தேன் சாரல் நீ 25

   கண்ணனும், அவன் அம்மாவும் அந்த தொலைபேசி உரையாடல் பதிவை கேட்ட பின் மனம் கலங்கினர். சுஜா தன் அண்ணன்களின் விருப்பத்திற்காக தனது வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கியுள்ளதை உணர்ந்தனர்.

  சுஜா நகைகளை கொண்டு வந்ததன் காரணத்தை தெரிந்து கொண்டனர். “ உன் புடவை முதல் புருஷன் வரை முதலில் கட்டிக்கப்போறது நான்தான்” என்ற கீதாவின் குரலில் இருந்த குரோதத்தை நினைத்து பயந்தனர்.

     கண்ணனின் காயு மீதான அன்பை முதலில் கண்டுபிடித்த சுஜா, கண்ணனிடம் பேசும் முன் அவனின் அம்மாவிடம் காயுவை காட்டி அவர் விருப்பத்தை அறிந்து கொண்டாள். பின் காயுவிடம் எதேச்சையாக பேசுவது போல கண்ணனுக்கு வரன் பார்ப்பதாய் சுகன் மூலம் அறிந்து கொண்டதாய் சொல்லி “உனக்கு கண்ணன் அண்ணாவை பிடிச்சிருக்கா காயு? பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்” என்றாள். காயுவிற்கும் வரன் பார்த்துக் கொண்டிருந்ததால் “தெரியாத பேயைவிட தெரிஞ்ச பிசாசே மேல்.” என்று சிரித்தவள்

   “இதுவரை யாரையும் இந்தமாதிரி  எண்ணத்துல பார்த்ததில்ல. எம்டீ ஸ்லேட்டுல எழுதறது ஈசி சுஜா. ஜாதகம் வாங்கி அப்பாகிட்ட குடு. ஒத்துவந்தா அவங்களே ப்ரசீட் பண்ணுவாங்க. இல்லையா எங்கிட்ட இருந்து கண்ணன் தப்பிச்சி பொழச்சி போகட்டும்.” என சொல்லி சிரித்தாள்.

    சுஜா கண்ணனிடம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு, காயுவை கண்கலங்க விடமாட்டேன் என வாக்குறுதிகள் பெற்றே அவர்கள் திருமணம் நடக்க ஆரம்ப புள்ளி வைத்தாள். எங்கும் தேக்கம் ஏற்படாமல் தடையின்றி திருமணம் நடந்தேற சுஜாவின் முயற்சியே காரணம்.

   கண்ணனுக்கு குற்ற உணர்வு தலைதூக்கியது. தங்கள் நல்வாழ்விற்காய் சுஜா எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்திருக்க, தான் மட்டும் ஜெய் என்ற மண்குதிரையை நம்பி சுஜாவை கண்மண் தெரியாமல் ஓடும் காட்டாற்று வெள்ளத்தில் தள்ளிவிட்டதாய் உணரந்தான்.

    ஜெய் வருவதற்குள் சுஜாவும், காயுவும் வீடு திரும்பி இருந்தனர். காயு சுஜாவுடன் பேசியதிலிருந்து, அவள் இந்த சில நாட்களிலேயே வாழ்க்கையை வெறுத்த நிலையை அடைந்துள்ளதை புரிந்து கொண்டு, அவளுக்கு உதவ கண்ணனின் அனுமதிக்காக அவன் முகம் பார்த்தாள்.

   “காயு நாம உங்க ஸ்கூல் பக்கத்துல இருக்குற வீட்டுக்கு குடி போயிடலாமா? நீ இங்கேயும், அங்கேயும் அலைஞ்சா, உனக்கும் கஷ்டம். குழந்தைகளுக்கும் கஷ்டம். அம்மா உன்னை நெனச்சி நெனச்சியே ஹார்ட் பேசன்ட் ஆயிடுவாங்க போல.”

    “அங்க போனா நீ பிரசவம் ஆகற வரை வேலைக்கு போலாம். லீவும் போடத் தேவையில்லை. சுஜாவும் தினமும் காலையில வந்து உன்னை கூட்டிட்டு போயிடும். சாயங்காலம் கொண்டுவந்து விட்டுட்டு போயிடும்.” என்றவன் மனதினுள் “அம்மா இருக்காங்க. தினமும் சுஜாவ சாப்பிட வச்சிடுவாங்க.” என நினைத்தான்.

    இன்றே சுஜாவை சாப்பிட விடாமல் மாமியார் சாப்பாட்டை கழனி பானையிலும், மருமகள் கையில் புடவையுடனும் செய்த அழிச்சாட்டியங்களை விஜயனும், ஜெய்யும் தனித்தனியே கண்ணனிடம் சொல்லி புலம்பியிருந்தனர்.

   காயு சட்டென ஓகே சொல்ல திகைத்தனர். ஓரிரு நாட்களில் வரும் நல்ல நாளில் எளிமையாக கிரக பிரவேசம் செய்யலாம் என முடிவு செய்தார் கண்ணனின் அம்மா மலர்விழி.

    கண்ணன் ஜெய்யிடம் சுஜாவின் பிரச்சனைகளை எடுத்து சொல்வதாக கூறினான். சுஜாவோ,

    “அண்ணா அவருக்கு ஒரளவுக்கு அதெல்லாம் தெரியும். ஆனாலும் எனக்காக ஏதும் செய்ய அவர் தயாராயில்லை. அவரிடம் கெஞ்சி கேட்டு நம்பிக்கையை, வாழ்க்கையை பெறும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகல. நீங்க இதுபற்றி எப்பவும் ஜெய்யிடம் பேச வேண்டாம். அவராக எப்போது எனக்கு துணை நிற்கிறாரோ அப்போ சொல்லலாம்.” என்க

    “ஆனா சுஜா உன் வாழ்க்கை…..?” கண்ணன் பதற

   “யாருக்காகவும் நம் வாழ்க்கை முடிவுகளை எடுக்க கூடாதென்ற பாடத்தை நான் இதன் மூலம் கற்றிருக்கிறேன். அதற்கான குருதட்சனைதான் என் கண்ணீர், என் மௌனம், என் வலி, எல்லாம். விலையில்லாமல் கிடைத்தால் மதிப்பில்லை அண்ணா. நான் விலைமதிப்பற்ற வாக்குறுதிக்காய்  என் எதிர்காலத்தை அடகு வைத்திருக்கிறேன். மீட்க முடியுமா? மூழ்கி விடுவேனா? காலம் பதில் சொல்லட்டும்.”

    “என் பிறந்த வீட்டிற்கு இது தெரிய வேண்டாம். இதைகூட சமாளிக்க முடியலன்னா சுஜாவுக்கு அவமானம் என்ன காயு  நான் சொல்வது சரிதானே?” என கூறவும் ஜெய் வண்டி வெளியில் வந்து நிற்கவும் சரியாயிருந்தது.

   உள்ளே வந்ததும் ஜெய் சுஜாவின் கைபிடித்து அழைத்து வந்து கண்ணனின் அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கினான்.

    “சுஜா பொண்ண எப்பவும் சந்தோசமா வச்சிக்கப்பா.” என்று வாழ்த்தியவர்  “இதுவும் யேம் பொண்ணுதான். இவளுக்காக பேச, துணைநிக்க இங்கொரு குடும்பம் இருக்கு மறந்துடாத ஜெய்.” என அதிரடியாக வார்த்தை கணைகளை குறிபார்த்து வீசினார்.

   வீடு திரும்பினர் இருவரும். “காலையில கிளம்பி போனவங்க இப்பதான் திரும்பி வர்றாங்க. இதெல்லாம் கேக்க இந்தூட்டுல யாராச்சும் இருக்கிங்களா?” என கீதா அழும் குரலில் ஆரம்பிக்க

   “ஏன்டி அவன் ஆம்பள! ஆயிரம் வேலை இருக்கும் லேட்டா வர்றான். நீ மதியமே கிளம்பி வரவேண்டியதுதான? எங்க ஊர் சுத்திட்டு வர்ற?” என சுசிலா நீட்டி முழங்க,  விஜயன் மௌனமாக ஜெய்யையும், சுஜாவையும் பார்த்தான். சுஜா திரும்பி ஜெய்யை பார்க்க

   “அம்மா சுஜா ஸ்கூலும் சாயங்காலம் நாலரை மணிக்கு தான் முடியும். பசங்க எல்லாரையும் அனுப்பிட்டு அவங்கவங்க கிளாஸ்ரூம பூட்டிட்டுதான் அவங்க வெளிய வரனும். டீச்சர்ல ஆம்பள என்ன? பொம்பள என்ன?” என ஜெய் கேட்க விஜயன் மனதில் சிறு சந்தோசம். விடுவாரா சுசிலா “அரும பெருமையா வளர்த்தனே! இப்போ ஒரு வாரத்திலேயே என்னைய மானங்கெட பேசறானே! நேத்து வந்தவ அவ்வளவு முக்கியமா ஆயிட்டாளே! புள்ளதாச்சி புள்ளைய வச்சிக்கிட்டு நானு தடுமாறுறேனே! இத பாக்க கேக்க ஆளில்லையா இந்த வூட்டுல?” என ஒப்பாரி வைக்க உள்ளிருந்து வந்தார் கீதாவின் அம்மா.

     “என்னங்க மாப்பிள்ளை நீங்க இப்படி செய்யறது சரியா? உங்க பொண்டாட்டி மாசமா இருக்கா. வாய்க்கு ருசியா விருப்பப்பட்டத சாப்பிட்டாதானே உங்க குழந்தை…. ஆரோக்கியமா அழகா, கலரா பொறக்கும். இவ இப்படி தினமும் லேட்டா வந்து எப்போ உங்க பொண்டாட்டிக்கு சமைச்சி குடுத்து உங்க குழந்தைய… பாத்துக்கிறது?” என கொக்கிப்போட,

     “சுஜா வந்துதான் செய்யனுமுன்னு என்ன வேலை இங்க காத்துக்கிட்டு கிடக்கு? ரெண்டு பேரும் இவ்ளோ நேரம் ஊர்க்கதை தானே பேசினிங்க? அதுக்கு துணைக்கு சுஜா வேணுமா?” என விஜயன்

    “உங்க பொண்ணுக்கு ஜெய் பொண்டாட்டி ஏன் சமைச்சி போடனும்? உங்களுக்கு, உங்க நாத்தனாருக்கு, ஏன் உங்க பொண்ணு எல்லாருத்துக்கும் கை கால் எல்லாம் நல்லாதானே இருக்கு. செஞ்சி திங்க என்ன வலிக்குது? இல்ல செய்ய வலிக்குது, வக்கனையா கொறை சொல்லிட்டு கொட்டிக்க இனிக்குதா?”

    “உங்க ஊருக்கு கூட்டிட்டு போய் உங்க பொண்ணுக்கு நீங்க வாய்க்கு ருசியா சமைச்சி போடுங்க மாமியாரே. அம்மான்னு எதுக்கு இருக்கிங்க? ஊர கெடுக்கவா?” என்றவன்,

   “சமையல்கட்ட இப்போதான் எட்டிப் பார்த்துட்டு வர்றேன். மூணு (மூ)தேவிகளும் இதுவரை இங்கதான இருந்திங்க? என்னத்த வெட்டி முறிச்சிங்க? காலையில சுஜா கிச்சனை கிளீன் பண்ணிட்டு போனது எங்களுக்கு தெரியும். அரைநாள்ல கிச்சனை உங்க மனசுபோலவே  குப்பை ஆக்கி வச்சிருக்கிங்க. உங்க வாழ்க்கையும் இப்படியே ஆயிடும். மனசொடிஞ்சி சொல்றேன் இப்படி அடுத்தவங்கள கஷ்டப்படுத்தறவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க. நடுவீதியில நாதி இல்லாம நிப்பாங்க.” என விஜயன் கோபமாக சொல்ல

    “அம்மா வேணுமுன்னு ஒன்னும் கிச்சனை இப்படி பண்ணல. நான் ஆசப்பட்டதை சமைச்சி குடுத்தாங்க. அதுல…”எ என கீதா நீட்டி முழக்க,

    “மகளுக்கு அம்மா சமைச்சி குடுத்துட்டா. இந்த மகாராணிக்கு நாங்க சமைச்சி போடனுமா? இவ ஆடி அசஞ்சி வருவா, நான் வாசல்ல சொம்பு தண்ணியோட சாப்பிட கூப்பிட காத்து நிக்கனுமா?” என ஆங்காரமாய் கேட்க

     “நம்ம எல்லாருக்கும் சமைச்சவங்க கூட ஒரு கைப்பிடி அரிசி போட்டு அந்த பொண்ணுக்கு சமைச்சா கொறஞ்சி போயிடுவிங்களா?” என விஜயன் மடக்க

    “அண்ணா நாங்க கண்ணன் வீட்டுக்கு போய்ட்டு வந்தோம். அங்கேயே சாப்புட்டிட்டு வந்துட்டோம். எங்களுக்காக நீங்க சண்டை போட வேண்டாம்.” என விஜயனிடம் ஜெய் சொன்னான். சொல்லிவிட்டு அவன் அறை நோக்கி நடக்க, அடுத்த பிரச்சனையை கிளப்பினார் கீதாவின் அம்மா.

    “டேய் ஜெய் நில்லு! அதென்ன ரூம பூட்டிட்டு போறது? அதும் சாவி ஏதும் இங்கில்லாத புது பூட்டு போட்டு?” என விஜயன் இருப்பதை மறந்து கேக்க

    “அந்த ரூமுக்கு உங்களுக்கு என்ன வேலை?” என விஜயன் கேள்வியை திசைதிருப்ப, பதில் சொல்ல முடியாமல் அவர் தவிக்க, சட்டென கீதா

   “சமைச்சி முடிச்சிட்டு களைப்பா இருக்குன்னு கொஞ்ச நேரம் படுத்து எந்திரிக்க போனாங்க. இப்போ பதில சொல்ல சொல்லுங்க உங்க தம்பி” என சொல்ல

   “நம்ம ரூம் இருக்கு, அம்மா ரூம் இருக்கு, ஹால் பதினாறுக்கு  பதினாறு கட்டி போட்டிருக்கு. இங்கெல்லாம் படுக்க முடியாம களைப்பான….உங்க அம்மா பூட்ட பாத்துட்டு வீட்டு கொத்து சாவி எடுத்துட்டு போயி ஒவ்வொரு சாவியா போட்டு பாத்துட்டு அப்புறம் எங்க படுத்து களைப்ப போக்கினாங்க?” என விஜயன் கேக்க

    “இல்ல புது பொண்ணு கொண்டு வந்த புடவைய, நகைய பாக்கலாமுன்னு உங்க பொண்டாட்டி சொன்னா…. புள்ளத்தாச்சி திடீர்னு ஆசப்படறாளேன்னு வேற வழியில்லாம நாங்க கொத்து சாவிய போட்டு தெறக்க பாத்தோம்” என அந்தம்மா மென்னு முழுங்க

    “அவங்க பொருள அவங்கில்லாத போது பாக்க உங்க பொண்ணு ஆசப்பட்டாளா? இல்ல நீங்க திருடிட்டு போக ஆசப்பட்டிங்களா? நாந்தான் காலையில புது பூட்டு குடுத்து பூட்டி சாவிய கொண்டு போக சொன்னேன்” என்ற விஜயன்,

    “ ஜெய் நீங்க போங்க. காலையில இருந்து கிளாஸ் எடுத்து களைச்சு போய் வந்தா இந்த வெட்டி கூட்டம் வம்புக்கு இழுத்துக்கிட்டு இருக்கு. போய் ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு ஸ்கூல் இருக்கில்ல, போங்க “ என அனுப்பிட்டு

   “மாமியாரே உங்க நாத்தனாருக்கு நீங்க குடுத்தனுப்பிய சீரு, நகை அப்புறம் உங்க பொண்ணுக்கு நீங்க வாங்கி அனுப்புன சீரு சிறப்பு எல்லாம் அந்த ரூம்ல இருக்கு. அங்க போய் படுங்க இப்போ.. ம்ம்ம்ம் போங்க. காலையில மொத பஸ் நாலே காலுக்கு இருக்கு. கிளம்பி போங்க. போயி உங்க வீட்டுல.. நல்லா கவனிங்க.. உங்க வீட்ல இந்த முடிச்சி விடறது, கொம்பு சீவறது இதெல்லாம் வச்சிக்கிங்க சரியா? இப்போ போயி படுங்க” என கோபமாக கத்த

   “அம்மா இன்னும் சாப்பிடல” கீதா முனக

   “வகைவகையா சமைச்சு களைச்சவங்களுக்கே சாப்பாடு போடாம நீயே எல்லாத்தையும் கொட்டிக்கிட்டயா கீதா?” என்றவன் “சமையகட்டுல ஒன்னத்தையும் காணோம். உங்கம்மா சமைச்சது முழுசும் எங்கே? பயன்படுத்திய பாத்திரங்கள் குவிஞ்சிகிடக்கு.. யாரும் சாப்பிடலன்னு சொன்னா நம்பறது போலவா இருக்கு? நீ வயிறு காலியா இருந்தா இன்னும் கொஞ்சம் பால குடிச்சிட்டு போய் படு கீதா. டயர்டா தெரியிற.” என்று மனைவிய பால் குடிக்கச் செய்து தூங்க அனுப்பிவிட்டு, “ம்ம்ம்ம் ஆரம்பிங்க வேலைய. சீக்கிரம் முடிங்க. நான் இங்க சேர்ல உட்கார்ந்து வரவு-செலவு கணக்கை பார்க்கிறேன். கிச்சனை கிளீன் பண்ணி முடிச்சிட்டு எனக்கு சுக்கு காபி வைச்சி குடுங்க. மதியம் வெளிய சாப்பிட்டது புளியேப்பமா வருது” என்றவன்

   “அடுத்தவங்க வீட்டுல குழப்பத்த ஏற்படுத்தன்னே கிளம்பி வந்துடுதுங்க சனியங்க. இதுங்கள தொலைச்சி தலை முழுக காலம் வர மாட்டேங்குது” என சத்தமாக புலம்பியபடி கணக்கு நோட்டுடன் வந்து சேரில் உட்கார்ந்தான்.

   இதை கேட்டபடி கீதா அம்மா பாத்திரம் கழுவ, சுசிலா ஆப்பசைத்த குரங்கு போல நின்றார். மகனுக்கு என்ன, அவன் பாட்டுக்கு பேசிட்டு போயிடுவான். கீதாவும், அவள் அம்மாவும் ஆடும் ஆட்டத்தை அவரல்லவா சமாளிக்கனும். பயப்பந்து வயிற்றினுள் உருள வேகமாக அடுப்பை சுத்தம் செய்தார் சுசிலா.

   சுஜாவை இன்று இரவு முழுவதும் இதை செய்ய வைப்பதுதான் இவர்கள் ப்ளான். இவர்கள் கஷ்டப்பட்டு எண்ணெய் ஊற்றி, கரியை பூசி, முட்டையை உடைத்து போட்டு, பால், தயிர், சாம்பார் என எல்லாவற்றையும் சிந்தி, பாத்திரங்களை தீய வைத்து என கிச்சனை ஒரு வழிசெய்திருந்தனர். வீட்டிலிருந்த பாத்திரங்கள் எல்லாமே புழங்கப்பட்டிருந்தன. இருவரும் சேர்ந்து செய்தபோதே சில மணி நேரங்கள் கடந்திருந்தன.

  இரவுக்கென சமைக்க வாங்கி வந்திருந்த கோழிக்கறி குளிர்சாதன பெட்டியில் தூங்கிக்கொண்டிருந்தது.

   இவர்கள்  ஜெய் வரும் முன் சுஜா வந்துவிடுவாள். அவளை வேலை செய்ய வைக்க திட்டமிட்டனர். சாயங்காலம் வரை சுத்தம் செய்தபின் கோழி பிரியாணி, சப்பாத்தி கோழி குருமா செய்யச் சொல்ல திட்டமிட்டிருந்தனர். கோழிக்கறி வாங்கி வரச் சொல்லி விஜயனுக்கு அழைத்து சொல்லியிருந்தனர். மகேஷ் நண்பனொருவன் கறிக்கடை வைத்திருக்க விஜயன் அவனுக்கு அழைத்து நாலு  கிலோ சிக்கனை வீட்டில் கொடுத்து விடும்படி சொல்லி இருந்தான்.

  கறிக்கடைகாரனும் கறி கொண்டு வந்த போதுதான் இவர்கள் திட்டம்போட்டு கிச்சனை அலங்கோலம் செய்து கொண்டிருந்தனர். அதைகண்ட அவன் அங்கிருந்து கிளம்பியபின் மகேஷுக்கு அழைத்து சொன்னான். சுஜாவை நினைத்து பரிதாபப்பட்டான் அவன். மகேஷ் ஜெய்யிற்கு அழைக்க அவன் வகுப்பில் இருந்ததால் எடுக்கவில்லை. கண்ணனுக்கு அழைத்து சொன்னான்.

    கண்ணன் சற்றே யோசித்தவன் நீலாவை அழைத்து அவர்கள் வீடு திரும்பிவிட்டனரா என கேட்டு தாங்கள் பள்ளிக்கு பக்கத்திலேயே வீடு வாங்கியிருப்பதை பேச்சி வாக்கில் சொல்வதுபோல சொல்லி, “ இன்னும் இரு வீடு விற்காமல் இருக்கு. ஜெய், சுஜாவிடம் சொன்னா வாங்குவாங்களான்னு தெரியல. காலையில சொல்ல மறந்துட்டேன். அப்பவே சொல்லியிருந்தா நீங்க எங்க வீட்ட  பார்த்துட்டு, அந்த வீடுகளையும் பார்த்தட்டு போயிருப்பிங்க.” என்றான்.

    அவன் ஆசை நிறைவேறுமா?