Advertisement

முகூர்த்தம் 9

 

காட்சியில் பிழையில்லை

கவனத்தில் குறைவில்லை

கண்களில் அவன் முகம்

கனவா நனவா காதல்…

 

நிகழ்ந்ததை இன்னும் அவளால் நம்பமுடியவில்லை, கனவாக இருக்குமோ என்றால் அவன் தட்டிப் போன கன்னத்தில் அவன் விரல்களின் ஸ்பரிசம் இன்னும் இருந்தது.

அவன் குடித்த காபி டம்ளரும், வாசல் வரை சென்று மருமகனை வழியனுப்பி விட்டு வரும் தந்தையும், கனவல்ல என உணர்த்தினாலும் இன்னும் அவள் மனம் அவனா அவனா என்று கேட்டுக் கொண்டிருந்தது.

எப்படி இது சாத்தியம், வாய்ப்பேயில்லை என விம்மிக் கொண்டிருந்த நெஞ்சத்தில் வாயில் இல்லா வீட்டிற்கு வந்த தென்றலாய் எப்படி வந்தான்,…. எவ்வளவு சிந்தித்தாலும் விடை மட்டும் கிடைப்பதாய் இல்லை.

நம்ப மறுக்கும் மனம் அவனுக்கென ஏங்கவும் மறக்கவில்லை. அதே நேரம் அவளின் மூளை அதிவேகத்தில் வேலை செய்தது, ஒரு வேளை நாம் அவனின் புகைப்படத்தை பார்க்கவில்லை என்பதால் இவன் தான் மாப்பிள்ளை என்று வந்து போகிறானோ….

“ஆஹா என்ன ஒரு அபாரமான சிந்தனை, எங்கிருந்து இறக்குமதி செய்த மூளை இது இவ்வளவு அழகாக வேலை செய்கிறது” என மனசாட்சி நக்கலடிக்க,

“அடச் சீ ரொம்ப மட்டமா யோசிட்டோமோ, போட்டோ நான் பாக்கலைன்னு அம்மாக்கு மட்டும் தானே தெரியும் , அப்பா அவன் கிட்ட பேசினதை வச்சுப் பார்த்தா ஏற்கனவே மீட் பண்ணியிருப்பாங்க போலயே, என்ன தான் நடக்குது நமக்கு மட்டும் தான் ஒண்ணும் தெரியலையா…”

மைவிழிச்செல்வியின் மனநிலைக்கு முற்றிலும் எதிர்பதத்தில் இருந்தது மைத்ரேயராஜனின் மனநிலை. துள்ளலும் துடிப்புமாய் நடை, குறும்பும் காதலும் மின்னும் கண்கள், உற்சாக ராகம் உதிர்க்கும் இதழ்கள் என பார்வைக்கு முற்றிலும் புதிதாய் காணப்பட்டான்.

பெரியவர்கள் மனநிறைவோடு மிகத்துரிதமாய் வேலை பார்க்க, திருமணத்திற்கான ஏற்பாடுகள் களைக்கட்டிக்கொண்டிருந்தது.

காதலோடு அவன் காத்திருக்க, குழப்பங்களோடே நிகழ்பவற்றை கவனித்துக் கொண்டிருந்தாள்.

நதியின் பாதையாய் நகர்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் கற்களைக்கூட கூர்மை நீக்கி கூலாங்கல்லாய் மாற்றிடும் காலத்திற்கு மனங்களை மாற்றுதல் என்ன கடினமா.,..

கடந்து கொண்டிருந்த நாட்களோடு ஒன்றாய் முடியவிருந்த நாளின் மாலைப் பொழுதொன்றில் அலுவலகக்கோப்புகளை புரட்டியபடி அமர்ந்திருவளின் கால் விரலில் ஏதோ உறுத்தல். உதறிவிட்டு மீண்டும் கோப்புகளை கவனிக்க, மீண்டும் எதோ மெல்லிய உரசல். காலை அசைக்காமல் பார்த்தவளுக்கோ அதிர்ச்சி, அங்கே ஒரு பல்லி அவள் கால் விரலை உரசிக் கொண்டிருந்தது.

சட்டென காலை உதறி எழுந்தவள், பல்லியைப் பார்க்க அது அங்கே நின்றிருந்ததது. மிதிப்பது போல இவள் காலை நகர்த்த அப்போதும் நகராமல் நின்றிருந்த பல்லியைக் கண்டு, “ ஏய் போ போ…. என்று அதை விரட்டும் நோக்கில் நடந்தாள். பல்லியும் ஓடத்துவங்க வேக வேகமா அதை விரட்ட அதன் பின்னே ஓடினாள். அங்குமிங்கும் இவள் ஓடியதில் கொலுசொலி சற்றே அதிர்வாய் அந்த வீட்டை நிறைக்கத் துவங்கியது. கொலுசு முழுக்க முத்துக்கள் வைத்து கொலுசு போட்டாலும், அதிகமாய் ஓசை எழுப்பாத வகையில் நடப்பதே அவள் பழக்கம்.

நீண்ட நாட்களுக்குப் பின் தங்கள் வீட்டில் கொலுசின் ஓசை கேட்பதை உற்று கவனித்த சீதா அவளறை நோக்கிச் செல்ல, அவர் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவர் முன் பிரசன்னமானான் மைத்ரேயராஜா.

“ஹாய் அத்தை என்ன ரொம்ப ப்ரைட்டா இருக்கீங்க….”

“அடடே வாங்க மாப்பிள்ளை, வாங்க, ஹா ஹா அது ஒண்ணுமில்லை மாப்பிள்ளை ஏதோ சத்தம் கேட்டு போனேன் அவ்வளவு தான் நீங்க வாங்க உக்காருங்க”

“என்ன சத்தம் அத்தை, வெளியே கூட கலவரமெல்லாம் ஒண்ணுமில்லையே”

“அது ஒண்ணுமில்லை மாப்பிள்ளை, செல்வியோட கொலுசு சத்தம் வேகமா கேட்டுச்சு, அதான் என்னன்னு பாக்க போனேன், நீங்க என்ன சாப்பிடுறீங்க”

“ஒண்ணும் வேணாம் அத்தை, மாமா இல்லையா”

“மாமா இப்ப தான் யாரோ அவங்க ப்ரெண்ட்டை பாக்கணும்னு போனாங்க”

“அப்படியா…” என்றபடி யோசனையோடே அமர்ந்திருந்தவனை காத்திருப்பான் என்று எண்ணி காபி கலக்க உள்ளே சென்றார் சீதா.

பத்திரிக்கையில் போட வேண்டிய பெயர்களை எழுதி வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று வந்தவன், அவர் இல்லை எனவும் கிளம்ப எத்தனித்தான்.

சீதா காபி கலக்க உள்ளே சென்றதையே மறந்துவிட்டு, வாரக்கடன்களை வசூலிக்க கெடுபிடியை அதிகரிக்க மேற்கொள்ள போகும் நடவடிக்கையைக் கேட்டு தனக்கு தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருந்த மின்னஞ்சலுக்கு என்ன பதில் அனுப்பப் போகிறோம் என்று யோசனையில் வாசலைக் கடக்க எத்தனித்தவனை மீண்டும் அவளின் கொலுசொலி நிறுத்தியது.

இறுக்கத்தின் நடுவே பூத்த புன்னகையாய் அவன் முகம் மெல்ல மலரத்துவங்கியது. பார்க்காமல் போகிறேன் என்று அழைக்கிறாளா…. இதோ வருகிறேன் கண்மணி என்று அவளறைக்குள் சென்றான்.

“ஹாய் முத்தம்மா” என்று கூப்பிட குரலெடுத்தவனின் குரலில் ஓசையின்றி ஊமையாகிப் போனது வார்த்தைகள்.

கண்ணாடி முன் நின்று கொண்டு தன் பிம்பத்தை பார்த்து பேசிக் கொண்டிருந்தவளின் பாவனைகளும் குரலும் அவனை அகலாது நிறுத்தியது ஓரிடத்தில்.

அவனைத் தேடி கையில் காபியோடு வந்த சீதா, அவன் இல்லாததைக் கண்டு,

“என்ன இப்படி சொல்லாம கொள்ளாம கிளம்பீட்டாரு, என்ன தான் பிள்ளைங்களோ” என்றபடி சமையலறைக்குள் சென்றுவிட்டார்.

தன் அறை தன் ராஜ்ஜியம் என்று பல்லியை விரட்டியதில் தோன்றிய சிறுபிள்ளைதனத்தை சாவியாய்க் கொண்டு தன்னைத் திறந்தவள், தன்னையே புதிதாய்க் கண்டாள்.

தன் நீண்ட நாள் தோழியை நெடுநாள் கழித்து காணும் தோழியாய் பரவசம் கொண்டது அவள் மனம்.

சிரிப்பை தொலைத்திருந்த இதழ்கள் மெல்ல உதிர்ந்து புன்னகை துளிர்த்திருந்தது. கண்களில் ஒரு மின்னலின் தாக்கம் நீண்டது. கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்து பேசத் துவங்கினாள்.

“எங்கே போயிருந்தாயடி மைவிழி இத்தணை நாளா யாரோ உன்னை ஒளிச்சு வைச்சுட்டாங்க போல, என்ன உனக்கு பிரச்சனை சிரிப்பை காணோம், எப்பயும் இருக்க கலகலப்பை காணோம், எப்ப பார்த்தாலும் மூஞ்சியை உர்ர்ர்ர்ன்னு வச்சுகிட்டு, என்ன இதெல்லாம், இதுவா நீ,”

“என்னமோ தெரியலை இத்தணை நாளா எதாவது உருப்படியா செய்யணும்ங்குற வைராக்கியத்துல கொஞ்சம் கடமையே கண்ணா இருந்துட்டேன், அதுக்காக இந்த உம்மனாமூஞ்சி தான் என்னோட இயல்புன்னு ஆயிடுமா, இந்தா வந்துட்டேன்ல, இனி யார் என்ன சொல்லுவாங்க”

“அதெல்லாம் சரிதான் இப்ப உன் கல்யாணத்துல என்ன குழப்பம் உனக்கு, எதுக்கு எப்ப பார்த்தாலும் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே இருக்க,”

“அது என்னன்னா, ராஜா என்னைய லவ் பண்ணான் ஆனா நான் அவனை லவ் பண்ணலை, இப்ப எப்படி அவனே மாப்பிள்ளையா வந்தான்னு எனக்கு புரியலை, அவனுக்கு சந்தோசம் தான் ஆனா என்னால தான் முழுசா அந்த சந்தோசத்தை அனுபவிக்க முடியலை”

“ஏன் ஏன் என்ன அதுல உனக்கு பிரச்சனை”

“என்ன பிரச்சனையா, இத்தணை நாளா என்னையே நெனச்சுகிட்டு இருந்தவன், அவன் தான் மாப்பிள்ளைன்னு தெரியாதப்போ, என்னை வேற யாரோ ஒரு மாப்பிள்ளைக்கு முடிவு பண்ணீட்டாங்கன்னு நெனச்சேன், நீயே சொல்லு அப்ப எப்படி இருக்கும், ரொம்ப கஷ்டமா போயிடுச்சு”

“இதுல என்ன கஷ்டம், இதைத்தானே இத்தணை நாளா நீ அவனுக்கு பதிலா சொல்லிகிட்டு இருந்த, உன்னைய பொருத்தவரைக்கும் நீ ராஜாவை லவ் பண்ணலை, அப்புறம் என்ன உன் அப்பா அம்மா யாரைப் பாக்குறாங்களே அவனை கல்யாணம் செஞ்சுகிட்டு சந்தோசமா போக வேண்டியது தானே “

“முடியலையே, அப்ப என் கண்ணு முன்னாடி அவன் தானே வந்து நின்னான், வேற யாரையும் என்னால நெனச்சுகூட பாக்க முடியலையே”

“அப்படீன்னா ஒத்துக்குறியா”

“என்னன்னு”

“நீயும் அவனை இத்தணை நாளா லவ் பண்ணியிருக்கன்னு”

“இல்லை இல்லை நான் அவனை லவ் பண்ணவே”

“என்ன அழகா பதில் சொல்ற மைவிழி இத்தணை நாளா லவ் பண்ணலையாம், ஆனா அவனைத் தவிர வேற யாரையும் மாப்பிள்ளையா நெனச்சுப் பாக்க முடியலையாம், எந்த ஊரு நியாயம் இது”

“ம்ம் அதெல்லாம் நம்ம ஊரு நியாயம் தான்”

“அப்ப அவன் கிட்ட உன் லவ்வ சொல்ல மாட்ட”

“ம்ம்ஹீம் மாட்டேன், நான் ஏன் சொல்லணும், அவன் தானே என் புருசனாகப் போறான் காலமெல்லாம் காதல்னு வாழப்போறேன்”

“அட அட அட என்ன ஒரு முடிவு பாருடா, ஆனாலும் எப்ப பாரு ஜிஞ்சர் தின்ன மங்கி மாதிரியே ஏன் மூஞ்சியை வச்சுகிட்டு இருக்க”

“ஹே ஹே யாரு அப்படி இருக்குறது இப்ப பாரு மைவிழியை என்ன அழகு என்ன சிரிப்பு என்ன அம்சமா இருக்கேனா என்று தன்னைத் தானே கண்ணாடியில் பேசிகொண்டிருந்தவளின் முக பாவனைகளிலும் மெல்ல மெல்ல கரைந்து கொண்டிருந்தவன் கிட்ட தட்ட காதலில் மிதந்து கொண்டிருந்தான்.

தான் ஒருவன் இங்கு இருக்கிறோம் என்று அறியாமல் தன் மனதுடன் அவள் வெளிப்படையாக நிகழ்த்திய உரையாடலில் அவளின் மனத்தை முழுதாகப் புரிந்து கொண்டவன். அவள் தன்னை காதலித்தாலும் சொல்லாமல் இருப்பது சற்றே மனதை பிசைந்தது.

அதற்கும் ஒரு முடிவை அங்கேயே எடுத்தவன், “ உன் வாயால என்கிட்ட வந்து உன் காதலை சொல்ல வைக்குறேன் பேபி” என்று சபதம் ஏற்றுக் கொண்டு சத்தமில்லாமல் வெளியேறினான்.

அவளோ அவன் அங்கு வந்ததை அறியாமல் தன் வருங்காலக் கனவுகளை ஓவியமாய் மனதில் தீட்டிக் கொண்டிருந்தாள்.      

 

மீண்டும் மீண்டும் அவள் பேசியதையே அசைபோட்டுக் கொண்டிருந்தாள் பவி, கல்லுக்குள் ஈரமாய் காதல் அவளுள் புகுந்த மாயம் அறிய முயன்று கொண்டிருந்தவளின் கண்களை பின்னிருந்து மூடினான் அவள் கணவன் ஜெகன்.

தானும் கணவனும் மட்டும் வாழும் இந்த வீட்டில் இந்த நேரத்தில் யார் வந்திருக்கப் போகிறார்கள், தன்னவனைத் தவிர என்று யோசிக்க மறந்து திணறுபவளை,

“அடியே பொண்டாட்டி  என்னடி  இப்படி யோசிக்கிற நான் ஒருத்தன் இருக்குறதையே மறந்துட்டியா” என்று திகிலாய் கேட்க,

“நீங்க தானா” என்று சாவாதானமாய் வந்தது பவியின் பதில்.

“நீங்க தானான்னு கேக்குறியே இந்த நேரத்தில வேற யாரை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாயடி பொண்டாட்டி”

“நீங்க தானான்னு கேட்டா வேற யாரையோ எதிர்பார்த்தேன்னு அர்த்தமா, லூசுப்புருஷா”

”என்னடி பொசுக்குன்னு லூசுன்னுட்ட”

“எவ்வளவு யோசிச்சு சொன்னாலும் நீ லூசு தான்”

“அடியே”

“பின்ன என்ன ரெண்டு பேரும் ஒண்ணாதான் சாப்பிட்டோம், எனக்கு பால் ஆத்தி எடுத்திட்டு வரேன்னு போனமனுசன் வந்து கண்ணை பொத்தி விளையாடுனா என்ன சொல்லுறதாம்”

“ஆனாலும் இவ்வளவு லாஜிக்காவா யோசிப்ப, இதெல்லாம் ஒரு கிக்குக்காக பண்றதுடி பொண்டாட்டி”  

“எல்லாம் தெரியும் பால் எங்கே”

“இந்தாடி சூடு சரியா இருக்கான்னு பாரு இல்லைன்னா, இன்னும் ஆத்தி தரேன்”

“ஆனாலும் உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா டா புருசா”

“நேத்து கட்டின பந்தயத்துல தோத்துட்டேன்னு நானே எல்லாத்தையும் பல்லை கடிச்சிகிட்டு செய்யுறேன் கடுப்பேத்தாதடி பொண்டாட்டி”

“ஹா ஹா ஹா செய் மகனே செய் அவளை நம்பி பெட் கட்டினியே தோத்தியா தோத்துப்போனியா”

“நான் தான் தோத்துட்டேனே அதைவிடு நீ எப்படி அவ்வளவு உறுதியா மைவிழி ராஜா லவ் பண்ணுறான்னு சொன்ன”

“அவள் கூடவே இத்தணை வருசமா இருக்குறேனே அவளைப் பத்தி எனக்கு தெரியாதா, அவள் என் நண்பிடா”

“ஆனாலும் அவளோடா வீம்பு, கெத்து பிடிவாதம்  இது எல்லாத்தையும் விட லவ் மேலயும், அந்த ராஜாப்பையன் மேலயும் அவள் வச்சிருந்த வெறுப்பு இதையெல்லாம் வைச்சு தானடி நான் நம்பினேன்”

“ஹா ஹா ஹா ஹா”

“என்ன சிரிப்பு”

“இல்லை உனக்கு லவ்வை பத்தி ஒண்ணுமே தெரியாதா புருஷா”

“என்னடி இப்படி கேட்டுட்ட, நாம பண்ணாத லவ்வா நான் வேணும்னா ஒரு சின்ன டெமோ பண்ணி ஞாபகப்படுத்தவா”

“போதும் போதும் ஏற்கனவே நீ பண்ண டெமோவுக்குத் தான் வயித்துக்குள்ள ஒருத்தன் ஃபுட் பால் விளையாடுறான் “

”ஹா ஹா ஹா” என்று சிரித்த ஜெகனிடம், ”இதைச் சொல்லலை, பிடிக்கலை தப்பு செய்யக்கூடாதுன்னு ஒரு பிடிவாதத்துல இருந்தாளே தவிர அவ மனசு எப்பயோ அவனை ஏத்துக்கிச்சு, இடம் பொடுள் ஏவல் எல்லாம் அவளுக்காகவே ஒத்து வந்திருச்சு, ராஜாவோட காதலும், மைவிழியோட நேர்மையும் அவங்களோட காதலை இயற்கையே சேர்த்து வைக்கணும்னு முடிவு பண்ண வைச்சிடுச்சு, சோ அவங்க ரெண்டு பேருல யாரு தோத்தாலும் ஜெயித்தாலும் அவங்க காதல் ஜெயிச்சிடுச்சு”

“என்னடி எண்ட் கார்ட் ரேஞ்சுக்கு விளக்கம் சொல்லிகிட்டு இருக்க, இன்னும் எவ்வளவு இருக்கு”

“எவ்வளவு இருக்கு”

”நீ சொல்றது தமிழ்சினிமா கான்செப்ட்டில சுபம் போட நல்லாருக்கும், ஆனா லைப் வேற ப்ராக்டிகலா எவ்வளவோ ஃபேஸ் பண்ண வேண்டிருக்கு, பாப்போம் என்ன நடக்குதுன்னு”

“பாக்கத்தானே போறோம்,

அதுக்கு நடுவுல நம்ம கதையும் கொஞ்சம் கவனிக்கலாமா பொண்டாட்டி, என்று கண்ணடிக்க, இதுவரை இயல்பாய் பேசிக் கொண்டிருந்த பவியின் கன்னத்தில் செம்பூக்கள் பூக்கத்துவங்கியது.

“ஆஹா என் பொண்டாட்டி கன்னத்துல ரோசாப்பூ பூக்குதே, சிக்னல் காட்டுதே, என்னையும் கூப்பிடுதே”

நாணத்தில் குரல் குழைந்திடாமல் இருக்க பெரும்பாடு பட்டாள் பவி, “தப்பு தப்பாவே யோசிக்கிற புருசா, ரெட் சிக்னல் விழுந்தா ஸ்டாப்னு அர்த்தம்”

அது ரோட்டுல தான், கன்னத்துல ரெட் விழுந்தா காதலுக்கு அது கிரீன் சிக்னல் “

“ட்ராபிக் போலீசா போக வேண்டியவனை டீம் லீடரா போட்டுட்டியே ஆண்டவா”

“விசயத்துக்கு வாடி, மைவிழி எப்படி காதலில் விழுந்தாள்,”

“திரும்பவா….. இன்னும் நீ இதை விடவேஇல்லையா, “

“எல்லாம் சரிதான்னு கன்வின்ஸ் ஆனாலும் திரும்ப திரும்ப டௌட் வருதே வாட் டு டூ”

“மைவிழியோட பாயிண்ட் ஆப் வியூல, காதல் தப்பும் இல்லை, ராஜா கெட்டவனும் இல்லை அதை முதலில் புரிஞ்சுக்கோங்க, சொன்ன டைம் தான் தப்பு”

“சோ”

“சோவாவது ராமசாமியாவது, அவ நெனச்ச மாதிரியே அவளோட காதல் அங்கீகாரத்தோட கிடைக்குது, இப்ப ஏத்துக்குறதுல  பிரச்ச்னையோ, உறுத்தலோ, ஏன் குற்ற உணர்ச்சியோ தேவையில்லை, இன்னும் சொல்லப்போனா, கரும்பு தின்னக் கூலியா”

“அது சரி, கூலி குடுத்தா கூட என் கரும்பு கிட்ட வரமாட்டேங்குதே” என்ற படி தன்னை நெருங்கிய தன் கணவன் மையலானதில் காதலின் மயக்கம் கொண்டாள் பவி. 

Advertisement