சார். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்என்று அவள் நல்ல பிள்ளையாக ஆரம்பிக்க,

பேசலாம். நேர்ல மீட் பண்ணி பேசலாம்என்றான் வில்வநாதன்.

நேர்லயா?” அவள் தயங்கினாள். போனில் என்றால் வெளிப்படையாக பேசிவிடலாம். நேரில் எப்படி?

ஏன்? என்னாச்சு?”

நாளைக்கு காலையில கோவில்ல  மீட் பண்ணலாமா?” 

ம்ம். ஓகே. ஷார்ப் செவன்என்று வைத்துவிட்டான்.

மீனலோக்ஷ்னி இப்போதே என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்று மனதுக்குள் ஒத்திகை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

முக்கியமா அவர் சீண்டினா கோவப்பட கூடாது. பொறுமையா இருக்கணும். அப்போதான் தெளிவா பேச முடியும்என்று அவளுக்கே அறிவுரை கொடுத்து கொண்டாள்.

அருகில் வந்த தூக்கம், யோசனையில் தொலைவாக நின்று போனது. நெடு நேரம் சென்றே தூங்க ஆரம்பித்தவள், காலையில் தாமதாக எழுந்தாள்.

ஏதோ சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்து நேரம் பார்க்க, அது ஏழை நெருங்கி கொண்டிருந்தது. “அச்சோஎன்று ஓட்டமாக குளியலறைக்கு ஓடினாள்.

சுஜாதா அவள் பரபரப்பாக கிளம்புவதில், “எங்க போற மீனா?” என்று கேட்டார்.

ம்மா. கோவிலுக்கு. அப்பாகிட்ட சொல்லிடுங்கஎன்று வண்டியை விரட்டினாள்.

கோவிலுக்குள் வேக நடையுடன் செல்ல, எதிரில் வில்வநாதன் அவளை தீர்க்கமாக பார்த்தபடி.

ஆரம்பமே அமர்க்களம்!

சாரி. சாரி சார். கொஞ்சம் லேட் ஆகிடுச்சுஎன்றாள்.

அவன் கை கட்டி அப்படியே நிற்க, இவளுக்கு என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. அதற்கான ஆளும் இவன் இல்லையே!

சாமி கும்பிட்டிங்களா?” என்று கேட்க,

மேடம் வருவாங்கன்னு காத்திருக்கணுமா என்ன?” என்று அவன் கேட்டு வைத்தான்.

சார் ப்ளீஸ். நான் சாமி கும்பிட்டு ஓடி வந்துடவா. பைவ் மினிட்ஸ்என்றாள்.

வாஎன்று அவளுடனே நடந்தான். வில்வநாதன் வந்ததால் சிறப்பு தரிசனம் கிடைத்து சாமி மாலையுடன் வெளியே வந்தனர்.

இப்பதான் சாமி கும்பிடுறாரா? யோசித்தபடி வில்வநாதன் நீட்டிய பூவை வாங்கி தலையில் வைத்து கொண்டாள் மீனலோக்ஷ்னி.  

இங்க உட்காருவோமா?” என்று பெண் கேட்க,

ம்ம்என்று மாலையை அவளிடம் கொடுத்துவிட்டு அவளுக்கு முன் நின்றான்.

தனக்கு நேரே ராணுவ அதிகாரி போல் நின்றவனிடம், “நீங்களும் உட்காருங்கஎன்று இடம் காட்டினாள்.

மேடம் பெர்மிஷனுக்கு தான் காத்திட்டிருந்தேன்என்றான் அவன்.

ம்ஹூம். வாயே திறக்க கூடாதுபெண்ணுக்கு ஞானம் வந்து வாய் மூடி கொண்டாள்.

உள்ளூர் அழகியை பார்க்கத்தான் வேலையை விட்டு நான் வந்தேனா?” என்று அதற்கும் கேட்க,

இங்க பாருங்க என்னை உள்ளூர் கிழவி கூட சொல்லிக்கோங்க. ஆனா அதை சொல்லாதீங்கஎன்றாள் பட்டென.

சரி இனி அப்படியே சொல்றேன்அவன் கேட்டுக்கொள்ள, பொறுமையை இழுத்து பிடித்து கொண்டவள், 

பாருங்க சார். இது நம்ம லைஃப் மேட்டர். நாம கொஞ்சம் சீரியஸா பேசணும்என்றாள்.

சரி பேசுஎன்றவனிடம் கிண்டலே.

பெண்ணுக்கு புரிந்தும், “நீங்க ஏன் பாட்டிகிட்ட சொல்லலை. உங்க எதிர்பார்ப்புக்கான பொண்ணு நான் இல்லைன்னுஎன்று கேட்டாள் மீனலோக்ஷ்னி.

வில்வநாதன் புருவம் உயர்த்தி அவளை பார்த்தவன், “என்னோட எதிர்பார்ப்பு என்னன்னு உனக்கு தெரியுமா?” என்று இவளை கேட்டான்.

ஆஹ். அது. அது தெரியாது. ஆனா அது கண்டிப்பா நான் இல்லைன்னு தெரியும்

எப்படி தெரியும்?”

எத்தனை முறை சொல்லிட்டீங்க. எனக்கு பொறுப்பு இல்லை. உஷார் இல்லை, நான் இன்னும் வளரணும்

அறிவு இல்லைன்னு கூட நான் சொல்லிட்டேன்னு சண்டைக்கு வந்தியேஎன்று எடுத்து கொடுத்தான்.

ஆமா அதுவும் தான்பல்லை கடித்து பொறுத்தவள், “உங்களோட குணத்துக்கும், என்னோட குணத்துக்கும் கொஞ்சம் கூட செட் ஆகாதுன்னு நீங்களே பாட்டிகிட்ட சொல்லிடுங்க” என்றாள். 

ஏன் நீங்க சொல்ல மாட்டீங்களா மேடம்

அப்பாம்மா கொஞ்சம் ஆசை படுறாங்க

சோ அவங்க மனசு கஷ்டப்பட கூடாதுன்னு பார்க்கிற. ஆனா பாரு நானும் அப்படி தான் அமைதியா இருக்கேன்என்றான் அப்பாவியாக.

நான் இதை நம்ப மாட்டேன். வார்த்தையிலே கபடி ஆடுவீங்க நீங்க

இல்லை. இந்த விஷயத்துல நான் நல்ல பையனா இருக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்

ஆஆஹ்என்று கத்த தோன்றியது. அடக்கி கொண்டவளிடம், “மாமா உன்னை ஏதும் போர்ஸ் பண்றாரா என்ன? நன்றிக்கடன் அப்படி ஏதும்?” என்று கண்களை சுருக்கி கேட்டான்

இல்லை. என் அப்பா அப்படி பண்ண மாட்டார். நன்றி கடனுக்காக என் தலையை கொடுப்பேன். என் பொண்ணு வாழ்க்கையை கொடுக்க மாட்டேன்னு அம்மாகிட்ட சொன்னதை நான் கேட்டேன்என்றாள் பெருமையாக.

பெஸ்ட் அப்பா உனக்குஎன்றான் வில்வநாதன்.

அடுத்த நொடிகள் ஒரு மாதிரி கனத்து போனது. மீனலோக்ஷ்னி அவன் வார்த்தையில் அமைதியாகி விட்டாள்.

பேசி முடிச்சிட்டியா? நான் கிளம்புறேன்என்றான் வில்வநாதன்.

நீங்க பாட்டிகிட்ட பேசுவீங்க தானே?” என்று ஆர்வமாக கேட்டாள் மீனலோக்ஷ்னி.

என்ன பண்ற நீ? உனக்கு தேவைன்னா நீ தான் பேசணும்என்றான் வில்வநாதன்.

அதான் சொன்னேனே. அவங்க மனசு கஷ்டப்படுவாங்க. ஆனா இதே நீங்க சொல்லிட்டா மறு பேச்சு இருக்காதுஎன்று பாவமாக முகம் வைத்து.

நடிக்க ஆரம்பிச்சுட்டா

வில்வநாதன் அவளை ஆழமாக பார்க்க, பெண் எங்கோ பார்த்தாள். “ரைட். உன்னை பார்க்கவும் பாவமா இருக்கு. உனக்காக ஒரு  உதவி பண்றேன்என்றான் அவன்.

மீனலோக்ஷ்னி முகம் மலர்ந்து போக, “நான் சொல்றதை அப்படியே பாட்டிகிட்ட சொல்லு. அது போதும். இந்த பேச்சு தானா நின்னு போயிடும்என்றான்.

என்ன சொல்லணும்?” அவளின் ஆவலில்,

சிம்பிள். உன் மாமா, நிரந்தரமா மாளிகைக்கு திரும்பணும். அப்போ தான் நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்வேன்னு சொல்லுஎன்றான் தோள் குலுக்கி.

தயா மாமாவா?” பெண்ணின் புருவங்கள் சுருங்கியது.

வேற மாமா யாரும் இருக்காங்களா என்ன?”

எங்க மாமா இருக்கார். அத்தை வீட்டுக்காரர்என்றாள் யோசனையோடு.

அவர் மகனுக்கா உன்னை கேட்கிறாங்க?”

ச்சு. என்ன பேசுறீங்க நீங்கபெண்ணின் மூக்கு விடைத்தது. “நான் ஏதோ திங்கிங்ல பேசுறேன்னு விடாமஎன்று முணுமுணுத்து கொண்டவள்,

இது ஒர்க்கவுட் ஆகுமா?” என்று சந்தேகமாக கேட்டாள்.

என்ன கேட்ட? திரும்ப கேளுஎன்றான் அவன் அழுத்தமாக.

உடனே கடிக்க வருவார்மனதில் அர்ச்சித்து, வெளியே அமைதியாக நின்றவள், “மாமா சரின்னு சொல்லிட்டா என்ன பண்ணன்னு தான் கேட்டேன்என்றாள்.

மகன் நான் கேட்டே முடியாதுன்னு தான் சொன்னார். சோஎன்று தோள் குலுக்க, மீனலோக்ஷ்னிக்கு நம்பிக்கை வந்தது.

நான் அப்பாகிட்ட சொல்லிட்டு, பாட்டிகிட்ட பேசுறேன்என,

நோ. அது கூடாது. நேரா பாட்டிகிட்ட பேசுஎன்றான் கண்டிப்புடன்.

அது எப்படி அப்பாக்கு தெரியாமஎன்று பெண் தயங்க,

ஓய் என்ன பாவமா இருக்கேன்னு ஐடியா கொடுத்தா கேள்வியா கேட்டுட்டு இருக்கஎன்று அதட்டினான் அவன்.

சரி. சரி. உடனே பாயாதீங்கஎன்று பெண் எழுந்து கொள்ள, இருவருமாக வெளியே வந்தனர்.

“உனக்கு என்மேல இவ்வளவு அக்கறையான்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு?” என்று வில்வநாதன் சொல்ல,

“அப்படியா?” என்று இவளும் கேள்வி.

“இல்லாமலா எனக்காக யோசிச்ச? நீ எனக்கு சரிப்பட்டு வரமாட்டேன்னு தான் இந்த பேச்சு நிக்கணும்ன்னு போராடுற” என,

“ஆமா. இந்த முரட்டு பீஸை நான் எப்படி சமாளிக்க?” அவள் முணுமுணுக்க,

“சரிதான். இந்த முட்டா பீஸை சமாளிக்க எனக்கு கஷ்டம் தான்” என்றான் வில்வநாதன்.

“என்னை எப்படி நீங்க அப்படி சொல்லலாம்?” பென்ணுக்கு ரோஷம் வெடித்து கொண்டு வர,

“நீ வாய்க்குள்ள சொன்னதை, நான் வெளியே சொன்னேன். அவ்வளவு தானே” என்றான் அவன்.

“நான் எப்போ அப்படி சொன்னேன். முரட்டு பீஸை சமாளிக்க முடியாதுன்னு தான் சொன்னேன்” என்றுவிட்டவள், வில்வநாதன் முறைப்பில் பம்மிவிட்டாள்.

“நான் முரடுன்னு நீ எப்போ பார்த்த, அன்னைக்கும் முரட்டு ராஜா சொன்ன இல்லை நீ” என்று ஒருமாதிரி கேட்க,

“அது, அது சும்மா. நான் கிளம்புறேன்” என்று ஓடி போனவள், அதே வேகத்தில் இவனிடம் திரும்ப வந்தாள்.

“என்ன ரன்னிங் ரேஸா? தனியா ஓடிட்டு இருக்க” என்று கிண்டலாக கேட்க,

“இந்த மாலையை கொடுக்க தான் வந்தேன்” என்றாள் கடுப்பாக.

“நீயே எடுத்துட்டு போ” என்று வில்வநாதன் கார் கதவை திறக்க,

“இல்லை, இல்லை. உங்களுக்கு கொடுத்தது. நீங்க தான் வீட்டுக்கு எடுத்துட்டு போகணும்” என்று மறுக்க,

“அப்போ நான் கொடுத்த பூவை மட்டும் தலையில வைச்சுக்கிட்ட?” என்று கேட்டான் வில்வநாதன்.

“அச்சோ. அவர் கொடுக்கவும் யோசனையில் வாங்கி வைச்சுட்டேனே” அவள் விழித்து நிற்க, “மாலையும் உனக்கு தான்” என்று முடித்து, கிளம்பினான்.