Advertisement

நான் நினைச்சேன் யாரு மேலையோ இடிக்கப் போறான்னு… அதே போல் இடிச்சிட்டான். இவங்க பொறுமை இல்லாம வண்டி ஓட்டி இடிச்சிட்டு போயிட்டே இருப்பாங்க. அடி வாங்கினவனுக்குத் தான் வலியும் வேதனையும் தெரியும்.” எனச் சாலை ஓரம் பூக்கள் விற்றுக் கொண்டிருந்த பெண் சொல்ல… அதைக் கேட்டு ஆருஷி தலையசைக்க… அந்த வெளிநாட்டவனும் புரிந்தது போலத் தலையசைக்க… ஆருஷி அவனை ஆச்சர்யமாகப் பார்த்து விட்டு சென்றாள்.

இவள் நுழைந்த குடியிருப்பு வளாகத்தின் உள்ளே தான் அவனும் நுழைந்தான்.

மேம் ஒரு நிமிஷம்.” என ஆங்கிலத்தில் அழைத்தவன், “நான் டேனியல்… நீங்க இல்லைனா அந்தப் பெண்ணோட நிலைமை தான் எனக்கும்.” என ஆங்கிலத்தில் சொல்லியவன், அவளுக்கு நன்றி தெரிவிக்க…

அவன் நன்றியை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டு. “உங்களுக்குத் தமிழ் புரியுமா” என்று ஆருஷி அவளின் சந்தேகத்தைக் கேட்டவள், பிறகு புதிதாகப் பார்த்த ஒருவனிடம் இப்படிக் கேட்பது நாகரிகம் இல்லை. அதோடு அடுத்தவர் விஷயத்தில் வெளிநாட்டினர் அவ்வளவு எளிதாக மூக்கை நுழைக்க மாட்டார்கள். தன்னை அதிகப்ரசங்கியாக நினைத்து விடப் போகிறான் என நினைத்தவள்,

சாரி…நான் போகணும்.” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள். வீட்டுக்கு வந்ததும் தான் பதட்டம் குறைந்தது.

மறுநாளும் அதே நேரம் அவள் வீடு திரும்ப, அன்றும் அவனைப் பார்த்தாள். ஆனால் இவள் அவனைத் தெரியாதது போலக் கடந்து செல்ல… இன்று அவனே அவளை நிறுத்தி வைத்துப் பேசினான்.

ஹாய்… நேத்து உங்களுக்கு எதாவது அவசர வேலையா… நான் சொல்ல வந்தது கேட்காம போயிட்டீங்க.” என ஆங்கிலத்தில் சொன்னவன், “இன்னைக்காவது நேரம் இருக்குமா?” என்றதும்,

தேவையில்லாம இவன்கிட்ட வாயை கொடுத்து மாட்டிகிட்டோமோ…” என நினைத்தவள்,

உங்களைப் பத்தி தெரிஞ்சு என்ன ஆகப் போகுது. அதுதான் போயிட்டேன்.” என்றாள் சற்று அலட்சியமாகவே… அவளை ஆச்சரியாமாகப் பார்த்தவன்,

மேம் சாதாரணமா பேசி பழகிறத்துக்கு என்ன? என்னைப் பார்த்தா கெட்டவன் போலவா இருக்கு.” டேனியல் கேட்க…. அவளுக்கு ஒருமாதிரி ஆகி விட்டது.

சாரி… என் பேரு ஆருஷி. நீங்க என்னை ஆருஷின்னே கூப்பிடுங்க.” என்றதும்,

ஓகே ஆருஷி… நாங்க எங்க தாத்தா காலத்தில இருந்தே கனடாவில் தான் இருக்கோம். வீட்ல பெரியவங்க தமிழ்ல பேசுவாங்க. அதனால புரியும். ஆனா ரொம்பப் பேச வராது. இங்க ஒரு சொத்து சம்பந்தமா இந்தியாவுக்கு வர வேண்டியது இருந்தது. அதுதான் வந்திருக்கேன். வேலை முடிஞ்சதும் கனடா போயிடுவேன்.” என்றான்.

ஓ… ஓகே… எதாவது உதவி தேவைன்னா நான் இங்க தான் ரெண்டாவது மாடியில தான் இருக்கேன்.” என்றவள், அவனிடம் விடைபெற்று செல்ல… டேனியல் அவளைப் புன்னகையுடன் பார்த்திருந்தான்.

அதற்குப் பிறகு வந்த நாட்களில் அவனைப் பார்த்தாலும் புன்னகையுடன் கடந்து விடுவாள்.

அன்று வேலை முடிந்து வீடு திரும்பியவள் ஹாலில் அவளின் தந்தை இருப்பதைப் பார்த்து விட்டு, “அம்மா இவர் எதுக்கு இங்க வந்தாரு. நான் எதோ கொஞ்சம் நிம்மதியா இருக்கிறது உங்களுக்குப் பொறுக்கலையா?” எனச் சத்தம் போட… சமையல் அறையில் இருந்து வந்த பார்கவி, “நான் அவரைக் கிளம்பச் சொல்லிட்டு தான் இருந்தேன்.” என்றார்.

நம்ம சொத்துச் சீக்கிரம் வித்திடும்.” என சரத் சொல்ல…

போதும் உங்க ரீல் அந்து ரொம்ப நாள் ஆச்சு. உங்க சொத்து வித்தா எனக்கு என்ன? விக்கலைனா எனக்கு என்ன? உங்க புராணம் கேட்க எல்லாம் நான் இங்க இல்லை.” என்றவள், “நீங்க போறீங்களா?” என வாசலை காட்ட….

மகள் கணவனை அவமானப்படுத்துவது வருத்தமாக இருந்தாலும், இந்த மனுஷன் இழுத்து வச்சது தானே என நினைத்த பார்கவி, “நீங்க கிளம்புங்க. இலக்கியா வேற வீட்ல தனியா இருப்பா.” என்றதும், புன்னகையுடன் எழுந்து கொண்ட சரத், “அப்பா உன் நல்லத்துக்குத் தான் செஞ்சேன். உனக்கு ஒருநாள் புரியும்.” என்றதும்,

போதும் நீங்க செஞ்ச நல்லது. எனக்கு என்னைப் பார்த்துக்கத் தெரியும். நீங்க கிளம்புங்க.” என ஆருஷி கையெடுத்துக் கும்பிட… பார்கவி அவருக்கும் இளைய மகளுக்கும் உணவு பதார்த்தங்களைக் கொண்டு வர உள்ளே செல்ல… அதற்கு மேல் அங்கே நின்று தந்தையைப் பார்க்க விரும்பாமல், “அம்மா நான் கடைக்குப் போயிட்டு வரேன்.” என ஆருஷி மீண்டும் வெளியே சென்று விட்டாள்.

மனநிலை முற்றிலும் கெட்டு விட…. இருந்த எரிச்சலில், எதிரே வந்த டேனியலை கவனிக்கவில்லை. ஆனால் அவன் அவளை நிறுத்தி பேசினான்.

உங்க சொத்து சம்பந்தமான வேலை என்ன ஆச்சு?”

நாங்க ரொம்ப வருஷம் வெளிநாட்டில இருந்திட்டோம் இல்லையா… இப்போ அதை வேற ஆளுங்க ஆக்கிரமிச்சுட்டாங்க. அவங்களைக் காலி பண்ண வைக்க முடியலை. எங்க பார்த்தாலும் பணம் தான் கேட்கிறாங்க. அதுவும் நான் வெளிநாட்டு ஆள் இல்லையா? நிறையப் பணம் எதிர்ப்பர்க்கிறாங்க.” என்றான்.

நான் வேலை பார்க்கிற கம்பெனி ஓனர் பெரிய ஆள் தான். நான் வேணா அவர்கிட்ட கேட்டுப் பார்க்கிறேன்.” என ஆருஷி சொல்ல… அந்த நேரம் சரத் அவர்களைப் பார்த்துக் கொண்டே கடந்து செல்ல… ஆருஷி அவரை முறைத்தாள்.

இருவரும் தங்கள் கைபேசி எண்ணை பகிர்ந்து கொள்ள… டேனியலிடம் மேலும் சில விவரங்கள் சொல்லி விட்டு ஆருஷி வீட்டுக்கு கிளம்பி சென்றாள்.

ஆருஷி வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி வரதராஜனுக்கு நிறைய அரசியல்வாதிகளிடம் பழக்கம் என்பதால்… அவரிடம் ஆருஷி டேனியல் பற்றிச் சொல்ல… அவர் உதவுவதாகச் சொன்னார். சொன்னது போல டேனியல் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தில் இருந்த வேறு ஆட்களைக் காலி செய்யவும் வைத்தார்,

டேனியலுக்கு மிகுந்த ஆச்சர்யம், தான் வந்து பேசிய போது அதெல்லாம் காலி செய்ய முடியாது. நாங்க இத்தனை வருஷம் இருந்திட்டோம். உன்னால முடிஞ்சதை பண்ணிக்கோ என்றவர்கள், இப்போது வாலை சுருட்டிக் கொண்டு சென்றிருந்தனர்.

டேனியல் அந்த இடத்தை விற்க திட்டமிட… வரதராஜனே வாங்கிக் கொள்வதாகச் சொல்ல… எல்லா ஏற்பாடும் ஆனதும் டேனியலின் பெற்றோர் பத்திர பதிவுக்கு வருவதாக இருந்தது.

டேனியல் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவன் ஆருஷிக்கு நிறைய முறை நன்றி சொல்லி விட்டான்.

ஒருநாள் அவனிடம் இருந்து ஆருஷிக்குக் கைபேசியில், “பக்கத்தில் எதாவது மருத்துவரை தெரியுமா?” எனக் கேட்டு வந்திருக்க… ஆருஷி அவனை அழைத்து விவரம் கேட்க…. உணவு ஒத்துக்கொள்ளாமல் உடல்நிலை பாதிக்கபட்டு உள்ளதாகச் சொன்னான்.

பக்கத்தில் இருந்த நல்ல மருத்துவமனையின் விவரம் கொடுத்தாள்.

டேனியல் மருத்துவரை சென்று பார்க்க… காரமான உணவு உண்டதால் அவனுக்கு அல்சர் ஏற்பட்டு இருப்பதாகச் சொல்லி மருந்து கொடுத்தார்.

டேனியல் ஆருஷியிடம் விவரம் சொல்ல… அவள் அம்மாவிடம் டேனியலைப் பற்றிச் சொல்லி… வீட்டு உணவு கொடுத்தால் நல்லது என்று சொல்ல… பார்கவியே காரம் இல்லாமல் உணவு சமைத்து எடுத்து சென்று கொடுத்து விட்டு வந்தார்.

அடுத்த மூன்று நாட்களும் அவரே மதிய வேளைக்கு உணவு சமைத்து கொடுக்க.. டேனியலுக்கு அது இரண்டு வேளைக்கு வர… காலை வேளைக்குப் பிரட்டை உண்டு கொண்டான்.

அவனுக்கு உடல் நிலை சரியானதும், இனிப்பு மற்றும் பழங்கள் வாங்கிக் கொண்டு ஆருஷிக்கும், அவள் அம்மாவுக்கும் நன்றி சொல்ல அவர்கள் வீட்டுக்கு வந்தான்.

பார்கவி அவனை உபசரிக்க… ஆருஷி அவனுடன் ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்க…

நிறைய உதவி இருக்கீங்க ஆருஷி. உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் நன்றி சொல்ல வந்தேன்.” என்றான்.

இதுல என்ன இருக்கு. வெளிநாட்டில இருந்து வந்திருக்கீங்க. உங்களுக்கு இங்க வேற யாரையும் தெரியாது இல்ல… அக்கம் பக்கம் இருக்கிறவங்க உதவலைனா எப்படி?” என்றார் பார்கவி.

நான் சென்னையில இப்படி அன்பான சிலரை சந்திப்பேன்னு நினைக்கவே இல்லை. எதையும் எதிர்பார்க்காம உதவுறது ரொம்ப அபூர்வம்.” என டேனியல் புன்னகையுடன் சொல்ல…

எப்படி எதிர்பார்க்கலைன்னு நீங்க சொல்றீங்க. நாங்க கனடா வந்தா உங்க வீட்ல தங்கிதான் ஊர் சுத்தி பார்க்கலாம்னு நினைச்சோம். எங்களுக்குச் செலவு மிச்சம் தானே….” என ஆருஷி சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்ல…

நிஜமாவா எப்போ வர்றீங்க?” என டேயனியல் நம்பிக் கேட்க…

நீங்க வேற… நான் இந்தத் தமிழ் நாட்டைத் தாண்டி போனதே இல்லை. சும்மா உங்க ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பார்த்தேன். நாங்க வார்றேன்னு சொன்னதும், நீங்க பின்னங்கால் பிடரியில பட… இந்நேரம் எழுந்து ஓடி இருப்பீங்க நினைச்சேன்.” என ஆருஷி கேலி செய்ய… டேனியலும் பார்கவியும் சிரித்தனர்.

அப்போ உங்ககிட்ட பாஸ்போர்ட்டே இல்லையா?” என டேனியல் ஆச்சர்யப்பட…

அது இருக்கு.” என வேகமாகச் சொன்னவள், எடுத்த காரணம் நினைவு வந்ததும் அப்படியே அமைதி ஆகி விட்டாள்.

ஆருஷி தங்கள் வீட்டில் இருப்பது போலக் கற்பனை செய்த டேனியலுக்கு அது பிடித்தமாக இருக்க… அவனுக்குள் வேறு மாதிரி யோசனைகள். அதற்குள் சரத் உள்ளே வர… அவரிடம் இருந்த சின்ன வாண்டு அம்மா என ஆருஷியிடம் தாவ…. தாவிய மகனை ஆருஷி வாங்கி வாஞ்சையாகக் கொஞ்சினாள்.

இவளுக்குக் குழந்தை இருக்கிறதா என்று டேனியல் அதிர்ச்சியாகப் பார்த்தவன், பிறகே திருமணமும் ஆகி இருக்கும் என்று மண்டையில் உரைத்தது. அவன் ஒரு மாதிரி அதிர்ச்சியில் இருக்க… சரத் அவனை முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் மகளிடம் பழகுவது எந்தத் தந்தைக்குப் பிடிக்கும். அதுவும் ஏற்கனவே இருக்கும் நிறையச் சிக்கல்களுக்கு இடையே… இவன் வேறா என்று இருந்தது. மகள் என்ன எண்ணத்தில் இவனுடன் பழகுகிறாள் என்று அவருக்குப் புரியவில்லை. ஆருஷி இதற்கு முன் யாரிடமும் இப்படிப் பழகி அவர் பார்த்ததே இல்லை. அவள் கணவனிடம் கூட… 

Advertisement