Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 10

உனக்குத் தான் எந்தச் சூழ்நிலையும் சமாளிச்சு வர தெரியணும். இன்னைக்கு உனக்காக நான் பேசப் போய் விஜயன் என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பான். இல்லை மத்தவங்க தான் என்ன நினைச்சிருப்பாங்க.”

ஆருஷிக்கு அப்போது ஆதவன் சொன்னது பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் மறுநாள் பட்டே புரிந்து கொண்டாள்.

மறுநாள் காலை பூரி என்பதால்… துர்கா மாவு பிசைந்து கொடுத்து விட… பிரமிளா உருளைக் கிழங்கு மசாலை அடுப்பில் கொதிக்க விட்டு சென்றிருந்தாள்.

மஞ்சுளா பூரிக்கு தேய்த்துக் கொடுக்க… ஆருஷி சுட்டு எடுக்க…

ரெண்டு மருமகளை வச்சுகிட்டு, அம்மா வீட்டுக்கு வந்த பெண்ணை இப்படி வேலை வாங்குறீங்களே… நாங்க எங்க வீட்லயும் வேலை செய்யணும், இங்க வந்தும் வேலை செய்யணுமா?” என மஞ்சுளா நியாயம் பேச…

நீங்க வச்சிடுங்க அண்ணி, நான் வேணா தேய்க்கிறேன்.” என ஆருஷி சொல்ல…

உட்கார்ந்திட்டு தான செய்யுற… செய்.” என்றார் துர்கா.

வர்ஷா தாமதமாகத்தான் எழுந்து வந்தாள். அவள் குளித்து முடித்து வந்த போது, கிட்டதட்ட பாதிப் பூரி சுட்டு முடிந்திருக்க… அவள் நேராகப் பரிமாறச் செல்ல…

வர்ஷா இங்க வந்து நீ பூரிக்கு தேய்ச்சுக் கொடு.” துர்கா அழைக்க… 

ஐயோ அத்தை, எனக்குப் பூரிக்கு தேய்க்கவே தெரியாது. நான் தேய்ச்சா நல்லாவே வராது.” என வர்ஷா கழண்டு கொள்ளப் பார்க்க…

நாங்க மட்டும் எங்க அம்மா வீட்ல இருந்தவரை செஞ்சோமா? இல்லை இதுக்காக ஸ்கூலுக்குப் போய்க் கத்துகிட்டு வந்தோமா?” என்ற மஞ்சுளா, “வா வந்து தேய்… இப்போ பழகாம எப்போ பழகுவ?” என வர்ஷாவிடம் பூரி கட்டையைக் கொடுத்து விட்டு, அருகிலேயே இருந்து எப்படித் தேய்க்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தாள்.

அப்போது ஆதவனும் விஜயனும் வெளியே இருந்து வந்தனர்.

என்ன பூரி சுடுவது எப்படின்னு கிளாஸ் நடக்குது போல…” என்ற ஆதவன் மனைவி பூரி சுடுவதைப் பார்த்து விட்டு,

ஆருஷி நீயா பூரி சுடுற…. தேய்க்கிற ஆளும் சரி இல்லை… சுடுறா ஆளும் சரி இல்லை. எங்களுக்கு இன்னைக்கு ஒழுங்கா பூரி வருமா?” என மனைவியையும் சேர்த்து கிண்டல் செய்ய….

அம்மா இப்படி மருமகள்களை வேலை செய்ய விட்டு பழக்குங்க மா… இன்னும் நீங்களே செஞ்சிட்டு இருக்காம.” என்றான் விஜயன்.

அதெல்லாம் பழகலாம். நான் உங்க ரெண்டு பேர் கிட்டயும் சொல்லிட்டேன். ஒழுங்கா ஒரு வேலையைத் தேடிட்டு, அவனவன் பொண்டாட்டி பிள்ளைங்களோட குடும்பம் நடத்துற வழியைப் பாருங்க. அவங்கவங்க வீடுன்னு வந்திட்டா…. செய்யத்தான் போறாங்க.” என, மகன்கள் இருவரும் பார்க்கிறோம் என்றனர்.

பிரமிளா தீபிகாவை குளிக்க வைத்து தூக்கிக் கொண்டு வந்தாள்.

நான் சொன்னேன் இல்ல ஆருஷி. இவளுக்குச் சேவகம் பண்ண ஆளு வேண்டும். அவங்க பெரியம்மா இருந்தா… அவளையே தான் எல்லா வேலையும் செய்ய வைப்பா… நேத்து உன்னைப் பிடிச்சுகிட்டா.” என்றாள் மஞ்சுளா.

என்ன டிபன்?” எனத் தீபிகா கேட்க…

பூரி.” என அருஷி சொல்ல..

எனக்குப் பூரி பிடிக்காது. வேற எதாவது கொடுங்க.” என்றாள் தீபிகா.

ஆருஷி உன் பூரியை பத்தி தெரிஞ்சிருக்குமோ… தீபிகா தெரிஞ்சு தான் வேண்டாம்னு சொல்றாளோ…” என ஆதவன் கிண்டலாகக் கேட்க… ஆருஷி கணவனை முறைக்க…மற்றவர்கள் சிரித்தனர்.

துர்கா வேலையாக இருந்ததால்… ஆருஷி யஸ்வந்துக்கும், தர்ஷனுக்கும் காலை உணவு கொடுக்க…

அத்தானுக்குத் தான் நீங்க வேலை செஞ்சா பிடிக்கலை இல்லை. என் பையனுக்கு நான் கொடுத்துக்கிறேன்.” என வர்ஷா அவள் மகனை தூக்கிக் கொண்டு சென்று விட்டாள். ஆதவன் பேசியதை வைத்தே… பிரச்சனையை வேறு விதமாகத் திருப்பி விட வர்ஷாவுக்கு வசதியாகிப் போனது.

வீட்டுப் பெண்களுக்குள் நடக்கும் பிரச்சனை முடிந்தவரை அவர்களே சரி செய்து கொள்ள வேண்டும். அதில் ஆண்கள் தலையிட்டால்… அது வேறு மாதிரி திசை திரும்பி விடும்.

யஸ்வந்தோடு அவள் மகனை விளையாட விடாமல் எவ்வளவு நேரம் வர்ஷாவால் பிடித்து வைத்திருக்க முடியும். அவள் முடியாமல் விட்டுவிட… அவன் அண்ணனோடு விளையாட வந்துவிட்டான்.

இருவருக்கும் விளையாட்டுச் சாமான்களை வைத்துக் கொண்டு விளையாடி போர் அடித்து விட… இன்று இருவரும் வெளியே சென்று மணலில் விளையாடினார்கள்.

ஒருவர் மீது ஒருவர் மண்ணைப் போட்டுக் கொண்டு செம ஜாலியாக விளையாட… ஆதவனும் விஜயனும் அங்கே தான் இருந்தார்கள். அவர்கள் இருவரும் மகன்களைக் கண்டிக்கவில்லை. ஆருஷி வந்து பார்த்து விட்டு, “டேய் என்ன டா பண்றீங்க?” என்று கேட்க…

இருவருக்கும் ஆருஷியை பார்த்து பயமே இல்லை. இது ஒரு டம்மி பீஸ் என இருவரும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தனர். அதனால் இருவரும் கண்டுகொள்ளாமல் விளையாட…

ரெண்டும் மதிக்குதா பாரு என நினைத்த ஆருஷி, இருவரையும் தூக்கி வந்து கைகால் கழுவிட்டு, உடைமாற்றி உள்ளே ஹாலில் விளையாட விட்டாள்.

யஸ்வந்த் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்க… தர்ஷன் நேற்று போல இன்றும் கையில் வைத்திருந்த காரால் யஸ்வந்தை அடித்து விட்டான்.

யஸ்வந்த் ஒரே கத்து… ஆருஷி மகனை சமாதானம் செய்ய… வெளியே இருந்து ஆதவனும், விஜயனும் வந்துவிட்டனர்.’

ஆளாளுக்கு யஸ்வந்தை சமாதானம் செய்ய… அப்போது அங்கே வந்த வர்ஷா… மகனின் முதுகில் வலிப்பது போலப் பலமாக அடித்து விட… தர்ஷன் சின்னப் பிள்ளை தானே… வலி தாங்காமல் வீல்லென்று கத்தியவன், ஒரு கட்டத்தில் மூச்சு விடாமல் அழுக… ஆருஷி பயந்து விட்டாள்.

பிரமிளா தர்ஷனின் முதுகை தேய்த்து விட… அவன் அழுகையை நிறுத்துவதாக இல்லை. விஜயன் மகனை தூக்கி என்ன எல்லாமோ சமாதானம் செய்கிறான், அப்போதும் தேம்பி தேம்பி அழுகை.

அவன் அழுவதைப் பார்த்து யஸ்வந்த் பயந்து போய்த் தம்பியிடம் சென்றவன், அவனிடம் காரைக் கொடுத்து, இன்னும் வேணா அடிச்சுக்கோ என்பது போல நிற்க… அதன் பிறகே தர்ஷன் அழுகையை நிறுத்தினான்.

வர்ஷாவே பயந்து தான் போனாள். இங்கே இருந்தால் எதாவது சொல்லி விடப் போகிறோம் என ஆதவன் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான். அப்படியொரு கோபத்தில் இருந்தான்.

எதுக்குச் சின்னப் பையனை இப்படிப் போட்டு அடிக்கிற… இப்போ அதனால உனக்கு என்ன கிடச்சுது. நானே பேசாம தானே இருந்தேன். இப்போ நீ அடிச்சு என்ன சாதிச்ச?… தர்ஷனுக்கு எதாவது ஆகி இருந்தா…” என ஆருஷி தன்னையுமறியாமல் கத்தி இருந்தாள். குடும்பமே அவளை அதிசயமாகத் தான் பார்த்தது.

குழந்தையை அடிக்கிற மாதிரியா டி நீ அடிச்ச… சாவடிச்சிடுவேன் உன்னை.” என விஜயன் வர்ஷாவை அடிக்கக் கையை ஓங்கிக் கொண்டு வர… தம்பியை தடுத்த பிரமிளா, “அவளுமே பயந்து போய்த் தான் இருக்கா… இதை இதோட விட்டுட்டு.” என்றாள்.

மஞ்சுளா வாய் தான் பேசுவாளே தவிர… மிகுந்த பயந்த சுபாவம். அவளுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. மறுநாள் வீட்டில் விசேஷத்தை வைத்துக் கொண்டு வீடே கலவர பூமி போல இருந்தது.

விஜயனிடம் இருந்து தர்ஷனை வாங்கிய ஆருஷி, யஸ்வந்தையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டாள். மற்ற பிள்ளைகளும் அவளுடன் வெளியே சென்று விட்டனர்.

வர்ஷாவுக்கு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்த பிரமிளா, மஞ்சுளாவிடம் “நீ முதல்ல குடி.” எனத் தங்கைக்கும் கொடுத்தாள்.

என் பொண்டாட்டி சும்மாவே மயங்கி விழுற கேசு… என்ன பண்றாளோ தெரியலை…” என ஆதவன் வெளியே செல்ல…

இன்னைக்குத்தான் டா உன் பொண்டாட்டி பேசுற சத்தமே கேட்டிருக்கு.” எனக் கேலி செய்தபடி பிரமிளாவும் உடன் சென்றாள்.

பிரத்யுஷா எடுத்து வந்த நீரை தர்ஷன் யஸ்வந்த் இருவருக்கும் கொடுத்த ஆருஷி, அவர்களை விளையாட விட்டு அழுகையை மறக்கடித்திருந்தாள்.

ஆதவன் அவள் அருகில் சென்று உட்கார… “எதாவது ஆகி இருந்தா…” என்றவள், அவன் தோள் சாய்ந்து அழ…

எதுவும் தான் ஆகலை இல்லை. நீ அதையே நினைச்சு பயப்படாத… உன்னைப் பார்த்து வர்ஷாவும் பயப்படப் போறா…” என்றான்.

இந்தா இதை முதல்ல குடி.” எனப் பிரமிளா ஆருஷிக்கு ஜூசைக் கொடுக்க…

ஆருஷி கையில் வைத்துக் கொண்டிருந்தாளே தவிரக் குடிக்கவில்லை.

அத்தை நீங்க குடிச்சிட்டு எனக்குக் குடுக்கிறீங்களா? எனக்கும் ஒரு மாதிரி தான் இருக்கு.” எனத் தீபிகா சொல்ல… அந்த நிலையிலும் எல்லோருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

இந்தா நீயே குடி.” என ஆருஷி தீபிகாவிடம் கொடுக்க.. அவள் குடிப்பதை பார்த்து தர்ஷனும் யஸ்வந்தும் வந்து கேட்க… அவர்களுக்கும் கொஞ்சம் கொடுத்தனர்.

பிரமிளாவின் மகன்கள் பந்தை எடுத்து வந்து விளையாட்டுக் காட்ட… யஸ்வந்துக்கும், தர்ஷனுக்கும் ஒரே சிரிப்பு.

அண்ணா அண்ணா…” எனத் தர்ஷன் யஸ்வந்தை அழைக்க… யஸ்வந் தம்பியின் கை பிடித்துக் கொண்டான்.

Advertisement