே சென்று விட்டான்.

நீ இப்போ ப்ரீ தான… காளிபிளவர் வறுத்து டயர்டா இருப்ப… போய்த் தூங்கு.” என விஜயன் மனைவியைக் கிண்டலாகப் பார்க்க… வர்ஷா அவனை முறைத்து விட்டு சென்றாள்.

அண்ணனும் தம்பியும் மீண்டும் படுத்து உறங்கி விட்டனர்.

மாலை நேரத்துடனே எல்லோரும் இரவு உணவு உண்ண வெளியே கிளம்ப….. துர்கா தான் இரவு அதிகம் சாப்பிடுவதில்லை என வர மறுக்க.. ஈஸ்வரும் வரவில்லை என்றார். ஆனால் மகன்கள் விடாமல் பெற்றோரையும் அழைத்துத் தான் சென்றனர். இன்னும் துர்கா மருமகள்களிடம் முகம் கொடுத்து பேசவில்லை. ஈஸ்வரிடமும் நடந்ததைச் சொல்லி இருந்தார்.

இரண்டு கார்களில் பெரிய உணவகத்திற்குச் சென்று பிள்ளைகள் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுக்க… யஸ்வந்துக்கும் தர்ஷனுக்கும் இட்லி வர…

எங்களுக்கு மட்டும் இட்லியா என நினைத்த யஸ்வந்த், தட்டில் இருந்த ஒரு கோழி காலை எடுத்து கடிக்க…. அதைப் பார்த்த தர்ஷனும் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டான்.

அவர்கள் இருவரிடமும் இருந்து வாங்கவே முடியவில்லை.

யஸ்வந்த் கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்து உண்ண… தர்ஷன் சும்மா சப்பிக் கொண்டு தான் இருந்தான். இருவருக்கும் இட்லி ஊட்டி முடித்து, பிறகு மற்றவர்கள் உண்டனர்.

தம்பிகள் இருவரும் அக்காள்களை, இது வேண்டுமா அது வேண்டுமா என்று கேட்டவர்கள், ஆருஷியையும் வர்ஷாவையும் மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? அவர்களையும் தான் கவனித்தார்கள்.

என்ன டா பொண்டாட்டியை விழுந்து விழுந்து உபசரிக்கிறீங்க?” என பிரமிளா கேலி செய்ய…

நாளைக்கு ரெண்டு பேரும் அவங்க அப்பா அம்மாவோட கிளம்பிடுவாங்க இல்ல… அது தான் கவனிக்கிறோம்.” என்றான் ஆதவன் வேண்டுமென்றே.

ஆமாம் அதுதான் நல்லா கவனிச்சு அனுப்புறோம்.” என்றான் விஜயன் அண்ணனோடு சேர்ந்து கொண்டு. 

ஆருஷி வர்ஷாவின் முகங்கள் மாற…. எதுக்க டா திரும்ப ஆரம்பிக்கிறீங்க?” என்பது போலச் சகோதரிகள் பார்க்க…

நாங்க போறோம்னு உங்ககிட்ட சொன்னோமா…” என வர்ஷா கேட்க….

போறதுன்னா நாளைக்குப் போயிடுங்க. சும்மா பூச்சாண்டி காட்டிட்டு இருக்கக் கூடாது. அதுதான் சொல்ல வரோம்.” என்றான் ஆதவன்.

அதே போல இங்க இருக்கிறதுனாலும் ஒழுங்கா இருக்கணும். என்னன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.” என்றான் விஜயன்.

இனிமேல் சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போகிறேன் என விளையாட்டுக்கு கூடச் சொல்ல முடியாது என்பதைப் புரிந்து கொண்ட ஆருஷியும், வர்ஷாவும் எதுவும் பேசாமல் அமைதியாக உண்டனர்.

சரி அவளுங்களை அனுப்பிடுவீங்க. ஆனா நீங்க பெத்ததுங்களை என்ன பண்றதா இருக்கீங்க?” என துர்கா கேட்க… மகன்கள் இருவரும் அமைதியாக இருந்தனர்.

சும்மா எதாவது பேசணும்னு பேசக் கூடாது. நடக்கிறதா பேசுங்க.”

மாமியார் நாத்தனார்னாலே வில்லியா நினைக்கக் கூடாது. அவங்க சொல்றதுல இருக்கிற நல்லதையும் எடுத்துக்கணும்.”

முன்னாடியே நான், உன் அக்கா எல்லாம் என்ன சொன்னோம். அவளாத் திரும்பி வரட்டும்னு தான் சொன்னோம். அப்போத்தான் இப்படி வீட்டை விட்டு போகணும்னு எண்ணம் வராதுன்னு தான் அப்படி சொன்னோம். மத்தபடி நீங்க புருஷன் பொண்டாட்டி சேர்ந்து இருக்கக் கூடாதுன்னு நாங்க சொல்லவே இல்லை.”

ஆனா நீ அப்படித்தான் புரிஞ்சிகிட்ட… எங்களோட பேசாம இருந்த, உன் அக்காள்களோட பேசாம இருந்த… அப்படியும் நீ வந்ததும், அவங்க வந்து பார்த்தாங்க. ஏன் வந்தாங்க? அவங்களுக்கு அவங்க தம்பி வேணும் அதனால வந்தாங்க.”

நீ இங்க இருக்கிறதுனால ஆருஷி இங்க இருக்கா… இப்பவும் அவ மனம் ஒத்து இருக்கான்னு என்னால சொல்ல முடியலை. அவங்க போனாங்களே.. நாமும் போனா என்னன்னு வர்ஷாவும் நினைக்கிறா?”

பொண்ணுங்க பிறந்த வீட்ல இருந்தா… சில சலுகைகள் பெத்தவங்க கொடுக்கத்தான் செய்வாங்க. அவங்களைக் குத்தம் சொல்ல முடியாது.”

உங்க பிள்ளைகளை நீங்க கண்டிப்பா வளர்க்கனும்னு நினைச்சா… நீங்க உங்க பொண்டாட்டியோட சேர்ந்து இருந்து குடும்பம் நடத்துங்க. நான் அவ்வளவு தான் சொல்வேன்.”

நாளைக்குப் பிறந்தநாள் விழா முடிஞ்சு போறவங்க போங்க… ஆனா விருப்பம் இல்லாம யாரும் இங்க இருக்க வேண்டாம்.” என துர்கா மனதிலிருப்பதை வெளிப்படையாகச் சொல்லி விட்டார். மகன்களுக்குத் தான் அம்மாவை தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

வீட்டிற்கு வந்ததும் மறுநாள் பிறந்த நாள் விழா கொண்டாட ஹாலை தயார் செய்தனர். பிரமிளாவின் பிள்ளைகள், மஞ்சுளாவின் பிள்ளைகள் எல்லாம் தங்கள் மாமன்களோடு சேர்ந்து பலூன் ஊதுவதும், அதை அங்கங்கே ஓட்ட வைப்பதுமாக இருந்தனர். ஆருஷி வர்ஷா இருவருக்குமே இந்த வேலைகள் எல்லாம் அத்துப்படி…. இருவரும் நாளைந்துப் பலூன்களை அழகாக வடிவமைத்து வீட்டில் அங்கங்கே தொங்க விட்டனர். யஸ்வந்தும் தர்ஷனும் பலூன்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

மாலையே ஆட்கள் வந்து முன்புறம் பந்தி போடவும், பின்புறம் தோப்பில் சமைக்கவும் பந்தல் அமைத்துவிட்டு சென்றிருந்தனர். அதோடு சமையல் பாத்திரங்கள்… உட்கார நாற்காலிகள் என எல்லாம் வந்து இறங்கி இருந்தது. சமையல்காரர்கள் விடியற்காலையில் வந்து விடுவதாக இருந்தது.

மறுநாள் காலை உணவுக்கே எல்லாச் சம்பந்தி வீட்டினரையும் அழைத்திருந்தனர். அதனால் அதிகாலை எழுந்து வேலை இருக்கிறது என்று துர்காவும் ஈஸ்வரும் நேரத்தோடு படுக்கக் சென்றிருக்க… ஹாலை அலங்கரித்து முடித்ததும், பிரமிளாவும் மஞ்சுளாவும் பிள்ளைகளைப் படுக்க வைத்து அவர்களும் படுத்துக் கொண்டனர்.

அறைக்கு வந்த கணவனிடம் ஆருஷி, “சாரி என்னால தான அத்தைகிட்ட உங்களுக்குப் பேச்சு கிடைச்சது.” என்று சொல்ல…

எங்க அம்மா என்னைப் பேசினாங்க. அதுல எனக்கு வருத்தம் இல்லை. ஆனா அம்மா சொன்னதை நீ யோசிச்சிக்கோ… சும்மா நான் இருக்கிற வரை இங்க இருக்கலாம்னு நினைச்சிட்டு இருக்கக் கூடாது.”

உங்க அப்பா யஸ்வந்த்துக்குச் செல்லம் கொடுக்கிறாருன்னு நீயே சொல்ற… இங்க அம்மாவுக்கு எதுக்குக் கண்டிக்கனும், எதுக்குச் செல்லம் கொடுக்கணும்னு தெரியும். நான் வெளிநாடு போன பிறகும், நீ இங்க இருக்கிறது தான் எனக்கு விருப்பம்.”

என்னால உடனே வேலையை மாத்த முடியாது. இன்னும் ஒரு வருஷம் ஆகலாம். நான் இங்கயே எதாவது சொந்த பிஸ்னஸ் செய்யலாம்னு இருக்கேன்.”

இங்க ஊர்லையே நமக்கு வீடு, தோப்பு அதோட இன்னும் நிறைய இடங்கள் இருக்கு. நான் ஓரளவு சம்பாதிச்சிட்டு, இங்க ஊர்ல செட்டில் ஆகத் தான் எனக்கு விருப்பம்.”

நீ யோசிச்சு சொல்லு. அதுக்கு மேல உங்க வீட்ல இருக்கத்தான் உனக்கு விருப்பம்னா… யஸ்வந்தை நல்லபடியா வளர்க்கணும். அதுக்கு நீதான் பொறுப்பு.” சொல்லிவிட்டு ஆதவன் படுத்துக் கொண்டான். தன்னால் மாமியார் வீட்டில் இருக்க முடியுமா? என ஆருஷி யோசிக்க ஆரம்பித்தாள்.

நீ எல்லாம் எங்க வீட்ல இருந்துக்க மாட்ட… எங்க அப்பா அம்மாவாவது நிம்மதியா இருக்கட்டும். நான் இருக்கிற வரை இருந்திட்டு, அப்புறம் உன்னை உங்க வீட்ல விட்டுட்டுப் போறேன். இந்த ப்ராஜக்ட் முடிஞ்சதும், சென்னைக்கு வேலை மாத்தி கேட்கிறேன். அப்போ சேர்ந்து குப்பைக் கொட்டிக்கலாம். இருக்கிற வரை பிரச்சனை பண்ணாம இரு.” என விஜயன் வர்ஷாவிடம் முகத்தில் அடிப்பது போலச் சொல்லிவிட்டான்.

இதற்கு அவன் இரண்டு அடியே அடித்திருக்காலாம் என வர்ஷாவுக்குத் தோன்றியது. தன்னால் மாமனார் மாமியார் வீட்டில் இருந்து கொள்ள முடியாது என அவளும் நினைத்தாள். அதனால் மறுப்பாக எதுவும் சொல்லவில்லை.

அதிகாலை எழுந்த துர்கா, தோப்பு வீட்டில் இருக்கும் அவர்களின் வீட்டு வேலை ஆளை அழைத்து வீட்டை சுத்தம் செய்ய வைத்தார். கணவன் மனைவி இரண்டு பேர் இங்கேயே தங்கி இருக்கிறார்கள். கணவன் தான் இரவு காவலுக்கு வீட்டின் முன்புறம் படுத்துக் கொள்வது. அவர் மனைவி வீட்டு வேலை செய்வார். காலை வேலை முடித்ததும், இருவரும் தோப்பில் வேலை பார்ப்பார்கள். இன்னும் மற்ற வேலைகளும் இருக்கும். முன்புறம் பின்புறம் எல்லாம் அந்த ஆள் சுத்தம் செய்ய… சமையல் ஆட்களும் வந்துவிட்டனர்.

Advertisement