Advertisement

முகூர்த்தம் 7

உனை தழுவும்

மழைச்சாரல்களில்

துளியாய் நான்

காதலாய்  ஈரம்…. 

”ஹலோ” வெகு அடித்துக் கொண்டிருந்த போனை எடுத்தாள் மைவிழி.

“ஹலோ…..” அந்த புறம் வந்த குரல் பரிச்சயமாகவே இருந்தாலும் எண் புதியதாக இருந்தது.

“யாரு பேசுறது…” எதற்கும் கேடுவிடுவது நல்லது என்று கேட்டாள் மைவிழி.

“யாரு பேசுனா நீ ஒத்துக்குவ” இடக்காகவே வந்தது பதில்.

“ஹே பவி… நீயாடி….” அவளின் யூகத்தில் பவி மட்டுமே வந்திருந்தாள்.

“அடேங்கப்பா, இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சிட்ட” சற்று காட்டமாகவே வந்தது பவியின் குரல்.,

“பின்ன உன்னைக் கண்டுபுடிக்க சி.பி.ஐ ல இருந்தா வருவாங்க” கண்டுபிடித்துவிட்ட துணிவில் தன் இயல்பான பேச்சைத் தொடர்ந்தாள்.

“அதான பாத்தேன் எங்க திருந்திட்டியோன்னு நெனச்சேன்.” இருவருக்கும் நீண்ட நாள் பேசாதிருந்த பொழுதுகள் கரையத்துவங்கியது.

“திருந்துற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணைலயே மச்சி”

“அதான பாத்தேன், புள்ளை சின்சியரா பிஸினஸ் பண்ணுதே, இன்னுமா இந்த நக்கல் பேச்சு பேசிகிட்டு திரிய போகுதுன்னு பாத்தா, என்னடி இப்படி பேசியா பிஸினஸ் பண்ணிகிட்டு இருக்க”

“ஹா ஹா ஹா அது வேற டிபார்ட்மெண்ட், அங்க நான் மைவிழி இல்லை செல்வி”

“அடியே இந்த ஒரு பேரை வச்சிகிட்டு என்ன அலும்பு, எத்தனை பேரை கன்ப்யூஸ் பண்ணி விட்ருக்க”

“ஹா ஹா ஹா”

“ சிரிக்காத”

“அதை விடு டி நீ எப்படி இருக்க, எப்படி இருக்கு உன் கல்யாண வாழ்க்கை, உனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம்…. ஹே இன்னைக்கு உன் கல்யாண நாள் இல்லை, அய்யோ சாரி சாரி டி, சத்தியமா நினைச்சுகிட்டே இருந்தேன், எப்படி மறந்தேன்ன்னு எனக்கே தெரியலை”

“பொய் சொல்லாத டி, உனக்குன்னு ஆள் வரப்போறாராமே, அந்த கனவுல நீ என்னைய உங்க அண்ணனை, என் வயித்துல இருக்க உன் குட்டி மருமகனை எல்லாரையும் மறந்துட்ட”

“அட ஏன் டி நீ வேற, அந்த மனுசனோட முகத்தை கூட நான் பாக்கலை”

“என்னடி சொல்ற”

“வாழ்த்துக்கள் டி அண்ணி, எங்கண்ணன் எங்கே அவருக்கு தான் அவார்டு குடுக்கனும், ஒரு வருசம் உன்னை சாமர்த்தியமா சமாளிச்சிருக்காரு”

“பேச்சை மாத்தாத டி, என்ன சொன்ன முகத்தையே பாக்கலையா, நீ எந்த காலத்துல இருக்க, லூசா டி நீ, எப்படி ஓ கே சொன்ன”

“அதெல்லாம் முடிஞ்சி போயிடுச்சு விடு, இது உனக்கு எத்தனாவது மாசம். செக் அப் போனியா,”

“ஏழாவது மாசம் டி, அடுத்த வாரம் வளைகாப்பு போட வர்றாங்க, அதை சொல்ல தான் கால் பண்ணேன்., என்னிக்கு நாம பேச ஆரம்பிச்சதும் டாபிக்குள்ள வந்திருக்கோம்.”

“சூப்பர் டி, சென்னை வராங்களா, நீ மதுரை வரப்போறியா, எங்க வளைகாப்பு”

“மதுரையில டி, நானும் உங்க அண்ணனும் இன்னும் ரெண்டு நாள்ல கிளம்புறோம்”

“அப்படியா, சரி , ஆமா உனக்கு எப்படி எனக்கு பிக்ஸ் ஆனது தெரிஞ்சுது”

“உன் பழைய நம்பர் தானே அப்பாகிட்ட இருக்கு, நான் எதோ ஞாபகத்துல அந்த நம்பருக்கு போட்டேன் அப்பா எடுத்து எல்லாத்தையும் சொல்லீட்டாங்க, சிம்பிள்”

“அதானே பாத்தேன், திடீர்னு இவ எப்படி ஜேம்ஸ்பாண்ட் ஆனான்னு”

“ அவ ஜேம்ஸ் பாண்ட் இல்லைமா, ஜாக்கிசான்”

“அண்ணா, ஹா ஹா ஹா உங்களுக்கு சூன்யம் வைக்க வெளிய இருந்து ஆள் வரத்தேவையில்லை, நீங்களே போதும்”

“அடயேம்மா… அடி வாங்குறவனுக்குத்தானே தெரியும். அடிக்காத டி அடிக்காத டி, நம்ம புள்ளைக்கு இப்பயே வன்முறைய கத்துக் குடுக்காத”

“ஹா ஹா ஹா ” ஜெகனின் புலம்பலைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தாள் மைவிழி.

“உனக்கு சிரிப்பாயிருக்கா, எதோ என் புள்ளை புண்ணியத்துல இந்த செவத்துல ஏறி உதைகிறதெல்லாம் நிப்பாட்டி இருக்கா, கேப்டனுக்கு தங்கச்சியா இருந்திருப்பா போல”அப்பாவியாய் புலம்பிக் கொண்டிருக்கும் ஜெகன் மைவிழியின் தோழியான பவியின் காதல் கணவன்.

காதலைப் பற்றிய மைவிழியின் பார்வையை உடனிருந்து பார்த்தவள் காதல் வயப்பட்டு, ஜெகனை மணமுடித்தது தனிக்கதை.

படிப்பு முடியவும், பவி ஜெகன் திருமணம் முடிந்தது, அவர்கள் சென்னையின் செட்டிலாகவே, இவர்கள் இருவருமாய் செய்யலாம் என்று போட்டு வைத்திருந்த திட்டங்கள் நிறைவேறாமல் போனது.

மைவிழி பவி இருவருமாய் சேர்ந்து வேலை தேடுவது அது முடியாமல் போனால் தொழில் துவங்குவது என அனைத்தையுமே, மைவிழி மட்டும் தனியாக செய்யவேண்டியதாயிற்று.

ஜெகன் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராய் இருந்ததாலும், மேலும் அவர்கள் இருவரும் ஏற்கனவே சொந்தம் என்பதாலும் திருமணம் பெரிய சர்ச்சைகளுக்கு உள்ளாகாமல் முடிந்தது.

தன் இயல்பினாலும் , சூழ்நிலையினாலும் பெரும்பாலும் தனித்தே தெரியும் மைவிழி, அப்போது தனித்து நின்றாள், துவளாமல் இதோ ஒரு தொழிலை துவங்கி ஓராண்டு காலமாக அதை திறம்பட உருவாக்கி, அதில் வெற்றியும் கண்டு வருகிறாள்,.

“ஹே ஹே மைவிழி மைவிழி லைன் ல தான் இருக்கியா”

“ஹான் இருக்கேன் டி, சொல்லு”

“என்ன டக்குன்னு அமைதியாயிட்ட, உங்கண்ணன் லைன் கட் ஆயிடுச்சுன்னு நெனச்சி, என்கிட்ட போனை குடுத்துட்டு போயிட்டார்.

”அடடா”

“அது பரவாயில்லை, அங்க என்ன நடக்குது, அப்பா உனக்கு மாப்பிளையை பிடிச்சிருக்குன்னு அவ்வளவு சந்தோசமா சொன்னாங்க, நீ போட்டோவே பாக்கலைன்னு சொல்ற”

“ம்ம்ம்”

“என்ன ம்ம்ம் பதில் சொல்லு”

“என்னடி சொல்ல சொல்ற, இத்தனை நாளா முகமூடி போட்டு என்னை நானே ஏமாத்திகிட்டு இருந்திருக்கேன், எனக்குன்னு ஒரு வட்டத்தை போட்டுகிட்டு, பிடிவாதமா இருந்துட்டேன், இன்னிக்கு அதுவே எனக்கு விலங்காயிடுச்சு” என்று தன்னை மீறி அழுபவளை தேற்றமுடியாமல் தவித்துப் போனாள் பவி.

“ஹே இங்க பாரு டி, ஒண்ணும் நடந்துடலை, எதுவும் கைமீறிப் போகலை இப்பவாச்சும், நீ உணர்ந்தியே அதுவே போதும், எனக்கு ஒண்ணு மட்டும் தெளிவா சொல்லு, உன் மனசுல இருக்குறது ராஜா தானே”

“உன்கிட்ட மறைக்க முடியலை டி என்னால, ஆனா இப்ப இதை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை” சொல்லி முடிக்கையில் கண் முன் நிழலாடிய ராஜாவின் உருவம் கண்ணீரில் கரைவது போல் தோறியது அவளுக்கு.

“ஏன் டி அப்படி சொல்ற, நான் அப்பாகிட்ட பேசுறேன், முதல்ல அழுகுறதை நிப்பாட்டு” தோழியின் காதலை காப்பாற்றிவிடும் முனப்பில் இருந்தாள் பவி.

“என் மேல சத்தியம் பவி இதை பத்தி நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது, அண்ணாகிட்ட கூட” தனக்கு தானே மீண்டும் எதிரியானாள் மைவிழி.

“என்னடி இப்படி சொல்லீட்ட, உன் பிடிவாதத்துக்கு ஒரு அளவே இல்லையா,” இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை பவி.

“இல்லை டி, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் மாப்பிள்ளை வீட்டில இருந்து போன் பண்ணாங்க, அவங்க பையனுக்கு முழுசம்மதமாம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு சொல்றாங்க, அந்த சந்தோஷத்துல தான் அப்பா கல்யாணத்துக்கு முகூர்த்தநாள் பாக்க ஜோசியர் வீட்டுக்கு போயிருக்காங்க” தன் தந்தையின் சந்தோஷமான முகமும் தாயின் பூரிப்பான முகமும் கண் முன் நிழலாட கண்ணீரை உதிர்த்தபடி பேசிக்கொண்டிருந்தாள் அவள்.

“இப்படி எல்லாத்தையும் தலைக்கு மேல போகவிட்டுட்டு என்கிட்டயும் சத்தியம் பண்ற சொல்லக்கூடாதுன்னு, நீ நினைக்கிற மாதிரி இது விளையாட்டு இல்லை டி, வாழ்க்கை” எப்படியேனும் புரியவைத்திடும் முனைப்பில் பவி இருந்தாள்.

“ஹா ஹா ஹா” முற்றும் கடந்துவிட்ட நிலைக்குச் சென்று கொண்டிருந்தாள் செல்வி.

“பைத்தியமா டி நீ, நான் எவ்வளவு முக்கியமா பேசிட்டு இருக்கேன் சிரிக்கிற”

”நீ தானே அழுகக்கூடாதுன்னு சொன்ன”

“உன்னையெல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியலை, இந்த காலத்திலயும் இப்படி ஒரு முட்டாளா நீ இருப்பாய் என நான் நினைச்சு,கூட பார்க்கலை டி”

“நான் முட்டாள் தான் முட்டாளே தான்”

“உன்னை நோகடிக்கனும் பேசலை டி புரிஞ்சுக்கோ, மத்தவங்களை பத்தி யோசிச்சு, உன் வாழ்க்கை நரகமாக்கிக்காத, இதுனால பாதிக்கப்பட போறது நீ மட்டும் இல்லை, உன்னோட வாழ்க்கை சந்தோசமா இல்லைன்னா, அது அம்மா அப்பாவுக்கும் தான் கஷ்டம்”

“நடக்குறது நடக்கட்டும், மத்தவங்க இல்லைடி அவங்க, எனக்கு மொத்தமும் அவங்க தான். மனசார யாருக்கும் எந்த கெட்டதும் நான் செய்யலை, எனக்கு என்ன குடுக்கனும்னு அந்த கடவுள் நினச்சிருக்காரோ, அது கண்டிப்பா கிடைக்கும்”

“நம்ம வாழ்க்கையை நாம தான் வாழனும், அதை விட்டுட்டு வேதாந்தம் பேசிகிட்டு இருக்காத கிழவி மாதிரி”

“ஹா ஹா ஹா, டேட் பிக்ஸ் ஆனதும் சொல்றேன் கண்டிப்பா நீயும் அண்ணனும் வந்திடனும்”

“உன்னை நீயே ஏமாத்திக்கிறதை நாங்க கூட இருந்து பாக்கனும்னு நெனக்கிறியா”

“எனக்கு சந்தோசம் வந்தாலும், துன்பம் வந்தாலும் பகிர்ந்துக்க நீ மட்டும் தானே இருக்க”

“இந்த மாதிரி டைலாக் உன்கிட்ட மட்டும் தான் ஸ்டாக் இருக்கும்”

“ஹா ஹா ஹா”

“உன்னால எப்படி டி சிரிக்க முடியுது”

“நம்ம வள்ளுவர் சொல்லியிருக்காரே”

“என்னன்னு”

“இடுக்கண் வருங்கால் நகுக”

“இதுக்கு மேல தெரியாதே, ஏன்னா படத்துல இவ்வளவு தானே சொல்றாங்க, போதும் டி”

“இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வ தஃதொப்ப தில்” முழு குறளையும் சொன்னாள் மைவிழி,

“பாருடா வள்ளுவர் அப்பயே தில்லா இருக்கனும்னு சொல்லியிருக்கார்” பவியின் விளக்கத்தில் இதுவரை இருந்த அழுகை மாறி கண்ணில் தன்னை மறந்த சிரிப்பு தோன்றியது.

“அடியே அடியே கொல்லாத டி உன் தெளிவுரைய கேட்டா திருவள்ளுவரே திரும்பி வந்து அடிப்பார்.

“ஒரு புள்ளை புலவரான ஒத்துக்க மாட்டிங்களே”

“புலவரா இன்னொருதரம் சொல்லாத தாயே, நானே விளக்கம் சொல்லிடுறேன்”

“நான் சொல்லிக் குடுத்தது தானே, சொல்லு சொல்லு”

“உன் அலும்பு தாங்கலை டி, துன்பம் வரும் போது சிரிச்சு தைரியமா இருந்தா தான் அதை ஜெயிக்க முடியும், அது தருகிற சோதனையில ஜெயிக்கனும்னா, சிரிக்கனும் “

“ஹா ஹா ஹா”

“நீ ஏன் டி சிரிக்கிற”

“உங்கண்ணன் வராரு டி”

“அடிப்பாவி எங்கண்ணன் உனக்கு துன்பமா இரு டி மவளே அண்ணாகிட்ட சொல்றேன்”

“அதான் அவரே கேட்டுகிட்டு இருக்காரே இதுல நீ தனியா வேற சொல்லனுமா”

“அண்ணா உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்”

“கல்யாண நாளுக்கு கரெக்ட்டா விஷ் பண்ற ஒரே ஆள் நீதாம்மா”

“உங்களை அவ அடிக்குறதுல தப்பே இல்லை”

“என்ன நீயும் அவளை மாதிரியே சேம் சைட் கோல் போடுற”

எங்கோ ஆரம்பித்த பேச்சு, எல்லாவற்றையும் கடந்து மீண்டும் புன்னகையில் வந்து நிற்க,

செல்வியின் அம்மா அழைக்கும் குரல் கேட்டது.

“செல்வி செல்வி எவ்வளவு நேரமா அந்த போனை காதுல வைச்சிகிட்டு இருப்ப, இன்னுமா பேசி முடியலை, உங்க ரெண்டு பேருக்கும் போன் போட மட்டும் தான் தெரியும் வைக்கவே தெரியாது.”

“இதோ வரேன் மா” என்றவள் போனை வைத்துவிட்டு சென்றாள்.

Advertisement