Advertisement

தூறல் – 14
எம் கானகத்து கம்பெல்லாம்
மூடர்கூட முகலினமாய் முடங்கி,
முற்போக்கென முள் புதர்தனில் புழுங்கிடுதே,
மீட்டிடுவாய் என மடல் தருவித்துள்ளேன்;
மீளும் மாட்சிமை கிட்டுமோ இறைவா?
       தமிழகத்தில் ஒரு ஊரில் உள்ள சிறுவன் ஒருவன் அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான். “தம்பி சாப்பிடாம கூட அப்படி என்ன பா விளையாட்டு உனக்கு” என்ற தாயின் வார்த்தைகள் காதில் ஏறவில்லை.
      ஏன் தன் தாய் மீது பெரும் கோபமே எழுந்தது. அவனை பொருத்த வரை அது தான் அவனுக்கு எல்லாம். அவன் பெற்றோர்கள் வாங்கி தர மறுக்கும் பல பொருட்களை அவனிற்கு தந்த விளையாட்டு அல்லவா.
     ஆம் அவன் இந்த விளையாட்டை விளையாடி ஜெயிக்கும் ஒவ்வொரு அளவிலும் அவனிடம் கேட்கப்படும் கேள்வி இதுவே-
     “கங்கிராஜுலேசன்ஸ்!! நீங்கள் இந்த லெவலை வெற்றிகரமாக முடித்து விட்டீர்கள். உங்களுக்கு பிடித்த பொருளை தேர்ந்தெடுக்கவும். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தந்து பரிசை வெல்லுங்கள்”
      இதை கண்டு மகிழும் சிறுவர்களும் தங்களுக்கு பிடித்த பொருளை தேர்வு செய்து வாங்கி கொள்ளலாம். இதுவே இந்த சிறுவன் முதல் பல சிறுவர்களின் எண்ணம்.
     இந்த சிறுவனும் தான் வெற்றி பெற்றவுடன் தனக்கான பொருளை தேர்வு செய்துவிட்டான். அதற்கு பின் வந்த கேள்விகளுக்கும் பதில் தந்து முடித்தான்.
      அப்போது “வாழ்த்துக்கள்!! நீங்கள் இந்த விளையாட்டின் இறுதி லெவலிற்கு வந்து விட்டீர்கள். இதை விளையாடி முடித்தால் உங்களுக்கு பெரிய பரிசு ஒன்று காத்திருக்கிறது”
      என்று வந்தது‌. அதை கண்டு மகிழ்ந்த சிறுவன் அதை நாளை விளையாடி பரிசை எப்படியும் பெற வேண்டும் என்று கண்ணில் கனவோடு சென்றான்.
      பாவம் இந்த சிறுவன் அறியவில்லை தான் ஒரு மீளாத புதை குழி நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம், பரிசாய் தனக்கு என்ன காத்திருக்கிறது என.
     இந்த விளையாட்டின் பெயர் “மேட் மேச்சோ(MAD MACHO)”. இதை விளையாடும் சிறுவர்களின் வயது 9லிருந்து அதிகபட்சம் 14 வரை இருக்கலாம்.
      அதற்கு மேல் இருந்தால் இந்த செயலி எடுத்து கொள்ளாது. ஏனெனில் இந்த செயலி திறந்ததும் முதலில் கேட்பது சிறுவர்களின் வயதை தான்.
      ஏதாவது ஒரு சிறுவன் விளையாடினான் என்றால் அவனை வைத்து அவன் நண்பர்கள் உறவினர்கள் என அவன் வயது ஒத்த சிறுவர்களையும் சேர்த்து விட சொல்லி கட்டளையும் வரும்.
      அப்படி தான் பல சிறுவர் சிறுமிகளை சென்று சேர்ந்துள்ளது இந்த விளையாட்டு. இதிலே இந்த செயலியை மறைந்து வைக்கும் ஹைடு ஆப்ஸனும் சொல்லி கொடுக்கப்படும்.
       எனவே பெற்றோர்கள் கண்ணில் இருந்து மறைத்து விளையாட எளிதாக போனது சிறார்களுக்கு. பெற்றோரும் கவனிக்காமல் விடுகின்றனர்.
      இந்த விளையாட்டு முப்பது லெவல் மட்டுமே கொண்டது. ஒரு நாள் ஒரு லெவல் மட்டுமே விளையாட முடியும். ஆனால் அந்த லெவலிலும் எளிதான விளையாட்டுகள் தான் இருக்கும்.
      அதை விளையாடும் போது இடையிடையே சில கேள்விகள் கேட்கப்படும் மற்றும் ஜெயித்த பின் கேட்கப்படும்.
      அந்த கேள்விகள் பொதுவாக அந்த சிறுவனின் ஊர், பெற்றோர் முதல் ஆரம்பித்து அவனுக்கு பிடித்த பொருட்களில் வந்து நிற்கும்.
     மேலும் அவன் அன்றாடம் செய்யும் வேலைகளையும் சொல்ல வேண்டும். ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் அவனிடம் சிறிது சிறிதாக வாங்கப்படும்.
     ஏன் அவன் விளையாட்டில் மூழ்கும் போது அவன் கூறியது எதுவும் அவன் நினைவில் கூட இருக்காது. அந்த அளவு சுவாரஸ்யமான விளையாட்டுகள் தந்து அதிலே மூழ்கடித்து விடுவர்.
     இப்படி ஒவ்வொரு தகவல்களாக திரட்டி கடைசியில் முப்பதாவது லெவல் வரும் போது அவன் தங்களோடு வந்து விட வேண்டும் என்பது கட்டளையாக வரும்.
     மறுத்து பேசும் சிறுவர்களிடம், வீட்டில் இருப்பவர்களிடம் அவன் செய்த தவறுகளை சொல்லி விடுவோம் என்று முதலில் மிரட்டுவர்.
     சிறுவர்கள் பயம் கொள்வர். ஆனால் வரமாட்டேன் என்று தான் சொல்லுபவர்கள் அதிகம். அந்த சிறுவர்களிடம் வீட்டில் உள்ள ஆட்களின் அவன் கூறிய விவரங்களை கூறி,
     பெற்றோர் உடன் பிறந்தவர்கள் என அனைவரையும் கொன்று விடுவோம் என்று மிரட்டுவார்கள். அப்படி சிறிது சிறிதாக மிரட்டி பணியவும் செய்து விடுவர்.
     இதுவே மேட் மேச்சோ விளையாட்டு. இந்த விளையாட்டை கண்டு பிடித்தது பிரசாத் மற்றும் அவனின் நண்பனும் தான்.
      இந்த தொழிலை ஆரம்பித்த புதிதில் பிரசாத்தும் வெளியே வந்த சிறுவர் சிறுமியர், ரோட்டில் விளையாடும் சிறுவர்களையே கடத்தி வந்தான் குமார் உதவியுடன்.
     ஆனால் இப்படி நேரடியாக சென்று கடத்துவதால் தாங்கள் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருப்பதை உணர்ந்த பிரசாத், புது வகையான இந்த செயலியை உருவாக்கினான்.
     இந்த செயலி மூலம் தாங்கள் சிறுவர்களை தேடி செல்லாது அவர்களே தங்களை தேடி வருமாறு செய்தான். சிறு சிறு பரிசுகளை தந்து மொத்தமாக அந்த சிறுவர்களை தனக்கு அடிமை ஆக்கினான்.
      பின் அவர்களை வைத்து பணம் பார்த்தான். அப்படி வந்து சேர்ந்தவர்களே அங்கிருந்த பல சிறுவர்கள்.
       முதலில் தன் தேவைக்கென செய்ய ஆரம்பித்தவன் தற்போது அதை தன் தொழில் என மாற்றிக் கொண்டான்.
      ஒரு விளையாட்டு செயலியை உருவாக்கும் அளவு திறமை கொண்டவன் அந்த அறிவை நல்ல முறையில் பயன்படுத்தாமல் தீய வழியில் பயண்படுத்தினான்.
        தான் இந்த கடத்தல் சாம்ராஜ்யத்தில் கொடி கட்டி பறக்க வேண்டும் என வெறிக் கொண்டான். இதை அவன் தன் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது பார்த்து கொண்டான் சாமர்த்தியமாக.
       தன்னை யாரும் நெருங்க முடியாது என மமதையில் இருப்பவன் விரைவில் மாட்டப் போவான் என்று நினைத்திருக்க மாட்டான்.
      அங்கே குமாரின் முன் வந்து நின்றான் வெற்றி அந்த கடத்தல் கும்பலில் இருக்கும் ஒருவன். “குமார் அண்ணா என்ன பண்றீங்க” என்றவாறு.
      “வாடா சும்மா தான்” என்றான் மழுப்பலாக குமார். “சரிணே. ஆமா அந்த ரெண்டு பயலுகல மட்டும் ஏன் அனுப்பாம வச்சிருக்கோம். இந்த டிரிப் ஏத்தி விட்டர்லாம்ல” என்றான் வெற்றி.
      “அதுலாம் உனக்கு எதுக்கு. உனக்கு என்ன வேலை குடுத்தமோ அதை மட்டும் பாரு. சும்மா தேவை இல்லாத கேள்விலா கேட்க கூடாது‌. புரியுதா” என்றான் குமார் மிரட்டலாக.
      “சரிணே” என்று முனகி கொண்டே சென்றான் வெற்றி. அப்போது அங்கே வந்த மணி “என்ன குமார் யாரை முறைஞ்சு பாத்துட்டு இருக்க” என்றான்.
      “நேத்து பாஸ் நம்மல கூப்பிட்டு ஒரு விஷயம் சொன்னாருல்ல, அதான்டா அந்த மாறன் மேட்டரு. ஒரு வேளை அந்த பய இவனா இருக்குமானு யோசிக்கிறேன்” என்றான் யோசனையோடு.
     அப்போது மணிக்கு நேற்று நடந்தது எல்லாம் நினைவு வந்தது. நேற்று திடீரென வந்த பிரசாத் குமாரரையும் மணியையும் தனியாக அழைத்து பேசினான்.
      பிரசாத்தின் நம்பிக்கைக்கு உரிய இரண்டு நபர்கள் என்றால் அது குமாரும் மணியும். மணி என்னதான் குமாரிற்கு பிறகு வந்து சேர்ந்தாலும் அவனை போன்றே விசுவாசமானவன்.
        அவனின் ஒவ்வொரு செயலும் இவர்கள் இருவரை வைத்தே நடத்தப்பட்டு வருகிறது. அப்படி நேற்று வந்த பிரசாத் சொன்ன செய்தி இதுதான்.
      முதல் நாள் இரவு வந்த பிரசாத் இருவரையும் வரவழைத்து அமைதியாக யோசித்து கொண்டு நின்றான். பின் “இன்னைக்கு கமிஷனர் ஆஃபிஸ்ல இருக்க நம்ம ஆள் போன் பண்ணுனான்.
      மாறன் அப்படினு ஒரு ஆபிசர் நம்ம கூட்டத்தில இருந்துக்கிட்டு அங்க தகவல் சொல்றதா சொன்னான். நம்ம கூட்டி போன பசங்க வேற மூனு தடவை மிஸ் ஆகிட்டாங்க
      இங்கையும் அடிக்கடி கன்புயூசன் வருது. ஒரு பையன் தப்பிக்க பாத்திருக்கான். இங்க என்ன தான் நடக்குது” என்றான் இருவரையும் முறைத்து கொண்டே.
     “எனக்கும் நீங்க சொன்ன மாதிரி யாரோ உள்ள இருந்துகிட்டு இங்க நடக்கற குழப்பத்துக்கும் அவனே காரணமா இருப்பான்னு தோனுது பாஸ்” என்றான் மணி‌ அமைதியாக.
      “ம்ம். இப்ப வந்து சொல்லுங்க.சந்தேகமா இருக்குனு. இங்க பாரு மணி நீங்க என்ன பண்ணுவீங்க ஏது பண்ணுவீங்கனு எனக்கு தெரியாது. ஆனா வந்தவன் யார்னு கண்டுப்பிடிச்சு சொல்லனும்.
      அவன் எந்த கொம்பனா இருந்தாலும் சரி அவனை கொன்னு இந்த மண்ணுல புதைக்காம விட மாட்டேன்” என்று ஆவேசமாக சொல்லி சென்றான்.
     இவன் கோபத்தில் இரைந்ததை இரு விழிகள் ‘அவ்வளவு சீக்கிரம் என்னை கண்டுபிடிக்க முடியாது டா. நீ என்ன கொல்ல போறியா.
     என் நிழலை கூட உன்னால நெருங்க முடியாது டா. யாருன்னு நினைச்ச மாறன் டா’ என மனத்திற்குள் அவனை நக்கலுடன் நினைத்து பார்த்தது.
     நேற்று நடந்ததை நினைவு கூர்ந்த மணி “ஆமா டா. ஆனா நீ எப்படி இவன் தான் அவனா இருப்பான்னு சொல்ற” என்றான் யோசனையுடன்.
     அதற்கு குமார் கூறிய பதிலில் மணியே சிரித்து விட்டான். “எப்படி சொல்றேன்னா முதல் காரணம் அவன் பேரு வெற்றினு வருது பாரு.  ஒரு வேளை முழு பேரு வெற்றிமாறனா இருக்கலாம்ல” என்றான்.
     “என்ன குமாரு இது. படம் நிறைய பாப்பியோ. இப்படிலாம் யோசிக்கிற. இங்க வேவு பாக்க வரவன் அவன் பேரை சுலபமா கண்டுபிடிக்கிற மாதிரியா வைப்பான்” என்றான் சிரிப்புடன்.
     “இந்த காரணம் வேனா நீ சொன்ன மாதிரி ஒத்து வராம போகலாம். ஆனா அவன் தான் மாறனா இருப்பான்னு சொல்ல இன்னொரு முக்கியமான காரணம் என்னன்னா,
     அந்த குழந்தைங்க மிஸ் ஆனப்பலா அவனும் என் கூட வந்திருக்கான். அப்புறம் அடிக்கடி அவனுக்கு தேவை இல்லாத விஷயத்தில மூக்க நுழைக்கிறான்.
     நீ வந்தப்போ கூட அவன் அந்த பசங்கல ஏன் இங்க வச்சிருக்கோம் இன்னும் அனுப்பாம அப்படி இப்படி கேட்டான். அதான் என் சந்தேகம் அவன்‌ மேலன்னு சொல்றேன்” என்று முடித்தான் குமார்.
     அவன் கூறியதை கேட்ட மணி யோசனையுடன் “நீ சொல்றதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான் குமாரு. எதுக்கும் நாம அவன் மேல ஒரு கண்ணு வச்சுப்போம்.
      அப்பதான் அவன் எதாவது பண்றானா அப்டின்னு கண்டுபிடிக்க முடியும். அவன் தான் அந்த மாறன்னு மட்டும் கன்பார்ம் ஆகட்டும் அப்ப காட்டலாம் நாம யாருன்னு” என்று முடித்தான் கோபமாக.
     இதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த அந்த இரு விழிகளுக்கு சொந்தகாரனான மாறன் ‘கண்டுபிடிக்க போறியா குமார்.
      உன் பாஸ்ஸாலேயை என்னை ஒன்னும் பண்ண முடியாது. நீ என்னை என்ன பண்ண போறனு நானும் பாக்குறேன்டா” என நினைத்து கொண்டே சென்றான்.
-தொடரும்

Advertisement