Advertisement

 

முகூர்த்தம் 26

வானதி அந்த காபி ஷாப்பிற்கு வந்து அரைமணி நேரம் ஆகியிருந்தது. ஆனாலும் அவளை வரச்சொன்ன ஸ்ரீராம் இன்னும் வந்திருக்கவில்லை. இதற்குமேல் யாரோ ஒருவருக்காக காத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்று எழுந்தவளுக்கு, கண்ணில் பார்த்திராத யாரோ ஒருவர் அழைத்ததும் ஏன் வந்தோம் என்று இந்நொடி வரை புரியவில்லை.

முந்தினம் அறிமுகமில்லாத புதிய எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. சற்று யோசித்தவள் ஏதொ தைரியத்தில் எடுத்திருந்தாள்.

“மிஸ் வானதி…”

“எஸ் நீங்க…”

“ஸ்ரீராம் ஃப்ரம் சிபிஐ…”

“சிபிஐ ஆ… எனக்கு எதுக்கு கால் பண்றீங்க…”

“உங்ககிட்ட கொஞ்சம் விசாரிக்கவேண்டி இருக்கு…”

“விசாரணையா என்கிட்டயா… எதுக்கு..?”

“ஸ்வாதி மர்டர் கேஸ்…”

“……………………………..”

“என்ன அமைதியாயிட்டீங்க…. நாளைக்கு மார்னிங் டென் ஓ க்ளாக் நான் சொல்ற இடத்துக்கு வரணும்….”

மனதில் ஆயிரம் அலைகள் அடித்து ஓய்ந்திருந்தாலும் அவன் குரலுக்கு கட்டுப்பட்டு வந்திருந்தாள்.

கிளம்புவதற்கு முன் மைவிழிக்கு அழைத்து விசயத்தை சொல்லலாம் என்று காத்திருந்தவளுக்கு, அவளின் எடுக்கப்படாத ரிங்குகளே பதிலாய் இருக்க, விசயத்தை மெசேஜ்ஜாக டைப் செய்து அவளுக்கு அனுப்பிவிட்டு கிளம்பினாள்.

……………………………………………………………………………………………………………………………………………………………..

”என்னடா பொண்ணு பாக்க கிளம்புறியா இல்லையா… இன்னும் எத்தனை தரம் என்னை கத்தவைப்ப… ஒரே பையனாச்சே செல்லம் குடுத்து வளத்தது தப்பா போச்சு… மெடிசின் படிச்சிட்டு உங்கப்பா ஹாஸ்பிடல்ல பாத்துக்கோடான்னு சொன்னேன் கேக்காம, மெடிசன் படிச்சும், பரிட்சை எழுதி சிபிஐ ல தான் வேலை பாப்பேன்னு பிடிவாதம் பிடிச்ச, சரின்னு விட்டேன். உங்கப்பா நம்மளவிட்டு போனதுக்கு அப்புறம் ஹாஸ்பிடல் நிர்வாகத்தை என்னால கவனிக்க முடியலைன்னு தான் உன்னை இங்க வரவச்சேன், இப்போ ஹாஸ்பிடல்ல பாத்துகிட்டோமா, கண்ணுக்கு அழகா, படிச்ச பொண்ணா பாத்துவச்சிருக்கேன்,அவளை கல்யாணம் பண்ணிகிட்டு குடும்பம் நடத்துனோமான்னு இல்லாம, இன்னும் சிபிஐன்னு கேஸைக் கட்டிக்கிட்டே அழுதா நான் என்ன செய்ய…, வயசான காலத்துல எனக்கு நிம்மதி இருக்கா இந்த வீட்டில….” மூச்சுவிடாமல் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீராமின் அம்மா அவன் காட்டிய போட்டோவை பார்த்து கப்பென வாயை மூடிக் கொண்டார்.

“இந்த பொண்ணு தான நீ எனக்கு பாத்து வச்சிருக்க பொண்ணு….?”

“ஆமா…”

“இன்னிக்கு அவளை பாக்கத்தான் போறேன் அவகிட்ட பேசிட்டேன், கூடிய சீக்கிரம் நல்ல முடிவா சொல்றேன் கொஞ்சம் அமைதியா இரு, நான்ஸ்டாப்பா பேசிகிட்டு…” என்றவன் நில்லாது கிளம்பிவிட, அவருக்குத் தான் சப்பென்று ஆகிவிட்டது.

தன்னுடன் சரிக்கு சரி சண்டையிடுபவன் இன்று அமைதியாக பதிலளித்துவிட்டு அதுவும் தனக்கு சாதமாக பதிலளித்துவிட்டு செல்வதைப் பார்க்கையில் ஆச்சர்யமாகக்கூட இருந்தது.

தன் காரை கிளப்பிய ஸ்ரீராமிற்கோ, தான் விசாரிக்கும் ஸ்வாதி மர்டர் கேஸ் விசயமாக விசாரிக்க வேண்டியவர்களின் பட்டியலில் இருக்கும் வானதியே தனக்கு வாழ்கைத்துணையாக வரப்போகிறாள் என்பதை அவனால் இன்னும் நம்பமுடியவில்லை.

”அவளுக்கு இந்த விசயம் தெரியுமா… தன்னை யாரென்று எண்ணி அவள் பார்ப்பாள்… தன் கணவனாகப் போகிறவன் என்றா, இல்லை தன்னை விசாரிக்கு சிபிஐ ஆபிசர் என்றா…” என்றெல்லாம் எண்ணியபடி அவன் சென்று கொண்டிருக்க, அவளோ இந்த விசயங்கள் எதுவும் தெரியாமல் ஸ்வாதியைப் பற்றி எண்ணியபடி காபிஷாப்பில் காத்திருந்தாள்.

யாரும் வராததால் அங்கிருந்து கிளம்பி வெளியே அவள் வரவும் காரிலிருந்து இறங்கி காபிஷாப்பினுள் அவன் நுழையவும் சரியாக இருந்தது.

வெளியேறப்போனவளை அவளே எதிர்பாராவண்ணம் கைப்பிடித்து உள்ளே இழுத்துச் செல்ல அவளோ திடுகிட்டு தடுக்க முயல, மற்றவர்கள் கவனம் அவர்கள் மேல் திரும்பும் முன் அங்கிருந்த டேபிளில் அவளையும் அமரச்செய்து தானும் அமர்ந்திருந்தான் ஸ்ரீராம்.

“யாருங்க நீங்க, எதுக்கு கைய பிடிச்சு இழுத்தீங்க, ஒரு பொண்ணுகிட்ட பப்ளிக்ல எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா… நான்சென்ஸ்… இடியட்… ஃப்ர்ஸ்ட் யாரு நீ….”

“ஸ்ரீராம்….” என்று அவன் சொன்னதைக் கேட்டதுமே அவளுக்கு பயமும் பரவசமும் ஒருங்கே வந்திருந்தது.

“ஸ்ரீராமா…” என்று அவள் மீண்டும் சந்தேகத்துடன் பார்க்க, “ஆமா சிபிஐ மறந்திட்டியா… நேத்து கால் பண்ணியிருந்தேனே…”

”…ம்ம்ம்…” என்றவளுக்கு இதயத்துடிப்பு அதிகமானது.

அதை கவனித்தவன் “டென்சன் ஆகாத உனக்கு தெரிஞ்சதை சொல்லு… பயப்படாதே…” என்றான். சுற்றும் முற்றும் அவள் பார்க்கவே, “சரி இங்க வேணாம் வா…” என்றவன், அவன் காரிலேயே அவளை ஏற்றிக் கொண்டு அவனின் தனிப்பட்ட அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான். செல்லும் வழியிலேயே,

அவளும் டைரியைத்தவிர்த்து தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொன்னாள்.

அவனுக்கும் அவள் சொன்ன விபரங்கள் திருப்தியாக இருக்கவே மேற்கொண்டு அதைப் பற்றி எதுவும் கேட்காமல், “உன்னைப் பத்தி சொல்லு…” என்றான்.

“என்னைப்பத்தியா, என்னைப் பத்தி ஒண்ணும் தெரியாமயா விசாரணைக்கு வரச்சொன்னீங்க…” என்றாள்.

“உன் பாஸ்ட், ஐ மீன் என்ன படிச்ச, இப்ப என்ன பண்ற எல்லாம் தெரியும் உன் எதிர்காலத்தைப்பத்தி கேட்டேன், உன் கல்யாணம் காதல் அந்த மாதிரி…”

“அது என் பர்சனல் அதெல்லாம் உங்க கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்லை…”

“இல்ல உனக்கு மாப்பிள்ளை பாத்திருக்காங்க, என் விசாரணையில தெரிஞ்சுது அதான் கேட்டேன்…”

“ஆமா பாத்திருக்காங்க, டாக்டர் மாப்பிள்ளை,,, இதெல்லாம் உங்க விசாரணைக்கு ரொம்ப தேவையா, உங்க கேள்விகள் முடிஞ்சதுன்னா நான் கிளம்புவேன்…”

“மாப்பிள்ளைய உனக்கு பிடிச்சிருக்கா…”

“அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லை…”

“தேவை அதுவும் ரொம்ப தேவை…” அவன் பேச பேச ஆரம்பத்தில் இருந்த பயம் போய், இவன் ஏன் இதெல்லாம் கேட்கிறான் என்று ஒரு வித எரிச்சல் உண்டானது. எப்படியாவது இவனிடமிருந்து தப்பித்து சென்றால் போதுமென்றிருந்தது அவளுக்கு.

“பிடிச்சா உங்களுக்கு என்ன..? பிடிக்கலைன்னா உங்களுக்கு என்ன..? உங்க விசாரணை முடிஞ்சதுல நான் கிளம்புறேன்…” என்றவள் வெளியேறப் போக,

“தெரிஞ்சாத் தானே கல்யாணம் பண்ணிக்க முடியும்…” என்று அவளை கைப்பிடித்து நிறுத்திச் சொல்ல,

“நீங்க கல்யாணம் பண்ணிக்க என் முடிவு எதுக்கு..?” என்றவள் சற்று நிதானிக்க அவன் சொன்னதன் அர்த்தம் புரிய குழம்பிய பார்வை பார்த்தாள். அவனோ இவ்வளவு நேரம் பார்த்த தோரணையில் இப்போது இன்னும் உரிமை கூடியிருக்க, அவளையும் அறியாமல் நெருக்கமும் கூடியிருந்தது.

அவனின் வாசமும், நெருக்கமும், பார்வையும் அவளை தடுமாறச் செய்ய, மாப்பிள்ளையை இப்படிப் பார்ப்போம் என்று அவள் கனவிலும் எண்ணவில்லை.

சொந்தங்கள் சூழ அமர்ந்திருப்பவனை தயங்கி தயங்கி கையில் ட்ரேயுடன் சென்று காண்ப் போகிறோம் என்ற வழக்கமான பாணியெல்லாம் ஓல்ட் பேஷன் என்பது போல் இருந்தது அவனின் அணுகுமுறை.

பெண்பார்க்கும் படலமே விசாரணை எனும் பேரில் த்ரில்லிங் அனுபவமாகியிருந்த நேரத்தில் சரியாக அவளின் அழைபேசி அழைத்தது.

சட்டென விலகி நின்றவனிடம், ”வீட்டில கூப்பிடுறாங்க…” என்றவள் ”கிளம்பவா…” கண்ணால் கேட்க, “நான் வந்து ட்ராப் பண்றேன் பேசிட்டு வா…” என்றான்.

வெளியே சென்றவள் மைவிழியின் அழைப்பை ஏற்று, “டென்சன் ஆகாத நான் இன்னும் அழைமணினேரத்தில கால்பண்றேன்…” என்று சொல்லி வைத்து விட்டு வந்தாள்.

அதன் பின் ஏதும் பேசுவான் என்று எதிர்பார்த்திருந்தவளுக்கு, பஸ்ஸ்டாண்ட்டிற்கு சென்று அவளை இறக்கி விடும்வரை அவன் ஒன்றும் பேசாதது சப்பென்று ஆனது.

அவள் முகத்தில் ஏதோ ஏமற்றம் தெரிவதை மனதில் குறித்துக் கொண்டவன், அவள் ஒன்றும் சொல்லாமல் சென்று பஸ்ஸில் ஏறி அமர்வதைக் கண்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அடுத்த ஒருமணினேர அவள் பயணமெல்லாம் அவன் பற்றிய நினைவிலேயும், கேள்விகளுடனுமே தொடர்ந்தது.

அவள் வீட்டிற்கு சென்று நுழைகையில், வாசலில் அவன் கார் நிற்பதைக் கண்டு சட்டென புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது இதழ்களில்.

அவளுக்காக வாசலிலேயே காத்திருந்த அவளின் தாய், “எத்தனை தரம் உனக்கு போன் பண்ணுறது போனை எங்க தான் வச்சிருப்பியோ…” என்றபடி அடுத்த சற்று நேரத்தில் அவளை தயார் செய்து ஸ்ரீராமின் முன்பு நிறுத்தியிருந்தார்.

அன்றே நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்வதென்று முடிவானது.

அதன்பின் பேருக்கு கூட ஸ்ரீராம் அவளுக்கு அழைத்திருக்கவில்லை. அவளும் முயற்சி செய்யவில்லை. எதிர்பார்ப்பு இருந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் திருமணநாளை நெருங்கியிருந்தனர் இருவரும்.

கோவிலில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வானதியை தன் இல்லாளாக்கியிருந்தான்.

இதற்கிடையில் மைவிழியிடம் இந்த விசயங்களை அவள் தெரிவித்திருக்க, அவளோ “இதையே மெயிண்டெயின் பண்ணு, அந்த டைரியையும் ஸ்வாதியையும் மறந்துட்டு நிம்மதியா போய் உன் வாழ்க்கையை சந்தோஷமா வாழு…” என்றிருந்தாள்.

ஆனால் ஸ்வாதியும் அந்த டைரியும் அவளை விடுவேனா என்று உறுதி எடுத்துக் கொண்டது போல் துரத்தி வந்தனர் அவள் திருமண வாழ்க்கைக்குள்ளும்.

 காலை திருமணம் அதன்பின் வரவேற்பு, அதன்பின் புகுந்தவீட்டு சொந்தங்களின் அறிமுகம் என வரிசைகட்ட, மாலை சோர்ந்து தெரிந்தவளை, அவளின் மாமியார், “ குளிச்சிட்டு துணி மாத்திக்கம்மா… கொஞ்சம் ரெஸ்ட் எடு… இனி யாரும் வரமாட்டாங்க…” என்று அவன் அறையில் அவளை விட்டுச்சென்றிருந்தார்.

முதலில் மாற்றுடை வேண்டும் என்று எண்ணியவள் தன் பையை திறக்க, துணிகளின் நடுவே காத்திருந்தது ஸ்வாதியின் டைரி….

சட்டென வியர்த்துவிட்டது அவளுக்கு. வீட்டில் இருக்கட்டுமென அவள் விட்டு வந்த டைரி எப்படி இங்கு வந்தது என அவள் குழம்ப, கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. ஒருவித பதட்டத்துடன் சென்று கதவை திறந்தாள்.

ஸ்ரீராம் கண்ணில் சோர்வை மீறிய குறும்பு மின்ன நின்றிருந்தான். அவள் நின்றிருந்த பதற்றத்தை அவன் வெட்கம் எனக் கருதியவன் மெல்ல அவளை நெருங்கினான்.

தயங்கியபடி அவள் பின்னோக்கிச் செல்ல, அவளின் வெட்கத்தால் வந்த குஷியில் இன்னும் ஆர்வமானவன் அவளை நோக்கி முன்னேறினான்.

சற்றுமுன் குளித்துவந்த அவளின் சுகந்தம் அவனை கிறங்கடிக்க, புதிதாய் சூடியிருந்த மல்லிகையின் மணம், தன்னறை முழுக்க வியாபித்து நிற்கும் அவளின் ஸ்பரிசம் என அவனை ஈர்க்கும் காந்தமானவளை ஒட்டியிருந்தான் அவன்.

உரசலில் பற்றிக் கொள்ளும் கனலென காதல் அவளை பற்றியவன் மெல்ல அவளின் வாசம் பிடித்தான். மெல்லிய நடுக்கம் கொண்டாள். அவன் நாணமென எண்ணியிருக்கையில் நடுக்கம் நில்லாது, வியர்த்து சட்டென மயங்கியிருந்தாள்.

இதை முற்றிலும் எதிர்பாராதவன் அங்கிருந்த தண்ணீரை முகத்தில் அடித்து அவளை தெளிய வைக்க முற்பட, மயக்கத்திலேயே ஸ்வாதியின் டைரி பற்றியும் அதில் ஸ்வாதி குறிப்பிட்டிருந்த விசயங்கள் பற்றியும் அதனால் தனக்குள்ள பயம் பற்றியும் உளரலாகச் சொல்ல, ஸ்ரீராம் அத்தணையும் உள்வாங்கிக் கொண்டவன் அதன் பின் அவளிடம் இன்ரு வரை பேசவே இல்லை.

அவளுக்கு மயக்கத்தில் என்ன உளறினோம் என்று தெரியாததால் அவன் கோபத்தின் காரணமும் புரியவில்லை.அவனை சமாதானப்படுத்தும் வழியும் தெரியவில்லை.

இப்படி இருக்கையில் அன்று கோவிலுக்கு செல்கையில் அவளை மறந்து விட்டுச் சென்றதும், அவன் ஏன் கோபமாயிருக்கிறான் என்பதை யோசிக்க மரந்து அவன் மீதே கோபமாயிருக்கிறாள் வானதி.

கோபத்தோடு சுற்றித்திரிபவனை நாமும் கோபமாயிருந்தால் எப்படி மைவிழியின் திருமணத்திற்குச் செல்வது என்று யோசித்தவள், எல்லாவற்றையும் மறந்து, அவனிடம் சென்று நின்றாள்.

“ம்க்க்க்கும்ம்ம்ம்…” என்று அவன் முன் தொண்டையை சரிசெய்தாள்.

அவனோ திரும்பிப் பார்த்துவிட்டு அவன் வேலையை பார்க்கலானான்.

“ஒரு நிமிஷம்…”

“………………………………..” மீண்டும் வார்த்தைகளற்ற ஒற்றைப்பார்வை.

“உங்ககிட்ட பேசத்தானே கூப்பிடுறேன், என்னன்னு கேட்டா என்னவாம்…”

“கேட்டா மட்டும் நீ என்ன சொல்லிடவா போற…” என்ற அவன் பதிலில் அவளுக்கு சுருக்கென்று தைத்தது.

“இப்ப சொல்றேன் கேளுங்க….”

“என்ன…”

“என் ப்ரண்ட் மைவிழிக்கு இன்னிக்கு கல்யாண ரிசப்ஷன் நாம போகணும்…”

“கேக்குறியா இல்ல சொல்றியா….”

“நாம போகணும்னு சொல்றேன்….”

“எப்போ எங்க..?” என்று தெரியாதவன் போல் கேட்டு வைத்துக் கொண்டான்.

”நாளைக்கு காலை பிரம்ம முகூர்த்தத்துல கல்யாணம் அதுக்கப்புறம் வீட்டில ரிசப்ஷன், நாம ரிசப்ஷன்கு போகணும்…”

“சரி ரெடியாயிரு கூட்டிட்டு போறேன்…” என்று அவன் சொன்னதை இன்னும் அவளால் நம்பமுடியவில்லை.

திருமணத்திற்கு பிறகு அவர்களுக்குள் நடக்கும் முதல் உரையாடல், அவளறிந்து.

மறுநாள் சொன்னபடியே அவளை மைவிழிச்செல்வி, மைத்ரேயராஜாவின் திருமண வரவேற்பிற்கு அழைத்துச் சென்றிருந்தான்.

இவர்கள் இருவரும் உள்ளே நுழையவும், அங்கே மைவிழி, மலர்விழி விசயமறிந்து அனைவருக்குள்ளும் சலசலப்பும் குழப்பமும் தீர்ந்து, உண்மை வெளிப்பட்டு அனைத்தும் தெளியவும் சரியாக இருந்தது.

அனைத்தும் முற்றிலும் சரியாகியிற்று என்று சொல்லமுடியாவிட்டாலும், அவரவர் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

அனைவரையும் மைவிழி, ராஜாவின் திருமணம் ஒன்றிணைத்திருந்ததால் அமைதியாக இருந்தனர். ஜென்சி, டேவிட்டுக்கு குற்றவுணர்ச்சி, ராஜேந்திரன் சீதாவை எதிர்கொள்ள முடிந்த அவ்ர்களால், மலர்விழியை எதிர்கொள்ள முடியவில்லை. நிமிர்ந்தும் பாராமல் ஒருபுறம் சென்று அமர்ந்துவிட்டனர்.

மலர்விழிக்கு இத்தணை வருட நம்பிக்கைதுரோகமாகவே தெரிந்தது அவர்களின் பாசம். மைவிழி, சீதா, ராஜேந்திரனை ஒரேடியாக நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் இருவித இறுக்கத்துடன் அங்கிருந்த வெளியேறியவள், தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் சென்று அமர்ந்து கொண்டாள். அவள் செல்வதையே ஏக்கத்தோடு பார்த்திருந்த ஜென்சியும் டேவிட்டும், பூபதி செல்வதைப் பார்த்து ஆறுதலடைந்தனர்.

சீதாவிற்கு ராஜேந்திரனிற்கும் , டேவிட் ஜென்சி மேல் கோபம் மறைந்து தங்கள் பிள்ளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள் கடவுளின் அருளால் அவள் இன்று கிடைத்துவிட்டாள் என்று மகிழ்ச்சியிலும், நிம்மதியிலும் வந்தவர்களை வரவேற்க நகர்ந்தனர்.

மைவிழிக்கு ஒருவித சொல்லமுடியா மனநிலை, மூச்சுவிக்கூட முடியாத சூழல் இறுக்கமாக இருந்தது. அடுத்தடுத்து உணர்வுகளின் பிடியில் அகப்பட்டவள், மயங்கியிருந்தாள்.

ஏற்கனவே இருந்த குழப்பங்கள் தெளிந்த நிலையில், புதுமணப்பெண் மயங்கியது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

விடியற்காலையில் இருந்த தண்ணீர் கூட அருந்தாமல் இருந்தவளுக்கு முகத்தில் சில்லென்ற தண்ணீர் பட்டதும், உணர்வு மீண்டது.

ராஜாவின் மடியில் படுத்திருந்தவளுக்கு அவனே தண்ணீர் புகட்ட, தொண்டைக்குழி ஈரமானதும். நன்கு சுவாசித்து கண்விழித்து பார்த்தாள்.

சுற்றி இருப்பவர்களைக் கணக்கில் கொள்ளாமல், அவளை தன்னுடன் சேர்த்தணைத்து முத்தமிட்டு, “ஹே ப்யூட்டி… உன் அழகை பார்த்து நான் மயங்கி விழவேண்டிய நேரத்தில இப்படி நீ மயங்கிவிழுந்து எல்லாத்தையும் டென்சன் பண்ணீட்டியே டார்லிங்…” என்றான் ராஜா கண்சிமிட்டியபடி.

அவனின் பழைய தோரணயும், இறுக்கமற்ற குரலும், கண்களில் மின்னிய காதலும், அவள் முகத்தை தெளியவைத்தது என்றால், சுற்றியிருந்தோர் முகத்தில் புன்னகை அரும்பியிருந்தது.

“மயக்கம் போட்டு விழறதுல கூட ஒத்துமையா இருக்கீங்க, நீயும் உன் ப்ரண்டும்…” காதில் கிசுகிசுத்த ஸ்ரீராமை ஆச்சரியம் குறையாமல் பார்த்தாள் வானதி.

“என்னை ஏன் பாக்குற, மயக்கம் போட்டு விழுந்திருக்காளே உன் தோழி அவளைப் போய் பாரு, உன்னை மாறி அவளும் சொல்லக்கூடாதுன்னு மனசுல வச்சிருக்கிரத உளறிட போறா, போ போ போய் அவளை உஷார்படுத்து…” என்று வார்த்தைகளால் அவள மனதை தைக்கும் படி அவன் கோபத்தின் காரணத்தை எதிர்பாரா நேரத்தில் சொல்லியிருந்தான் ஸ்ரீராம்.

தோழியின் திருமணத்தில் கலந்து கொள்ளப்போகும் மகிழ்ச்சியில் வந்தவளுக்கு கணவன் தன்னிடம் பேசியது மனதிற்கு இதமளித்தது என்று உணரும் முன் அதே வார்த்தைகளால் அவளை காயப்படுத்தியிருந்தான்.

காயத்தின் வலியை விட, அவன் கோபத்தின் காரணம் தெரிந்ததே என்று நிம்மதியானவள், சட்டென்று அவன் கையோடு கை கோர்த்து அவன் கண்ணோடு கண் நோக்கி, “ராம் இதை நீங்க அன்னைக்கே என்கிட்ட கேட்டிருக்கலாமே… இதுக்கா இவ்வளவு கோபம்… வீட்டுக்கு போகும் போது இதை பத்தி நாம பேசலாம் இப்ப சிரிச்ச முகமா வாங்க…” என்று கூறியதும் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன் போல் அவளுடன் நடக்கத்துவங்கினான்.

Advertisement