தேன் சாரல் நீ 24

    சுஜா புடவையுடன் உள்ளே செல்ல பின்னால் போன ஜெய் “சுஜா ஏன் அப்படி சொன்ன? அண்ணன் நமக்கு ஒவ்வொரு விசயத்தையும் பாத்து பாத்து செய்யறாரு. ஆனா நீ தேவையில்லாம பேசற… புடவைதானே அவங்க கட்டிட்டு போறாங்க விட வேண்டியது தானே?” என கோவமாக கேட்க

    “இந்த புடவை யார் யாருக்கு வாங்கினது?” என சுஜா கேட்க

    “இது உனக்கு என்னோட கிப்ட். இன்னைக்கு என்னோட ஸ்கூலுக்கு வரும்போது, நீ இதை உடுத்தி வர ரெடி பண்ணி வச்சேன். ஆனா அண்ணி ஆசப்பட்டா இத வச்சிக்கட்டும். சம்பளம் வந்ததும் உனக்கு வேற புதுசா நான் வாங்கி தர்றேன். இதை குடுத்துடு.” என்க

     “புடவையோட புடவையை எடுத்தவங்களோட மொத்த சந்தோஷத்தையும் கேக்கறாங்க. கொடுத்திடட்டுமா? அப்படி கொடுக்க சொன்னாலும நீங்க எடுத்த புடவைய மட்டும்தான் குடுப்பேன்.”

     “என்னோடத ஏன் உங்க அண்ணிக்கு நான் கொடுக்கனும். அவங்க யாரு எனக்கு? உங்க அண்ணிக்கு நீங்க வாங்கி குடுங்க. என்னோட பொருளை கொடுக்க சொல்ல உங்களுக்கே இன்னும் நான் உரிமை குடுக்கல. மைண்ட் இட்”.

     “நான் ஆசையா எடுத்தது, எங்க அப்பா, அம்மா, அண்ணனுங்க, அண்ணிங்க எடுத்துக்குடுத்தத எவளோ ஒருத்திக்கு குடுக்கனுமுன்னு எனக்கு ஒன்னும் வேண்டுதல் இல்லை. எல்லாம் எனக்கே வேணுமுன்னு அலையற அரைவேக்காடு கூட போட்டி போடற சீப்பான ஆளு நானில்ல”

   “அந்த லேடி கட்டிட்டு தூக்கி போடற புடவைய கட்ட வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் கட்ற புடவையை வாங்க எனக்கு தெம்பிருக்கு. வருமானமிருக்கு. இப்படி அடுத்தவகிட்ட இருக்கிறதை பறிக்க மாட்டேன்.”

    “இப்பகூட உங்கண்ணன் வாங்க சொல்லி ஜாடைகாட்டவும் வேற வழியேயில்லாம தான் வாங்கினேன். தம்பி மொத மொதல்ல வாங்கின புடவை தம்பி பொண்டாட்டிக்கிட்ட இருக்கனுமுன்னு அவர் ஆசைபட்டதால் இது என் கையில இருக்கு. ஓகே.” என சொல்லி அப்புடவையை பீரோவில் ஜெய் துணி இருந்த பகுதியில் தூக்கி எறிந்து விட்டு, வேற ஒரு காட்டன் புடவையை எடுத்துக்கிட்டு போய் டிரஸ் மாத்திக்கிட்டு வந்தாள்.

    “சுஜா அந்த புடவையை கட்டலயா?” என ஜெய் ஆவலாக கேக்க சுஜா பேசாமல் அறையில் இருந்து வெளியேறினாள்.

    வெளியே விஜயனும் கேள்வியாக பார்க்க பதில் சொல்லாமல் ஒரு வாட்டர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து தன் பையில் வைத்தபடி எல்லோரையும் பார்த்து “போயிட்டு வர்றேன்” என சொல்லி கிளம்பினாள்.

    சதீஷ், கண்ணன், காயு வர ஐவரும் கிளம்பி செல்ல விஜயனும் “நான் பேங்க் வரை போய்ட்டு வரேன்” என சொல்லி கிளம்பினான்.

    “ஏங்க நான் சொன்னா திட்டறீங்க. ஆனா இன்னைக்கு வந்தவ புள்ளதாச்சின்னுகூட பாக்காம என்னைய இல்லயில்ல உங்க பொண்டாட்டிய அவமானபடுத்திட்டு, அந்த புடவைய புடுங்கிட்டு போய் கட்டிக்கிட்டு அம்சமா கிளம்பி போறா. நீங்க குத்துக்கல்லு மாதிரி கம்முன்னு நிக்கறீங்க. உங்களுக்கு இரத்தம் கொதிக்கல?” என கீதா அலற

   சட்டைக்கு பட்டன் போட்டபடியே, “ எனக்கு ஏன் இரத்தம் கொதிக்கனும்? அது உன் புடவையா? நாந்தான் வாங்கி தந்தனா? சுஜா புடவை அது. அதும் புடவைய அது வாங்கிட்டு போய் கட்டுது. இதுல உங்க ரெண்டு பேருக்கும் ஏன் எறியுது?”

    “பொறாமையில இரத்தம் கொதிக்காது, வயிறு எரியும். போயி பொங்கல் வடைய நல்லா வயிறுமுட்ட தின்னுங்க” என்றவன் வாய்விட்டு சிரிக்க இருவரும் கேள்வியாக பார்த்தனர் அவனை.

     “பொங்கல், வடையும் அங்க இல்லை. எங்கம்மா சின்னமருமகள மட்டம் தட்ட, பட்டினி போட நினைச்சி அதை மாட்டுத் தாழியில கொட்டிட்டாங்க.”

  “ஏம்மா சண்டை போடதானே அப்படி செஞ்சிங்க? அவங்களுக்கு மட்டும் சமைச்சிட்டான்னு பிரச்சனைய கிளப்பி அவங்க ஸ்கூல் போறத தடுக்க நினைச்சிங்க. அதுக்குள்ள இந்தம்மா புடவை ஆசையில பிரச்சனைய திசை திருப்பி விட்டுட்டா. இப்போ உங்க திட்டம் புஸ்வானமா போச்சே…ஐய்யோ பாவம்.” என நக்கலடிக்க

    “அத்த எனக்கு பசிக்குது. பொங்கலும், வடையும் எனக்கு எடுத்து வைக்காம எதுக்கு தூக்கி கொட்டினிங்க? அவ சமையல் எப்படின்னு இன்னைக்கு ருசி பாத்திருப்பேன். அதையும் கெடுத்திங்க” என கத்திய கீதா,

    “போயி காரசாரமா ஏதாவது சமைங்க. பசி உயிர் போவுது” எனவும் ஓலமிட்டாள்.

     “ போயி ஏதாவது கஞ்சிய வச்சி ஆச மருமக பசிய போக்குங்க. போங்கம்மா…. கெடுவான் கேடு நினைப்பான்னு பெரியவங்க சரியாதான் சொல்லி இருக்காங்க.”என்றவன் மனதினுள்

    “ சுஜாவ திட்ட பிளான் பண்ணி இப்போ பொங்கல் மாட்டுக்கு தீவனமா போச்சி. அதுக்காவது நன்றி உணர்ச்சி இருக்கும்” என திட்டியபடி தனது வண்டியெடுத்துக் கொண்டு ஜெய், சுஜாவை பின்தொடர்ந்தான்.

    முதலில் சுஜா பணிபுரியும் பள்ளிக்கு போய் சுவீட், காரம் கொடுத்துவிட்டு, ஜெய்யின் புது பள்ளிக்கு பணியில் சேர சென்றனர். ஈஸ்வரும், சுகனும் தத்தம் குடும்பத்தினருடன் மாணவர்களுக்கு இனிப்பு கார பொட்டலங்களுடன் வந்து சேர்ந்தனர்.

   பெரியவர்கள் யாருமில்லாமல், ஒத்த வயதுடைய ஒரு படையே பணியில் சேர்க்க வந்திருக்க தலைமை ஆசிரியரும் அவர்களையே இனிப்பு காரத்தை விநியோகம் செய்ய அனுமதித்தார்.

    “டேய் சதீஷு நீயும் கல்யாணம் முடிச்சதும் வேலைக்கு சேர்ந்திருந்தா உன் மச்சானுங்க இப்படி கொண்டாடி இருப்பாங்க. நீதான் மிஸ் பண்ணிட்ட” என கண்ணன் கிண்டலடிக்க

   “சுஜா ஜாயின் பண்ணும்போது பண்ணுன அலப்பறையில இது பாதிதான். அதனால அடக்கி வாசிங்க கடவுளே” என நீலா கலாய்க்க

   “புது மாப்பிள்ளைக்கு மச்சானுங்க ட்ரீட் வச்சி என்ன செய்ய? கவனிக்க வேண்டியவங்க கவனிக்கனும்” என சதீஷ் கேலியில் இறங்க, அப்பள்ளியில் இருந்தவர்கள் அனைவருக்கும்  ஜெய் புது மாப்பிள்ளை என தெரியவர கேலியும் கிண்டலுமாய் அரவணைத்தனர் தங்கள் புது தோழனை.

    ஜெய் சுஜாவை பார்த்தபடி நிற்க, சுஜாவோ தலைகுனிந்தபடி நின்றாள். அனைவரும் அவள் வெட்கப்படுவதாக நினைத்தனர். காயு கண்ணனையும், விஜயனையும் முறைத்தபடி நின்றாள். அவளுக்கு தெரியும் சுஜாவின் மேனரிசம். கேலி கிண்டல் செய்யும்போது தலைகுனியாமல் நிமிர்ந்து நின்று நாசுக்காக தடுப்பவள், இன்று தலைகுனிந்து பேசாமல் நிற்கிறாள். ஏதோ புது சிக்கல் போல என நினைத்தாள் காயு.

   ஜெய்யிடம் “அண்ணா நானும் இன்னைக்கு லீவு. சுஜாவ எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். நீங்க சாயங்காலம் ஸ்கூல் முடிச்சி போகும்போது வந்து கூட்டிட்டு போங்க” என கூறி பதில் சொல்ல அவகாசம் கொடுக்காமல் எல்லோரிடமும் சென்று வருகிறோம் என சொல்லி, சுஜாவை இழுத்துக் கொண்டு காருக்கு சென்றாள்.

   “கடவுளுக்கே இந்த கதின்னா சாதாரண மனிதர்களோட நிலைமையை நினைச்சிப் பாருங்க?” விஜயன் குழு கேலி பேசியபடி ஜெய்யை விட்டுட்டு வெளியே வர காயு, நீலா, மொழி மூவரும் கண்ணனின் காரில் உட்கார சுஜாவுக்கு மண்டைக்குள் அலாரம் அடித்தது.

   “ஐய்யோ  வசமா மாட்டிக்கிட்டேனே! காயுவையே சமாளிக்க முடியாது. இதுல அண்ணிங்க ரெண்டு பேரும் வேற கூட வர்றாங்க.” என மனதுக்குள் புலம்பியபடி வர விஜயனும் வந்தான்.

    கண்ணன் வீட்டுக்கு வந்தவுடன் நால்வரும் சேர்ந்து மதிய உணவை செய்ய, சாப்பிட்டுவிட்டு தங்கள் கேள்விகளை சுஜாவிடம் கேட்க துவங்கினர்.

   காயு, “சுஜா ஜெய் அண்ணன் உனக்கு சர்ப்ரைஸ் கிப்ட் வாங்கினாங்களே? அந்த புடவையை கட்டலயா? உனக்கு புடிச்ச கலர், டிசைன்னு ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுட்டு போயி எடுத்துட்டு வந்தாரே? அது எங்க?” என கேக்க, சுஜாவோ மனதினுள்

    “ஜெய் மாமா எனக்குதான் வாங்கிட்டு வருவாங்க. எனக்கு எப்பவும் சர்ப்பரைஸா ரூம்ல வச்சிருப்பாங்க, அப்படின்னு அவங்க வீட்டு அதிர்ஷ்டலட்சுமி சொல்லிட்டாங்க. உங்க அண்ணனும் புடவைதானே குடுத்தா என்ன குறைஞ்சா போயிடும் ன்னு கேக்கறார்.”

    “சோ அவரோட பீரோல அவரு உடுத்திக்க அதை எறிஞ்சிட்டு வந்திருக்கேன்” என நினைத்துக் கொண்டு,

    “காயு எனக்கு ஸ்பெஷல் அக்கேஷன்ல காட்டன் புடவை உடுத்ததான் பிடிக்கும்ன்னு உனக்கு தெரியாதா? அதனால புது காட்டன் புடவையை உடுத்திக்கிட்டு வந்தேன்.” என்ற சுஜா

    “ஏய் காயு உண்மையாவே உங்கண்ணன் எனக்கு புடவை எடுத்தாரா? எங்கிட்ட சொல்லவே இல்ல பாரேன். இன்னைக்கு அவர் வரட்டும், அந்த புடவை எங்கன்னு விசாரிக்கிறேன்.” என்றாள்.

   அவள் பேசிய பாவனையில் சிரித்த ஈஸ்வர், “பாப்பா! புது இடம் உனக்கு செட் ஆயிடுச்சா? அண்ணனுங்க மேல கோவமில்லையே?” என்க

   “எங்களை எல்லாம் இப்படி கேட்டதே இல்லையே? தங்கச்சி மட்டும் ஸ்பெஷல் இல்ல” என மொழி கலாய்க்க

  நீலாவோ, “என்னங்க இது? இந்த கேள்விய இப்போ கேட்டு என்ன பண்ண போறிங்க?  செட் ஆகலன்னா என்ன பண்ணுவிங்க? இப்படியே கூட்டிட்டு போயிடுவிங்களா?” என முறைத்தபடி கேட்க

   “அண்ணா கேள்வி கரெக்ட்தான் அண்ணி. அடுத்தவங்களுக்காக ஆயுசு முழுசும் சகிச்சிக்கிட்டு வாழ முடியாது. பார்ப்போம் இன்னும் கொஞ்ச நாள்” என நினைத்தாள் சுஜா.

    “அண்ணி நான் என்ன நினைக்குறேன்னு அண்ணா போட்டு வாங்கறாங்க. நீங்க அவரை மிரட்டுறிங்க. இதே கதைதான் வீட்டுலயுமா?” என சுஜா கேலி செய்ய சிரித்துக்கொண்டே கிளம்பினர் அனைவரும்.

    விஜயனும் கிளம்பிட, காயு சுஜாவிடம் திரும்ப சுஜா வெறுமையாய் பார்த்தாள்.

   “சுஜா நெஜமா உனக்கு அந்த புடவையை அண்ணன் குடுக்கலையா?” என காயு கேட்க

    “என்னோட புடவை, புருஷன்னு சீப்பா என்னால சண்டை போட முடியாது காயு. இதுக்கு மேல என்னால விளக்கமா பேச முடியாது ப்ளீஸ் எதுவும் கேட்காத!” என சொல்லி காயுவின் புத்தக வரிசையை நோக்கி சென்றாள் சுஜா.

   வெளியே வந்த காயு கண்ணனிடமும், போனில் விஜயனிடமும் பேசி நடந்ததை அறிந்தாள்.

     விஜயனிடம்  போனில் கோபமாக, “உங்க வீட்டு நிலவரம் உங்களுக்கு தெரியும். சுஜாவும் செல்ப் ரெஸ்பெக்ட் அதிகம் உள்ளவ. அப்புறம் எதுக்கு சுஜாவை உங்க தம்பிக்கு கட்டி வச்சிங்க? யார பழி வாங்க இத செஞ்சிங்க?” என்றவள், திரும்பி கண்ணனிடம்

    “எனக்குதான் அவங்க வீட்ட பத்தி தெரியாது! உங்களுக்கு தெரியுமில்ல? ஏன் இத தடுக்கல? அவ என்னால சீப்பா யேன் புடவை, யேன் புருஷன்னு சண்டை போட முடியாதுங்கிறா…. புரியுதா உங்களுக்கு? அவ தன்னோட எல்லையை தீர்மானம் பண்ணிட்டா.”

     “உங்க ப்ரெண்டு அவ எல்லைக்குள்ள நுழையறது கஷ்டம். என்னோட யூகம் கரெக்டா இருந்தா அவங்க இன்னும் வாழ ஆரம்பிக்கல.” என புலம்பியபடி தலையை பிடித்தக் கொண்டு அமர கண்ணன் மெதுவாக, “காயு! ஜெய் சுஜாவ லவ் பண்றான். சுஜா மனசுல என்ன இருக்குன்னு தெரியல…” என இழுக்க

    “மண்ணாங்கட்டி… அவ ஏற்கனவே அண்ணனுங்க சொன்னா யாரா இருந்தாலும் ஓக்கேன்னு இருந்தா. ஆனா அப்பவே எங்கிட்ட இதுவரை பேச முயற்சி பண்ணாத ஒருத்தரை எனக்கு கல்யாணம் பேசறாங்க. இதுசரி வருமா தெரியலைன்னு புலம்பினா.” என்றவள்

   “ அவளுக்காக ஒரு சின்ன குண்டூசி அளவுக்கு கூட முயற்சி பண்ணாத ஜெய்க்கு பக்காவா ப்ளான் பண்ணி சுஜாவை பழி கொடுத்துட்டிங்க. சந்தோஷமா இருங்க” எனச் சொல்லி சுஜாவை தேடி சென்றாள்.

    சுஜாவே ஜன்னல் வழியே தென்னை மரத்திலிருந்த தூக்கணாங்குருவி கூடுகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

    காயுவை கண்டதும் தனது பிரச்சனைகளை சமாளிக்க தன் திட்டங்களை சொன்னாள் சுஜா. காயுவும் கண்ணனும் “அதெல்லாம் சரி வராது” என சொல்ல “ஜெய் வரட்டும்” என்ற சுஜா “நான் பேங்க் வரை போயிட்டு வரேன். உன் வண்டி சாவி எங்க காயு?” என்றபடி தனது லஞ்ச் பேகை எடுக்க அதிர்ந்தனர் இருவரும். அதனுள் டப்பாவில் சாப்பாடுக்கு பதில் நகைகள்.

   சுஜாவின் நகைகளை பார்த்த காயு பேச்சின்றி வண்டி சாவியை தர நகைகளை தனது கைப்பையில் வைத்தபடி லாக்கர் சாவியை சரிபார்த்துவிட்டு சுஜா கிளம்பினாள். காயுவையும் உடன் செல்ல சொன்னார் கண்ணனின் அம்மா.

    கண்ணனின் தங்கை மகன், அங்கிருந்தவன் சுஜாவுடன் கிளம்ப அடம்பிடிக்க தனது கைபேசியில் ஒரு வீடியோவை போட்டுக் கொடுத்துவிட்டு சுஜா காயுவை அழைச்சிக்கிட்டு போனாள்.

   வீடியோ முடியவும் ஏதேதோ பட்டனை அழுத்தி பார்த்தவன், கண்ணனின் அம்மாவிடம் வந்தழுக, மகனை கூப்பிட்டு கொடுத்தார் அந்த அம்மா.

    கண்ணனும் வாங்க கைநீட்ட அச்சிறுவன் கொடுக்க மறுத்து இறுக்கமாக பிடிக்க ரெகார்டிங் செய்யப்பட்ட குரல்கள் வர ஆரம்பித்தது. சுஜா குரலும், கீதாவின் கபட நாடகமும் கண்ணனுக்கு மயக்கத்தை வரவைத்தது.

   அந்த பதிவை கேட்ட கண்ணனின் அம்மா ஆத்திரத்துடன், “ஏன்டா கண்ணா இதுக்கு நீ துணை போன? மானை கொண்டுபோய் ஓநாய் கூட்டத்துல வாழ வைக்கிறது சாத்தியமா? உன்னோட ப்ரெண்டு வாழ சுஜாவ அழிச்சிட்டிங்க” என்று கதறினார்.

    “பள்ளிக்கூடத்துக்கு பக்கத்துல ஒரு வீடு பாரு. நாம குடி போயிடலாம். தினமும் பகலுல அந்த புள்ளைய  நாம பாத்துக்கலாம். அதும் வாழ்க்கைய சீர் பண்ற பொறுப்பு இப்போ நம்மளோடது. முடியாது, வேணாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.” என உறுதியாக கூறினார்.

    “காயுவிடம் என்னங்கம்மா சொல்ல?” கண்ணன் தடுமாற

    “காயு வயித்துல இருக்க குழந்தைங்க சுகப்பிரசவமா பிறக்கன்னு சொல்லு  அவ சந்தோசமா ஏத்துக்குவா. அதைவிட சுஜாவுக்கு ஒரு மாரல் சப்போர்ட்டா இருக்கன்னு சொல்லு உடனே கிளம்புன்னு சொல்லுவா” என சிரிக்க கண்ணன் கண்கலங்கினான்.

    சுஜாவிற்கு என்னென்ன கனவுகள் இருந்ததுவோ  யாரறிவார்?