Advertisement

 தூறல் 3

அற்ப மானுடம் ஆட்டூம் பொம்மை அல்ல வாழ்க்கை,
அடுத்த பக்கம் காண காத்திருக்க வேண்டுமே தவிர,
அப்பக்கத்தை கதையால் நாம் நிரப்ப இயலாது!

     “டேய் சின்சியர் சிகாமணி என்னடா சீக்கிரம் வந்துட்ட போல, என்ன செய்ற” என தன் கணினியில் தட்டச்சு செய்து கொண்டு இருந்த நண்பன் சத்யாவிடம் கேட்டுக் கொண்டு வந்து தன் இடத்தில் அமர்ந்தான் கௌதம்.

       “வாடா நீதான் லேட். என்னாச்சு டா” ‌ என்று விட்டு மீண்டும் தன் வேலையில் கவனம் செலுத்தினான்.
“அந்த பிராஜக்ட் தான் டா. உனக்கு தான் தெரியும்ல அந்த ஸலம்ல இருக்க பசங்க பத்தின ஆர்டிகல்.

         அதை செய்ய ஆரம்பித்ததுல இருந்து உன் கிட்ட சரியாக் கூட பேச முடியல. ஒரு வழியாக இப்பதான் எல்லாத்தையும் பின்னிஷ் பண்ணிட்டு எடிட்டர்ட ரிப்போர்ட்ட குடுத்துட்டு வரேன் அதான் லேட்” என தன் நண்பனின் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டே அமர்ந்தான் கௌதம்.

       அது ஒரு பத்திரிகை அலுவலகம் “தினஒளி” அங்கு தான் கௌதமும் அவன் நண்பன் சத்யாவும் பத்திரிகையாளர்களாய் வேலையில் உள்ளனர். சத்யாவும் கௌதமும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படித்தவர்கள். முதல் வருடத்தில் ஆரம்பித்த நட்பு இன்று வரை தொடர்ந்து வருகிறது.

      இது நாள் வரை அவர்கள் இருவரும் அன்றாடம் செய்தி சேகரிக்கும் வேலையை மட்டுமே செய்தனர். இப்போது தான் சமூகத்தில் மக்களிடையே இருக்கும் குறைகளை உலகுக்கு எடுத்துச் செல்லும் கட்டுரைகளையும் எழுதுகின்றனர்.

      அப்படி ஒரு சமூகப் பொருட்டு தான் அந்த ஸலம் மாணவர்கள் கல்வி பாதியில் நிறுத்தப்பட்டு அவர்கள் தவறான பாதையில் செல்வதை ஆராய்ந்து மற்றும் அவர்களிடம் சென்று பேசி சில நிகழ்வுகளை திரட்டி என கட்டுரையை முடித்திருந்தான் கௌதம். அதையே தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.

       “ஆமாம் சத்யா நீ என்ன பிராஜக்ட் செய்ற நானும் கேக்க மறந்துட்டேன். எடிட்டர் கேட்டாரு நீ இன்னும் டாபிக் கூட அவர்ட்ட ரிவீல் பண்ணலையாம்” என்ற கௌதமின் கேள்விக்கு,

      “சொல்லக்கூடாது அப்டின்னு ஒன்னும் இல்லைடா. இனிமே தான் சொல்லனும். பர்ஸ்ட் கொஞ்சம் டீடெயில்ஸ் நல்லா ஸ்ட்ராங்கா கலெக்ட் பண்ணிட்டு அப்புறம் சொல்லலாம்னு தான் டா. வேற ஒன்னும் இல்லை” என்றான்.

       “வந்தப்போல இருந்து நானும் பாக்குறேன் டென்சனாவே வேற இருக்க மாதிரி தெரியிர, ரொம்ப சீரியஸ் இஸ்யூ எதுவும் எடுத்துட்டியா டா. எதுவும் பிரச்சினை ஆகிருச்சா சொல்லுடா பாத்துக்கலாம் நான் இருக்கேன்” என தன் நண்பனின் முகம் கண்டு வினவினான் கௌதம்.

      கௌதம் கேட்டது போல் தான் சத்யாவும் சற்று பதட்டமாக இருந்தான். தன் முகம் கண்டே தன்னை அறியும் நண்பனை எண்ணி மனம் மகிழ்ந்த சத்யா, தன் முகத்தை முதலில் சீராக்கிக் கொண்டான். பின் “அதுலாம் ஒன்னும் இல்லைடா.

        எதுவும் பிரச்சினைனா உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்ல போறேன் நான் ம்ம். ஆனால் கொஞ்சம்” என ஆரம்பித்து விட்டு “எதாவது பிராப்லம் ஆச்சுன்னா நான் கண்டிப்பா உங்கிட்ட செல்வேன்.

     மத்தபடி பெருசா எதுவும் இல்லை நானே சமாளிச்சுப்பேன். ஓகே வா” என்றான் சத்யா சமாளிப்பாய். தன் நண்பனின் கூற்றை சிறு சிரிப்புடன் ஏற்றுக் கொண்டான் கௌதம்.

       தன் நண்பன் தன்னிடம் எதையும் மறைக்க மாட்டான் என அறிந்த கௌதம் தகுந்த நேரத்தில் கூறுவான் என விட்டு விட்டான். ஆனால் அவன் அதை தன்னிடம் எப்போதும் கூறப்போவது இல்லை என அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.

       சத்யாவின் மனதிலோ தனக்கு தெரிந்த இந்த நிகழ்வுகள் கண்டிப்பாக தன் நண்பன் கௌதமிற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம். ஆனால் அதை பேசக் கூடிய இடம் இதுவல்ல என்று நினைத்தே அமைதி காத்தான்.

       ஏனெனில் அவனுக்கு தெரிந்ததை கூறும்போது யாரேனும் வந்தால் ரகசியமாக அவன் செய்ய நினைத்தது எல்லாம், அறியக் கூடாதவர்கள் யார் காதிற்காவது சென்று விடக் கூட வாய்ப்புகள் அதிகம் உண்டு.

         எனவே அதற்கே யாரிடமும் சொல்லாமல் அமைதி காத்தான். எந்த ஒரு சிறு விஷயம் என்றாலும் கௌதமிடம் பகிர்ந்து விடுவது சத்யாவின் பழக்கம். ஆனால் இதுநாள் வரை கௌதமிடம் விரிவாக பேச முடியாமல் இருந்ததிற்கு காரணம் இருவரின் வேலை அவர்களை தன்னுள்ளே இழுத்துக் கொண்டது தான்.

       நேரிலே விரிவாக பேச வேண்டும் என எண்ணியே கைபேசியில் பேசவில்லை என்றும் சொல்லலாம். எனவே இன்று கௌதமிடம் எப்படியாவது சொல்லி விடவேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டான்.

       அதன் பொருட்டு பேச்சை ஆரம்பித்தான் சத்யா. “கௌதம் இன்னைக்கு லன்ச்க்கு வெளிய போலாமா? எதாவது மால்க்கு போலாம் எனக்கு கொஞ்சம் டிரஸ்சும் எடுக்கனும் டா. எடுத்துட்டு அங்கையே சாப்பிட்டு வந்தர்லாம்” என்றான் ஒரு முடிவு எடுத்தவனாய்.

       “ம்ம் சரி டா. சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு போலாம். இல்ல அந்த எடிட்டர் கத்த ஆரம்பிச்சு நிறுத்தாம போவார் ” என்றான் கௌதம் சிரிப்புடன். “சரி” என்று விட்டு இருவரும் தத்தம் வேலையை முடிக்க மும்முரம் காட்டினர்.

      மதிய உணவு வேளையும் வந்தது, கௌதமிற்கு தன் அன்னையிடம் இருந்து அழைப்பும் வந்தது. “டேய் மகனே வேலையா இருக்கியா டா” என்றார் ரேவதி எடுத்தவுடன் சத்தமாக.

       போனை காதிலிருந்து எடுத்து காதை தேய்த்துக் கொண்ட கௌதம் மீண்டும் காதில் வைத்து “எம்மா மெதுவா பேசறதுனா என்னான்னே தெரியாதா உனக்கு” என்றான் கடுப்பாக. ஏனெனில் அவர் கத்தியது பக்கத்தில் இருந்த சத்யாவிற்கே கேட்டு விட்டது.

      “கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லி பழகு. எப்பப் பாத்தாலும் எதிர்த்து பேசிக்கிட்டு. இப்படி இருந்தா நாளைக்கு வரப் போறவ ‘என்ன புள்ளைய வளர்த்து வச்சிருக்கனு’ என்னை தானே கேட்பா. இப்ப என்ன பண்ற அதச் சொல்லு எனக்கு சோலி நிறைய கெடக்கு. உன்னை மாதிரி வேலை வெட்டி இல்லாதவளா நானு” என்றார் ரேவதி.

       போன் போட்டு தன் அன்னை தன்னை கலாய்க்கவும் நொந்தே விட்டான் கௌதம். அருகில் இருந்த சத்யாவோ சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டு இருந்தான்.

      “ஆமா நீ வந்து பார்த்த நான் வெட்டியா உக்கார்ந்து இருக்கறத. எதுக்கு மா போன் பண்ணுன அதை பர்ஸ்ட் சொல்லு” என்றான். “டாக்டர் செக்கப்கு போகனும்னு சொன்னேன்ல” என்றதற்கு

      “ஆமாம் அதான் சன்டே அப்பாயின்மெண்ட் வாங்கறேன் போலாம்னு சொன்னியே மா” என்றான் கௌதம். “சன்டே ஊர்ல ஒரு பங்சன். போன வாரம் உங்க மாமா வந்து இன்வைட் பண்ணிட்டு போனாரே மறந்திட்டியா. அங்க போவனும் டா” என்றார் ரேவதி.

      “சரி மா, அதுக்கு இப்போ நான் என்ன பண்ணனும். அதை மட்டும் சொல்லு‌. எல்லாம் நீ இன்னேரம் பிளான் செஞ்சுருப்பியே சொல்லு பண்றேன்” என சரண்டர் ஆகினான் கௌதம். இல்லையெனில் தன் அன்னை தன் இமேஜை இன்னும் தாறுமாறாக டேமேஜ் செய்து விடுவாரே.

       “பொழச்சு போ. நான் இன்னைக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன். நீ கெளம்பி வா கண்ணா போய்ட்டு வந்தர்லாம் என்ன சொல்ற” என்றார் ரேவதி முடிவாக.

      சிறிது யோசித்தவன் “ஏமா இன்னைக்கே போகனுமா சன்டே தானே பங்சன் நாளைக்கு போகலாமே. எனக்கு வெளியே கொஞ்சம் வேளை இருக்கு” என்றான் சத்யாவை மனதில் வைத்து.

     “என்ன விளையாடுரியா. நான் இன்னைக்கு அப்பாயின்மெண்ட் வாங்கிட்டேன். மறுபடியும் மாத்த முடியாது. அந்த பொம்பள என்னை திட்டும் டா. நீ வந்தா வா இல்லனா நானே போறேன். உன்கிட்ட கேட்டேன் பாரு என்னை சொல்லனும்” என்றார் ரேவதி கோபமாய்.

     “ஐயோ அம்மா உன்னோட இம்சை மா. ஹாப் டே லீவ் சொல்லிட்டு வரேன். நீ ரெடியா இரு மா. நீயே தனியா கிளம்பிராத” என்றான் கௌதம் அவசரமாய். ஏனெனில் ரேவதி ஒருமுறை வெயில் நேரம் தனியாக வெளியே சென்று மயங்கி விட்டார்.

     அதற்கே கௌதம் பயம் கொண்டு அவரை தனியே விடுவதில்லை. எனவே விடுப்பு எடுக்க எண்ணிய கௌதம் சத்யாவிடம் “சாரி மச்சான் நாம நாளைக்கு வெளியே போகலாம் டா. என் அம்மா இப்படி நம்ம பிளான சொதப்புவாங்கனு நினைக்கில டா” என்றான் வருத்தம் மேலிட்ட குரலில்.

      ஏனெனில் சத்யா இது போல் யாரையும் ஏன் கௌதமைக் கூட அநாவசியமாக எங்கும் அழைப்பவனும் இல்லையே. அதுவும் அவன் வேலையை பற்றி கேட்டதும் சற்று தடுமாறி ஏதோ சொல்ல முயன்றான்.

      பின் தன்னை சுற்றி பார்த்து விட்டு சுதாரித்தவனாக பதில் கூறினான். இதை கௌதம் கவனிக்கவில்லை என எண்ணிய சத்யா கௌதமும் தன்னை போலவே ஒரு பத்திரிகையாளன் என்பதை நினைக்க மறந்தான்.

     அதுவும் அவன் தன்னை விட அனைத்தையும் கூர்ந்து கவனிக்க கூடியவன் என்பதையும் தன் பதட்டத்தில் மறந்தான். சத்யா சாப்பிட வெளியே செல்ல அழைக்கவுமே தன்னிடம் அனைத்தும் பகிர தான் எண்ணுகிறான் என்பதை புரிந்துக் கொண்டான்.

     அதனால் தான் தன் அன்னை அழைத்து கூப்பிடவும் மிகவும் கஷ்டமாகி விட்டது. “பரவாயில்லை டா நாம நாளைக்கு கண்டிப்பா போறோம் ஓகே. நீ இப்ப கிளம்பி அம்மாவ பர்ஸ்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போடா” என்றான் சத்யா நண்பனை அறிந்தவனாக.

     “ஆமாண்டா இல்லைனா என் அம்மா மறுபடியும் போன் செஞ்சு என் இமேஜை  டேமேஜ் பண்ணுவாங்க. அப்புறம் நைட் சாப்பாடும் கட்” என்றான் சிரிப்புடன் சத்யாவின் மனதை திசை திருப்பும் முயற்சியில்.

     “ஆமாம்டா ஆனாலும் அம்மா உன்னை இப்படிலாம் டேமேஜ் செஞ்சுருக்க கூடாது” என்றான் கிண்டலாக. “எல்லாம் என் விதி என்ன செய்ய, நீயும் சேர்ந்து கிண்டல் பண்ணாத” என்றுவிட்டு “சரி டா நான் கிளம்புறேன்” என அவன் சிரித்த முகம் கண்டே கிளம்பினான்.

      “சரிடா” என அவனை ஒரு சிரிப்புடன் அனுப்பிய சத்யா “நாளைக்கு கண்டிப்பா கௌதம் கிட்ட சொல்லிறனும்” என மனதில் முடிவை எடுத்துக் கொண்டான். ஆனால் அதை கடைசி வரை கூற முடியாது என அறிந்திருந்தால் இப்பவே கூறி இருப்பானோ என்னவோ.

      ஏன் இருவரும் அறியாதது சத்யா கௌதமை பார்க்கும் கடைசி நாள் இதுவென்றும், மற்றும் கௌதம் இன்று கண்டதே தான் காணும் சத்யாவின் கடைசி சிரிப்பு என்பதையும். வாழ்க்கை முடிவு எடுத்த பின் அதை மாற்ற யாரால் முடியும். விதிவசம் நாம் இருக்கையில் யாரை குற்றம் சொல்ல.

-தொடரும்

Advertisement