Advertisement

இவனிடம் தான் அடி வாங்கினோம் என யஸ்வந்தும் நினைக்கவில்லை… இவனால் தான் அடி வாங்கினோம் என தர்ஷனும் நினைக்கவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து சந்தோஷமாகத் தான் விளையாடினர். அதுதான் குழந்தை மணம். குழந்தைகள் தேவையில்லாதது எல்லாம் நினைவு வைத்துக் கொள்வது இல்லை. பெரியவர்கள் தான் தேவை இல்லாத பகைமையை வளர்த்துக் கொள்வது.

ஈஸ்வர் வீட்டில் இல்லை. துர்கா பின்கட்டில் குளித்துக் கொண்டிருக்க… அவருக்கு நடந்தது எதுவும் தெரியாது. அவர் வீட்டின் உள்ளே வர… அவரிடம் மஞ்சுளா நடந்ததைச் சொன்னாள்.

வெயில் அதிகமாக இருக்க.. எல்லோரும் உள்ளே வந்தனர். துர்கா பேரன்களைத் தான் முதலில் ஆராய்ந்தார். விஜயனும் வர்ஷாவும் கீழே அறையில் இருந்தனர். வர்ஷா கத்துவது வெளியே வரை கேட்டது.

அவன் என் பையன்…. எனக்கு இல்லாத பாசம் தான் உங்க அண்ணிக்கு இருக்கா… என்கிட்டே கத்துறாங்க. உங்க அண்ணன் உங்க அண்ணிக்கு எப்படிச் சப்போர்ட் பண்றார்… நேத்து எல்லோருக்கும் தோசை ஊத்தும் போது பேசாம தான இருந்தார். எனக்கு ஊத்தும் போது மட்டும் எப்படிப் பேசினார். பொண்டாட்டியை உங்க அண்ணன் அந்தத் தாங்கு தாங்கும் போது… நீங்க என்னை எல்லார் முன்னாடியும் அடிக்க வர்றீங்க.” என வர்ஷா அதையே கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது. நான் எங்க வீட்டுக்கு இப்பவே போகணும்.” என்றாள்.

இப்ப எப்படிப் போக முடியும்?”

ஏன் உங்க அண்ணி போகலையா? இப்போதானே நிதானமா மூன்னு வருஷத்துக்கு அப்புறம் வந்திருக்காங்க. நானும் எனக்கு எப்போ வரணுமோ அப்போ வந்துக்கிறேன்.” என்றாள் வீம்பாக.

சும்மாவே அவளுக்கு இங்கே இருக்கப் பிடிக்காது. இப்போது இப்படி ஒரு பிரச்சனை வேறு… இனிமேல் இவளை இங்கே பிடித்து வைத்தாலும், எல்லோருக்கும் நிம்மதி இல்லாமல் செய்வாள் என நினைத்த விஜயன், அவள் போகட்டும் என்ற முடிவுக்கே வந்தான்.

அம்மாடி இவள் என்ன இப்படிப் பேசுகிறாள் என்று தான் வெளியே எல்லோருக்கும் இருந்தது. ஆதவன் ஆருஷியை தான் முறைத்தான். அவ பேசுறதுக்கு இடம் கொடுத்தது நீதானே… நீ ஒழுங்கா இருந்திருந்தா… எனக் கேட்டது அவனின் பார்வை.

விஜயன் வெளியே வந்த போது… யாரும் எதுவும் கேட்டது போலக் காட்டிக்கொள்ளவில்லை.

அம்மா அவளுக்கு அவங்க வீட்டுக்குப் போகணுமாம். நான் போய் விட்டுட்டு வரேன்.”

நாளைக்கு வீட்ல விசேஷம் வச்சிட்டு போவாளா அவ… அவளை இங்க வர சொல்லு.” என்ற துர்கா,

வர்ஷா இங்க வா…” எனக் குரல் கொடுக்க, வர்ஷா வெளியே வந்தாள்.

உங்க இஷ்ட்டத்துக்கு வர்றதுக்கும் போறதுக்கும், இது என்ன வீடா இல்ல சத்திரமா? இங்க நாங்க பெரியவங்க இல்லை. எங்களுக்கு மரியாதை இல்லையா?”

மூத்தவன் பொண்டாட்டி வீட்டை விட்டு போனதுக்கு உன்னைக் காரணம் சொன்னா… இப்போ நீ அவளைக் காரணமா சொல்லிட்டு போற…”

உங்க ரெண்டு பேருக்கும் என்னைப் பார்த்தா எப்படி இருக்கு?”

நீ அக்கான்னு மதிச்சு ஆருஷியோட பேசினியா? அப்போ எப்படி அவன் பொண்டாட்டியை உனக்கு வேலை செய்ய விடுவான். அதனால ஆதவன் அப்படிச் சொன்னான்.”

அவன் சொன்னது தப்புனா… நீ நடந்துகிட்டதும் தப்பு தானே…”

இப்போதான் மூத்தவன் மூன்னு வருஷத்துக்கு அப்புறம் பொண்டாட்டியோட சேர்ந்து இருக்கான். அடுத்து நீ ஆரம்பிக்காத.”

நாளைக்கு விசேஷம் இருக்கு. அதுக்கு உன் அப்பா அம்மா வருவாங்க, அது முடிஞ்சு அவங்க போகும் போது அவங்களோட போ…”

திரும்ப இந்தக் குடும்பத்தைப் பார்த்து ஊர் பேசுற மாதிரி வைக்காதீங்க. போதும் ரெண்டு பையனை பெத்திட்டு நான் படுற பாடு. நாளைக்கு விழா முடிஞ்சு… எல்லாம் கிளம்பிட்டே இருங்க…”

யாரும் இங்க வரவும் வேண்டாம், போகவும் வேண்டாம். எனக்கும் என் புருஷனுக்கும் தனியா இருந்துக்கத் தெரியும்.” என்றார் துர்கா ரோஷமாக.

மருமகள்கள் இருவரும் முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு தான் நின்றனர்.

அம்மா எங்களையும் சேர்த்து ஏன் மா சொல்றீங்க?” என்ற விஜயன்,

வர்ஷா உனக்குப் போகணும்னா போ… ஆனா நான் வந்து எட்டி கூடப் பார்க்க மாட்டேன். இனி எல்லாம் உன்னைத் தாங்கிறதா இல்லை.” என,

உனக்கும் அதே தான்.” என்றான் ஆதவன் ஆருஷியை பார்த்து.

சரி டா விடுங்க. சும்மா பிரச்சனையைப் பெரிசாகிட்டே போகாதீங்க.” என்றாள் பிரமிளா.

துர்கா அறையில் சென்று படுத்து விட்டார். நிஜமாகவே அவருக்கு முடியவில்லை. ஆருஷியும் வர்ஷாவும் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்து விட்டனர். யஸ்வந்தும் தர்ஷனும் உறங்கி இருந்தனர். இவர்கள் தான் சண்டைக்கு காரணம். ஆனால் அவர்கள் படுத்து உறங்கி விட்டார்கள்.

பன்னிரண்டு மணி ஆகி விட்டது. பிரமிளா எதாவது சமைக்கலாமா என்று கேட்க…

அக்கா இது என்ன உன் வீடா? நீ உன் வேலையைப் பாரு…. நாமெல்லாம் நாள் முழுக்கத் திட்டிட்டு, குறை சொல்லிட்டு இருக்க மாமியாரோட குப்பைக் கொட்டலையா… இவங்க என்ன நம்மைப் போலக் கூடவே இருக்காங்களா? என்னைக்கோ வர்ற மாமியார் வீட்ல கூட இவங்களால அனுசரிச்சு இருக்க முடியாதா? அவங்க செஞ்சா செய்யட்டும் செய்யலைனா இருக்கட்டும்.” என மஞ்சுளா சத்தமாகத்தான் சொன்னாள்.

நாம ஏன் இங்க உட்கார்ந்திட்டு, வீட்டுக்கு போயிட்டு நாளைக்குக் கூட வரலாம்.” எனவும் சொல்ல…

அண்ணி இருங்க அண்ணி. நான் சமைக்கிறேன்.” என ஆருஷி எழுந்து கொள்ள… இதற்கு மேல தான் மட்டும் சும்மா இருந்தால் நன்றாக இருக்காது என்று வர்ஷாவும் எழுந்து கொண்டாள்.

என்ன செய்யட்டும்?” என ஆருஷி கேட்க…

என்ன உனக்குச் செய்யத் தெரியுமோ செய்… இது வேணும் அது வேணும்னு எல்லாம் நாங்க கேட்கலை… வர்ஷா உனக்கும் தான். உனக்கு என்ன செய்யத் தெரியுமோ செய்.” என்றாள் பிரமிளா.

ஆருஷி சென்று பெரிய பானையில் உலை வைக்க… வர்ஷா என்ன இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

டேய் ரெண்டு பேரும் போய் என்ன பண்றாங்கன்னு பாருங்க. சாயந்திரம் வரை சோறே ஆக்கப் போறாளுங்க. நீங்களும் கூட மாட வேலை செய்யுங்க.” எனத் தம்பிகளை விரட்டிய மஞ்சுளா…

ஒரு ரெண்டு நாள் உட்கார்ந்து சாப்பிட்டு போகலாம்னா முடியுதா…” என்று முனங்க… பிரமிளா சிரித்து விட்டாள். உண்மையில் மஞ்சுளாவுக்கு வீட்டில் நிறைய வேலைகள் இருக்கும். மாமனார் மாமியார் இருவருமே உடல்நலம் சரி இல்லாதவர்கள். பிள்ளைகளுக்கு ஒன்று செய்து அவர்களுக்கு ஒன்று செய்வாள்.

மகள்கள் இருவரும் அவர்கள் அம்மாவை சமாதானம் செய்யச் சென்றனர்.

வர்ஷா, இன்னைக்கு எங்க அக்களுங்களுக்கு நீ யாருன்னு காட்டுற…. அவளுங்க ரெண்டு பேருக்கும் அவளுங்களுக்குத்தான் எல்லாம் தெரியும்னு நினைப்பு.” என விஜயன் வர்ஷாவை ஏற்றி விட… ஆதவன் அவனைப் பார்த்து கிண்டலாகச் சிரிக்க…

ப்ரதர் நீங்க வந்த வேலையைப் பாருங்க.” என்றான்.

எதாவது வாங்கனுமா ஆருஷி?” ஆதவன் கேட்க…

எல்லாம் இருக்கு. ஆனா நேத்து தான் சாம்பார் வச்சோம். இன்னைக்குப் பருப்பு ரசம் வச்சிடலாமா?” ஆருஷி சொல்ல…

தொட்டுக்க வேணா காலிபிளவர் வறுக்கலாம். அது எனக்குச் செய்யத் தெரியும்.” என்றாள் வர்ஷா. “அதோட முட்டை ஆம்லேட் போட்டுக்கலாம்.” என, அந்த இரண்டு வேலைகளை அவளுக்குக் கொடுத்து விட்டு, அரிசியை உலையில் போட்டுவிட்டு, ஆருஷி பருப்பு ரசம் வைக்க ஆரம்பித்தாள்.

இருவரும் மெல்ல செய்தாலும், இரண்டு மணிக்கு முடித்து விட்டார்கள். ஆனால் இரண்டு பேரும் அவரவர் புருஷன்களைத் தான் உப்பு இருக்கிறதா, உறைப்பு இருக்கிறதா பார் என்று ஒருவழியாக்கி இருந்தனர்.

ஆதவன் சென்று எல்லோரையும் சாப்பிட அழைக்க… பிரமிளா முதலில் பிள்ளைகளுக்குப் போட்டு கொடுத்தவள், பிறகு பெற்றோர்களுக்கும் பரிமாறி… அவளும் மஞ்சுளாவும் உண்டனர். பிள்ளைகள் உண்டு விட்டு மாடிக்கு விளையாட சென்று விட்டனர். 

எப்படி இருக்கு அண்ணி?” என ஆருஷி கேட்க…

காலிபிளவர் நான்தான் பண்ணேன்.” என வர்ஷா சொல்ல….

எல்லாமே நல்லா இருந்துச்சு.” என பிரமிளாவும்., 

வந்ததுக்கு இன்னைக்கு நல்ல சாப்பாடு போட்டிருக்கீங்க.” என மஞ்சுளாவும் சொல்ல… ஆதவனுக்கும் விஜையனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

அவர்கள் எலலம் உண்டதும் மீண்டும் அறைக்குச் சென்று விட்டனர்.

ஆருஷி பிள்ளைகளுக்கு ஊட்டிக் கொண்டிருக்க… விஜயன் ஆதவனைச் சாப்பிடக் கூப்பிடு என வர்ஷாவுக்கு ஜாடைக் காட்ட… அவர் வருவாரா என்பது போல வர்ஷா பார்க்க… நீ கூப்பிடு என்றான்.

அத்தான் சாப்பிட வாங்க.” என வர்ஷா சொல்ல… 

ஆருஷி…” என ஆதவன் மனைவியைப் பார்க்க…

நீங்க சாப்பிடுங்க.” என ஆருஷி சொல்ல… “நான் அக்காவோட சாப்பிடுறேன் நீங்க சாப்பிடுங்க.” என்றாள் வர்ஷா.

அண்ணனும் தம்பியும் உணவு உண்டு விட்டு பிள்ளைகளைப் பார்த்துகொள்ள… பிறகு அக்காவும் தங்கையும் உண்டனர்.

இவங்களை இப்படியே நீங்களே மல்லு கட்டுங்கன்னு விடுட்டணும்கா…” மஞ்சுளா சொல்ல… “ஆமாம் இவங்க விஷயத்துல தலையிட்டா நமக்குத்தான் தலைவலி. வந்தா போட்டதைச் சாப்பிட்டு போயிட்டே இருக்கணும்.” என்றாள் பிரமிளா.

நைட்டுக்கு எங்களைச் சமைக்க விட்டுடாதீங்க. எங்களால முடியாது.” வர்ஷா சொல்ல…

நைட் வெளியே போய்ச் சாப்பிடுவோம் என்றனர் அண்ணனும் தம்பியும்.

சந்தோஷும் தர்ஷனும் ஒரு உடன்படிக்கைக்கு வந்திருந்தனர். நீயும் என்ன வேணா பண்ணு…. நானும் என்ன வேணா பண்ணுறேன். ஆனா நாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கக் கூடாது… அப்போதான டா எங்களை வச்சுச் சண்டை போட மாட்டீங்க என உடன்படிக்கைக்கு வந்தவர்கள் போல… இருவரும் ஒரு பெரிய பவுடர் டப்பாவை எடுத்து, அதைத் தரையில் கொட்டி, அவர்கள் தலையில் கொட்டி என உடல் முழுக்கப் பூசி வைத்து இருந்தனர்.

திஸ் இஸ் கால்ட் பார்ட்னர் இன் கிரைம்.

ஆருஷியும் வர்ஷாவும் அப்போது தான் களைத்துப் போய்ப் படுக்கலாம் என்று வந்தனர். இருவரும் மகன்களைப் பார்த்து விட்டு கத்த கூட முடியாமல் நின்றனர். பக்கத்தில் அப்பன்கள் இருவரும் அப்போதே உறங்கிப் போய் இருந்தனர்.

Advertisement