Advertisement

முகூர்த்தம் 24

வானதிக்கு இன்னும் பதற்றம் குறையவேயில்லை. வருடங்கள் பல கடந்திருந்த போதிலும் இரவின் பொழுதுகள் அவளை நிம்மதியாக உறங்க விடுவதேயில்லை.

ஸ்வாதியை எப்பொழுது அப்படி ஒரு நிலையில் கண்டாளோ அதன்பின் என்ன முயன்றும் கண்களை மூடுகையில் ஸ்வாதியின் கோலம் கண்முன் வந்து போவதை அவளால் தடுக்க முடியவில்லை.

ஸ்வாதிக்கும் வானதிக்கும் இடையில் உயிருக்கு உயிரான நட்பு இல்லையென்றாலும், தன்னைப் போன்ற ஒரு பெண்ணுக்கு நடந்த அநீதி அவளின் உறக்கத்தை நிரந்தரமாய் களவாண்டு போயிருந்தது.

ஸ்வாதிக்கு தினசரி நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது. தினமும் வாழ்க்கை நமக்கு புதுப் புது பாடங்களை கற்றுத் தரும். அப்படி கிடைக்கும் படிப்பினைகள், சுவாரஸ்யமான சம்பவங்கள், வாழ்வில் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்கள் என எல்லாவற்றையும் அதில் பதிந்து வைப்பாள்.

அப்படிப்பட்ட ஸ்வாதியின் நாட்குறிப்பு தன் கைப்பையில் எப்படி வந்தது என இப்போது வரை வானதிக்கு தெரியாது. புதிதாய் தன் பையில் இருக்கும் டைரியை என்னவென்று அவள் பார்க்க,

அதன் முன் அட்டையில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள், “அடுத்தவங்க டைரியை படிக்குறது அநாகரீகம்னு படிக்காம விட்றாதீங்க, என்னால இந்த உலகத்து சொல்ல முடியாத உண்மைகளை என் டைரி சொல்லும்…” என்றிருந்தது.

அடுத்தடுத்த பக்கங்களை புரட்ட அது ஸ்வாதியின் கல்லூரி துவங்கிய நாளிலிருந்து அவளின் நண்பர்கள் பற்றி படிப்பில் உள்ள கஷ்டநஷ்டங்களைப் பற்றி இருந்தது.

அதோடு அவள் தினம் தினம் எழுதியிருந்த ஒன்று அவளுடைய கல்லூரி கட்டணம் பற்றியது.

முதல் பட்டதாரி என்பதால் பாதி கட்டணத்தை அரசாங்கம் கட்டினாலும் மீதி கட்டணத்தோடு தனியார் கல்லூரி என்பதால் இதர கட்டணங்களும் சேர்த்து அவளால் எட்ட முடியாத உச்சத்தில் இருந்தது.

நடுத்தர வர்க்கத்திற்கும் கீழான தனது குடும்பத்தில் வங்கிக் கடன் பெற்று தனக்கு கட்டவோ, இல்லை கடன் பெற்று கட்டவோ தன் தந்தை முயன்றும் முடியாததால் இவளும் விடுமுறை நாட்களில் சென்று அதற்காக முயன்று வந்தாள்.

ஒவ்வொரு முறையும் தோல்வியே கிட்டியது. முப்போகம் விளைந்த அவர்களின் நிலமும் இவள் பள்ளிப் படிப்பை தாண்டி கல்லூரிக்கு அடியெடுத்து வைக்கும் முன்னே வறுமையின் காரணமாய் அடமானத்திற்கு சென்றவருக்கே உரிமையாகி இருந்தது.

மூன்றாண்டுகளாய் வட்டிக்கு வாங்கியிருந்த கடன் ஒருபக்கம், இன்னும் செலுத்த வேண்டிய மொத்த கட்டண பாக்கியையும் செலுத்தாமல் இறுதி செமஸ்டருக்கான தேர்வுகளை எழுத விடமுடியாது என்னும் கல்லூரி ஒரு பக்கம் என அவளின் போராட்டம் இருமுனைகளிலும் இறுதிகட்டத்தை எட்டியிருந்தது.

கடைசி அழைப்பாய் கல்லூரி முதல்வர் கட்டணம் செலுத்தாத மாணவர்களை அழைத்திருந்தார். பத்திற்கும் குறைவான மாணவர்களுடன் ஒற்றை மாணவியாய் ஸ்வாதியும் நின்றிருந்தாள்.

கல்லூரியின் அடிப்படை கேள்வியான, “ஐடி கார்ட் எங்கடா…?” எனத்துவங்கியவர், “இதுதான் லாஸ்ட் வார்னிங்… ஃபீஸ் கட்டலைன்னா நோ ஹால் டிக்கட், நோ எக்ஸாம், ஃபைனல் செம்ல வந்தும் ஃபீஸ் கட்டாம வந்து நிப்பீங்களாடா… நீ என்னம்மா கட்டப்போறியா இல்லையா… லாஸ்ட் மினிட் ல என்கிட்ட வந்து கெஞ்சினாலும் என்னால ஒண்ணும் பண்ண முடியாது…. சோ திரும்ப என்னைய கூப்பிட வைக்காம ஃபீஸ கட்டிருங்க… “ என்றவர் அதற்கு பேச ஒன்றும் இல்லை என கிளம்பி விட,

மாணவர்கள் சென்ற பின் தலைகவிழ்ந்தபடியே கண்ணிரை துடைத்துக் கொண்டே வந்த ஸ்வாதி எதிரி வந்த ஆளின் மீது மோதி நின்றாள்.

“ஸாரி ஸாரி சார்…” என்று பின் வாங்கியவளை, “பாத்து பாத்து மா… எங்க பாத்துகிட்டு வர்றீங்க…” என்ற பியுன் அவளை உற்றுப் பார்த்து, “என்ன பாப்பா ஃபீஸ் கட்டலையா, இன்னும் ரெண்டு நாள்ல எக்ஸாம் போலருக்கு, அதுக்குத்தான் அழுதிட்டு வர்றியா…”

“ஆமாண்ணா…” என்றவள் நகரப்போக, “ரெடி செஞ்சு கட்டிருவியா பாப்பா…”

“இல்லண்ணா முடியாது என்ன பண்றதுன்னு தெரில…”

“நான் சொன்னேன்னு உங்க வார்டன் மேடம்ம போய் பாரு சரியா…”

“எதுக்குண்ணா…?”

“போய் பாரு அவங்க ஹெல்ப் பண்ணுவாங்க…”

இந்த வார்த்தைகள் உண்மையில் அவளுக்கு அப்படி ஒரு தெம்பு கொடுத்தது. இந்த பிரச்சனைக்கு கடவுளாய் ஒரு தீர்வு அனுப்பிவிட்டார் என்றே தோன்றியது.

அந்த பியுனின் பெயர் என்னவென கூட கேட்க மறந்தவள் நேரே வார்டன் முன் சென்று நின்றாள். மூச்சு வாங்க ஓடி வந்திருந்தவளை பார்த்த வார்டன் “என்னம்மா என்ன..?” என்க

“மேடம் ஃபீஸ் கட்ட முடியல, லாஸ்ட் டேட் ஆகிடுச்சு, ஆபீஸ் அசிஸ்டெண்ட் அண்ணா உங்கள பாக்க சொன்னாங்க…”

“என்னைய பாக்க சொன்னாங்களா…?”

“ஆமா மேடம்… நீங்க ஹெல்ப் பண்ணுவீங்கன்னு சொன்னாங்க…”

“ஹெல்ப் பண்ணலாம் தான் ஆனா…”

“ஆனா என்ன மேடம் இவ்ளோ கஷ்டப்பட்டு கடைசி வரை வந்துட்டேன், இந்த ஒரு செமஸ்டர் தாண்டிட்டேன்னா வேலைக்கு போய் கடனை கொடுத்துடுவேன் மேடம், கண்டிப்பா மேடம். ப்ளீஸ் மேடம் கொஞ்சம் உதவி பண்ணுங்க, நிச்சயமா இந்த நன்றியை மறக்க மாட்டேன் மேடம்…” என்று அவள் கெஞ்சுவாதை பார்க்க அந்த வார்டனுக்கே பொறுக்கவில்லை என்றாலும் தனக்கென கொடுக்கப்பட்ட வழிமுறைகளின் படியே தான் செயல்பட முடியும் என்பதால்,

“உதவி பண்ணலாம் நீ எந்த டிபார்ட்மெண்ட், உன் பேரு என்ன, உன் பேமிலி டிடெயில்ஸ் எல்லாம் சொல்லு…”

அவள் தன் விபரங்களை சொல்ல குறித்துக் கொண்டவர், ”மொபைல் நம்பர் இருக்கா மா…?” என்றார்.

“இருக்கு மேடம்…” என்று தன் பத்து இலக்க எண்ணைச் சொல்லியிருந்தாள்.

“நீ கொஞ்ச நேரம் வெளியில இரு மா… நான் கூப்பிடுறேன்…” என்று அவளாஇ வெளியே அனுப்பியவர், கல்லூரிக்குள் தனக்கு இருக்கும் உளவாளிகள் மூலம் ஸ்வாதியை பற்றி விசாரிக்கத்துவங்கினார்.

அவள் குடும்பப் பின்னணி, நண்பர்கள் வட்டம், யாரையாவது காதலிக்கிறாளா என்பது முதற்கொண்டு விசாரித்தவர், அவளின் விபரங்கள் தனக்கு திருப்திகரமாய் இருப்பதை உறுதி செய்து கொண்டு அவளை உள்ளே அழைத்தார்.

அதற்கிடையில் அவரின் மொபைல் எண்ணிலிருந்து சென்ற அழைப்பிலும் ஆமோதிப்பான பதில் வரவே, தயக்கமின்றி தன் வேலையை செய்யத்துவங்கினார்.

அவளிடம் ஒரு வெற்று காகிதத்தில் முதலில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

நேர்மறையாய் மட்டுமே சிந்தித்து பழக்கப்பட்ட ஸ்வாதிக்கு தன்னை ஏமாற்றிவிடுவார்களா என்ற சந்தேகம் கூட எழவில்லை முழுதாய் நம்பினாள்.

ஆதாயமில்லாமல் உதவிக்கரம் நீட்டுவோர் ஆயிரத்தில் ஒருவர் கூட இல்லை. இந்த கலியுகத்திலும், அதை எண்ணியிராத ஸ்வாதியின் நம்பிக்கை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அறியாமையின் உச்சம்.

எவ்வளவு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்பதை கேட்டறிந்தவர் அதற்கான காசோலையை எழுதிக் கொடுத்தார்.

பெற்றுக்கொண்டவள் பார்க்க மறந்த மதுராபுரிவேந்தனின் கையெழுத்தை கணக்கர் கண்டு கொண்டாலும் விரக்தியாய் ஒரு புன்னகையை உதிர்த்தவர் தன் வேலையை தொடர்ந்தார்.

அவரின் முகபாவங்களை கண்டு கொள்ளும் மனநிலையெல்லாம் அவளுக்கு இல்லை. எல்லாவற்றையும் கட்டிவிட்டு நோ அப்ஜெக்ஸன் லெட்டர் வாங்கிச் சென்று டிபார்ட்மெண்ட் ஹெச்.ஓ.டி (head of the department)துறைத்தலைவரிடம் கொடுத்து ஹால்டிக்கெட்டை வாங்கிவிட வேண்டும் என்பதிலேயே அவளின் கவனம் இருந்தது. ஹால்டிக்கெட்டை வாங்கிக் கொண்டு அவள் ஹாஸ்டலுக்கு சென்று கொண்டிருக்கையில் கையில் இருந்த அவளின் மொபைல் அதிரத்துவங்கியது.

புதிய எண்ணிலிருந்து வந்த அந்த அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்று யோசிக்க, சற்று முன் வார்டன் தன் எண்ணை வாங்கியது நினைவு வர, அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ…” என்று கரகரப்பாய் வந்தது ஓர் ஆண் குரல்

“ஹலோ யாருங்க….” என்றாள்.

“யாரா… என்னை யாருன்னு தெரியாமத்தான் காசு வாங்கிட்டு போனியா… அந்த வார்டன் உனக்கு சொல்லலையா, சொல்லாமயா காசு கொடுத்தா அவ… அவளை…” என்பதோடு அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்க,

ஏதாவது தவறான அழைப்பாக இருக்கும் என்று எண்ண முடியாதபடி, வார்டன் என்றும் காசு கொடுத்தது பற்றியும் பேச அவள் மனதில் சின்னதாய் தோன்றிய பயத்தின் அதிர்வில் வார்டனின் முன்பு போய் நின்றிருந்தாள்.

 

தானே அழைக்கவேண்டும் எனக் காத்திருந்தவள் தன் முன்பு வந்து நிற்பதைப்பார்த்து, “நானே கூப்பிடனும்னு நெனச்சேன் நீயே வந்துட்ட, ஃபீஸ் கட்டிட்டியா மா…?” என்றார் வார்டன்.

“கட்டிட்டேன் மேம்… ரொம்ப நன்றி மேடம்…”

“அதெல்லாம் இருக்கட்டும் உன்கிட்ட ஒருவிசயம் பேசனும்…”

“மேடம் இப்ப யாரோ ஒருத்தர் கால் பண்ணாரு, வார்டன் சொல்லலையான்னு கேட்டாரு…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வார்டனின் மொபைல் அடித்தது.

”ஹலோ சார்…” என்று பம்பியபடியே பேசிய வார்டனை விசித்திரமாக பார்த்தாள் ஸ்வாதி. ஏனென்ரால் அவளின் வார்டன் யாரிடமும் இபொபடி பேசி பார்த்ததில்லை, எப்போதும் அதிகாரத் தோரணையில் பார்த்த ஒருவர் தன்னிடம் இல்லாத பணிவை வரவைத்துக் கொண்டு பேசுவதைப் பார்க்க ஒரு புறம் சிரிப்பு வந்தாலும், அவ்வளவு பெரிய ஆள் யாராக இருக்கும் என்ற எண்ணமும் வந்தது மற்றொருபுறம்.

“சார் அந்த பொண்ணு இப்பத்தான் ஃபீஸ் கட்டிட்டு வந்துச்சு… நான் பேசிட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன் சார்…” என்று அவர் தன்னைப் பற்றி பேசுவார் என்று சற்றும் ஸ்வாதி எதிர்பார்க்கவில்லை.

அழைப்பை துண்டித்தவர், “இப்ப போன் பண்ணவர் பெரிய ஆளு, அவரால முடியாத காரியமே இல்ல, ரொம்ப இளகுன மனசு,யார் உதவின்னு கேட்டாலும் தட்டாம செய்வார், அவ்வளவு நல்லவர்… இப்ப உனக்கு பணம் கொடுத்தது கூட அவர் தான்…”

என்று கூறிவிட கண்ணுக்குத்தெரியாத அவர் மீது சற்றுமுன் தோன்றிய பயம் மாறி மிகுந்த மரியாதை வந்திருந்தது ஸ்வாதிக்கு.

“உனக்கு இவ்வளவு ஹெல்ப் பண்ண மனுசன் உன்னைய நேர்ல பாக்கனும்னு விரும்புறார் மா… உன்னோட நிலைய நீயே நேர்ல போய் சொல்லி பேசுனா இந்த பணத்தை திருப்பி தர வேண்டாம்னு கூட சொல்லிடுவார் அவ்வளவு கருணை உள்ளம் கொண்டவர்…” என்று மேலும் மதுராபுரி வேந்தன் பற்றி சொல்லச் சொல்ல ‘அவர் கடனை செலுத்துவது இல்லை அவரே வேண்டாமென சொல்வது என்பதெல்லாம் இரண்டாம் பட்சம், முதலில் அவரை நேரில் சந்தித்து தன் நன்றியை தெரிவிக்க வேண்டும்’ என எண்ணிக் கொண்டாள் ஸ்வாதி.

அவள் எண்ணத்தை உடனே செயலாக்கும் பொருட்டு, வார்டன் வேந்தனுக்கு அழைத்து பேசியிருக்க, அவர்களை அழைத்து செல்ல அடுத்த ஒரு மணி நேரத்தில் கார் வந்து நின்றது.

அடுத்த இருபது நிமிடங்களும் பயணத்தில் கரைய, மதுராபுரிவேந்தனின் தனிவீட்டிற்கு வந்திருந்தனர் வார்டனும் ஸ்வாதியும்.

வீட்டில் நுழையும் நேரம் வார்டனின் தொலைபேசி சரியாக ஒலிக்க, அதை பார்த்ததும் “நீ உள்ள போய் பேசிட்டு இரு மா நான் இதோ வந்துடுறேன்…” என்று சென்றவர் அவளே திரும்பி விடுதிக்கு அனுப்பி வைக்கப்படும் வரை கூட வரவே இல்லை.

அந்த வீட்டிற்கு அனுப்பின் வைக்கப்படும் பெண்களில் ஸ்வாதியும் ஒருத்தி, எண்ணிக்கைகள் அங்கே கணக்கு வைத்துக் கொள்ளப்படுவதில்லை.

அன்று ஒரு நாள் முழுக்க ஸ்வாதி நினைவில்லாமல் தான் இருந்தாள். அவளுக்கு என்ன நடந்தது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.

மறுநாள் காலை விடுதியில் கண்விழித்த ஸ்வாதிக்கு தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவளின் உடல்வலியே உணர்த்தியிருந்தது.

ஒரு நாள் முன்பு உலகம் எத்துணை கருணை உள்ளம் என்று வியந்து போய் நன்றி தெரிவித்த அவளின் மனது இன்று உலகம் எத்துணை கொடூரமானது தனக்கு இத்துணை துரோகத்தை இழைக்குமா என இன்னும் நம்பமுடியாமல் இருந்தாள்.

கந்தையாய் கசக்கி வீசப்பட்ட அவளின் இதயத்தில் இனி வாழும் எண்ணம் துளியும் இருந்திருக்கவில்லை.

முதல் வேலையாய் தனக்கு நடந்த கொடுமையை தன் நாட்குறிப்பில் பதிந்து வைத்தவள் அதை மற்றவர் அறியாவண்ணம் அதை வானதி கைப்பை என்று தெரியாமலே அதனுள் வைத்திருந்தாள்.

அந்த நேரம் சரியாக வார்டன் வரவும் அப்போது கண்விழிப்பது போல் விழித்தாள். “ ஏன் என்னை இப்படி செஞ்சீங்க, இதுக்கு நீங்க அன்னிக்கு உதவி செய்யமலே இருந்திருக்கலாம்ல, இதுக்கு பேர் உதவி இல்லை, நம்ப வைச்சு கழுத்தறுக்குறது, ச்சீ நீங்களும் ஒரு பொண்ணு தான உங்களுக்கு என்னை மாதிரி பொண்ணு இருந்தா இப்படி அனுப்புவீங்களா…” என்று தன் மொத்த பலத்தையும் கூட்டி கத்திக் கொண்டிருக்க, அவரோ,

“ஹ்ம்ம்… எல்லா பேசி முடிச்சிட்டியா… இதெல்லா கேட்டு கேட்டு புளிச்சு போச்சு, உனக்கு பணம் தேவை அவங்கள மாறி ஆளுங்களுக்கு உன்ன மாதிரி பொண்ணு தேவை, ஜஸ்ட் கைய காமிச்சு விட்டேன் அவ்ளோ தான்… இதுக்கென்னமோ ஓவரா சலிச்சுக்குற… இன்னும் ரெண்டு நாளைக்கு ரெஸ்ட் எடு எல்லா சரியா போய்டும், நீங்களா பசங்கள நம்பி போய் சீரழிஞ்சிட்டு, அப்புறம் ப்ரேக் அப் ந்னு போய் உங்க அம்மா அப்பா பாக்குற பையன கட்டிக்குறதில்லையா… வசதி இருக்குற பொண்ணுங்க தானா செய்யுதுங்க, நீ உன் வாழ்க்கைக்காக செஞ்சன்னு நெனச்சுக்கோ… டேக் ட் ஈசி…”

“த்த்தூதூ…. நீயெல்லா பொணத்துக்கு சமம் போடி வெளியில…” என்ற ஸ்வாதியை ஒரு சலிப்புடன் கடந்து சென்ற அந்த வார்டனுக்கு துளி கூட குற்ற உணர்வில்லை.

வெளியில் நின்றிருந்த வேலைக்கார பெண்மணியிடம் ”இவளை கொஞ்சம் கேர்புல்லா பாத்துக்க, நமக்கு வேட்டு வைச்சிடப்போறா…” என்று சொல்லிவிட்டு சென்றாலும்,

அவளோ, ஸ்வாதியின் நிலையைக் கண்டு அவள் பாத்ரூம் செல்ல வேண்டும் என்றதும் மறுப்பு சொல்லாமல் அனுப்பிவிட்டாள்.

நைட்டியின் மீது போட்டுச் சென்ற துப்பட்டாவால் தன் கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டிருந்த ஸ்வாதியின் வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையெல்லாம், தான் இத்துணை வருடன் அரும்பாடுபட்டு படித்த படிப்பு, கைநிறைய சம்பாதித்து நாமும் ஒரு வாழ்வை வாழ்ந்திடுவோம் என்ர எதிர்கால கனவுகளெல்லாம் ஒரே நாளில் தகர்ந்து போனதை பற்றித்தான்.

நினைத்து நினைத்துப் பார்த்தாலும் பொறுக்கமுடியாத வேதனை, கோபம், ஆற்றாமை, தன் இயலாமை என அனைத்தும் சேர்ந்து அவளைப் பார்த்து அவளே கோபப்படும் நிலை.

உலகத்தின் மீதிருந்த அத்துணை கோபத்தை தன் கழுத்தில் முடிச்சுகளாக மாற்றிக் கொண்டிருந்தவளின் இறுதி நிமிடத்துடிப்பும் அந்த உயிர் பிரியும் வலியும் உள்ளத்து பெருங்கூச்சலும் அந்த குளியலறையில் வழிந்தோடும் தண்ணீரோடு கரைந்து கொண்டிருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement