Advertisement

சிங்கா: அண்ணா நீங்க செய்திட்டு இருக்கற ஆராய்ச்சி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் 

தேவா: “இந்தியாவின் அடையாளமே கோயில்கள் தான் சிங்கா. தமிழகத்தின் அடையாளமே கோயில்களின் கோபுரங்கள் தான். ஆதி காலம் முதலே கோயில்களை கட்டும்போது, ஒவ்வொரு கோயிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைப்பதை நமது முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர் சிங்கா. அந்த வகையில் ஒவ்வொரு கோயிலும், ஒவ்வொரு வகையில் தனிச் சிறப்பு கொண்டது.

உனக்கு தெரியுமா காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் அம்மன் சந்நிதி என்று  ஒன்று இல்லை.”

சிங்கா: எப்படி அம்மன் கோவில் இல்லாமல் கட்டிருக்கிறார்கள்

தேவா: அதுதான்  அந்த கோவிலின் சிறப்பு

ஐப்பசி மாதம்   அடைமழைக் காலம் என்பார்கள் அதுபோல் தான்  ஆலியும் விடாமல்  தன் தரணி காதலியை அணைத்துக் கொண்டிருக்க…. ஆலியின் காதலால் தரணியவள்  நிரம்பி வழிந்து கொண்டிருந்தாள்..

அந்த அடைமழையில் நனைந்தவாறே  நடக்க முடியாமல்  தன் வயிற்றை பிடித்துக் கொண்டு நடந்து  வந்தாள் அந்த பெண்..

எங்கும் தண்ணீராக  இருக்க.. அடுத்த அடியை  பள்ளத்தில் வைப்போமா, இல்லை, குழியில் வைப்போமா?  என்ற பதட்டம் கூட இல்லாமல் அவள் போக்கில் நடந்து கொண்டிருந்தாள்… அவள் பதட்டம் எல்லாம் வேறு ஒன்றை  நினைத்து தான்.

பெண்ணின் கண்களில்  பயமும், அவள் வயிற்றில் 7 மாத  குழந்தை இருக்க.. அவளால் நடக்க முடிவில்லை என்றாலும் நடையில் ஏனோ அவ்வளவு அவசரம்  இருந்தது…

“ஏம்மா பார்க்க பிள்ளதாச்சி மாறி தெரியுற, இந்த மழைல எங்க  போற?, இப்படி வந்து  ஒதுங்கி, மழை நின்னதும் போ தாயி” என்றார் போகும் வழியில் கடை வைத்திருந்த ஒரு முதியவர்.

“இல்லய்யா நான் இப்படியே போய்டுவேன், எனக்கு பிரச்சனை இல்லை” என்று சொல்லி   தன் பயணத்தை தொடர்ந்தாள் அவள்.

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் அவள் மனதில்  மரண பயமும் கடலளவு  பதட்டமும் இருந்தது.. ஆனால் அதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் நடந்தாள்.

எங்கோ தூரத்தில்  போலீஸ் வண்டியின் சைரன் சத்தம் கேக்கவும்,  உடம்பில் இன்னும் அதிக  பதட்டம்  வந்து  ஒட்டிக்கொள்ள, இன்னும் வேகமாக நடந்தாள்..

ஆனால் அவள் எவ்வளவு வேகமாக நடந்தாலும்  அவளின் வேகத்தை மிஞ்சியது அந்த போலீஸ் வண்டி..

“ஏய் நில்லும்மா, உன்னைய தான்   சொல்றோம் நில்லும்மா” என்று  பெண் போலீஸின் சத்தம் காதை பிளந்தாலும், அதைக் கண்டு கொள்ளாமல் வேகமாக  நடந்தாள் அந்த பெண்..

“இந்த பொம்பளை என்ன? மாசமா  இருந்துட்டு, எவ்வளவு  திருட்டு வேலைப் பார்க்குதுனு பாருங்க.. எல்லாம் பணக்காரத்

திமிரு” என்று ஒரு பெண் போலீஸ் சொல்ல

“அவ முடியை பிடிச்சி இழுத்துட்டு வாங்கடி”  என்றார் மேலாதிகாரி ..

அவர் சொன்னபடியே…. அந்த பெண்ணை இழுத்து வந்து அந்த இன்ஸ்பெக்டர் முன் நிறுத்தினர்…

“ஏய் திருட்டு மூதேவி.. மாசமா இருக்கேனு பார்க்கறேன்…இல்லனா சாவடிச்சிருப்பேன்”  என்றவர், “திருடறதே தப்பு, இதுல திருடறதைப் பார்த்துதுல  புருஷனையே கொன்னுருக்க… இவளுக்கு எந்த அளவுக்கு நெஞ்சழுத்தம் இருந்துருக்கும்,   ஏறுடி முதல வண்டில.. ஸ்டேஷன் போய் பேசிக்கறேன் உன்னை” என்றார்..

“ஐயா அவரை நான் கொலை பண்ணல, என்னைய நம்புங்க.. தயவு செஞ்சி நம்புங்க” என்று அழுதவளை “ஏறுடி” என்று கன்னத்திலேயே  ஒரு அடி வைத்தார்…

ஏற்கனவே உடலில் தெம்பு இல்லாமல் இருந்தவள், அவர் அடித்ததும் கீழே விழுந்துவிட.. “அவளை தூக்கி உள்ள போடுங்க” என்றார்.

அதன்பின் அந்த பெண்ணால் போராட முடியாமல் போனது…

அடித்து இழுத்து வந்து  அந்த பெண்ணை ஸ்டேஷனில் தள்ளியவர்கள்,

“ஏய் உன்னோட பேரு  என்னடி..?” என்று அவளது  தலைமுடியை  பிடித்து உலுக்கியபடியே கேட்கவும்

“அபிராமி..” என்று திக்கி திணறி சொன்னாள்.

“சரி  சொல்லு எதுக்கு புருஷனையே  கொன்ன?” என்றார்.

“இல்ல நான் கொல்லல நம்புங்க… நான் எதுமே பண்ணல..” என்று அழுதாள்.

“அப்போ அவரே குத்திகிட்டு செத்துட்டாரா?”  என்று நக்கலாக  கேட்கவும்..

“எனக்கு தெரியல.. நான் பார்க்கும் போதே  அவர் இறந்து தான்  இருந்தாரு”  என்று அழுதாள்.

“அப்போ போலீஸ்க்கு நீதானே முதல  கம்பளைண்ட் பண்ணிருக்கணும்”

“நான் பார்க்கறதுக்கு முன்னாடியே…” என்று அழுதவள்  எதுவும்  சொல்லாமல் இருக்க…

“சொல்லுடி…”

“இல்ல, எனக்கு முன்னாடியே யாரோ  போலீஸ்க்கு போன் பண்ணிட்டாங்க”

“புருஷனை கொல்றவலாம் இப்படி தாண்டி சொல்றிங்க..”என்றவர்.. “என்ன இந்த நிலமையிலும் கள்ள புருஷன் கேக்குதா..?” என்று  அபிராமியின் வயிற்றை சுட்டிக் காட்டியபடியே கேட்டார்.

“ஐயோ!!” என்று காதை அடைத்தவளின் கையை லத்தியால் எடுத்துவிட்ட போலீஸ்

“நடிக்காதடி, கள்ள புருஷனுக்காக குழந்தைகளையே  கொல்லுறாங்க, நீ என்ன புருஷனை தானே கொன்னுருக்க..? ” என்றவர், “இப்போ எதுக்கு கொலை பண்ணினு சொல்ல போறியா?  இல்லையா?” என்றார்.

“ஆமா நான்தான்  கொலை பண்ணுனேன், என்னைய  உடல் ரீதியா  டார்ச்சர் பண்ணுனார்னு நான்தான்  கொலை பண்ணுனேன்” என்று கத்தினாள்.

“அப்படி வா  வழிக்கு” என்றவர் அடுத்து அசிங்கமான கேள்வியை கேட்டார்.

“அதான்  கொலை பண்ணது நான் தானு ஒத்துகிட்டேன்ல இன்னும் எதுக்கு  என்னைய  கேள்வி கேட்டு கஷ்டப்படுத்தறீங்க” என்றவளின் மனம்  அந்த அளவிற்கு ரணமாகி இருந்தது.

அடுத்து இரண்டு நாளில் அபிராமி தான்  குற்றவாளி  என்று  கோர்ட்டில் நிரூபித்து அவளுக்கு ஆயுள் தண்டனையையும் வாங்கி கொடுத்து விட்டனர்…

கர்ப்பமாக இருந்ததால்.. அவளை  மாதம்  ஒரு முறை  மருத்துவர் வந்து  பரிசோதித்து  விட்டு சென்றார்…

“குழந்தை பிறந்தா  என்னமா பண்ண போற.. கேஸ் நடக்கும் போதும் உனக்குன்னு யாரும் வரல போலியே” என்று  ஜெயிலர் கேட்கவும்,

“எனக்குனு யாரும் இல்லை மேடம்.. என்னோட குழந்தை பிறந்தா பத்திரமா  ஒரு ஆசிரமத்துல விட்டுருங்க  மேடம், அதாவது நல்லா இருக்கட்டும்” என்றாள்..

“உண்மையாலுமே நீ உன்னோட புருஷனை  கொன்னுட்டியா?”என்று அவர் ஆச்சரியமாக கேக்க…

“இனி கொன்னா என்ன?, கொல்லலைனா என்ன மேடம்..? எங்க போறது, என்ன பண்றதுனு  தெரியாம இருந்த  எனக்கு… ஏதோ கடவுளா பார்த்து ஒரு இடம் குடுத்துருக்கார்… என்ன ஒன்னு, குழந்தை மட்டும் இல்லாம இருந்திருந்தால் இங்கையே வாழ்ந்து இங்கையே  பொணமா  போயிருப்பேன்..”என்றாள் வேதனையாக..

அபிராமியைப் பார்க்கும் போது   கொலை  செய்பவள் போல் தெரியவில்லை ஜெயிலருக்கு… அதனால் ஏன் என்றே  தெரியாமல்  அவள் மேல் ஒரு கருணை வந்தது..

தனது 20வருட பணி அனுபவத்தில் கொலை செய்பவர்கள் யார் கொள்ளை அடிப்பவர்கள் யார் என்று அவருக்கு நன்றாகவே தெரியும், அபிராமியை பார்க்கும் போது  அதிர்ந்து கூட பேசாத பெண் போல் தான்  தெரிகிறது, இவள்  கணவனை  கொலை செய்திருப்பாள் என்று கனவில் சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்..

‘இல்லை இவ எதையோ மறைக்கிறா..’ என்று நினைத்தவர், அவளே விருப்பம் இருந்தால் சொல்லட்டும் வற்புறுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டார்.

கர்ப்பமாக  இருக்கும் பெண்களுக்கு உண்டான அனைத்து ஆசைகளும் அபிராமிக்கு இருந்தது..

சரியான சாப்பாடு இல்லாமல் உடல் மெலிந்து பார்க்கவே குச்சி போல் இருந்தவள்… ஒரு குழந்தையை சுமக்கும் அளவிற்கு சத்தற்று  இருந்தாள்..

அதனாலயோ என்னவோ, தன் அம்மாவிற்கு அதிகம்  தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று,   எட்டு மாதத்திலையே  முந்தி கொண்டு வந்துவிட்டான் அந்த ஆண்மகன்..

குழந்தையை பெற்றெடுத்ததும் அபிராமி.. சோர்வாக  இருக்க… “அபி குழந்தை ரொம்ப வீக்கா  இருக்கு.. 10மாசம்  இருக்க வேண்டிய குழந்தை…  எட்டு மாசத்துலையே  வெளிய  வந்ததுல,அதுக்கு கிடைக்க வேண்டிய சத்து எதுவும்  கிடைக்கல போல”  என்ற ஜெயிலர்,   “உன்னோட பாலை குடுத்து தான்  சரி பண்ணனும்” என்றார்.

“என்னோட உடம்புலையே  ஒன்னும் இல்லையேம்மா அப்புறம் நான் என்னனு பால் குடுக்க”  என்றவள்.. “அம்மா எனக்கு ஒரு உதவி பண்றீங்களா?”  என்றாள்.

“என்ன  சொல்லு..”

“குழந்தையை கொண்டு போய் ஏதாவது அனாதை  ஆசிரமத்துல  விட்டுடுங்கம்மா,  அங்காவது அது நல்லா  இருக்கட்டும்,  என்னோட தண்டனை காலம்  முடிஞ்சதும் ,நான் முடிஞ்சா போய் பார்த்துக்கறேன்”  என்றாள்  கண்களில் கண்ணீருடன்.

“விளையாடறியா அபி…? பொறந்த குழந்தையை அங்க கொண்டு போய் விடணும்னு சொல்ற.. பாவம்  ஏற்கனவே அது சத்து இல்லாம கஷ்டப்படுது,  இதுல  தாய் பாலும் கிடைக்கலைனா  செத்து போய்டும்… பைத்தியம் மாதிரி பேசாம, குழந்தையை வளர்க்கர வழியைப் பாரு”என்றார் கோவமாக..

“சாகாதும்மா….”

“எப்படி இவ்வளவு உறுதியா  சொல்ற? நீ என்ன கடவுளா?”

“அவன் இந்த பூமில  செய்ய வேண்டிய வேலை  அதிகமா இருக்கும்மா”,  என்றவள்  அவளுக்கு நடந்த கொடுமையை  ஒன்று விடாமல்  சொல்லி முடித்தாள்..

“ஏய் இவ்வளவு நடந்துருக்கு.. இதை நிரூபிச்சி நீ வெளிய போய் உன்னோட குழந்தையை நல்லா வளர்க்கலாம்ல, ஏன் இப்படி உன்மேல் பழியை போட்டுட்டு உக்கார்ந்து இருக்க”  என்றார்.

“எப்படி நிரூபிக்க முடியும்மா?, என்கிட்ட தான்  எந்த ஆதாரமும் இல்லையே”என்றாள் அதை சொல்லும் போது அந்த நொடி இந்த உலகிலையே அதிக வேதனையை தாங்குபவள் போல் இருந்தாள்.

“ஆதாரத்தை உருவாக்குவோம்… தப்பு செய்யாத  நீ எதுக்கு தண்டனை அனுபவிக்கனும்..?”

“இல்லம்மா வேண்டாம்.. வெளிய அவங்களோட  ஆளுங்க அதிகம்.. ஒருத்தர் இல்லனா இன்னொருத்தர்னு என்னையும் என்னோட பிள்ளையையும் கொன்னுடுவாங்க… அதுக்கு அவன் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம்னு உயிரோடவாது  இருப்போம்ல..” என்ற  அபியை  பாவமாக  பார்த்த ஜெயிலர்.

“நான் இவ்வளவு சொல்லியும் நீ கேக்கல.. சரி இந்த குழந்தையையாவது  உன்னோட வெச்சிக்கோ… பால் மறக்கற வரைக்கும் உன்னோட இருக்கட்டும், அப்புறம் கண்டிப்பா நீ சொல்ற மாதிரி செய்யறேன் போதுமா..?”என்றார்.

“அவ்வளவு நாளும் குழந்தை இந்த கொசுக் கடில இருக்கணுமேம்மா..அந்த கஷ்டம் வேண்டாம்மா,தயவு செஞ்சி நீங்க கொண்டு போய் ஆசிரமத்துல  விட்டுட்டுங்க” என்றாள்..

இதற்கு மேல் தான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டாள் என்று  ஜெயிலர் நாகரத்தினம்  குழந்தையை வாங்கி கொண்டார்..

தாயாக  குழந்தையைப் பிரிய  நரக வேதனையாக  இருந்தாலும், தன் மகனின் நலனை கருதி மனதை கல்லாக்கிக் கொண்டாள்..

இன்னும் இந்த உடல் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டுமோ என்ற எண்ணம்  அபிராமியின் மனதில் எழாமல் இல்லை.

Advertisement