Advertisement

அங்கே கல்யாண மண்டபத்தில் தொட்டதிற்கெல்லாம் குறை கண்டு பிடித்துக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் அன்னை, “அதான் பொண்ணுக்கு பெரியப்பா பெரியம்மா இருக்காங்களே! பொறவு ஏன் தாய்மாமன் சடங்கு செய்றாப்ல?” என்று அலப்பறையை கூட்ட,

அதை கேட்டு பனிமலர் நெற்றிக்கண்ணை திறக்கப் போக, நெல்லைவடிவு தான் அவசரமாக அவளது கையை பற்றி கெஞ்சும் பார்வையுடன் அடக்கினார்.

அதற்குள் கூட்டதில் ஒரு பெரியவர், “ரெண்டு குடும்பத்துக்கும் ஆகாதுனுட்டு தெரிஞ்சு தான பொண்ண எடுக்குதிய! பொறவென்ன பேச்சு இது?” என்று குரலை உயர்த்தி அவரை அடக்க பார்க்க,

அவரோ அப்பொழுதும் அடங்காமல், “பொண்ண எடுக்குறேனா! அந்த கொடுப்பின எனக்கேது! பையன இல்ல கொடுக்குதேன்” என்று சத்தமாவே முணுமுணுக்க, பனிமலரை அடக்க நெல்லைவடிவு தான் பெரும் பாடுபட்டார்.

அதற்கு ஒரு மூதாட்டி, ஆமா, கொடுத்து தான் வெச்சு இருக்க.. நீயி மட்டுமா! யங்கூரு இளைய ராணிய கட்டிக்கிட ஓ மவனும்ல கொடுத்து வெச்சு இருக்கியான்” என்றார்.

மாப்பிள்ளையின் அன்னை அடுத்து பேசும் முன், முகூர்த்த புடவையை கட்டுவதற்காக மகளை இழுத்துக் கொண்டு நெல்லைவடிவு சென்றார்.

செல்லும் அவளையே அழுத்தமாக பார்த்தபடி அபியுதித் மண்டபத்தின் உள்ளே நுழைய, ஈர்ப்பு விசை போல அறையினுள் செல்லும் முன் கடைசி வினாடியில் வாயிலை நோக்கி திரும்பியவள் அவனை பார்த்திருக்க, அந்த ஒரு நொடியையும் வீணடிக்காமல் அவன் அவளைப் பார்த்து வசீகர புன்னகையுடன் கண்சிமிட்டி இருக்க, அவனை முறைத்துவிட்டு அறையினுள் சென்றவள் பத்திர காளியாக மாறி இருந்தாள்.

பத்து வருடங்கள் கழித்து பார்த்துக் கொண்டாலும், இருவருக்கும் மற்றவர் முகம் மறக்கும் முகம் இல்லையே!

“இங்கன என்ன நடக்குது? யெல்லாத்துக்கு ஒத்துக்கிட்டு தான கலியாணத்துக்கு சம்மதம் சொன்னாவ! இப்ப என்னவாம் அந்த அம்மாக்கு?” 

வுடுடா” 

அப்புடி யெல்லா வுட முடியாது.. இஷ்டமில்லனாக்க கெளம்பி போய்கிட்டே இருக்க சொல்லுங்க” 

“மலரு!” என்று அதிர்வுடன் அழைத்தார். 

“பொண்ணுனா கண்டிப்பா கலியாணம் கட்டித் தான் ஆவணுமா யென்ன! இந்த கருமம் புடிச்ச கலியாணத்த கட்டலனா தா இப்ப யன்ன?” 

மலரு!” என்று சற்றே குரலை உயர்த்தியவர் பின் வேதனை கலந்த இறங்கிய குரலில், “நல்ல நாளுமதுவுமா ஏன்டாமா இப்புடி யெல்லாம் பேசுற?” என்று கலங்கிய கண்களுடன் பேச,

“ப்ச்!” என்று சலித்தவள் அடுத்த நொடியே கோபத்துடன், “அந்த குடும்பங்களுக்கு பத்திரிக்கை வச்சீங்களா?” என்று கூர்விழிகளுடன் வினவ,

தடுமாற்றத்துடன், ஆ..ரை கேக்குறடா?” என்று கேட்டார்.

இன்னும் முறைத்தபடி, “அம்மா!” என்று அவள் அழைக்க,

அவர் மெல்லிய குரலில், “தாத்தா தான் அனுப்ப சொன்னாங்க” என்றார்.

“தாத்தா!” என்று பல்லை கடித்தவள் மூச்சை இழுத்துவிட்டு கோபத்தை தனித்தபடி, “போங்க.. நா கெளம்பிட்டு வாரேன்” என்றாள்.

வெளியே அவளது தாத்தா சுப்பையாவோ அபியுதித்துடன் சிரித்து பேசிக் கொண்டு இருந்தார். அபியுதித் அருகே மைத்ரேயியும் அன்பரசும் அமர்ந்து இருந்தனர்.

இவர்களை முறைத்தபடி பண்ணையாரின் மகன் ஆளவந்தான் அவனது அத்தையான லீலாவதியிடம், யென்ன அயித்த நடக்குது?” என்று கேட்டான்.

லீலாவதி தனது நாத்தனார் வேலம்மாளைப் பார்க்க,

அவரோ, “அபி எது செய்தாலும் ஒரு காரணம் இருக்கும்.. அவன் நம்ம பக்கம் தான்” என்றார்.

அவர் கூற்றில் நம்பிக்கை இல்லாத ஆளவந்தான் தனது அத்தையின் காதில், யெனக்கென்னவோ அவென் மேல சந்தேகமாவே இருக்குது அயித்த” என்று முணுமுணுத்தான்.

அவரும் வேலம்மாள் காதில் விழாதவாறு, “எனக்கும் தான்.. எது எப்படியோ கல்யாணம் நின்னா போதும்” என்றார்.

யெனக்கு அது போதாதே” 

“என்னடா சொல்ற?” 

“இந்த கலியாணம் நின்னு, நா அவ கழுத்துல தாலி கட்டோனும்” 

“என்னடா சொல்ற?” என்று இம்முறை அவர் சற்று சத்தமாக கேட்டுவிட,

வேலம்மாள், “என்ன மதினி?” என்று கேட்டார்.

“ஒன்னுமில்ல.. எங்க சொந்தத்துல ஒருத்தர் தவறிட்டாராம்” என்று சமாளித்தவர் வேலம்மாள் திரும்பியதும்,

“ஓ புத்தி என்ன புல்லு மேய போயிட்டுதாலே! அந்த எடுபட்ட சிறுக்கிய போய் கல்யாணம் கட்டப் போறேனுட்டு சொல்லுற?” என்று குரலை தாழ்த்தி சீறினார்.

ஓ மருமவென் அம்புட்டு வெவரம் இல்லாதவனா! அவ கழுத்துல நா கட்டப்போறது மூக்கணாங்கயிறு.. அவெளோட திமிர ஒட்டுக்கா அடக்கி ஆளோனும்.. அவெ ஆட்டத்த நிறுத்தி நம்ம குடும்ப மருவாதய திருப்பப் போறேன்” 

“ஓ! அப்புடி வாரியா நீ! இதுவும் நல்ல ஐடியா தான்லே” என்று அவர் புன்னகையுடன் பாராட்ட,

அவனோ, “இந்த யோசனய சொன்னதே அந்த அபி தா.. ஆனா இப்போ கமுக்கமா போய் எதிரி கூட்டதுக்கிட்ட இழிச்சிட்டு ஒக்காந்து இருக்கியான்” என்றான்.

“என்னடா சொல்ற?” 

“ரெண்டு நாளு மின்ன, போன போட்டு அவென் தா சொன்னியான்.. அத நம்பி  நானும் சில திட்டங்கள போட்டு வெச்சு இருக்கேன்.. ஆனா அவென், இதில் தனக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி காட்டி நல்ல பேரு யெடுக்க பார்க்கிறானோனுட்டு சந்தேகமா இருக்குது” 

“அவனுக்கு நல்ல பெயர் கிடைச்சா என்ன! கெட்ட பெயர் கிடைச்சா என்ன! நமக்கு வேண்டியது நடந்தா செரி” 

வில்லத்தனமான சிரிப்பை உதிர்த்தவன், “அப்புடி யெல்லாம் வுட முடியாது அயித்த.. நா ஆடப் போற ஆட்டமே அவென வெச்சுத் தா” என்றான்.

அவர் ‘என்ன’ என்பது போல் பார்க்க,

அவரைப் பார்த்து சிரிப்புடன், இந்தா ஆரம்பிக்குது பாரு” என்றவன் கூட்டதில் இருந்த ஒரு பெண்மணியைப் பார்த்து தலை அசைக்க, அவர் வேகமாக மாப்பிள்ளையின் அன்னையிடம் சென்று ஏதோ பேசத் தொடங்கினார்.

அதன் விளைவாக, முகூர்த்த புடவை அணிந்து பனிமலர் வெளியே வந்த போது அந்த இடமே கலவரமாக இருந்தது.

ஆளாளுக்கு பேசி சண்டை போட்டுக் கொண்டு இருக்க, நெல்லைவடிவு அழுது கொண்டு இருக்க, அதைப் பார்த்து வேலம்மாளும் லீலாவதியும் குரூரமாக அகமகிழ்ந்து புன்னகைத்து கொண்டிருந்தனர்.

சுப்பையா கலக்கத்துடன் இருக்க, அவரது கையை பற்றிய அபியுதித் கண்களை மூடி திறந்தான்.

மைத்ரேயி சிறு பதற்றத்துடன், “என்ன அண்ணா அமைதியா இருக்கிற?” என்று வினவ,

அவனோ சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், “நான் என்ன செய்யணும்?” என்றான். 

“அவங்க உன்னையும் சேர்த்து தான் கேவலப்படுத்துறாங்க” 

“ஸோ வாட்?” 

அவள் அதிர்வுடன் பார்க்க,

அவனோ மென்னகையுடன், “எதுக்கு எனர்ஜியை வேஸ்ட் செய்துட்டு! இப்போ உன் அண்ணி வந்து ஷார்ட் அண்ட் கிரிஸ்ப்பா முடிச்சு வைப்பா பார்” என்றான்.

அவள் வாயை திறந்தபடி அதிர்வுடன் அவனை நோக்க, அவளது நாடியில் கைவைத்து வாயை மூடியபடி கண்ணடித்தான்.

அப்பொழுது சரியாக, “நிறுத்துங்க” என்று பனிமலர் கத்திய கத்தலில் இடமே அமைதியானது.

பின், “இங்கயென்ன நடக்குது?” என்று அவள் வினவ,

மாப்பிள்ளையின் அன்னை, யெல்லாம் நீயி அடிச்ச, அடிக்கிற கூத்துதேன் சந்தி சிரிச்சிட்டு இருக்குது” என்றவர், “பேரும் மதிப்பும் இருக்க பெரிய குடும்பம்னுட்டு சொல்லுறது யெல்லா, சும்மானக்க பூசி மொழுகுறது தா போல! இங்கன வந்தாக்க தான இவுங்க மௌசு தெரியுது! பொழப்பு சிரிப்பா சிருக்குதே!” என்று நீட்டி முழக்கினார்.

மாப்பிள்ளை அவசரமாக, செத்த சும்மா இரு ஆத்தா” என்றுவிட்டு பனிமலரைப் பார்த்து, தப்பா யெடுத்துக்காதீக.. ஆத்தா வெவரம் இல்லாம ஒளறுது.. நீங்க வாங்க” என்று அழைத்தான்.

அவன் அன்னையோ, ஆருல ஒளறுறது! நா ஒன்னு இல்லாத பொல்லாதத சொல்லல.. நெருப்பு இல்லாம புகையாதுல! இதையும் மீறி, மானங்கெட்டுப் போய் இவள கட்டிக்கிட்ட! அடுத்த நிமிஷம் நா உத்தரத்துல தொங்கிபுடுவேன்லே” என்று கத்தினார்.

அவள் தனது தாய்மாமன் மகன் செந்தூரனை நோக்க,

கோபத்துடன், ஒன்னியவும் அபி அண்..” என்று ஆரம்பித்தவன் அவளது தீ பார்வையில் வார்த்தையை விழுங்கியபடி அபியுதித்தை சுட்டி காட்டியபடி, “இவுரையும் ஒன்னியவும் சேர்த்து வெச்சு தப்பு தப்பா பேசுறாயிங்க.. அடுத்து..” என்று ஒரு நொடி நிறுத்தி பின் சற்றே கலங்கிய விழிகளுடன், ஒன்னியவும்.. யென்னியவும் கூட சேர்த்..” என்று கூறும் பொழுதே கையை உயர்த்தி அவனை தடுத்து இருந்தாள்.

Advertisement