Advertisement

சிங்கா : திருவண்ணாமாலை   அண்ணாமலை  கோவில்

தேவா:பஞ்சபூத ஸ்தலங்களின் நெருப்பு ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல், பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.

வெய்யோனின் செங்கதிர்கள் பூமிக்கு வந்ததும், அதன் வெளிச்சம் பட்டு மெதுவாக  கண் விழித்த ஆரா, அந்த நாள் இனிமையாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் ஒரு அவசர வேண்டுதலையும் வைத்து முடித்தாள்.

அதன்பின்,  தன் அறையையும், வீட்டையும் இரண்டாக்க ஆரம்பித்தாள்,

“அம்மா என்னோட பேஸ்ட் எங்க?, அந்த  எல்லோ கலர் சுடி பீரோவுல இல்ல,, வந்து எடுத்துக் குடுங்க, இன்னுமா சாப்பாடு செய்யறீங்க?,எனக்கு நேரம் ஆயிடுச்சி, இந்த  டிபன் டப்பாவை வேற காணோம்? எங்க போட்டீங்க, அம்மா என்னோட பேக் எங்க?, நேத்து  சுடிக்கு கொக்கி வைக்க சொன்னேனே செய்யலையா?” என்று  காலை 6 மணியில் இருந்து  8மணி வரை வீடு முழுவதும் ஆராவின் சத்தத்தை தவிர,

மற்ற யாருடைய  சத்தமும் கேக்கவில்லை..

முதல் இரு அண்ணன்களும் தங்கை செய்யும் ஆர்ப்பாட்டத்தை  தினமும்  ரசிப்பது போல் இன்றும் ரசித்தனர்..

ஆனால் சாயோ , “அம்மா இவங்க பாசமலர்  படத்தை  ரீமேக் பண்ணது  போல இம்சை பண்றாங்கம்மா, எப்படி தான்  இதை எல்லாம் பொறுத்து,சிரிச்ச முகமாவே எல்லோரையும் அனுப்பி வைக்கிறீங்களோ”  என்று  சலித்தப்படி சொன்னவன், திலகவதியின் கன்னதில்  இதழ் பதித்தான்..

அதையும் புன்னகை முகத்துடன் வாங்கி கொண்டவர், “அவ இப்படி பண்றதால தான்  வீடே உயிர்ப்பா இருக்கு சாய் , இல்லனா  ரோபோ மாதிரி தான் எல்லோரும் அவங்க அவங்க வேலையைப் பார்த்துட்டு இருப்போம், முகம் குடுத்துக் கூட பேசிக்க மாட்டோம்” என்றார்.

“என்ன தான்  இருந்தாலும் மகளை விட்டு குடுக்க மாட்டிங்களே” என்றவன், ஆராவை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான்.

பரணி  பேராசிரியராக  இருப்பதால், ஆரா அவனுடன்  கல்லூரிக்குச் செல்ல மாட்டாள்.. சாய்யுடன் மட்டும் தான்  செல்வாள், சாயிக்கு ஏதாவது வேலை என்றால் மட்டும் தான் பரணியுடன் செல்வாள்.

வண்டியில் செல்லும் போது, “ஏண்டி எப்போ பாரு அம்மாகிட்ட சண்டைக்கு போயிட்டே இருக்க.. உனக்கு அதிகமாக  செல்லம் குடுத்து கெடுத்து வெச்சிருக்காங்க, எல்லாம் அவங்களை சொல்லணும்”  என்று  வழியெங்கும்  ஆராவை திட்டியபடியே  வந்தான்  சாய்.

கல்லூரியின்  வாசலில் சாயின்   ஹோண்டா சைன் வண்டி நுழைய,

சாய் ஆராவை திட்டும் பணியில் மும்மரமாக இருந்ததால்  எதிரே வந்த   ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் காரை கவனிக்கவில்லை.

காரின் மீது  மோதச் சென்றவன், கடைசி நொடியில் சுதாரித்து பிரேக் போட்டு நிறுத்துவதற்குள் வண்டியில் இருந்த  ஆரா  தடுமாறி கீழே விழுந்து விட்டாள்..

கீழே விழுந்தவள், கையில் உண்டான   சிராய்ப்பை தடவியபடியே,  கவனம் இல்லாமல் ஓட்டிய சாயை  திட்டாமல், கார்காரனை  கண்டபடி திட்ட ஆரம்பித்து விட்டாள்.

“உன்கிட்ட கார் இருக்குன்னா யாருமேல வேணும்ணாலும் கொண்டு வந்து  இடிச்சிடுவியா.. இவன் பெரிய அப்பாடக்கரு… பெரிய கார் வெச்சிருக்கானு பிலிம் காட்டிட்டு இருக்கான்” என்று ஆரா காட்டு கத்து கத்தியும் அந்த வண்டியில் இருந்தவன்  இறங்கி வரவே  இல்ல..

“எல்லாம் பணக்கார திமிரு … கோடி கணக்குல கார் வெச்சிருந்தா மட்டும் போதாது ,கொஞ்சமாவது காரை  ஓட்ட கத்துக்க, இல்லனா கோடி காரு தெருக்கோடில தான்  நிற்கும்” என்றாள்.

“ஏய் ஆரா நான்தான் பார்க்காம வந்துட்டேன் விடுடி,” என்றான்  கெஞ்சலாக..

சாயிக்கு என்ன பயம்  என்றால், ஆரா சத்தம் போட்டு பிரச்சனை பெரிதாகி  விஷயம்  பிரின்சிபால் வரைக்கும் போய்விட்டால், அவர் உடனே  அம்மா, அப்பா யாரையாவது அழைத்து வர சொல்லிவிடுவார், அதன்பின் குழந்தைவேலு கொடுக்கும் அறிவுரையை  யார் கேட்பது  என்ற பயம் தான்..

“உனக்கு தெரியாது சாய்… இவங்களாம் நம்பள மாதிரி ஆளு சிக்குனா போதும், கார் சர்வீஸை நம்ம தலையில கட்டிட்டு போய்டுவான்ங்க…  என்னமோ இவங்க அப்பன் வீட்டு ரோடு மாதிரி இவங்க மட்டுமே தான்  ரோட்ல போகணுமா…நம்பலாம் போக கூடாதோ?” என்று  கத்தியவளை,  சமாதானம்  செய்து அந்த இடத்தை விட்டு கிளப்புவதற்குள் சாய்க்கு போதும் போதும் என்றாகிவிட்டது..

ஆரா இவ்வளவு கத்தியும் அந்த கார்காரன்  காரைவிட்டு இறங்கி வரவே இல்லை… ஆனால் ஆரா பேசுவதை  கேட்பதற்கு  கார் கண்ணாடியை  மட்டும் விரல் நுழையும் அளவிற்கு இறக்கி விட்டிருந்தான். அந்த கடுப்பு வேற ஆராவிற்கு  சேர்ந்து கொள்ள..

ஆரா போகும் போது  கோவத்தில் காரை  ஒரு உதை உதைத்து  விட்டு தான் போனாள்.

“எவ்வளவு தைரியம் இருந்தா காரை  உதைச்சிட்டு போகும் அந்த பொண்ணு, நீங்க யார்னு தெரியாமல்  பண்ணுது  சார், தெரிஞ்சிருந்தா  பம்பி இருக்கும்”  என்றவர்,  “ஹப்பா  என்ன வாய் சார் அதுக்கு”‘ என்றார்  கார் டிரைவர்..

ஓட்டுனர் இருக்கைக்கு பக்கத்து  இருக்கையில்   அமர்ந்திருந்த நெடியவன் “விடுங்க  அண்ணா, சின்ன பொண்ணு”, என்றான்.

கார் மீண்டும் கிளம்ப ஆரம்பித்தது. அந்த நெடியவனின் முகம் என்றும் இல்லாமல் இன்று ஏனோ  புன்னகையுடன் இருந்தது.

அதைக் கவனித்தபடி  வந்த  டிரைவர் வேல்முருகன்..

‘அந்த பொண்ணு பண்ணதுக்கு  சொல்ல போனா  சார்க்கு கோவம் தானே வரணும் ,ஆனால் சார் முகத்துல  சிரிப்பு வருதே, என்னவா இருக்கும்’   என்று  யோசித்தார்.

வேல்முருகன் நினைத்தது  அவரின் முகத்தில் தெரிந்ததோ  என்னவோ..அதை படித்தவன் போல,  “விளையாட்டு பொண்ணு அண்ணா” என்றான்.

‘என்ன இவர் திடீர்னு என்று இப்படி சொல்றார்,ஒருவேளை நான் நினைச்சதுக்கு தான் பதில் சொல்றாரோ,இது ஒன்னும் புதுசு இல்லையே,, இவருக்கு மனுஷங்க முகத்தைப் பார்த்தே  அவங்க என்ன யோசிப்பாங்கனு சொல்றவர் தானே,அப்படி இருந்தும் அவர் முன்னாடி யோசிச்சிருக்கேனே, என்னைய சொல்லணும்’ என்று  அவரின் நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

“ஏண்டி நம்ப மேல  தான்  தப்புன்னு,  உனக்கும் தெரியும், எனக்கும் தெரியும், அப்புறம் எதுக்குடி  அந்த  கார்காரன் கிட்ட சண்டைக்கு போன?” என்றான் சாய்..

“அவன் எவ்வளவு திமிரு இருந்தா  அவ்வளவு பிரச்சனை பண்ணியும் காரை விட்டு இறங்காம இருந்திருப்பான்.. அந்த கடுப்புலதான்  சண்டைக்கு போனேன்.. அப்படி  இருந்து அவன் கீழே இறங்கவே இல்ல பார்த்தியா?, எல்லாம் காரும், காசும் வெச்சிருக்க திமிரு” என்றாள் வேகமாக..

“பணம்  இருக்கவிங்க கொஞ்சம் திமிரா தான்  இருப்பாங்க அம்மு.. அவங்ககிட்ட எதுக்கு வீண் வம்பு வெச்சிக்கணும்,அப்பாவுக்கு தெரிஞ்சா பக்கம் பக்கமா  அட்வைஸ் பண்றேன்னு ரம்பம் போட ஆரம்பிச்சிடுவார், அப்புறம் காதுல லிட்டர் கணக்குல  ரத்தம் தான் வரும்”:என்றான்.

“அவங்க பணக்காரங்களா  இருந்தா நமக்கு என்ன?” என்று சொன்னவள் .. ‘இந்த கார் தானே அது..? கண்டிப்பா இதுதான் , நான் தான்  கார் நம்பரைப் பார்த்தேனே, அந்த கார் நம்பர் தான் இது, கன்பார்ம் என்று  யோசனையில் மூழ்கினாள்.

ஒருவாரத்திற்கு முன்   தனது நெருங்கிய   தோழி விதுர்ணாவின் பிறந்த நாள் விழா வந்தது… விதுர்ணாவும், ஆராவும்  வகுப்பில் நெருங்கிய தோழிகள். இந்த வருடம் தான்  கல்லூரியின் கடைசி வருடம் என்பதால், தனது பிறந்தநாள் விழாவிற்கு ஆராவை அழைத்து  கண்டிப்பாக  வரவேண்டும் என்று அன்பு கட்டளையும் இட்டிருந்தாள் விதுர்ணா,

விதுர்ணா மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த பெண் என்று, அவள் அணியும் ஆடை, அணிகலன்களை  வைத்து  ஆரா அறிந்து கொண்டாளே தவிர,  அதை  விதுர்ணா வாயிலாக  கேக்கவில்லை..

அப்படி கேட்டு  அவள் “ஆமா”   என்று  சொல்லிவிட்டால், பணம் பார்த்து பழகிவிட்டாள் என்று  நாளை ஒரு பழி சொல் வந்துவிடும் என்று  பயந்துகொண்டு தான்  ஆரா எந்த  ஆராய்ச்சியும் செய்யவில்லை.

அவரவர் குடும்பத்தை பற்றி பேசிக் கொள்ளாமல் மற்றதைப் பற்றி மட்டும் பேசிக் கொள்வார்கள்,  இதில் விதுர்ணா  ஆராவைவிட ஒருபடி  மேலிருந்தாள்.

அடுத்த நாள் விதுர்ணாவின் பிறந்தநாள் விழாவிற்கு செல்ல வேண்டும் என்று  வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள் ஆரா..

“நோ ஆரா,  அங்க எல்லாம் போகக் கூடாது.. இது என்ன புது பழக்கம் பார்ட்டிக்கு  போறேனு சொல்றது,   பணக்காரங்க எல்லாம் வேற மாதிரி இருப்பாங்க, நம்ப வேற மாதிரி இருப்போம், அங்க  பார்ட்டிக்கு ட்ரிங்ஸ் தான்  யூஸ் பண்ணுவாங்க, அது உனக்கு செட் ஆகாது, அதுனால நீ போக வேண்டாம்” என்று சொன்னது  ஆராவின்  அம்மா அல்ல, முதல் அண்ணன் சசிதரண் ..

“அதுக்குன்னு நான் இதை எல்லாம் பார்க்காம, பொட்டி பாம்பா வீட்டுக்குல்லையே தான் இருக்கணுமா…? மூனு அண்ணன்ங்க இருந்தும் எனக்குன்னு சுதந்திரம் இல்ல..இங்க போகாத,  அங்க போகாத,   இதை  செய்யாதன்னு கண்ட்ரோல் பண்ணிட்டே இருக்கீங்க, என்னைய பார்த்துக்க தான்  நீங்க இருக்கீங்க இல்ல.. அப்புறம் ஏன் எங்கையும் அனுப்ப மாட்டிக்கிறீங்க?” என்று  அழுவது போல் நடித்தவளை  சாய் கண்டு கொண்டான்.

“அண்ணா நான் வேணா அவளோட போய்ட்டு வரேன், நீங்க கவலைப்படாதீங்க, அவளுக்கு எதுவும் ஆகாது பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரேன்” என்றான்.

இதுநாள் வரை, தான் எது சொன்னாலும் வேண்டாம் என்று  மறுக்கும் முதல்  ஆள் சாயாக தான்  இருப்பான், ஆனால் இன்றோ அவனே முன் வந்து  தன்னை  அழைத்து செல்வதாக  சொல்லவும்.. சந்தேகம் எழுந்தது ஆராவிற்கு..

“டேய் சாய்,நீ விதுக்கு நூல் விடறேன்னு எனக்கு தெரியும், நீ என்ன தான்  குட்டிக்கரணம் போட்டாலும் விது உனக்கு ஓகே சொல்ல மாட்டா…” என்றாள் ஆரா சாயின் காதில் மெதுவாக.

“அதை நான் பார்த்துக்கறேன், நீ அம்மி கல்லு மாதிரி குறுக்க நிற்காம இருந்தா போதும்” என்றான்.

“சரி அப்போ நேரமா  போய்ட்டு நேரமா  வாங்க, பார்ட்டி முடியற வரைக்கும் அங்க இருக்க வேண்டாம்,  எங்க ஓனர் வீட்டுலையும்  ஒரு பங்ஷன் இருக்கு நானும் அப்பாவும் நாளைக்கு அங்க போய்டுவோம், சாய் ரொம்ப பத்திரமா  கூட்டிட்டு போ” என்று  மீண்டும் ஒருமுறை  எச்சரித்து விட்டுதான் சென்றான் சசி..

அடுத்தநாள் இருவரும் விதுர்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றனர்.

“ஏய் வாலு”

“ம்ம்”

“விதுக்கு என்ன கிபிட் வாங்கிருக்க?”

“என்னோட பிரண்டுக்கு, என்ன கிபிட் குடுக்க எனக்கு தெரியும் உன் வேலையைப் பாரு”  என்றாள்.

‘இவகிட்ட இருந்து ஒரு விசயத்தையும் வாங்க முடியாதே’ என்று நினைத்தப் படியே வண்டியை ஓட்டினான் சாய்.

ஹோண்டா சைன் போய் நின்ற இடமோ  நகரத்தில் இருந்து வெகுதொலைவில் ஒரு ஒதுக்குப் புறமான இடமாக இருந்தது..

“ஏண்டி அவ இங்க வந்துதான்  பார்ட்டி வைக்கணுமா? சிட்டில வேற இடமே கிடைக்கலையா?” என்றான்  கேள்வியாக..

“இது  விதுவோட  கெஸ்ட் ஹவுஸ் போல சாய்,  அதனாலே தான் இங்க வந்து பார்ட்டி வெச்சிருக்காங்க. எங்க வெச்சா நமக்கு என்ன? சாய் போறமா கிபிட் கொடுக்கறோமா கிளம்பறோமானு இருக்கப் போறோம் அவ்வளவு தான்” என்றாள்..

‘ஆரா சொல்வதும் சரி தான்’  என்று  நினைத்தவன், தன்னவளை  காண போகும் ஆவலோடு,  “வா போலாம்” என்றான்.

வண்ண வண்ண விளக்குகள் நட்சத்திரமாக  மின்ன,  பார்க்க தேவலோகம் போல இருந்தது.. ஒவ்வொரு அலங்காரத்திலும் பணத்தை  அள்ளி வீசியிருந்தனர்.. ஆங்காங்கே பலூன்கள் காற்றிலும், நிலத்திலும் மிதந்தன..

இவ்வளவு பணம் பிறந்தநாளுக்காக செலவு செய்ய வேண்டுமா? என்ற எண்ணம்  இருவருக்குமே எழாமல் இல்லை…

“ஏண்டா சாய் நம்ப பர்த்டேலாம் எப்படி போகும் சொல்லு”

“காலையில் ஒரு விஷ் வித் கேக், அப்புறம் ஒரு பாயசம், குடும்பத்தோட  கோவில் இப்படி தான் போகும்னு நினைக்கறேன்”

“அப்புறம் இவங்க  மட்டும் என்னடா   ஏதோ கல்யாணம் பண்ற மாதிரி  காசை கொட்டி பார்ட்டி பண்றாங்க, இந்த காசு இருந்தா  அப்பா சசிண்ணாவுக்கும் பரணிண்ணாவுக்கும் கல்யாணமே பண்ணிடுவாங்க”என்றாள்.

“ஏன் அந்த லிஸ்ட்ல நான் இல்ல”

“நீ எல்லாம் அப்பாவுக்கு செலவு வெச்சி கல்யாணம் பண்ற கேட்டக்கரி இல்லடா, செலவே இல்லாமல்  கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்ப” என்றாள் விளையாட்டாக ஆனால் அதுதான்  ஒருநாள் நடக்க போகிறது  என்று  அறியாமல்.

“வாய் ஓவரா பேசாத, நான் ஒன்னும் அப்படி பண்ற ஆள் இல்ல”

“பார்க்க தானே போறேன்” என்றவளின் காதை திருகியவன்…

அதன்பின் “அம்மா அடிக்கடி சொல்லுவாங்க நியாபகம் இருக்கா, முடி இருக்கவீங்க  அள்ளி முடியறாங்கனு, அது மாதிரி என்கிட்ட பணம்  இருக்குனு காட்ட இப்படி எல்லாம் பண்றாங்க” என்றான்.

அதுக்கு இப்படியா என்றாள் ஆச்சரியம் தாங்காமல்.. ஏனோ பணக்கார  வாழ்க்கை  பிடிக்காமல் போனது  ஆராவிற்கு..

இதில் சந்தோசத்தையும் அன்பையும் விட, நடிப்பும், பகட்டும் தான் இருக்கும் என்று தோன்ற  அந்த வாழ்க்கையை அறவே வெறுத்தாள்.

Advertisement