Advertisement

அய்யர், “கெட்டிமேளம்! கெட்டிமேளம்” என்று குரல் கொடுக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, அபியுதித் பனிமலரின் கழுத்தில், தான் கொண்டு வந்திருந்த பொன் தாலியை அணிவித்து, அதனுடன் கோர்த்திருந்த மஞ்சள் நாணில் மூன்று மூடிச்சிட்டான். நாத்தனார் முடிச்சு போட வந்த மைத்ரேயியை பார்வையாலேயே தடுத்து அவனே மூன்றாவது முடிச்சையும் போட்டு இருந்தான்.

அவன் தாலி கட்டியதும், பனிமலர் அழுத்தமான கோபப் பார்வையுடன், நெனச்சத சாதிச்சிட்டீங்கல?” என்றாள்.

ஒரு நொடி அதிர்ந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவன் அமைதியாக தோளைக் குலுக்க,

அவளோ கோப விழிகளுடன், “ஆனா இனி, நீங்க நெனக்காதது தா நடக்கும்” என்றாள்.

அதற்கும் அவன் தோளைத் தான் குலுக்கினான் ஆனால் இம்முறை அவனது உதட்டோரம் சிறு மென்னகை பூத்திருந்தது.

அய்யர் இருவரையும் அக்னியை வலம் வரக் கூற, அவளோ எழுந்து நின்று தன்னை வெறுப்பு கலந்த வன்மத்துடன் முறைத்துக் கொண்டு இருந்த வேலம்மாளைப் பார்த்து நக்கலும் கோபமும் நிறைந்த குரலில், உங்க மகன கூட்டிட்டு நீங்க கெளம்பலாம்” என்றாள்.

நெல்லைவடிவு அதிர்வுடன் ஏதோ பேச வர,

அதற்கு முன் கோபத்துடன, “இவருடன் வாழ்வேனுட்டு எப்புடி நெனச்சீங்கமா? அப்பா சாவுக்கு காரணமானவங்கள எப்புடி ஒறவா ஏத்துக்கிடுறீங்க! ஒங்களால முடிஞ்சாலும் என்னியால முடியாது” என்றவள் சுப்பையாவை சிறு வலியுடன் பார்த்தபடி மெல்லிய குரலில், கமுக்கமா ஒங்க பேரன் கூட கூட்டு சேர்ந்துபுட்டீங்கல!” என்றாள்.

அவரோ அவளது தலையை ஆதூரமாக வருடியபடி, “நா ஒனக்கு நல்லது தா செஞ்சிருக்கேனுட்டு ஓ ஆழ்மனசுக்கு புரியும்த்தா” என்றார்.

நெல்லைவடிவு, “நம்ம அபி..” என்று ஆரம்பிக்க,

அதற்குள் வேலம்மாள் ஆவேசத்துடன், “அப்புறம் எதுக்குடி என் பையனை கல்யாணம் செய்த?” என்று கத்தினார்.

அவள் அலட்சியத்துடன், “உங்க மகன் தான் நடக்க இருந்த கல்யாணத்தை கட்டம் கட்டி நிறுத்தி, என்னை கல்யாணம் செய்து இருக்கார்” என்றாள்.

அதிர்வுடன் மகனைப் பார்த்தவர், அவனது முகபாவனையில் இருந்து அது தான் உண்மை என்பதை அதிர்வுடன் கண்டு கொண்டார். தனது ஏமாற்றத்தையும், இயலாமையையும், மகனைத் திட்ட முடியாத கோபத்தையும் சேர்த்து இவளிடமே காட்ட நினைத்து இன்னும் கோபத்துடன் பேச வர,

அவளோ நக்கலும் சிறு வன்மமும் கலந்த பார்வையுடன், “அது என்ன பொண்ணு மட்டும் தான் வாழாவெட்டியா!! கல்யாணம் ஆகி தனியா இருக்கும் பையனும் அதே வாழாவெட்டி தான்..

இங்க யாரும் உங்க மகனை மயக்கவும் இல்லை, ஆசைப்பட்டு வாழ ஏங்கியும் நிக்கல.. உங்க மகனை வாழாவெட்டியா உங்க கூடவே கூட்டிட்டு போங்க” என்று கூறியிருந்தாள்.

சுப்பையா அவளிடம் மறுத்து பேச வாயைத் திறக்கும் முன், “நா ஒங்க பேத்திங்கறது நெசம்னாக்க, இனி யந்த வெசயத்திலும்.. முக்கியமா ஒங்க பேரன் வெசயத்துல என்னிய நீங்க இழுத்துக்கட்டவோ, மறிச்சி நின்னு யெ சார்பா வாக்கு கொடுக்கவோ கூடாது” என்று அழுத்தத்துடன் கூறி அவரது வாயை அடைத்து விட, அவர் பார்வையாளராக மாறிப் போனார்.

“அவன் ஆம்பளை சிங்கம்டி! அவனுக்கு இன்னொரு கல்யாணத்தைச் செய்து வைப்பேன்” என்று வேலம்மாள் கூற, 

அவள் அதீத நக்கலுடன், “நான் கம்ப்ளைண்ட் கொடுத்தா, ஜெயில்ல உங்க சிங்கம் சிங்கி அடிக்கும்” என்றாள். 

மைத்ரேயி மெல்லிய குரலில், “இந்த பெட்ரோமாஸ் லைட்டை எப்படி அண்ணா கரெக்ட் பண்ணப் போற?” என்று அபியுதித்தின் காதில் முணுமுணுக்க,

பனிமலர் சட்டென்று திரும்பி அவளை முறைக்கவும்,

“அய்யோ நானில்ல.. நான் எதுவும் சொல்லல” என்று அலறியபடி இரண்டடி பின்னால் நகர்ந்து நின்று கொண்டாள்.

அபியுதித் சிரிக்க, பனிமலரோ கோபத்துடன், “உன்னோட அண்ணன ஊருக்கு கூட்டிட்டு போய்டு.. இல்ல இந்த பெட்ரோமாஸ் லைட் அவரை எரிச்சு சாம்பலாக்கிடும்” என்றாள்.

அவனோ மென்னகையுடன், “நான் சாம்பலில் இருந்து எழுந்து வர ஃபீனிக்ஸ் பறவை மாதிரி, இந்த பெட்ரோமாஸ் லைட் எத்தனை முறை எரித்தாலும் எழுந்து வருவேன்.. அதுவும் இந்த பெட்ரோமாஸ் லைட்டைத் தான் சுத்தி வருவேன்” என்றான்.

வேலம்மாள், “இந்த கல்யாணத்தை ரெஜிஸ்டர் செய்யலை.. இது சட்டபடி கல்யாணமே இல்லை” என்று எகத்தாளத்துடன் கூற, 

“ஹஹான்” என்றபடி நக்கலுடன் அவரை மேலும் கீழுமாக பார்த்த பனிமலர், முடிஞ்சா இன்னொரு கல்யாணத்துக்கு உங்க மகனோட சம்மதத்தை வாங்குகளேன்!” என்று சவாலிடும் குரலில் கூறினாள்.

அவர் தனது தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் வெறியுடன் அவளை முறைக்க, அவளோ அதை சிறிதும் பொருட்படுத்தாமல் அலட்சியப் படுத்தினாள்.

அபியுதித் விரிந்த புன்னகையுடன் பனிமலரிடம், “பொண்ணு தான் புகுந்த வீட்டிற்கு வரணும்னு இல்லை.. நான் வீட்டோட மாப்பிள்ளையா வந்துட்டுப் போறேன்.. கல்யாணத்திற்கு நீ போட்ட கண்டிஷன் அதானே!” என்றான்.

சட்டென்று அகமும் முகமும் இறுகிய நிலையில், “உங்களுக்கு என் வீட்டிலும், மனசிலும் இடம் இல்லை” என்றாள்.   

மாயக்கண்ணனின் புன்னகையுடன் அவளை நோக்கியவன், “அன்னைக்கும், என்னைக்கும் உன் இதயத்தில் எனக்கு மட்டும் தான் இடம் உண்டு” என்றான்.

உங்க பகடிக்கு சிரிப்பே வரல”

“சிரிப்பு வரதுக்கு நான் ஜோக் சொல்லலையே!” என்றவன் நெல்லைவடிவிடம், “என்ன அத்தை! உங்க வீட்டில் எனக்கு இடம் இல்லையா?” என்றான் புன்முறுவலுடன்.

அவரோ, “இனி அது வூடும் தான்பா” என்று கூறினார்.

பனிமலர், “அம்மா!” என்று கத்த,

வேலம்மாள், “என்னங்கடி ஆத்தாலும் மவளும் நாடகம் போட்டு என் மகனை உங்க பக்கம் இழுக்குறீங்களா! நான் உயிரோட இருக்கும் வரை அது நடக்காது” என்று கத்தினார்.

அவரை கண்டுகொள்ளாத நெல்லைவடிவு மகளிடம், யெ முடிவ சொல்லிபுட்டேன்.. பொறவு ஓ இஷ்டம்” என்று கூறிவிட,

அவள் கோபத்துடன் அவனை முறைக்க, அவனோ வெற்றிப் புன்னகையை உதிர்த்தான்.

அதில் இன்னும் கோபம் கொண்டவள், “எதுக்கு சும்மா இளிச்சசுட்டே இருக்கீங்க? யாரும் உங்களுக்கு சிறந்த இளிச்சவாயன்னு விருது கொடுக்கப் போறாங்களா?” என்று கேட்டாள்.

சத்தமாக சிரித்தவன் ஆங்கிலேயர் பாணியில் கையை மடக்கி தலை வணங்குவது போல் லேசாக தலையை தாழ்த்தி நிமிர்த்தியபடி, “புன்னகை மன்னன் என்ற பட்டதிற்கு மிக்க நன்றி இளைய ராணி” என்றான்.

மகனின் செயலில் வேலம்மாள் பனிமலரை துவேசப் பார்வைப் பார்க்க, அவரைக் கண்டுகொள்வோர் தான் யாரும் இல்லை.

அபியுதித்தின் செயலில் இன்னும் கடுப்பான பனிமலர் உதட்டோர நக்கல் புன்னகையுடன், “கிளினிக்கில் ஈ ஓட்டிட்டு இருக்கிறீங்களா! அதான் என் கூட ஒட்டிக்க வாரீங்களா?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூற,

அவனோ விஷமப் புன்னகையுடன், “ஒட்டிக்கலாமா?” என்று கேட்டு கண்ணடித்தான்.

அவளோ இரு விரல்களை அசைத்தபடி, “ஒட்ட நறுக்கிடுவேன்” என்று மிரட்டினாள்.

‘அடிப்பாவி!’ என்பது போல் அவளை அவன் பார்க்க,

நக்கல் புன்னகையுடன், “என்ன டாக்.டர்ர்ர்ரு! டர் ஆகுதா!” என்றாள்.

“நான் பிஸியோதெரபிஸ்ட்மா” 

“இங்க நீங்க டாக்டர் தான்.. படிப்பிலும் பி.எச்.டி முடிச்சிட்டீங்க தானே! டாக்டர் சொன்னா தப்பில்லை” என்றவள், “ஆனா நான் உங்களை அப்படி சொல்லலையே!” என்றாள் புருவத்தை உயர்த்தி இறக்கியபடி.

அவன் புரியாமல் பார்க்கவும், உதட்டோர கிண்டலான மென்னகையுடன், “எப்படி பிரிச்சு சொன்னேன்!” என்றாள்.

‘டாக்.டர்ர்ர்ரு’ என்று மனதினுள் சொல்லிப் பார்த்தவன் அதிர்வுடன், “அடிப்பாவி!!!!” என்றான்.

அவள் விரிந்த புன்னகையுடன், “புரிஞ்சுடுச்சு போல!” என்றாள்.

‘உன்னோட இந்த சிரிப்புக்காக எதுவாவும் இருக்க நான் தயார்என்று மனதினுள் கூறிக் கொண்டாலும் தன்னவளின் மாற்றத்திலும், அடாவடி பேச்சிலும் மனம் வருந்தியவன் தன்னை மீறி, “இது நீ விளையாட்டா தான் சொன்னனு தெரியும்.. ஆனாலும் நீ ரொம்ப மாறிட்ட டியு-ட்ராப்(dewdrop-பனித்துளி)என்றான்.

அவனது பிரத்தியேக அழைப்பில் சட்டென்று இறுகியவள், “மாற்றியது நீங்க தான்” என்றாள்.

சட்டென்று சுதாரித்தவன் மெல்லிய புன்னகையுடன், “உன்னோட இந்த மாற்றத்துக்கு என்னை சேர்ந்தவங்க காரணமா இருக்கலாம்.. ஆனா மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது.. உன்னை பழையபடி மாற்ற என்னால் முடியும்..” என்றவன் அதே புன்னகையுடன் அவளது கண்களை ஆழ்ந்து நோக்கியபடி அழுத்தமான குரலில், “என்னால் மட்டும் தான் முடியும்” என்றான்.

Advertisement