Advertisement

தேவா :வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாம் நேரத்தை அறிந்து கொள்ள முடியும். இங்கு மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரமாகக் கருதப்படுகிறது.

இருள் சூழ்ந்த  இடம், நிலவின் வெளிச்சத்தைத் தவிர  வேற  எந்த  வெளிச்சமும் இல்லாத வாகனப் போக்குவரத்து  அற்ற சாலையில் தன் காரை  நிறுத்திவிட்டு, கார் மீது  கால் மேல் கால் போட்டவாறு  அமர்ந்திருந்தான்  அவன்.

அவனை  சுற்றி நின்ற இரு கார்கள் அணைக்கப்படாமல்  வெளிச்சத்திற்காக காரின் விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்தது.

காரின் மீது  அமர்ந்திருந்தவனின்  பார்வை ,  சிறிது  தொலைவில் ரத்தம் சொட்ட தலை குனிந்தவாறு  நின்ற நபரை கூர்மையாக  துளைத்துக் கொண்டிருந்தது.

அவன் விரல்களோ  காற்றில் அலை அலையாய்  அசைந்து கொண்டிருந்த தன் கேசத்தை  நிமிடத்திற்கு ஒருமுறை  கோதிக் கொண்டிருந்தது.

பால் போல் வெள்ளை நிறம் என்றும் சொல்ல முடியாமல் , கரி போல் கருப்பு நிறம் என்றும் சொல்ல முடியாமல்  கோதுமை போல் மாநிறமாக இருந்தான். அந்த வெளிச்சத்தில் அவன் முகத்தில் இருந்த  இறுக்கத்தைக் காண   பாறையே தோற்றும்விடும் அளவிற்கு இருந்தது.

“ஈஸ்வர், டைல்ஸ் கம்பெனியோட மேனேஜர் இதை பண்ணிருக்க வாய்ப்பில்லைனு தான் நான் நினைக்கறேன்” என்று தயங்கி தயங்கி  சொன்னார் சிவராம்..

“ம்ம்”  என்றவன், ரத்தம் சொட்ட சொட்ட நின்றவனின் அருகில் சென்று அவன் தலையை  தன் ஆள்காட்டி விரலால் நிமிர்த்தி

“என்னோட போட்டி போடுற விரோதியை பிடிக்கும், என் கூடவே  இருந்து என் முதுகுல  குத்தற   நம்பிக்கை துரோகியை  பிடிக்காது, நான் உன்னைய நம்புனேன், ஆனா நீ எனக்கு துரோகம்  பண்ணிட்ட” என்றான். கடுமையாக.

“இல்ல சார், இல்ல, நான் எதுவும்  பண்ணல… என்னைய நம்புங்க, நான் உங்களுக்கு விசுவாசமா தான்  இருக்கேன், உங்க உப்பை தின்னு வாழறேன் நான் எப்படி உங்களுக்கு துரோகம் பண்ணுவேன், நான் எதுவும் பண்ணல”  என்றான் அவன்.

அவன் வார்த்தையில்,  உடலில் உண்டான  வலியை விட, தன்னை இப்படி நினைத்து விட்டார்களே  என்ற  வலிதான் அதிகமாக  இருந்தது.

“எவிடன்ஸ் எல்லாம் உனக்கு எதிரா தான் இருக்கு”  என்றவன்.. “சரி  உனக்கு ஒரு சான்ஸ் தரேன்… ஆனா  அந்த  சான்ஸை நீ மிஸ் பண்ணிட்டா,  என்னால  உன்னோட உயிர்க்கு உத்திரவாதம் குடுக்க  முடியாது”, என்று நிறுத்தி “இப்போ இங்க இருந்து போ” என்றான்.

“சரிங்க சார்” என்று தள்ளாடிய படியே நடந்த சென்றவனை “அவனை கொண்டு போய் வீட்டுல விட்டுருங்க அங்கிள்..” என்றான் ஈஸ்வர்.

“ம்ம் சரி”  என்றார்  சிவராமன்.

அவர்கள் கிளம்பியதும், ‘இவன் கண்ணுலையும், வார்த்தையிலையும் பொய் இல்ல, பின்ன தப்பு எங்க  நடந்திருக்கும்’ என்று  யோசித்தான்.

யாரோ  கொடுத்த தவறான தகவலால்,  ஈஸ்வர் இன்று செய்த  பிழை, வரும் நாட்களில் தன்னவள் தன்னை வெறுக்க காரணமாகும் என்று   ஈஸ்வர்க்கு தெரியவில்லை.

தனது ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேனை  எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.. ஏனோ அவன் மனம்  இது இவன் செய்திருக்க வாய்ப்பில்லை என்று  அடித்து சொல்லியது , பாவம்  ஒரு இடம்,பழி  ஒரு இடமா ,இனி யாரையும்  நம்பி இருக்கக் கூடாது,,  தானே  இறங்கி விசாரிக்க  வேண்டியது தான்  என்று  நினைத்தப்படியே  காரை  ஓட்டினான்.

கார் தன் வீட்டை நோக்கி சென்றது.. இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவிலும் தன்னவள்  முகம் கண் முன் தோன்றி அவனை  இம்சை செய்தது..

எவ்வளவு வேலைப்பளு  இருந்தாலும், தன்னவளின்  முகம் கண் முன் தோன்றிய அந்த  நொடி,  அவன் முகத்தில் புன்னகை  பூத்துவிடும்.

அன்று இரவு  வெகுநேரம் கடந்தும் தன் மகன்  வீட்டிற்கு வரவில்லை என்றதும்  கவலையில்  இருந்த  திலகவதியை , “அவன் கிளைண்ட் கிட்ட பேசத்தானே  போயிருக்கான்.. வந்துருவான்  திலகா , எதுக்கு கவலைப்படற?, இப்படி போறது  என்ன புதுசா?” என்றார்.

“ஏங்க என்னை புரிஞ்சிக்க மாட்டிங்கறீங்க, ரெண்டு நாளா அவனோட முகமே சரி இல்ல, சசியை நான் இப்படி கவலையா பார்த்ததே  இல்லை”

“பரணி மாதிரி ஏதாவது காலேஜ்ல  வேலை செஞ்சாலாவது,  காலையில  8மணிக்கு போய்ட்டு சாயிந்தரம் 5மணிக்கு வீட்டுக்கு வந்துருவான், இப்போ பாருங்க நைட் 11மணி ஆயிடுச்சி, இன்னும் வீட்டுக்கு வரல,  இப்போ தான்  கிளைண்டை  பார்க்க போகணுமா?, பகல்  எல்லாம் என்னதான்  பண்ணிறீங்களோ” என்று  சிறு கேவலுடன் புலம்பினார்.

“அது  அவனோட வேலை அப்படி இருக்கு, நான் என்ன பண்ணட்டும்?” என்றவர்.. “வந்துருவான்  நீ போய் சாப்பிடும்மா?”என்றார்.

“இல்லங்க பையன்  வந்துரட்டும், அப்புறம் சாப்பிட்டுக்கரேன் “

“சரி,மத்த மூனு பேரும் சாப்பிட்டாங்களா?”

“ம்ம் பாப்பாக்கு பரிட்சை இருக்குனு சாப்பிட்டு படிக்க போய்ட்டா, சாயும்,  பரணியும் தூங்க போய்ட்டாங்க” என்றார்.

அவர் சொல்லிக் கொண்டிருக்க வாசலில்  வண்டி சத்தம் கேட்டது.. இது  சசியோட வண்டி சத்தம் மாதிரி இல்லையே என்று  பதறியபடி  ஓடிய மனைவியை ஆயாசமாக  பார்த்தார் வேலு

“இவளுக்கு எல்லாதுக்கும் பயம் தான், ரோட்டுல  ஏதோ  வண்டி போகுது, அதுக்கு இப்படி பறந்தடிச்சிட்டு போறா”  என்று  நினைத்தார்..

வெளியே போன திலகா  “என்னங்க….”  என்று கத்தும் வரை, காலையில் விட்ட செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தவர், திலகாவின் சத்தம் அவருக்குள்ளும் ஒரு பதட்டதை  உருவாக்க,

செய்தித்தாளை  தூக்கி தூர விசிறிவிட்டு வேக வேகமாக  வெளியே சென்று பார்த்தார்.

அங்கோ தலை, கை,கால் என்று உடலின் பல பாகங்களில்  கட்டுப்போட்டு  நிற்க முடியாமல் நின்றுக் கொண்டிருந்தான் சசிதரண்.

“என்ன?,  என்ன தம்பி ஆச்சு..?” என்று  வேலு  படபடப்பாக கேக்க,  திலகா தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தார்.

“வண்டியில போகும் போது  நாய் குறுக்க வந்து விழுந்துட்டேன்ப்பா” என்றான் சசி.

அவனை அழைத்து வந்தவரும் அதையே  சொல்ல, “பார்த்து போக கூடாதா தம்பி?,  இப்போ பாரு எவ்வளவு அடின்னு, உனக்கு  ஏதாவது ஆகியிருந்தா நாங்க என்னப்பா பண்ணுவோம்?”, என்று பெரும் குரலெடுத்து அழுத திலகவதியை எவ்வளவு ஆறுதல் சொல்லியும் மற்ற இருவரால்  சமாதானம் செய்ய முடியவில்லை.அழைத்து வந்தவருக்கு நன்றி சொல்லவும் குழந்தைவேலு மறக்கவில்லை.. “ரொம்ப தேங்க்ஸ்,  நீங்க செஞ்ச உதவியை  மறக்கவே மாட்டோம், சரியான  நேரத்துல நீங்க அங்க இல்லைனா  இந்நேரம் என்ன நடந்துருக்குமோ” என்றவர்.

“எங்களுக்கு ஒரு போன் பண்ணி சொல்லிருக்கலாம்ல”  என்றார் கவலையாக..

“அவர் நல்லா இருந்தார் அதான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாரு”, என்றவர், “ஓகே அப்போ நான் கிளம்பறேன்” என்று சொல்லவும்

“வீட்டுக்குள்ள வராம  போறிங்களே, உள்ளே வந்து  ஒரு கப் காபி குடுச்சிட்டு போங்க” என்றார் குழந்தைவேலு.

“பரவால சார்,இன்னொரு நாள் வந்தா  பார்க்கலாம்”, என்று அங்கிருந்து சென்றுவிட்டார்.

சசியை கை தாங்கலாக  உள்ளே அழைத்து வந்த  இருவரும், அவனை சோபாவில் அமர வைத்துவிட்டு,இந்த விபத்து எப்படி நடந்தது?  எங்கு எங்கு அடி? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.

திலகவதிக்கு கண்களில் கண்ணீர் அருவியாக  கொட்டிக் கொண்டே இருந்தது.

“அம்மா, அதான்  எனக்கு ஒன்னும் இல்லல, அப்புறம் எதுக்கு அழுறீங்க?”என்றவன் “பாப்பா எங்க?” என்றான்.

“அவ படிச்சிட்டு இருந்தா” என்றார் கண்களை  துடைத்தவாறு.

“போய் பாருங்க அவளுக்கு தெரிஞ்சா இன்னிக்கு நம்ப தூங்கன மாதிரி தான், தம்பிகளுக்கும் தெரியவேண்டாம்”,என்றான்  அந்த வலியிலும்.

திலகா ஆராவின் அறைக்கு சென்று பார்க்க, அவளோ  விளக்கை  போட்டுவிட்டு படுக்கையில் படித்துக் கொண்டிருந்தவாறே  தூங்கிருந்தாள்.

அவள் மேல் இருந்த  புத்தகத்தை  எடுத்து வைத்துவிட்டு , கழுத்து வரை  போர்வையை  போர்த்தி விட்டவர், விளக்கை அணைத்து விட்டு கீழே வந்தார்.

“என்னம்மா  தூங்கிட்டாளா..?”

“ம்ம்.. தம்பி, நம்ப வேணா வேற ஹாஸ்பிடலுக்கு போய் ஒரு ஸ்கேன் பண்ணி பார்க்கலாமா?, எனக்கு என்னவோ பயமாவே இருக்கு தம்பி”,  என்றார்.

பெற்ற மனம் மகனுக்கு அடிப்பட்டு விட்டதே என்று பதறியது.

“அம்மா எனக்கு ஒன்னும் இல்லை, லேசான அடிதான், இங்க பாருங்க,  நல்லா தானே பேசறேன், அடி பெருசா  இருந்தா இப்படி பேசமுடியுமா?” என்றான்.

“என்னதான்  அவன் வாய் சாதாரணமாக பேசினாலும், கண்கள் எதையோ  மறைக்க முயன்றதை குழந்தைவேலு கண்டுக் கொண்டார்.

‘இவன் ஏதோ பொய் சொல்றான்.. என்னவா இருக்கும்?’ என்று  யோசித்தவர், ஒன்றும் பிடிப்படாமல் போகவும் நேரம் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று  அப்போதைக்கு அதைபற்றி பேசாமல்  விட்டுவிட்டார்.

அடுத்தநாள் காலையில் நேரமாக எழுந்த ஆரா ,

“அம்மா காபி”  என்று  வந்தவள், தாயிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்டு, “அம்மா என்ன  உங்க முகம் வீங்கி இருக்கு?, என்னாச்சி?, நைட் நான் பார்க்கும் போது இப்படி இல்லையே” என்றாள் சந்தேகமாக..

“அப்படியா தெரியுது..? என்னனு  தெரியலையே” என்று, வீங்கிய முகத்தை தடவியபடி  நடந்ததை தன் மகளிடம்  சொல்லாமல் மறைத்தார்.

“பொய் சொல்லாதீங்க பிரஷர் மாத்திரை  போட்டீங்களா?, இல்லையா?,”

“போட்டேன்டாம்மா”

“அப்புறம் எப்படி முகம் இந்த அளவுக்கு வீங்கி இருக்கு, அழுதீங்களா?” என்றாள்.

“சேச்ச நான் எதுக்கு அழுக போறேன்,?” என்றார்  எச்சில் விழுங்கியாவரே..

“ஓ சரி, நைட் சசிண்ணா எப்ப வந்தாங்க?” என்றாள் தன் அம்மாவின் முகத்தை  உற்று நோக்கியவாறே….

“அவன் நைட் 11 மணிக்கு வந்தான்,  இன்னைக்கு கம்பெனிக்கு லீவ் சொல்லிருக்கான் போல, அதனால தான் இன்னும் தூங்கிட்டு இருக்கான்”, என்றார்.

“ஓ நான் இன்டென்ஷிப் பண்றதை பத்தி  அண்ணாகிட்ட கேக்கணும்,போய் எழுப்பி விடுங்க”  என்றாள்.

“அவனே வேலைப் பார்த்துட்டு வந்து டையர்ட்ல  தூங்கறான் சாயந்திரம் வந்து  கேட்டுக்கோ அம்மு” என்றார்.

‘இல்லையே, ஏதோ  சரியில்லையே’  என்று  நினைத்தவள்,  “நானே போய் எழுப்பிக்கிறேன், நகருங்க” என்று அங்கிருந்து சசியின் அறையை  நோக்கி போனவளை,  என்ன  செய்து தடுப்பது என்று தெரியாமல்  முழித்தவர், தன் கணவனை  பார்த்து காப்பாற்றுங்கள் என்று கண்களால் கெஞ்சினார்.

“ம்ம் இரு” என்று கண்களால் பதில் சொன்னவர், “அம்மு இங்க வா?”  என்றார்.

“இருங்கப்பா அண்ணனை  எழுப்பிட்டு வரேன்…”

“நான் சொல்றதை  கேட்டுட்டு போய் அண்ணனை  எழுப்பு, இங்க வா” என்றார்.

“சரி  என்னனு  சொல்லுங்க” என்றபடி  அவரின் அருகில் வந்தவள்,

“ஏதோ  இன்டென்ஷிப் பண்றதை  பத்தி பேசுனீயே எங்க பண்ண போற..?” என்றார்.

“உங்க கூட இல்லனா, சசி அண்ணா கூட தான் பண்ணனும்.”

“அப்பாவோடது  பைனான்ஸ், அண்ணாவுது  டைல்ஸ், உனக்கு இது  எல்லாம் செட் ஆகுமா..?”

“ஏன் ஆகாது?, நான் சிவில் தானே, டைல்ஸ் கம்பெனியில் பண்ணலாமே”  என்றாள்.

“அதைவிட கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனியில பண்ணுனா இன்னும் நல்லா  இருக்கும்ல, அங்க பண்றியா?”என்றார்.

“அங்க நீங்க இருக்க மாட்டீங்களே…?”

“அதனால  என்ன?  எங்க  பெரிய முதலாளி இருப்பார்.. கவலைப்படாத, நான் அவர்கிட்ட சொல்றேன், உன்னை நல்லா பாத்துப்பார்”  என்றார்.

“சரி யோசிக்கிறேன்ப்பா” என்றாள் ஆரா.

Advertisement