Advertisement

இன்று….

முகூர்த்தம் காலை 6 – 7.30 என்பதால், வைகறை 3 மணி அளவில் பனிமலரை எழுப்பிய அவளது அன்னை நெல்லைவடிவு அகம் நிறைந்த மந்தகாச புன்னகையுடன் அவளது முகத்தை திரிஷ்டி கழிப்பது போல் செய்தபடி, “ராஜாத்தி” என்றவர், “வெரசா கெளம்புடா தங்கம்.. இன்னும் ஒன்னர மணி நேரத்துல பொண்ணழைக்க மாப்பிள்ள வூட்டுல இருந்து வந்துருவாக” என்றார்.

அன்னைக்காக மட்டும் உதட்டின் ஓரம் சிறு மென்கீற்றை உதிர்த்தவள் எழுந்து அறையில் இருந்த குளியலறையினுள் சென்றாள்.

மகள் சென்றதும் அவ்வறையில் இருந்த கணவரின் புகைப்படத்தை பார்த்தவர், ஏ மவராசா! போகும் போது நம்ம புள்ளையோட சிரிப்பையும் சந்தோசத்தையும் சேர்த்து எடுத்துட்டு போயிட்டிகளே! இனியாவது அவ வாழ்க்கையில வெளக்கேத்தி வைங்க.. ஒங்கல நம்பிதே இருக்கேன்’ என்று மானசீகமாக வேண்டிக் கொண்டார்.

அதற்குள், “அத்தாச்சி!” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்கவும்,

“தோ வாரேன்” என்று குரல் கொடுத்தவர் மகளுக்கு வேண்டிய ஆடை மற்றும் அணிகலங்களை எடுத்து வைத்துவிட்டு வேகமாக வெளியேறினார்.

அதன் பிறகு நிற்க நேரம் இல்லாமல் தான் சுழன்று கொண்டு இருந்தார்.

காலைகடன்களை முடித்து குளித்துவிட்டு வந்த பனிமலர் மேசை மீது இருந்த குளம்பியை(coffee) எடுத்துக் கொண்டு திறந்து இருந்த ஜன்னல் அருகே சென்றாள். நிலவொளியில் மெல்லிய தென்றலின் இசைக்கு ஏற்ப தென்னங்கீற்று அசைந்தாடிய காட்சி பார்க்கவே ரம்மியமாக இருந்தது. ஆனால் அது அவளது மனதை குளிர்விக்கவுமில்லை, பதியவுமில்லை. நிலவு மங்கையை வெறித்தபடி குளம்பியை பருகிய மங்கையவளின் மனதினுள் பல எண்ண அலைகள்….

 

பதினொரு வயது பனிமலர் முற்றதில் அமர்ந்திருந்த வீரையன் கழுத்தை புன்னகையுடன் பின்னால் இருந்து கட்டியபடி இருக்க, அவரும் மகளின் கையை பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் ஆடியபடி வேலையாளிடம் பேசிக் கொண்டு இருந்தார்.

வேலையாள் அகன்றதும் வீரையனின் அன்னை பாப்பாத்தியம்மாள், “என்னப்பு இது! இன்னு சின்ன கொழந்தயா இவ.. ரெண்டு வருசம் போனாக்க குத்த வச்சிடுவா.. செத்த வெலகியிருக்க பழக்கு அப்பு” என்றார்.

அவரோ புன்னகையுடன், யெ ராஜாத்தி எப்பயும் எனக்கு கொழந்த தா ஆத்தா” என்றார்.

“அப்பு..” என்று அவர் ஆரம்பிக்க,

பனிமலர், “குத்த வைக்கிறதுனா என்னப்பா?” என்று கேட்டு இருந்தாள்.

“அட கோட்டிபய புள்ள! அப்பன் கிட்ட கேக்குற கேள்வியா இது! போய் ஓ ஆத்தா கிட்ட கேழுடீ” 

‘நான் கேட்டது தப்பா!’ என்பது போல அவள் தகப்பனைப் பார்க்க,

மறுப்பாக தலை அசைத்த வீரையன் அவளை தன் மடியில் அமர வைத்து பொறுமையாக, “நீங்க பெரிய பொண்ணா வளருறதை தான் குத்து வைக்கிறதுனு சொல்லுவாங்க” என்றார்.

“ஓ” என்றவள், “அதுக்காண்டி ஏ அப்பத்தா ஒங்கல விட்டு வெலகி இருக்கோனும்னுட்டு சொல்லுது?” என்று பாப்பாத்தியம்மாளை முறைத்தபடி வினவ,

“ரொம்பத்தா” என்றபடி உதட்டை சுழித்தவர், “மொறைக்குற கண்ண நொண்டிபுடுவேன்” என்று மிரட்ட, அவளோ அவருக்கு அழகு காட்டிவிட்டு தந்தையைப் பார்த்தாள்.

அவரோ பேத்தியை நினைத்து, ‘என்னாண்ட மட்டும் வாயி எட்டூருக்கு நீளும்.. வூட்ட தாண்டினாக்க இந்த பூனையும் பாலு குடிக்குமானுட்டு பம்மிட்டு இருக்கது’ என்று முணுமுணுத்தார்.

வீரையன், “நீங்க பெரிய பொண்ணானதும் சில விதிமுறைகளை கடைபிடிக்கோனும் கண்ணு.. அதுல ஒன்னு தான் பசங்க கிட்ட இருந்து தள்ளி இருக்கது.. பொறவு….” என்றவரின் பேச்சை வேகமாக இடை மறித்தவள்,

“ஒங்க கிட்ட இருந்து என்னிய பிரிக்கர எதுவு எனக்கு வேணா.. நா சின்ன பொண்ணா இப்படியே இருக்கேன்” என்றபடி அவரது கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.

“அடி கூறு கெட்ட சிறுக்கி” என்று திட்ட தொடங்கிய அன்னையை முறைத்த வீரையன், “நான் பேசிக்கிடுதே.. நீயி சும்மா இரு ஆத்தா” என்றார்.

பின் கனிவுடன் மகளின் முதுகை வருடியபடி, “நீங்க எப்பயும் அப்பாவுக்கு சின்ன பொண்ணு தான்டா கண்ணு.. எந்த சம்பிரதாயமும் அப்பாவ ஒங்க கிட்ட இருந்து பிரிக்காது.. நீங்க எப்பயும் போல இருக்கலாம்” என்றதும்,

சட்டென்று மலர்ந்த முகத்துடன் அவர் முகத்தை நோக்கியவள், “நெசமா?” என்று கேட்டாள்.

புன்னகையுடன், “நெசமா தான்” என்றவர், “பெரிய பொண்ணாகுறது ஒவ்வொரு பொண்ணுக்கும் வரம் கண்ணு.. அதை வேணாம்னுட்டு சொல்லக் கூடாது..” என்றதும் ‘சரி’ என்பது போல் தலை அசைத்தாள். 

“அப்பா ஒங்களுக்கு பேட் டச் சொல்லி கொடுத்தேனே நியாபகம் இருக்கா?” 

“ஹம்ம்” 

“பெரிய பொண்ணானதும் அது ரொம்பவே முக்கியம்.. இன்னும் கவனமா இருக்கோனும் கண்ணு.. பார்வையில் கூட ஒங்களை யாரும் அந்த எடத்தில் எல்லாம் பார்க்க கூடாது..

அழகுக்கு அழகு சேர்ப்பது போல ஒங்களோட மென்மையான கொணம் ஒங்களுக்கு பேரழகு தான்.. ஆனா, யாருச்சும் ஒங்கல தப்பான பார்வ பாத்தாக்க, பயப்படாம பாத்தவன் கண்ண நோண்டிபுடனும்.. கை வைக்க வந்தாக்க..” என்று அவர் இழுத்து நிறுத்த,

அவள் தீட்சயமான பார்வையுடன், “கைய ஒடைக்கணும்” என்றாள்.

“அதே தான் கண்ணு” என்று புன்னகையுடன் கூறியபடி அவளது கன்னத்தில் முத்தமிட, அவளும் விரிந்த புன்னகையுடன் அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

“நல்ல அப்பன் நல்ல மவ!” என்றபடி தலையில் அடித்துக் கொண்ட பாப்பாத்தியம்மாள் அவ்விடத்தை விட்டு சென்றார்.   

பனிமலர், “எனக்கு ஒரு சந்தேகம் ப்பா” என்றாள்.

“என்னடா?” 

“பசங்களும் பெரிய பசங்க ஆவான்களா?” 

ஒரு நொடி மனதினுள் அதிர்ந்தவர் பின் மென்னகையுடன், “ஆமாடா” என்றார்.

“அப்போ அவனுங்களுக்கும் இப்படி சொல்லித் தர்லாம் தான!” 

“எப்புடி?” 

“பேட் டச் சொல்லி கொடுத்து.. பொண்ண அங்கங்க பார்க்கக் கூடாது, கையி வெக்க நெனக்கக் கூடாதுனுட்டு” 

பெருமையும் நெகிழ்வுமாக, “ராஜாத்தி” என்று உச்சி முகர்ந்து கொஞ்சியவர், “கண்டிப்பா சொல்லித் தரணும் தான்.. ஆனாக்க யாரும் அதை செய்யாம, ஒருதலையா பொம்பள புள்ளக்கு தான் விதிமுறை விதிச்சு, மொடக்குறான்க” என்றார்.

“நாம சொல்லித் தருவோம்” 

அவர் மென்னகையுடன், “ஒவ்வொருத்தருக்கா எப்புடிடா சொல்லித்தர முடியும்?” என்று கேட்டார்.

“ஒலகதுக்கு முடியாதுதேன்.. ஆனாக்க, நம்மூரு பசங்களுக்கு சொல்லித் தர முடியுமே! நீங்க இப்போ எனக்கு சொல்லி தந்த மாதரி பள்ளிக்கூடத்துக்கு வந்து சொல்லிக் கொடுங்க” 

ஒரு நொடி பேச்சற்று மகளை பார்த்தவர் பின் மகிழ்ச்சியுடன், “ராஜாத்தி! ராஜாத்தி! எவ்ளோ அறிவுடா தங்கம்!” என்று ஆர்பரித்தார்.

பின், “கண்டிப்பா செய்யலாம்டா தங்கம்” என்று உறுதிமொழி அளித்ததோடு அதை நிறைவேற்றவும் செய்தார். இன்று வரை இவ்வூரின் பள்ளியில் இதற்கென தனி வகுப்பு வைத்து சொல்லித் தரப்படுகிறது.

இந்த நினைவைத் தொடர்ந்து, பதிமூன்றாவது வயதில் அவள் பூப்பெய்த நிகழ்வும், கூடவே இன்னொருவனின் முகமும் தோன்ற, அவளது முகத்தில் கலவையான உணர்வுகள் தோன்றின.

அதை தடை செய்வது போல், “இன்னும் கெளம்பளையா தங்கம்!” என்று கேட்ட அன்னையின் குரலில், தனது எண்ண அலைகளை ஒதுக்கியவள்,

“இதோ கெளம்புறேன் ம்மா” என்றபடி கிளம்ப ஆரம்பிக்க, அவர் வெளியேறினார்.

பட்டுப்புடவையை உடுத்திய பின் அணிகலன்கள் பக்கம் திரும்பியவளின் முகம் கொலுசை கண்டதும் இறுகியது. சில நிமிடங்கள் கழிந்த நிலையில், வெளியே கேட்ட அன்னையின் குரலில் தன்னைத் தானே தேற்றிக் கொண்டவள் கொலுசை தவிர்த்து மற்ற அணிகலன்களை அன்னைக்காக அணிந்துக் கொண்டாள்.

மணப்பெண் தோற்றத்தில் ரதியாக ஜொலித்தவளின் மனதினுள் மணப்பெண்ணிற்கான பூரிப்பு சிறிதும் இல்லை. இது, அவள் தனது அன்னைக்காக மட்டுமே செய்துக்கொள்ள போகும் திருமணம். அதுவும் மணமகன் வீட்டோட மாப்பிள்ளையாக இருக்க சம்மதித்ததால் மட்டுமே இத்திருமணத்திற்கு சம்மதித்து இருந்தவளின் மனதினுள் மணமகனின் முகம் கூட சரியாக பதியவில்லை.

தயாராகி முடித்ததும் தந்தையின் புகைப்படதிற்கு முன் நின்றவள், ஒங்களுக்கு தெரியும், எனக்கு எது நல்லதுனுட்டு.. எப்பயும் ஏ கூடவே இருங்கப்பா” என்றுவிட்டு வெளியேறினாள்.

(கல்லூரி சென்ற பிறகு அவளது பேச்சு வழக்கில் சிறு மாற்றம் வந்து இருந்தது. அதாவது எதிரில் பேசுபவருக்கு ஏற்றபடியே பேசுவாள். தன்னுடன் பேசுபவர் நகர் புர பேச்சில் பேசினால் அவளும் அவ்வாறே பேசுவாள்.)

அன்னையின் கூற்றில் சாமியறை சென்று வணங்கிவிட்டு வந்தவள் தாத்தா(சுப்பையா), அன்னை, தாய்மாமன்(ஆவுடையப்பன்) மற்றும் அத்தை(தாய்மாமன் மனைவி) காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள். பாப்பாத்தியம்மாள் அவளது 15வது வயதிலேயே இறைவனடி சேர்ந்து இருந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட, வானவேடிக்கை மற்றும் மங்கள வாத்தியத்தின் ஆரவாரத்துடன் அவள் மண்டபத்திற்கு அழைத்துச்  செல்லப்பட்டாள்.

அதே நேரத்தில், கலவரம் செய்து இத்திருமணத்தை நிறுத்தி, இவர்கள் துன்பத்தில் இன்பம் காணும் வெறியுடன் சிலர் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

பனித்துளி குளிர காத்திருப்போம்…

Advertisement