Advertisement

துளி 1

பூங்காவனத்தூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இன்று அவர்களின் இளைய ராணியின் திருமணம்.

பூங்காவனத்தூர் கிராமம் – திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அவ்வூரை நவீன கிராமம் என்று சொல்வதே சரியாக இருக்கும். ஆம்! நகரத்தில் இருக்கும் அனைத்து விஞ்ஞான வசதிகளும் இங்கேயும் இருக்கிறது. கூடுதலாக இயந்திர சத்தங்களும், மாசும் இல்லாத இயற்கையுடன் கூடிய அமைதியான சூழலை கொண்ட அருமையான நவீன கிராமம் தான் பூங்காவனத்தூர்.

அனைத்து கிராமங்களுக்கும் முன்னோடியாக இருக்கும் இந்த பூங்காவனத்தூரில்  இயற்கை விவசாயமும், சுத்தமான பசும்பாலும் மரச்செக்கு எண்ணெய்களும், கலப்படமில்லாத தானியங்களும் பொருட்களும், சிறந்த பள்ளியும் மருத்துவமனையும், இயற்கை வளத்தை பாதிக்காத வகையில் விஞ்ஞான வளர்ச்சியையும் நடைமுறைபடுத்தியது ஒரு ஆண் இல்லை, பெண்! அவள் பனிமலர்.

பெயருக்கு ஏற்றார்ப்  போல் குளுமையான மலரை போன்று மென்மையே உருவாய் இருந்தவள், தனது 17வது வயதில்  நெருங்கிய சொந்தங்களின் வஞ்சகத்தில் தந்தையை இழந்த பின் சுடும் நெருப்பாய் மாறிவிட்ட புதுமை பெண் அவள். அவளுள் தகிக்கும் ஜுவாலையை தனக்கு அரணாக மாற்றி நல்வழியில் உயிர்த்தெழுந்து தனது கிராமத்தையும் உயர்த்திய சாதனை பெண் அவள்!

அங்கே யாரும் அவளிடம் கேட்காமல் எதையும் செய்வதும் இல்லை, அவள் ஒன்று சொன்னாலோ செய்தாலோ, அது நூறு சதவீதம் சரியாக தான் இருக்கும் என்று நம்பும் ஊர் மக்களின் அன்பை பெற்ற தலைவி அவளே. ஆனால், அதில் அதீத வன்மம் கொண்டவர்கள் சுந்தரலிங்கத்தின் குடும்பமும், அவரது விசுவாசிகளும், இன்னும் சிலர். அந்த சிலர் வேறு யாரும் இல்லை, அவளது நெருங்கிய சொந்தங்களே. அவர்கள் இவ்வூரில் இல்லை என்றாலும் அவர்களின் வன்மம் அப்படியே தான் இருக்கிறது.

17 வருடங்களுக்கு முன்புவரை பண்ணையார் குடும்பமான சுந்தரலிங்கத்தின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் வழி வழியாக ஊர் தலைவராக இருந்து வந்தனர். சுந்தரலிங்கத்தின் தந்தை, ஊருக்கு செய்வதை விட தன் குடும்பதிற்கு சொத்து சேர்ப்பதில் தான் குறியாக இருந்தார். அதையே தான் சுந்தரலிங்கமும் தலைவரான பின் செய்தார். இப்படியே சென்று கொண்டு இருந்த நிலையில் சுந்தரலிங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டதோடு ஊருக்கு நல்லது செய்ய ஆரம்பித்த பனிமலரின் தந்தை வீரையனை ஊர் மக்கள் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அப்பொழுது பனிமலருக்கு வயது 12.

வீரையன் இறந்த பிறகு விட்ட இடத்தை பிடித்துவிடலாம் என்ற சுந்தரலிங்கத்தின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் சுயம்பு அவள்!

அன்று, பதினேழு வயதிலேயே சுந்தரலிங்கத்திற்கு எதிராக, “என் அப்பா எடத்துல இருந்து நான் ஒங்களுக்கு செய்யிறேன்” என்று குரல் எழுப்பினாள்.

பிறந்ததில் இருந்து தந்தையுடனே சுற்றியவளுக்கு ஊரின் நிலவரம் அத்துபடி. வீரையனும் சிறு வயது முதல் மகளுக்கு அனைத்தையும் போதித்தே வளர்த்து இருந்தார். பள்ளி பாடத்துடன் அனுபவ பாடத்தையே அதிகமாக கற்று இருந்தாள்.

சுந்தரலிங்கத்தின் மகன் ஆளவந்தான், “பொட்டப்புள்ள ஒனக்கு எதுக்குடீ இந்த வேண்டாத வேலயத்த வேல! கோட்டிதனமா சலம்பாம, எப்பவும் போல இருக்க எடம் தெரியாம கம்முனு கிட” என்று ஏளனத்துடன் பேச,

நிமிர்வுடன் அவனை நோக்கியவள், “சவடாலு வுடுற ஒன்னிய விட எனக்கு வெவரமும் அதிகம்.. நம்மூர் நெலவரமும் நல்லாவே தெரியும்லே” என்றாள்.

“ஏய்!” என்றபடி அவன் எகிற, அவளோ சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் பார்த்தாள்.

அதில் இன்னும் கோபம் கொண்டவன், “மருவாதயா பேசுடி! இல்ல பல்ல பேத்துப்புடுவேன்!” என்றான்.

நக்கலாக, “யெ கையி மட்டும் பூ பறிச்சிட்டு இருக்குமா?” என்றவள், “நீ கொடுக்கது தான்லே ஒனக்கு திரும்ப கெடைக்கும்” என்றாள்.

“ஏய்!” என்று பல்லை கடித்தபடி அவன் மீண்டும் எகிற,

“சும்மா சவுண்டு வுட்டு சலம்பாம, நம்மூரு பள்ளிக்கூடத்துல எத்தனாப்பு வர இருக்குனுட்டு சொல்லுலே பாப்போம்” என்று சவாலிடும் குரலில் கேட்டாள்.

அவன் பதில் தெரியாமல் முழிக்க, அவன் அருகே இருந்த அவனது அல்லக்கை வாய் திறக்கும் முன்,

சுட்டு விரலை நீட்டியபடி, “ஏலேய்! துப்பு கொடுத்த.. கொடுத்த வாய நார் நாரா கிழிச்சிபுடுவேன்” என்று மிரட்டினாள்.

அவளது மிரட்டலில் ஊரே, ‘நம்ம சின்னம்மாவா இது!’ என்று ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்தனர்.

சுந்தரலிங்கம், “ஏளா என்ன வாயி நீளுது! பொட்டப் புள்ள அடக்க ஒடுக்கமா வூட்டுக்குள்ளார தான் கெடக்கணும்” என்று கோபத்துடன் கூற,

அவளும் கோபத்துடன், “இன்னும் எத்தினி நாளு இதையே சொல்லிக்கிட்டு திரிய போறீவ? நீர் கீழா சொல்ற பொட்டப்புள்ள தொண  இல்லாம ஒங்களால வாழவே முடியாதுவே! தாய் மனசு வச்சாதேன் ஒங்க பிறப்பு.. பொஞ்சாதி மனசு வச்சாதேன் ஒங்களுக்கு தந்தை ஸ்தானம்! பெண் ஒரு ஆக்க சக்தி” என்றாள். 

அவளது தோற்றத்திலும் பேச்சிலும் ஒரு நொடி பேச்சற்று இருந்தவர் பின், “ஒனக்கு வோட்டு போடுற வயசு கூட இல்ல….” என்று ஆரம்பிக்க,

அவளோ ஊராரைப் பார்த்து, “இதே, நா பையனா இருந்தாக்க இப்புடி சொல்லுவியலா? ஏன் பொண்ணால முடியாதா என்ன?

நமக்கு வாழ்வு தர பூமிய தாய்னு தானே சொல்றோம்! தந்தைன்னு சொல்லலையே! ஏன்னா பெண்ணை விட சிறந்த ஆக்க சக்தி இந்த அகிலத்திலே இல்ல.. நாட்டை சிறப்பா ஆண்ட ராணிகள் இல்லையா? அரசியல் தலைவிகள் இல்லையா? பெண் நாட்டையே சிறப்பா ஆளும் போது, நம்ம ஊரை என்னால் பார்த்துக்க முடியாதா?

ஒங்க ஐயாவோட பொண்ணு மேல நம்பிக்க இல்லியா? ஏட்டு பாடத்தை விட பெரிதான, விலைமதிக்க முடியாத அனுபவ பாடத்தை நா நிறையவே கத்துக்கிட்டு இருக்கேன்.. நம்மூர் வளர்ச்சிக்கான ஒங்க ஐயாவோட கனவு எனக்குள் விதைக்கப்பட்டு தான் இருக்குது.. அப்பா பெயரை நான் நிச்சயமா காப்பாத்துவேன்..   

எனக்கு 18 வயசு ஆகலைதேன்.. இனிமேலு சின்ன புள்ள சொல்லுததேன்  கேக்கணுமானுட்டு வெசனப்பட்டாக்க, யெ தாத்தன தலைவரா தேர்ந்தெடுங்க.. எனக்கு பதவி முக்கியம் இல்ல.. நம்மூருக்கு நல்லது செய்யுறது தா யெ நோக்கம்.. பொறவு யாரு தலைவரா இருந்தாக்க ஒனக்கு என்னனுட்டு நீங்க கேட்கலாம்!

நல்லது செய்யிறதுக்கு கூட இந்த காலத்துல அதிகாரம் தேவையா இருக்குதே! அதான் உங்க ஐயாவோட அய்யனை தலைவராக்க சொல்லுதேன்.. ஒரு வருசமோ, ஆறு மாசமோ பாருங்க.. யெ மேல நம்பிக்க வாரலனாக்க, நா வெலகிடுதேன்” என்று நீளமாக பேசி முடித்தாள்.

“நம்ம சின்னமா சொல்லுததும் செரி தானேப்பா!”

“ஹம்ம்.. வாஸ்துவமான பேச்சுதேன்”

“அதான் செரி.. அப்புடியே செஞ்சுபுடுவோம்லே”

“சின்ன புள்ளயா இருந்தாலும் வெவரமா பாயிண்ட்டா பேசுதே!”

“இன்னும் என்னலே சின்ன புள்ளனுட்டு! ஒரு வருஷமானாக்க வோட்டு போடுற வயசு வந்துபுடுமே!”

அதான! வீரையன் வாரிசு சோடை போவுமா!”

“சின்னதுல இருந்து ஐயா கூடவே இருக்கவுகளுக்கு நல்லது கெட்டது தெரியாதா என்ன!”  என்று பல ஆதரவு குரல்கள் எழவே சுந்தரலிங்கம் மற்றும் ஆளவந்தானின்  எதிர்ப்பு குரல் அமிழ்ந்து போனது.

அதன் பிறகு அவள் தாத்தா சுப்பையா ஊர் தலைவராக இருக்க, இவள் கல்லூரி படிப்புடன் சேர்த்து ஊர் வளர்ச்சி வேலைகளிலும் ஈடுபட்டாள். சிறு பெண் என்று சொல்ல முடியாத அளவிற்கு, அனைவரும் பிரம்மிக்கும் வகையில் தான் அவளது ஆக்கபூர்வமான செயல்கள் இருந்தது. தந்தையின் இழப்பில் துவண்டு போகாமல், தனது வலியை வைராக்கியமாக மாற்றி ஆளுமையுடன் நிமிர்ந்து நின்றாள். அதன் விளைவாக, ஒரு வருடம் கடந்த நிலையில், ஊர் மக்கள் அவளையே தலைவியாக தேர்ந்தெடுத்தனர்.

கல்லூரி ஆசிரியர்கள் மூலம் எந்த காரியத்திற்கு யார் யாரை சந்திக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டவள், கல்லூரி நண்பர்கள் மற்றும் ஊரின் இளவட்டங்கள் உதவியுடன் வேலைகளை செய்தாள். தந்தையின் பெயரை சொல்லியே, பல இடங்களில் பல வகையில் நேர்மையான முறையிலேயே காரியத்தை சாதித்தாள். அனைத்திலும் அவளுக்கு உறுதுணையாக இருந்தது அவளது தாய்மாமன் ஆவுடையப்பன்.

வீரையன் இறந்து 10 வருடங்கள் கடந்த நிலையில், ஊரை நன்றாகவே மேம்படுத்தி இருந்தாள். ஆம்! சுற்று வட்டாரத்திலேயே, சுத்தமான தரம் நிறைந்த விலை குறைந்த பொருட்களுக்கு பெயர் போனது பூங்காவனத்தூர் என்ற பெயரை உருவாக்கி இருந்தாள்.

இயற்கை விவசாயத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற தந்தையின் லட்சியத்தை நிறைவேற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்தாள். மற்றவர்கள் சிறு தொழில் செய்ய உதவியதோடு, மரச்செக்கு எண்ணெய்களை மட்டுமே தயாரிக்கவும் உபயோகிக்கவும் வலியுருத்தினாள்.

ஆற்று நீரை சுத்தமாக வைக்க சிலவற்றை கடைபிடித்தாள். வீட்டு உபயோகதிற்கு தண்ணீர் எடுக்கும் இடம், குளிக்கும் இடம், துவைக்கும் இடம், என்று பிரித்தாள். வழலைக்கட்டி(soap) தாள், பீடி வெண்சுருட்டு(cigarette) துண்டுகள், தண்ணீர் பொத்தல் போன்றவற்றை ஆற்று நீரிலோ கரையிலோ போட்டால் அபராதம் விதித்து,  அவற்றை நடைமுறைபடுத்த ஆற்றங்கரையில் ஆட்களை காவலுக்கு போட்டாள்.

தந்தை நிறுவிய மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்களை கொண்டு வந்திருந்தாள். எட்டாவது வரை மட்டுமே இருந்த பள்ளியில் 12வது வகுப்பு வரை கொண்டு வந்திருந்தாள். கட்டாய கல்வி கொண்டு வந்ததோடு, கணினி மையமும் கொண்டு வந்திருந்தாள். இப்படி படிபடியாக ஊரை வல்லரசாக மாற்றி இருக்கிறாள்.

விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் ஊரினுள் இயற்கை பொருட்கள் கிடைக்கும் பல் பொருள் அங்காடி, நாட்டு மாட்டு பண்ணை, தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி, கலை கூடம், நாட்டு மருத்துவம் போன்றவற்றை நிறுவியவள்,

ஊரை சுற்றி மேல்நிலை பள்ளி, கணினி மையம், மருத்துவமனை, பசும் பால் உணவு பொருட்கள் தயாரிக்கும் ஆலை, மரச்செக்கு எண்ணெய் ஆலை, ரசாயனம் கலக்காத இயற்கை முறையிலான சாயம் உபயோகிக்கும் பருத்தி  ஆடை  ஆலை என்று இன்னும் சில ஆலைகளை நிறுவி இருந்தாள். அதிலும் ஆலைகளின் கழிவுகளை இயற்கையை பாதிக்காத வகையில் சரியான முறையில் வெளியேற்றும் முறைகளையும் பின்பற்றி இருந்தாள்.

அனைத்திலும் இவளது பங்கே அதிகம் என்றாலும், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு இளவட்டதை பங்குதாரராக நியமித்து, தான் மட்டும் வளராது, தன்னுடன் சேர்த்து மற்றவர்களையும், முக்கியமாக ஆண் பெண் பேதமின்றி இளைய சமுதாயத்தையே தூக்கி நிறுத்தியதோடு ஊரையே மேம்படுத்தி இருந்தாள்.

Advertisement