Advertisement

முகூர்த்தம் 8

கன்னம் சிவக்கும்

கவினெழில்

பொழுதுகளில்

பூவாய் நீ

மணமாய் நான்

மழையாய் காதல்

காதலாய்  ஈரம்….

”இவ்வளவு நேரமா டா பேங்கில இருந்து வர்றதுக்கு, உன் கூட வேலை பாக்குறவர் தானே பக்கத்துவீட்டில இருக்க அந்த கோமுவோ, சோமுவோ, அவரெல்லாம் எப்பவே வந்துட்டார் இவ்வளவு நேரமா எங்கடா ஊர் சுத்தீட்டு வர்ற” மகாலட்சுமியின் குரல் கேட்டு, ஒரு வெறித்த பார்வையுடன் உள்ளே வந்தான் மைத்ரேயன் என்கிற நம் ராஜா.

”ஏன் மகா அவன் என்ன ஸ்கூல் பையனா இப்படி கேட்டுகிட்டு இருக்க, என்ற ராஜாவின் தந்தை நந்தகோபன், பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்து விட்டால் தோழனாக நடத்த வேண்டும் என்ற கொள்கை உடையவர்.

ஆனால் மகாலட்சுமியின் கண்டிப்பால் தன் சலுகைகளை மகனுக்கு தனியாக காட்டுவார், பொதுவில் அவர் ஸ்டிரிக்ட் ஆபீஸர்.

“நீங்க இவ்வளவு நேரம் என்னைய கேட்டு துளைச்சு எடுத்தீங்களே, அதை இப்ப மகன்கிட்ட கேக்க வேண்டியது தானே, ஏன் என்னையவே அடக்குறீங்க”

“என்னதான் மா உங்களுக்கு பிரச்சனை மனுசன் ஆயிரம் டென்ஷனோட வந்தா, வீட்டுக்குள்ள நுழையும் போதே சத்தம் போட்டுகிட்டு இருக்கீங்க, கொஞ்சமாச்சும் நிம்மதியா இருக்க விடுறீங்களா…ச்சை….” என்று தன் நாளின் ஏமாற்றம் இயலாமை கோபம் அத்தணையையும் ஒட்டுமொத்தமாய் குரலிலும் வார்த்தைகளிலும் ஏன் முகத்திலும் கூட தெறிக்க விட்டிருந்தான்.

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை மகாலட்சுமி, தன்னிடம் எப்போதும் போல எதாவது காரணம் சொல்லி, தப்பித்துக் கொள்ள பார்ப்பான் என்றே கருதியிருந்தார்.

இத்தணை கோபத்தை அவனிடம் என்றுமே அவர்கள் கண்டதில்லை.

எதுவும் பிரச்சனையாகியிருக்குமோ என்று சிந்தித்தவர், சட்டென தன் கோபத்தை மூட்டை கட்டிவிட்டு மகனிடம் பரிவோடு வந்தார்.

“என்ன ராஜா என்னாச்சு ஏன் இப்படி சோர்ந்து போய் இருக்க”

“ம்ம் ஒண்ணுமில்லை மா, விடு, கொஞ்சம் காபி குடுக்குறியா” என்றவனின் முகத்தில் என்ன தெரிந்ததோ அவருக்கு, சில நிமிடங்களில் காபியோடு வந்தார்.

அதை நிதானமாக உறிஞ்சியவனின் சிந்தனை அவளைச் சுற்றியே இருந்தது.

வங்கிக்கு வரவில்லை, அவள் பெயரில் வேறு யாரோ வந்து பணம் செலுத்திவிட்டு செல்கின்றார், அவள் வங்கியில் கொடுத்திருக்கும் அலைபேசி எண்ணும் எடுப்பாரின்றி அடித்துக் கொண்டே இருக்கிறது, அவளின் அலுவலகமும் திறக்கப்படவில்லை.

யாரிடம் கேட்பது, என்னவானாள், அவளாக வருவாள் என்று காத்திருந்தது தவறோ, வீட்டில் நாமாக இந்த பேச்சை துவக்கியிருக்கலாமோ, வேறு யாரோ ஒரு பெண்ணை எனக்கென பார்த்துவிட்டு வந்திருப்பவர்களிடம் என்னவென்று பதிலுரைப்பது என்று எண்ணங்கள் பின்னலிட, அவிழ்க்கும் முடிச்சு எதுவென்று விழித்துக் கொண்டிருந்தான்.

“காபிய கையில வச்சுகிட்டு அப்படி என்னப்பா சிந்தனை குடிச்சிட்டு யோசி, பாங்கில ஏதும் பிரச்சனையாப்பா” தந்தையின் பேச்சில் நிமிர்ந்தவன்,

”அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா, இது வேற டென்ஷன்” என்றான்.

”சரி இந்தாப்பா, இந்த கவரை பிரிச்சு பாரு”

”என்னம்மா நானே டென்ஷன்ல இருக்கேன் நீங்க வேற”

“ஒரே ஒரு தரம் என் ராஜால்ல, பாருப்பா”

“எனக்கு பிடிக்கலைன்னா விட்ரணும் சரியா” நிபந்தனையுடனே கையில் அந்த கவரை வாங்கியவனிடம் என்ன பதில் சொல்வதென்று யோசித்துக் கொண்டிருந்தார் நந்தகோபாலன்.

இவர்கள் இருவரும் மைவிழியை பிடித்து இருக்கிறது என்றும் விரைவில் திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் என்றும் அல்லவா கூறிவிட்டு வந்திருந்தனர்.

இவன் என்ன சொல்ல போகிறானோ என்று கடைசி பந்தில் நான்கு ரன்களுக்காக வெற்றியைத் தேங்கி வைத்திருக்கும் இந்திய அணியாக அமர்ந்திருந்தனர் மகாலட்சுமியும் நந்த கோபாலனும்.

மைத்ரேயனோ அந்த மிரட்டலான நொடிகளை நீட்டித்துக் கொண்டிருந்தான்.

தயங்கியபடி பிரித்த காகிதஉறையில் மெல்ல எட்டிப்பார்த்த மைவிழியோ சிரித்துக் கொண்டிருந்தாள்.

அந்த நொடி,… இதோ நீள்கிறது… இன்னும் நீள்கிறது….

யா…. ஹூ….. வானை முட்டிவிட குதித்து எழுந்தான், பறவையின் சிறகுகளை பூட்டிக் கொண்டு பறந்து களித்தான், அமுதின் இனிமை அவளின் இதழில் என்றான்.

காணாமல் தேடிய விழிகளில் கானல் நீராகிடத் துடித்தவளை அகத்தினுள் புகுந்து இருத்திக் கொண்டான்.

தாகமென அலைந்தவனின் ஐந்தருவியாகிப் போனவளை அள்ளி அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான் விழிகளில், உடலினுள் நிகழும் ரசாயன மாற்றங்களில், கண்ணில் மின்னல் வெட்டி, இதயத்தில் இடித்த இன்பமான தருணங்களை பொக்கிஷமாய் பதித்துக் கொண்டான்.

அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளம் துள்ள, புன்னகைவீசும் இதழ்களும், புதுப்பொலிவாய் மிளிரும் அவன் முகமும், தரையில் நில்லாத கால்களும், ஆனந்த கூத்தாட கைகள் மட்டும் அவளை அவளின் புகைப்படத்தை, நெஞ்சோடு சேர்த்துக் கொண்டது…

கடைசிபந்தை சிக்சராய் தூக்கி அடித்துப் போன தோனியை, தோளில் தூக்கி கொண்டாட முடியாமல் பூரித்துப் போய் நின்றனர் வெற்றியின் வீரியத்தில்…

 

 

”வீட்டில யாரும் இல்லையா… அத்தை மாமா.., எங்க போயிட்டீங்க, மாப்பிள்ளை முதல் முறையா வீட்டுக்கு வரேன், வரவேற்க ஆளை காணோம்” துள்ளலாய் வீட்டினுள் நுழைந்து கண்களால் வீட்டை அலசிக் கொண்டிருந்தவனின் சத்தம் கேட்டு வந்து பார்த்த சீதாவுக்கோ ஒன்றும் புரியவில்லை.

“தம்பி நீங்க….” என்று யோசித்துக் கொண்டிருந்தவரை பார்த்தவன்,

தன் வலது கை ஆட்காட்டிவிரலை தன் முகத்திற்கு நேரே நீட்டி,

”இது உனக்கு தேவையா ராஜா, மாப்பிள்ளைன்னா எப்படி வரனும், நீ இப்படி சிம்பிளா வந்து நின்னா உன் அத்தைக்கே உன்னை அடையாளம் தெரியாம போயிடுச்சு பாத்தியா” என்று தனக்குத் தானே பேசிக் கொள்ள, அதைப் பார்த்த சீதாவோ சிரித்துவிட்டார்.

“அய்யோ மாப்பிள்ளை மன்னிச்சுக்கோங்க, தெரியாம போயிடுச்சு, இன்னிக்கு காலையில அண்ணி வந்தப்போ கூட நீங்க வருவீங்கன்னு சொல்லவே இல்லை, வாங்க வந்து உக்காருங்க, உங்க மாமா வெளியில போயிருக்காங்க, இப்ப வந்துடுறேன் உக்காருங்க” சந்தோச பரபரப்பில் போனில் கணவரை அழைத்திருந்தார் சீதா.

கையும் ஓடாமல் காலும் ஓடாமல் இன்ப அதிர்ச்சியில் என்ன செய்வதென்று குழம்பிப் போயிருந்த சீதாவைப் பார்க்க அவனுக்கு சிரிப்பாக வந்தாலும், தனக்கென செய்கிறாரே என்ற கனிவும் பிறக்க, அதே நேரம் மூளை இன்னொரு கோணத்திலும் சிந்தித்தது.

நம்மை முதல் முறை மாப்பிள்ளையாக பார்க்கும் அவள் அம்மாவிற்கு ஏற்படும் பரபரப்பில் துளியேனும் அவளுக்கு இருக்குமா, இத்தணை நாளும் அவனை தவிர்த்தவள், என்னவென்று இப்போது தன்னை ஏற்றுக் கொள்வாள் என்றெல்லாம் சிந்தனை செல்ல,

கால்கள் ஒரே இடத்தில நிலைக்க மறுத்தது, கண்கள் அவளைத் தேடியது, இன்பகூச்சலிடும் இதயத்தின் சத்தம் வெளியில் கேட்டுவிடாமல் கை வைத்து அடைத்துக் கொண்டான்.

மாப்பிள்ளைக்குக் கொடுக்கவென சீதா பரபரப்பாய் காபி கலக்க, அவனோ அவளைக் காணவென எழுந்து சென்றிருந்தான்.

அந்த விசாலமான வரவேற்பறையில் கண்ணை ஓட்டியவனுக்கு சுற்றிலும் இருந்த ஜன்னல்களிலெல்லாம் மிளிர்ந்த பசுமை கண்ணில் பட்டது.

பூத்திருந்த மருதாணியும், மலர்ந்திருந்த ஜாதி மல்லியும், கோடைகாலத்தின் நீண்டிருந்த மாலைப் பொழுதும் மனதை ரம்மியமாக்கிவிட, மனதின் நடுவே ஒய்யாரமாய் அமர்ந்திருந்தவளோ இவனை கவனிக்கவும் இல்லை.

அவளைப் பற்றிய கனவுகளோடே சென்றான் நாயகன்….

“மை டியர் முத்தம்மா…” சற்றும் எதிர்பாராத நேரத்தில் மிக அருகாமையில் கேட்ட குரலாலும் அழைப்பாலும், அதிர்ந்தாள் மைவிழி.

திரும்பிப் பார்க்க அங்கே யாரும் இல்லை. மீண்டும் சிந்தனையில் மூழ்க, “முத்தம்மா…..” என்று உள்ளார்ந்த குரல் மீண்டும் மிக நிதானமாய் கேட்டது.

இம்முறை அவள் திரும்பவில்லை, மாறாக, “இங்க முத்தம்மான்னு யாரும் இல்லை” என்றாள்.

ஆனால் அந்த குரலோ, “யாரும் இல்லாத இடத்துல என் முத்தம்மா மட்டும் தானே உக்கார்ந்து இருக்கா” என்றது.

”முத்தம்மான்னு இன்னொரு தரம் கூப்பிட்ட, மூஞ்சி பேந்திடும் “ என்றாள் அதிரடியாய்.

சட்டென அவள் முன் வந்து நின்றவனோ, மின்னல் வேகத்தில் அவள் கன்னத்தில் முத்தமொன்றை பதித்துவிட்டு, ஒன்றுமே நடக்காதது போல, மீண்டும் “முத்தம்மா “ என்றான்.

அவளோ அவனின் இந்த செய்கையை முழுதாய் உணர்ந்த அதிர்விலிருந்து மீளாமல் நின்றிருந்தாள்.

“முத்து முத்து முத்தம்மா முத்தம் இது போதுமா” என்றான் கண் சிமிட்டியபடியே…”

“ஏய் உன் மனசுல என்ன நெனச்சிட்டு இருக்க, இவ்வளவு நாள் நான் அமைதியா இருந்தா, உன் இஷ்டத்துக்கு என்ன வேணுனாலும் செய்வியா, உன்னை…” என்று அவள் கை ஓங்க,

அவனோ அவள் ஓங்கிய கையை வளைத்து அவளைச் சுழற்றி நெஞ்சோடு அவளைச் சாய்த்து கன்னத்தில் மீண்டுமொரு முத்தம் வைத்தான்.

அவனின் திடமான பிடியில் அவள் திமிறிக் கொண்டிருக்க, “முத்தம்மா மை ஸ்வீட் பொண்டாட்டி” என்று காதோரத்தில் கிசுகிசுத்தான்.

மழை நேரத்து ஈரக்காற்றாய் காதில் நுழைந்த அவன் வார்த்தைகளில் அவள் உடல் சிலிர்த்தது.

அவனால் அவள் கண்களை காண முடியாவிட்டாலும் அவள் சிலிர்ப்பு தெரிய இன்னும் உற்சாகமானான்.

“முத்தம்மா உன் எண்ணப்படியே ஜெயிச்சுட்ட டி”

“என்னது…….”

“ஆமாண்டி நான் தோத்துட்டேன்”

“நமக்குள்ள என்ன கபடியா நடக்குது முதல்ல என்னைய விடு”

“ஹா ஹா காதல் கபடி டி முத்தம்மா”

“அய்யோ இத கேக்கவே சகிக்கல, என்ன பேரு இது முத்தம்மா, ஏன் இப்படி என் உயிரை எடுக்குற”

“உயிரை எடுக்குறேனா உயிரை குடுக்க வந்திருக்கேண்டி முத்தம்மா”

“முத்தம்மா முத்தம்மா ச்சை…. இன்னொரு தரம் சொன்ன உன்னை கொன்னுடுவேன்”,

”என் ஆசை முத்தம்மா, நீ என் பொண்டாட்டி ஆகப்போற, உன் ஆசைப்படியே கல்யாணம் பண்ணிகிட்டு என்னைய காதலிக்கலாம்”

”வாட்ட்ட்ட்ட்”

“ஆரம்பிச்சுட்டாயா… எங்க இருந்து தான் பிடிச்சாளோ இந்த வார்த்தைய,,,, கேட்டு கேட்டே கொல்றாளே….”

“நீ தான் என்னைய கொல்ற, முதல்ல விடு விடுன்னு சொல்றேன்ல…..”

 

 

அவள் கரம் பிடிக்க வந்தவன், அவள் பேச்சை கேட்பானா அடுத்த பதிவில்…..

 

Advertisement