Advertisement

தேன் சிந்துதே வானம்

அத்தியாயம் 1

அட்லாண்டிக் கடற் பகுதியில் மிகப் பெரிய சொகுசு கப்பல் ஒன்று வண்ண விளக்குகள் மின்ன கடலில் ஊர்ந்து கொண்டிருந்தது. உண்மையில் பார்க்க கப்பல் நின்று கொண்டிப்பது போலத்தான் இருந்தது. இரவு நேரம் சுற்றிலும் இருள் சூழ்ந்து இருக்க… எதோ வானத்தில் நிலவு தனித்துத் தெரிவது போல… அந்தப் பிரமாண்டபமான கப்பல் கடலில் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

கருநீல வானமும், மின்மினியாக அங்கங்கே வனத்தில் ஜொலித்த நட்ச்சதிரமும் பின்னணியில் இருக்க… அப்போது தங்க கப்பலை பார்ப்பதே… கண்ணுக்கு விருந்தாக தான் இருக்கும். 

அமெரிக்காவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஐரோப்பாவின் முக்கியக் கடற்கரை நகரங்களுக்குச் சென்று விட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் அமெரிக்கா வந்து கொண்டிருந்தது.

அந்த இரவு நேரத்திலும் சிலர் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருக்க… கீழ் தளத்தில் இருந்த நடன அரங்கில் பாடல் ஒலிக்க… அங்கேயும் நிறையப் பேர் சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தனர். அங்கங்கே உணவு கூடங்கள் இருக்க… நிறையப் பேர் உணவைக் கொறிப்பதும் அருகில் இருப்பவரிடம் பேசுவதுமாக இருக்க… சிலர் அங்கிருந்த பாரில் மது அருந்திக் கொண்டும் என்று அந்த நள்ளிரவு நேரத்திலும் சுற்றிலும் அமைதி இருந்தாலும், கப்பலில் மட்டும் சத்தம் ஓய்வதாக இல்லை. மொத்தத்தில் அது கப்பல் போல இல்லை… மிகப் பிரமாண்டமான நட்சத்திர விடுதி போல இருந்தது. இத்தனையும் நடுக் கடலில் தான் நடத்து கொண்டிருக்கிறதா என்று ஆச்சர்யமாக இருந்தது.

அந்தப் பயணக் கப்பலின் உச்சியில் நின்று ஆதவன் கடலை வெறித்துக் கொண்டிருக்க… அவனுடன் பனி புரியும் சக இன்ஜினியர் ராகுல், “இந்த இருட்டில உனக்கு என்ன தெரியுது ஆதவன்? சொன்னா நானும் பார்ப்பேன் இல்ல…” என ஆங்கிலத்தில் கேட்க….

இல்லை நான் யோசிச்சிட்டு இருந்தேன்.” என ஆதவன் திரும்பி ராகுலைப் பார்த்துப் புன்னகைத்தான்.

வாட் இஸ் பாதரிங்க் யூ மேன். நீ கேட்டாலும் சொல்ல மாட்ட….” என்றவன், என்னோட வா என அவனது காபினுக்கு அழைத்துச் சென்றவன், தனக்கும் ஆதவனுக்கும் மதுவை கோப்பைகளில் நிரப்ப… இருவரும் எடுத்து பருக ஆரம்பித்தனர்.

சொல்லு என்ன யோசிச்சிட்டு இருந்த?”

நான் இந்த வேலையில இருந்து பிரேக் எடுக்கிறேன்.”

வாட்? முட்டாளா நீ.”

எவ்வளவு சம்பளம். ஒரு மாசம் வேலை செஞ்சா… பாதி மாசம் லீவ் கொடுக்கிறான். இதெல்லாம் வேற வேலையில கிடைக்குமா? நீ அவசரப்பட்டு முடிவு எடுக்கிற.”

நான் படிச்சு முடிச்ச என்னோட இருபத்தியோராவது வயசுல இருந்து இப்போ முப்பத்தியொரு வயசு வரைக்கும் இந்தப் பத்து வருஷமா இந்த வேலையில இருந்திட்டேன். யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு தான். ஆனா எனக்குப் பிரேக் வேணும்.”

நீ திரும்ப வந்தா இந்த வேலை உனக்கு அவ்வளவு ஈஸியா திரும்பக் கிடைக்கும்னு நினைக்கிறியா?”

கிடைக்கலைனா பரவாயில்லை. கிடைச்ச வேலைக்குப் போக வேண்டியது தான்.”

நான் சொல்றது கேளு… லாங் லீவ் கேளு… இந்தியாவுக்குப் போ… கல்யாணம் பண்ணு. அந்தப் பெண்ணை இங்க கூட்டிட்டு வந்து ஒரு வீடு பார்த்து இரு. உன்னோட தனிமை எல்லாம் போயிடும். உனக்கும் ஒரு மாற்றம் வரும்.”

ராகுல் பேசிக் கொண்டிருக்க… யோசனையில் இருந்த ஆதவன், “சரி லீவ் கேட்டுப் பார்க்கிறேன்.” என ராகுலுக்கு நிம்மதியாக இருந்தது. இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தாலும், பயணிகள் கப்பல், சரக்கு கப்பல் என அவர்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான எந்தக் கப்பலில் வேண்டுமானாலும் அவர்களுக்கு வேலை இருக்கும். அதனால் இது போல ஒரே சமயம் வேலை அமைந்தால்…. இருவரும் சந்தித்துக் கொள்வது தான். அதுவும் ராகுல் இங்கே வேலைக்குச் சேர்ந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது.

பேசி சமரசத்துக்கு வந்த பின்னர் நண்பர்கள் இருவரும் உறங்கப் போனார்கள்.

காலை தனது பனி உடையில் தயாராகி வந்த ஆதவன், கீழ் தளத்தில் இருந்த பெரிய பெரிய என்ஜின்கள் மற்றும் நிறைய இயந்திரங்கள் இருந்த அறைக்குள் சென்று, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தான். அங்கே நிறையப் பேர் இருந்தனர்.

சிறு தவறு நடந்தாலும் பெரும் ஆபத்தில் முடியும். ஆயிரக்கணக்கில் இருக்கும் பயணிகளின் உயிருக்கு அவர்கள் தானே பொறுப்பு. எல்லாம் சரியாக இயங்கிறதா என்று சோதித்துப் பார்த்தவன், எல்லாவற்றையும் குறித்தும் வைத்தான். மேல் அதிகாரிக்கு தொடர்பு கொண்டு அவரிடம் பேச…. அவர் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளித்தான்.

இரவு பணிக்கு வேறு ஊழியர்கள் வந்து பொறுப்பேற்க… ஆதவன் அவனது அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றிவிட்டு வந்தான்.

ஆதவன் படித்தது மெக்கனிக்கல் இன்ஜினியரிங். முதலில் சிங்கப்பூரில் இருக்கும் கப்பல் நிறுவனத்தில் தான் உதவி இன்ஜினியராக வேலைக்குச் சேர்ந்தான். பிறகு இப்போது நான்கு வருடங்களாக அமெரிக்கா ஐரோப் இடையே இயங்கும் கப்பல் நிறுவனத்தில் சீப் இன்ஜினியராக வேலை பார்க்கிறான்.

இரவு உணவுக்காகப் பணியாளர்களுக்கான உணவகத்திற்கு வந்தவன், தனக்கு வேண்டிய உணவு வகைகளை எடுத்துக் கொண்டு கடலை பார்த்தபடி இருந்த மேஜையில் சென்று உணவருந்தினான்.

இன்னும் இரண்டு நாட்களில் அமேரிக்கா திரும்பி விடுவார்கள். உண்டு விட்டு அறைக்கு வந்தவன் அடுத்து என்ன? என வெகு நேர யோசனைக்குப் பிறகு உறங்கி இருந்தான்.

இரண்டு நாட்கள் சென்று அந்தப் பெரிய படகு கரைக்குத் திரும்பியது. ஆதவன் நேராக அவர்கள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியை பார்க்க சென்று அவரிடம் மூன்று மாத விடுப்பு கேட்க….

முடியவே முடியாது என்றவர், எதற்கு என்று கேட்க… இந்தியா செல்ல வேண்டும் என்றான்.

பதினைந்து நாள் விடுமுறையோடு கூடப் பதினைந்து நாட்கள் விடுமுறை தருகிறேன். இந்தியாவுக்குச் சென்று வர அது போதாதா என்று அவர் கேட்க… போதாது என்றான்.

என் வாழ்க்கையைப் பத்தி முக்கியமான முடிவு எடுக்கணும். எனக்குக் கண்டிப்பா மூன்று மாதங்கள் விடுமுறை வேண்டும் என்றான்.

மூன்று மாதத்தில் வரவில்லை என்றால் பிறகு இங்கு வரவே வராதே…” என அந்த அதிகாரி சொல்ல… அவரிடம் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான்.

இரவு அவன் தங்கி இருந்த ஒற்றைப் படுக்கை அறை கொண்ட அபார்ட்மெண்ட்டுக்கு வந்து சேர்ந்தவன், வெகு நேரம் குளித்து விட்டு, சூடான பானம் கலந்து எடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்தான்.

நின்று கொண்டிருந்தது பதினைந்தாவது மாடி என்பதால்… சுற்றிலும் நகரம் மின் விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருக்க… எதையும் ரசிக்கும் மன நிலையில் அப்போது அவன் இல்லை.

நேரத்தை பார்த்து விட்டு கைபேசியை எடுத்து வந்தவன், கன்னியாகுமரியில் இருக்கும் தனது வீட்டிற்கு அழைக்க…. அவனின் அம்மா கைபேசியை எடுத்தார்.

நலம் விசாரிப்புக்குப் பின், அவன் இந்தியா வருவதாகச் சொல்ல…

எத்தனை நாள் இருப்ப?” என அவனின் அம்மா துர்கா கேட்க…..

ஒரு மூன்னு மாசமாவது இருப்பேன்.” என்றதும், என்ன நினைத்தாரோ… ஒரு மாசத்துக்குத் தானே சம்பளத்தோட லீவ் கிடைக்கும். ரெண்டு மாசத்துக்குச் சம்பளமும் வராதே… எதுக்கு இப்போ வீணா அலையணும். இன்னும் ரெண்டு வருஷம் மட்டும் வேலை பார்த்திட்டு, அப்புறம் இங்கேயே வந்திடு.” என்றதும்,

இப்படித்தான் நிறைய ரெண்டு வருஷம் போயிடுச்சு. அதை நான் பார்த்துக்கிறேன். நான் அடுத்த மாசம் வரேன். அதைச் சொல்லத்தான் போன் பண்ணேன்.” என்றவன் வைத்து விட்டான்.

போன்னை வைத்த மனைவியின் யோசனை நிறைந்த முகத்தைப் பார்த்த அவரின் கணவர் ஈஸ்வர், “என்ன சொன்னான்?” என்றதற்கு.

அவன் இங்க வர்றானாம். அதுவும் மூன்னு மாசம் லீவுக்கு.”

அவன் எதோ முடிவு எடுத்திட்டு தான் வரான். வரட்டும் பார்த்துக்கலாம்.”

துர்கா எதோ கோபமாகச் சொல்ல வர….

அவன் வரட்டும் பார்த்துக்கலாம்.” என முடித்துக் கொண்டார்.

வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆரூஷி, முன்னே சாலையில் சென்று கொண்டிருந்தவனின் மீது ஆட்டோ ஒன்று மோதுவது போல வர… சட்டென்று வேகமாக எட்டு வைத்து முன்னே சென்றவனைப் பிடித்துச் சாலையின் ஓரத்திற்கு நகர்த்தினாள்.

எதிர்பாராமல் யாரோ தள்ளியதால் திடுக்கிட்டு திரும்பியவனைப் பார்க்கும் போதுதான், அவன் நம் நாட்டவனே இல்லை என்று தெரிந்தது.

இது சென்னை இங்க உங்க இஷ்ட்டத்துக்கு ரோட்ல நடந்தா… உங்க ஊர் மாதிரி பொறுமையா வெயிட் பண்ணி யாரும் போக மாட்டாங்க. இடிச்சு தள்ளிட்டு போயிட்டே இருப்பாங்க.” என ஆருஷி ஆங்கிலத்தில் சொல்ல… அதைக் கேட்டவனோ அவளைப் பார்த்து புன்னகைக்க…

உன்னோட சிரிப்பெல்லாம் எனக்கு வேண்டாம் என்பது போல ஆருஷி அவனைக் கடந்து செல்லப் பார்க்க… அதற்குள் இவனை இடித்திருக்க வேண்டிய ஆட்டோ, சாலையில் சென்று கொண்டிருந்த வேறு ஒரு பெண்ணை இடித்தே விட்டிருந்தது.

Advertisement