Advertisement

 முகூர்த்தம் 4

வில்  வேண்டாமடி

விழிகள் போதும்

பார்வைகள்

காதலாய் வீசுகையில்….

”இன்னும் எத்தணை நாளைக்கு தான் சாக்கு போக்கு சொல்லி வருசத்தை ஓட்டப் போற செல்வி, எங்களுக்கும் பொறுப்பு இருக்கு கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல” என்று எப்போதும் போல தன் பேச்சை மகளிடம் துவங்கியிருந்தார் ராஜேந்திரன்.

“அப்பா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இப்ப தான் பிக்அப் பண்ணிருக்கேன், இன்னும் கொஞ்சம் அதை டெவலப் பண்ணி நான் ஒரு ஸ்டாண்டடுக்கு வரணும் பா, அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க” என்று தான் முன்னேற வேண்டும் என்ற உணர்வு மேலோங்க பேசிக் கொண்டிருந்தாள் செல்வி.

“என்னது அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்க சொல்றோமா, அடியே கொஞ்சமாச்சும் மனசாட்சியோட பேசுறியா, உனக்கு இப்பதான் பத்து வயசாகுதுன்னு நெனப்போ, புள்ளைங்கள காலேஜ் அனுப்புறது எதுக்கு நல்லா படிச்சு ஊரு மெச்ச வேலைக்கு போனோமான்னு இல்லாம, இப்படி பாக்கு மட்டையும், தட்டையும் தூக்கீட்டு திரியுற, இதுல உங்கப்பா என்னமோ உன்கிட்ட கொஞ்சிகிட்டு இருக்காரு” கையில் ரசத்திற்கு புளி கரைபட, வாயில் செல்வி அரைபட்டுக் கொண்டிருந்தாள்.

“ம்மா கொஞ்சம் பொறுமையா இருமா”

“உங்கப்பா சொன்னதை கேட்டியா இல்லையா, வெளியில போக முடியல யாரு பாத்தாலும் ஒத்தை புள்ளைய வச்சிருக்கீங்க காலங்கோலமா கல்யாணம் பண்ணி குடுக்காம இப்படி வச்சிருக்கீங்கன்னு ஓயாம கேக்குறாங்க”

“ம்மா, கேக்குறவங்களுக்கு வேற வேலையில்லை, நான் ஸ்கூல் போகும் போது என்ன ரேங்க் வாங்குறேன்னு கேட்டாங்க, ஸ்கூல் முடிச்சதும் என்ன படிக்கப்போறன்னு கேட்டாங்க, காலேஜ் முடிச்சதும், எப்போ வேலைக்கு போறன்னு கேட்டாங்க, இதோ இப்ப எப்ப கல்யாணம் பண்ணிக்க போறன்னு கேக்குறாங்க, நாளைக்கு கல்யாணம் ஆனதும் புள்ளை இல்லையான்னு கேப்பாங்க, இது அப்பிடியே கண்டினியூ ஆகிட்டே இருக்கும், இவங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா மா. அவங்க பேசுறதுக்காக நாம வாழ முடியாது, என் லைப் மா எனக்குன்னு ப்ளான் எதுமே இருக்காதா,”

“இங்க பாரு செல்வி உன் இஷ்டத்துக்காக தான் இத்தணை நாளா விட்டாச்சு இனிமே நாங்க சொல்ற மாதிரி நீ கேளு, புரியுதா, நாளைக்கு உன்னைய பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராங்க, ஆர்டர் வாங்கப்போறேன், டெலிவரி குடுக்கப்போறேன்னு கிளம்பீடாதே புரியுதா”

“ம்மா நான் சொல்றத கொஞ்சம் கேளுமா”

“எல்லாம் வேணுங்குற அளவு கேட்டாச்சு வேலை வேலைன்னு அலையாம ரெஸ்ட் எடு, அப்போ தான் நாளைக்கு அவங்க வரும் போது கொஞ்சமாச்சும் முகம் பாக்குற மாதிரி இருக்கும்”

“அப்பா நீங்களாச்சும் சொல்லுங்கப்பா”

“அது வந்து சீதா,… அதான் செல்வி சொல்லுதுல்ல கொஞ்சம் …”

“ஸ்ஸ்ஸ் பேசாம இருங்க, அவளுக்கு செல்லம் குடுத்து இப்படி பேசவைச்சதே நீங்கதான், உங்களுக்கே தெரியும் இது எவ்வளவு நல்ல சம்பந்தம் அதுவும் நமக்கு நல்ல தெரிஞ்ச இடம், இவளை நல்லா பாத்துக்குவாங்க, உங்க மகளுக்கு சொல்லி புரியவைங்க”

அதற்கு மேல் அங்கு ராஜேந்திரனின் பேச்சு எடுபடவில்லை. சீதா ராஜேந்திரன் தம்பதியின் ஒரே செல்ல மகள் செல்வி, பொறியியல் படித்தாலும், அவளுக்கு சொந்த தொழில் செய்து பெரிய அளவில் முன்னேற வேண்டும் என்ற ஆசை அதையே  செய்தும் காட்டிவிட்டாள்.

ரெஸ்ட் எடுக்க சொன்ன அன்னையிடம் எத்தணை கெஞ்சியும் பயனில்லாததால் தன் அறைக்கு வந்தவள், இனி எதுவும் செய்ய முடியாது என அமர்ந்துவிட்டாள்.

எண்ண அலைகள் அவள் எண்ணத்திற்கு மாறாக எழும்பத் துவங்கியது. திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று கூறும் அவளின் மனம் ஏன் என்று சிந்திக்கத் துவங்கியது.

அடுத்த கணமே கண் முன் வந்து நின்ற மைத்ரேயனைக் கண்டு அவளுக்கே அதிர்ச்சியானது. இவன் ஏன் கண்முன் வருகிறான், இத்தணை நாளாய் தனக்குள் ஏற்படாத சலனம் இன்று ஏன்….?

யாரோ ஒருவன் நாளை வரப்போகிறான், அலங்கரிக்கப்பட்ட பதுமை போல அவன் முன் போய் நிற்க வேண்டும், விலைப்பட்டியல் தொங்கவிடப்பட்ட பொம்மையாய்  நிற்க வேண்டும், இதிலென்ன விந்தை என்றால் என்ன விலையோ அதை அவன் வாங்க நாம் கொடுக்க வேண்டும், என்ன உலகம் இது.

பொன்னையும் கொடுத்து பெண்ணையும் கொடுத்து வருங்காலத்தில் அவர்கள் சொல்வதை தலையாட்டி பொம்மை போல கேட்க வேண்டும். நமக்கென்று ஆசைகள் விருப்பம் லட்சியம் எதுவும் இருக்கக்கூடாது என்ன சம்பிரதாயம் என்று தோன்றியது.

அவளின் சித்தியும் அத்தையும் இன்னும் தெரிந்த பெண்கள் அவர்களின் கணவன்மார்கள் சொல்லுவதை பிரதானம் என பேசுவதையும், அவர்களிடம் அடி வாங்கினாலும் அதை மறைத்து வெளியில் பெருமையாகக்கூறிக் கொள்வதையும் பார்த்திருக்கிறாள்.

பெண்களின் மனதை மதித்து அவர்களுக்கான வெளியை அமைத்து தந்து அவளுக்கென பார்த்துப் பார்த்து செய்யும் எத்தணை ஆண்கள் இருக்கிறார்கள்.

மீண்டும் மைத்ரேயன் முகம் வந்து நிற்க, இம்முறை அவளின் முகத்தில் சிறு புன்முறுவல் பூக்கத்துவங்கியது.

அவன் கண்கள், அவனின் மீசை, அவனுக்கே உரித்தான அந்த சிரிப்பு, என அவனை அணுஅணுவாய் மனக்கண்ணில் பார்த்தவளுக்கு அப்போது தான் புரிந்தது, தன்னுள் அவன் எந்தளவிற்கு ஆழப்பதிந்து கிடக்கிறான் என்று.

அவனுடனான சந்திப்புகளை அசை போட்ட வண்ணம் இருந்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை. எத்தணை நாளாய் உறக்காம் பார்க்காமல் உழைத்த உடல் இன்று அத்தணைக்கும் சேர்த்து ஒய்வெடுப்பது போல உறங்கிக் கொண்டிருந்தது.

மதிய உணவிற்கு பின் படுத்தவள் தன்னையும் அறியாமல் இரவு வரை உறங்கிவிட , அவள் அம்மா வந்து எழுப்பினார்.

“எவ்வளவு அசதி இருந்தா இப்படி தூங்குவ, ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிட்டு  தூங்குனாத்தானே, சொல்ற பேச்சையே கேக்குறதில்லை, எழுந்து சாப்பிட்டு தூங்குடா செல்வி, வா மா வா”

“ஐய்யய்யோ இவ்வளவு நேரமா தூங்கீட்டேன், என்ன மா இப்படி விட்டுட்டீங்க என்னைய எழுப்பியிருக்கக்கூடாதா”

“நல்லா தூங்குறியே எழுப்ப வேணாம்னு விட்டேன்”

“ஆபீஸ்ல இருந்து போன் வந்துச்சாமா, டெலிவரிலா கரெக்ட்டா பண்ணீட்டாங்களா”

“உங்கப்பா போயிருக்கார் அதெல்லாம் அவர் பாத்துப்பாரு, நீ வந்து சாப்பிடு”

“என்ன டிபன் மா”

“இடியாப்பமும் தேங்காய்ப்பாலும் செய்து வச்சிருக்கேன், அங்கயே உக்காந்து கேள்வி கேக்காம எழுந்து வா”

“எடுத்து வை மா நான் குளிச்சிட்டு வரேன்”

குளித்துமுடித்து வந்தவளின் முகம் பிரகாசத்தை சூடியிருந்தது, ”அப்பாவுக்கு சட்னி பண்ணீட்டியாமா” என்று கேட்டுக்கொண்டே வந்து அமர்ந்தவளின் தட்டில் இடியாப்பத்தை வைத்தவர், “உனக்காக ஒண்ணு உங்கப்பாவுக்காக ஒண்ணு எத்தணை செய்யறது, அதெல்லாம் உங்கப்பா சாப்பிடுவார், நீ சாப்பிடு”

அம்மாவின் வார்த்தைகள் போலியென மூடிவைக்கப்பட்டிருந்த சட்னி சொல்லிவிட, அதை காட்டிகொள்ளாமல் உணவை முடித்தவள், கையில் போனை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றுவிட்டாள்.

அலுவலகத்திற்குப் போன் செய்தவள், இன்று நடந்தவைகளை கேட்டறிந்து நாளை செய்ய வேண்டியதை கூறிவிட்டு, இரண்டொரு க்ளையண்டுகளின் ஆர்டர்களை உறுதி செய்த பின்னரே போனை வைத்தாள்.

அவளுக்கெனவே காத்திருந்தது போல மேகப்பிண்ணனியில் இருந்து வெளிப்பட்டது அந்த வெண்ணிலா, அசையும் தென்னைமரக்கீற்றுகளின் ஒலியும், அப்போது தான் மலர்ந்திருந்த மல்லிகைப்பூவின் வாசமும் தென்றலோடு இணைந்து அந்த இரவை சுகந்தங்களால் நிரப்பிக் கொண்டிருந்தது.

என்னதான் சண்டையிட்டாலும், கோபமாக பேசிக்கொண்டாலும் அப்பாவின் தேவைகளை ஆசைகளை பார்த்து பார்த்து செய்யும் அம்மா, அம்மாவின் முன்னால் தனக்கு பரிந்து பேசினாலும், இருவரும் கலந்து ஆலோசித்த முடிவுகளை மட்டுமே எடுக்கும் அப்பா, இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு பிணைப்பு அவர்களிடத்தில் இருந்து வந்தாலும், அதை இன்று தான் மைவிழி உணரத்துவங்கினாள்.

தனக்கென்று வருகையில் தான் தலைவலியும் காய்ச்சலும் தெரியும் என்பார்களே காதலும் அப்படித்தானோ, நமக்கு நிகழாத வரை சிலவற்றை உணரமுடிவதில்லை, அதில் காதலும் ஒன்று, இது செல்விக்கு தெரியாதே,

திருமணம் ஒற்றைச் சொல் மிகப் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த அவளின் உலகத்தை மாற்றியிருந்தது. ஏனோ காதல் என்கையில் விழிக்காத அவளின் பெண்மை மெல்ல மலரத் துவங்கியிருந்தது.

எவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்தாளோ கல்லூரிக்கால நினைவுகளில் மூழ்கி மீண்டவள் மீண்டும் மைத்ரேயனின் நினைவுகளில் வந்து நின்றாள்.

இதுவரை இருந்த பிரகாசம் காணாமல் போனது அவளுக்கு. யாரையும் மனதில் பதித்துக் கொள்ளக் கூடாது. அப்படி செய்துவிட்டு பின்னர் அவனை திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனால், அதுவே வாழ்வை நரகமாக்கிவிடும், நம்மை துரோகி ஆக்கிவிடும் என்ற எண்ணம் செல்விக்கு.

அதனாலேயே தனக்கென  ஒரு இறுக்கமான முகமூடியை அணிந்து கொள்வாள். அதையும் மீறி இன்று அந்த மைத்ரேயன்  மனதினுள் புகுந்து கொண்டு இம்சை செய்தான்.

இவனை நான் எப்போதும் ஏறிட்டு பார்த்ததில்லை, நினைத்ததில்லை, அவனைத் தெரியும் அவ்வளவே அப்படி இருக்கையில் இவன் ஏன் தேவையில்லாமல் திருமணம் என்றதும் நினைவில் வருகிறான்.

நாளை வரப்போகிறவன் தான் தன் கணவனாக வரப்போகிறவன், சம்பந்தமில்லாமல் இன்று ஏன் இந்த குழப்பம் எனக்கு, அப்படியானால் என்னையுமறியாமல் அவனை நான் நினைத்துக்கொண்டிருந்தேனா

பலவாறக யோசித்து களைத்துப் போனவள், ஒரு கட்டத்திற்கு மேல் இதைத் தாளமுடியாமல் படுக்கையில் சென்று விழுந்தாள்.

என்ன நடந்தாலும் நடக்கட்டும், நடப்பதை அனுபவிப்போம், எதுவும் என் கட்டுப்பாட்டை மீறி நடந்துவிடாது என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் உறங்கியும் போனாள்.

பௌர்ணமியின் நிலவு பகலாக்கிக் கொண்டிருந்த அந்த இரவில் இரு உள்ளங்கள் சங்கமிக்கும் கழிமுகங்களை வடிவமைத்துக் கொண்டிருந்தது காலம்.

தன்னை மறந்து போகும் நிமிடங்கள் கரைவது தெரியாது, யுகங்கள் நொடிகளாகும் விந்தை அதில் மட்டுமே நிகழும், விழியோடு விழி சேர்த்து கரம் கோர்த்து கண்ணெதிரில் கண்ணாளன் முகம் நோக்கும் தருணங்கள் அவை.

உலகின் ஒட்டுமொத்த சாகசங்களும் சொற்பமாய் தோன்றும் காதலியை நெருங்கும் முன் கரையும்நொடிகள்,

இதையெல்லாம் தாண்டி தன்னை மறந்து இருக்கும் தருணம் உறக்கம் அதை செவ்வனே செய்து கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் விடியல் அவளுக்கானதா…. அறிவார் யாரோ….

 

Advertisement