Advertisement

சிங்கா:சிதம்பரம் நடராஜர் கோவிலில் என்ன சிறப்பு இருக்கிறது

தேவா:மனிதனின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுகளை கொண்டது. அதன் அடிப்படையில் நடராஜர் கோயிலில் ஐந்து திருச்சுற்றுகள் என்னும் பிரகாரங்கள் உள்ளன. அதேவேளை மனிதனுக்கு இதயம் இடப்புறம் அமைந்திருப்பது போல், மூலவர் இருக்கும் கருவறை, கோயிலின் இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது.இதுமட்டும் இல்லை சிங்கா,

சராசரியாக மனிதன் ஒரு நாளைக்கு 21 ஆயிரத்து 600 முறை இதயத்தின் உதவியால் மூச்சுவிடுகிறான் என்பதைக் குறிக்கும் விதமாக, கருவறையின் மீதுள்ள கூரை 21 ஆயிரத்து 600 ஓடுகளால் வேயப்பட்ட வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாகச் சிதம்பரம் நடராஜர் கோயிலில், உற்சவர் அல்லாமல் மூலவரே வீதியில் வலம் வருகிறார். அதேபோல் சிதம்பரம் கோவிலில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம். மேலும், சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில் மட்டும்தான்.

உடையாய்! தலைவா! நல்ல

தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை தன்னுள்

சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய

ஏரினால் அமர்ந்தாய்! உன சீர் அடி ஏத்துதுமே.

என்று பூஜை அறையில் இறைவனை  துதித்து  திலகவதி பாடிக் கொண்டிருக்க…

“அம்மா உனக்கு எப்போமே அந்த சிவன் தான் முக்கியமா? நீ பெத்த இந்த 4 பிள்ளைங்களும் முக்கியம் இல்லையா?, காலைல காபி கூட குடுக்காம,  அந்த சாமியை  தொந்தரவு பண்ணி, பிரசாதம் வெச்சிட்டு இருக்க” என்று சத்தம் போட்டாள் ஆரா, என்கிற சக்தி ஆரண்யா…

“இரு அம்மு, அம்மா பூஜைல இருக்காங்கல்ல.. பூஜையை முடிச்சிட்டு வரட்டும்… அதுக்குள்ள என்ன அவசரம் இன்னுக்கு சண்டே தானே” என்றான் ஆராவின் முதல் அண்ணன் சசிதரன்.

“அம்மு எழுந்ததும் காபி குடிப்பான்னு தெரியும்ல, போட்டு வெச்சிட்டு பூஜை பண்ண வேண்டியது தானே,யாரு வேண்டான்னு சொன்னது” என்று ஆராவிற்கு பரிந்து பேசினார் ஆராவின் தந்தை குழந்தைவேலு…

“அட காலையிலையே ஆரம்பிச்சிட்டீங்களா?,  பெரிய மகாராணி இவ… ஒரு காபி போட்டுக்கூட குடிக்க மாட்டா…போற இடதுல  இவளால  என்ன என்ன பிரச்சனை வர போகுதோ, போடி, போய் காபி போட்டு எங்களுக்கும் எடுத்துட்டு வா”, என்றவன், “ஏப்பா உங்களுக்கு அவ என்ன பண்ணுனாலும் சரி தான் இல்லையா? திஸ் இஸ் டூ மச் ஆப் பாசம்” என்றான் ஆராவின் மூன்றாவது அண்ணன், சாய்தரன்.

“உனக்கு என்னடா போச்சி உன்கிட்டயா நான் கேட்டேன்… அம்மாகிட்ட தானே கேட்டேன், உன் வேலையை என்னமோ பாரு, பெருசா பேச வந்துட்டான், ஆளையும் மூஞ்சையும் பாரு அப்படியே இஞ்சி தின்ன குரங்கு மாதிரி,”என்றவள், “அப்பா எனக்கு ஒரு சந்தேகம்  நம்ப வீட்டுல எல்லோரும் ஒரு மாதிரி இருக்க இவன் மட்டும் பார்ட் டைம் பைத்தியக்காரன்  மாதிரி இருக்கானே, ஒருவேளை இவனை தவுட்டுக்கு வாங்கிட்டு வந்திட்டீங்களா?என்றாள் ஆரா  அதி முக்கியமாக..

“கேப்படி கேப்பா…நான் இந்த வீட்டுல பொறந்த பையன் தான்,  ஆனா உன்னைய  தான் மாம்பழத்துக்கு வாங்கிட்டு வந்தாங்க, அதனால தான்  இந்த  சுவத்துக்கு வெள்ளை அடிச்ச மாதிரி  வெள்ளையா இருக்க, உனக்கும் இந்த குடும்பத்துக்கும் ஏதாவது ஒட்டுதா பாரு” என்றான் கோவமாக.

” ரெண்டு பேரும் அமைதியா  இருக்கீங்களா?, இப்போ உனக்கு காபி தானே வேணும் அம்மு, இரு நான் போட்டு எடுத்து வரேன்” என்றான் இரண்டாவது அண்ணன் பரணிதரன்…

“அதுலாம் வேண்டா அண்ணா, அம்மாவே கொண்டு வருவாங்க” என்றவளின் முகம் வாடி இருக்கவும்.

“அவன் விளையாட்டுக்கு சொல்றான்ம்மா, அதுக்கு போய் பீல் பண்ணுவியா, இரு”என்று சசியு,ம் பரணியும் சமையல் அறைக்குள் காபி போட போனார்கள்.

“இவனுங்க இருக்கற வரைக்கும் இவளை திருத்தவே முடியாது” என்று தலையில் அடித்துக் கொண்ட சாய்… “பொட்ட பிள்ளையா ஒழுங்கா, எல்லாம் வேலையும் செய்யற வழிய பாரு.. சும்மா எல்லோரையும் ஏச்சிட்டு சுத்தாத, அதும் அம்மாவை கஷ்டப்படுத்தரதே உனக்கு வேலையா போயிடுச்சி, இனி அவங்களை அதிகாரம் பண்ணுன  தொலைச்சிடுவேன் ” என்றான் சாய் கோவமாக.

“போதும் நிறுத்து” என்று கையைக் காட்டியவள்,

“உன் வேலையைப் பார்த்துட்டு போடா…” என்றாள்…

இருவரும் சண்டை இட்டுக் கொள்வதை பூஜையை முடித்து வந்த திலகவதி பார்த்துவிட..

“அவன் சொல்றது என்னடி தப்பு?, இந்த வீட்டுல ஒரு வேலை செய்யரியா நீ ?, இல்ல, கிச்சன்ல காபி தூளுக்கும், டீ தூளுக்கும் தான் உனக்கு வித்தியாசம் தெரியுமா…?,”என்றவர், “எப்படி தெரியும் கொஞ்சமாவது வேலை செஞ்சா தானே அதலாம் தெரியும், 8 மணிக்கு வரது தட்டுல  ரெண்டு இட்லியை போட்டுட்டு, தட்டுல  இட்லி தீர்ந்து போறது கூட தெரியாத அளவுக்கு போனை நோண்டிட்டே திங்கறது, அப்புறம் காலேஜ் கிளம்பி போனா, மறுபடியும் நைட் திங்கதான்  கீழே வரது, இப்படி இருந்தா  யாருதான்  குறை  சொல்ல மாட்டாங்க” என்றார்…

“அதானே பார்த்தேன் எங்கடா  இன்னும் காணாமேனு, உங்க பையன் என்னைய  திட்டிட்டா போதுமே உங்களுக்கு சந்தோசம் தாங்க முடியாதே , அவனுக்கு சப்போர்ட் பண்ண பூஜையில இருந்து கூட எழுந்து வந்துருவிங்க” என்றவள், “இப்போ என்ன உங்க ரெண்டு பேருக்கு, நான் வேலை செய்யணும் அதானே… செய்யறேன்..போதுமா?” என்றாள்.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேலு நமட்டு சிரிப்பு சிரித்தார்…

“அம்மா தாயே உன்னைய வேலை செய்ய சொல்லிட்டு இந்த வீட்டுல நான் குடுத்தனம் நடத்திட முடியுமா?, உங்க அப்பா, என்னைய வீட்டை விட்டு துரத்திட மாட்டாரு” என்றவர்..

”ஏண்டா டீ இன்னிக்கு போட்டுருவீங்களா இல்ல… நாளைக்கு தான் வருமா?, சொல்லிடுங்கடா , நான் கடையில போயாவது டீக் குடிச்சிக்கிறேன்” என்றார்,சசி பரணியை பார்த்து..

“வந்துடுச்சு எல்லோருக்கும் டீ” என்று பரணி சத்தம் போட, சசி எல்லோருக்கும் டீயை எடுத்து வந்தான்..

சேலம் மாவட்டத்தை  சொந்த ஊராக  கொண்ட குழந்தைவேலு, திலகவதி தம்பதினருக்கு மூன்று ஆண் குழந்தைகள் மட்டும் ஒரு பெண் குழந்தை..

குழந்தைவேலு Msv பைனான்ஸ் கம்பெனியில் மேலாளராகவும், சசிதரன் Msv டைல்ஸ் கம்பெனியில் மேலாளராகவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பரணி Msv கல்லூரில் வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

என்னடா எல்லோரும் ஒரே கம்பெனியில் தான் வேலைப் பார்க்கிறார்களா? என்று கேட்டால்

ஆமாம்.. முதலில் வேலு தான்  Msv கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார், பின் அவரின் பரிந்துரையின் பெயரில் தான், இன்று தன் இருமகன்களும் கௌவரவமான வேலையில் இருக்கிறார்கள், என்ற பெருமை ஒரு தந்தையாக வேலுவிற்கு எப்போதும் உண்டு…

சாய்தரன் MBA படித்துக் கொண்டு இருந்தான்..

ஆரண்யா கல்லூரியின் கடைசி வருடத்தில் இருந்தாள்..

சாய்யும், ஆராவும் ஒரே கல்லூரியில் தான் படித்தனர்.. இருவருக்கும் இந்த வருசத்துடன் படிப்பு முடிகிறது…..

படிப்பு முடிந்ததும் இவர்களையும் Msv குரூப் ஆப் கம்பெனியிற்கே தத்து கொடுத்து விடலாம் என்று வேலு ஆசையாக இருக்கிறார்.

திலகவதி முழுக்க முழுக்க ஒரு சிவன் பக்தை… மூன்று மகன்களுக்கு பிறகு வீட்டிற்கு ஒரு மகாலட்சுமி வேண்டும் என்று தவமாக தவமிருந்து … சிவனிடம் பல வேண்டுதல்களை முன் வைத்து தான் தன் மகளை பெற்றெடுத்தார். அதற்கு நன்றிக்கடனாக தான் தன் மகளுக்கு அந்த பார்வதியின் இன்னொரு பெயரான ஆரணி என்பதை சக்தி ஆரண்யா என்று வைத்தார்.

தன் மகள் சக்தியாக இருந்து ஒரு சிவனை தான் கைபிடிப்பாள் என்பது  அவரின் நம்பிக்கை.. அதை தடுக்க குழந்தைவேலுவும் முயலவில்லை…

மகளுக்கு 21 வயது ஆகியும் திலகவதி இன்னும் அவரது நம்பிக்கையை கைவிட வில்லை. மகளுக்கு ஏற்ற மணாளனை  தேடிக் கொண்டிருக்கிறார்.

தங்களின் குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது தான்  என்றாலும், வீட்டில் இருக்கும் எவரும் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டது இல்லை..

அப்படி அவர்கள் அதிகம் ஆசைப்படும் ஒரு விசயம் உண்டு என்றால், அது ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பில், எந்த காலத்திலும்  சிறு மாற்றமும் வந்துவிட கூடாது என்பதாக  இருக்கும்.

சக்தி ஆரண்யா தான் அந்த குடும்பத்தின் சந்தோசமே… எல்லோரும் அவள் மேல் உயிராக  இருந்தனர்.

எல்லோரும் அதிகம் செல்லம் கொடுத்து ஆராவை கெடுத்து விடுவார்களோ என்று சாய் மட்டும் கொஞ்சம் கறாராக பேசுவானே தவிர அவனுக்கும் ஆராவின் மேல் கொள்ளை பிரியம்….

‘பரவால்ல சசி,  டீ நல்லதான் இருக்கு” என்றாள் ஆரா……

“அடியே அண்ணானு சொல்லாம, இது என்னடி புதுப் பழக்கம் பேர் சொல்லி கூப்பிடறது” என்றார் திலகா ஆராவின் காதை திருகியபடி

“ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ வலிக்குதும்மா, அம்மா நீ இன்னும் அந்த காலத்துலையே இருக்க… இந்த காலத்துல புருஷனையே வாடா, போடான்னு தான் சொல்றாங்க,இதுல அண்ணனுக்கு எல்லாம் மரியாதையா?” என்றாள் ஆச்சரியபடுவது போல்.

“ஏங்க இவளுக்கு வாய் கூடி போச்சி… படிப்பு முடிஞ்சதும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான், இல்லான நம்ப மானத்தை வாங்கிடுவா” என்றார்..

“ஏன் திலகா உனக்கு இப்படி என்மேல நயவஞ்சகம், என்னைய வீட்டை விட்டு துரத்துல உனக்கு அப்படி என்ன ஆசை, என்னைய துரத்திட்டு நீயும் உன் சின்ன மகனும் இந்த வீட்டை ஆட்சி பண்ணலாம்னு நினைக்கறீங்களா?”” என்றாள் ஆரா.. பொய் கோபத்துடன்

“பாருங்க என்னையவே பேர் சொல்றதை, கழுதை வாய் கூடி தாண்டி போச்சி” என்று ஆராவை அடிப்பதற்கு திலகா அவளை துரத்தவும் அவள் ஓடினாள்..

அந்த வீடே கலகலவென்று இருந்தது…

Advertisement